Language Selection

புதிய ஜனநாயகம் 2005

09_2005.jpgபோபால் நகரில் நடந்த விஷ வாயுப் படுகொலை போல, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகையில் உள்ள விஸ்கோஸ் ஆலையினால் அப்பகுதியே சுடுகாடாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த ஆகஸ்டு 15ம் தேதி இரவு, விஸ்கோஸ் ஆலையிலுள்ள பேரபாயம் விளைவிக்கக் கூடிய கார்பன்டைசல்பைடு அமிலத் தொட்டிகளின் அருகில், திறந்தவெளியில் கொட்டிக் கிடந்த கந்தகக்

 கழிவுள் தீ பற்றி எரிந்து, அதிலிருந்து வந்த நச்சுக் காற்று ஆலைக்கு அருகேயுள்ள மூலையூர், கூத்தாமண்டிப் பிரிவு, அம்மன் புதூர், ரேயன் நகர் மக்களுக்கும் மற்றும் சிறுமுகை நகர மக்களுக்கும் பல தரப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியது

.

நச்சுப் புகையால் சிலர் மயக்கமடைந்தனர். பலருக்கும் மூச்சுத் திணறலோடு, கண், தொண்டை, நெஞ்சு ஆகியவற்றில் கடும் எரிச்சல் ஏற்பட்டது. ஆலையிலிருந்து வரும் நச்சுப் புகைதான் காரணம் என உணர்ந்த பலரும் ஊரை விட்டு வெளியேறினர். உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் தீயை அணைத்ததால், தற்காலிகமாக ஒரு பேரழிவு தடுக்கப்பட்டுள்ளது.

 

விஸ்கோஸ் ஆலையின் நச்சுக் கழிவுகளால் பவானி ஆறு, சுற்று வட்டாரத்திலுள்ள விளை நிலம், நிலத்தடி நீர் அனைத்தும் நஞ்சாகி விட்டது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் இப்பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடியும் பலனில்லை. 2001 முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டுக் கவனிப்பாரின்றி கிடக்கும் ஆலையினுள் உள்ள 201 டன் கார்பன்டைசல்பைடு அமிலம், 700 டன் கந்தக அமிலம், 700 டன் கந்தகம் ஆகியவை எவ்விதப் பாதுகாப்புமின்றி கொள்கலன் தொட்டிகளில் கொட்டிக் கிடக்கின்றன.

 

பூட்டிக் கிடக்கும் ஆலையினுள் சமூக விரோதிகள் புகுந்து திருடுவது தொடர்ந்து நடக்கிறது. அவ்வப்போது லாரியில் வந்து மொத்தமாக திருடிச் செல்வதும் நடக்கிறது. இதில் விசேசம் என்னவென்றால், ஆலை வாயிலுக்கு எதிரில்தான் சிறுமுகை போலீசு நிலையமும் உள்ளது. சில நேரங்களில், தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே திருடுபவர்கள் கைதாவதும் வழக்குப் பதிவதும் நடக்கும். திருட்டுக் கும்பலுக்கும் போலீசு துறைக்கும் தொடர்புண்டு எனப் பகுதி மக்கள் வெளிப்ப டையாகவே குற்றஞ் சுமத்துகின்றனர்.

 

இத்தகைய அபாயகரமான சூழலில் நச்சு இரசாயனப் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பகுதிவாழ் மக்கள் ஆலை முன்பும், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மேட்டுப்பாளையம் நகரிலும் சாலைமறியல் போராட்டங்களை நடத்தினார்கள்.


அதன்பின் நச்சு இரசாயனப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, ஒரு பகுதி மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டது. இன்னும் 185 டன் கார்பன்டைசல்பைடு அமிலமும், 140 டன் கந்தகமும், 50 டன் கந்தக அமிலமும் ஆலையினுள் இருக்கின்றன.

 

தீப்பிடித்த சம்பவத்தன்று பலகோடி மதிப்புள்ள பொருட்களைத் திருடிய சமூக விரோதிகள், மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கந்தகக் கழிவில் தீ வைத்துள்ளனர். தப்பித்தவறி கார்பன்டைசைல்பைடு டேங்கில் தீப்பிடித்திருந்தால் சிறுமுகையும் அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவு பகுதியும் பேரழிவுக்கு உள்ளாகியிருக்கும்.

 

இப்படிப்பட்ட அபாயம் தொடராமலிருக்கவும், தீ வைத்த சமூக விரோதிகளைக் கைது செய்யக் கோரியும், அபாயகரமான இரசாயனப் பொருட்களை உடனே அப்புறப்படுத்தக் கோரியும் விஸ்கோஸ் ஆலை முன்பு 16.8.05 அன்று காலையிலிருந்தே குவிந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். திருடர்கள், சமூக விரோதிகளுடன் கூட்டாளியாயுள்ள போலீசோ, விஸ்கோஸ் முதலாளியின் பொறுப்பின்மையை தட்டிக் கேட்க வக்கற்ற அதிகாரிகளோ மக்களை விரட்டியடிக்கவே முயற்சித்தனர்.

 

தீர்வு ஏற்படாதவரை சாலை மறியலைக் கைவிட மறுத்த மக்கள் மீது பாய்ந்த போலீசு, 21 ஆண்கள், 23 பெண்களைக் கைது செய்து பொய் வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தது. ""உயிருக்கு உத்தரவாதம் கேட்ட மக்களுக்குச் சிறையா?'' எனக் கொதித்தெழுந்த சிறுமுகை நகரமே 17.8.05 அன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தியது. அன்று மாலையே சிறையிலடைக்கப்பட்ட 44 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மரணபயத்தில் பலரும் இப்பகுதியை விட்டு வெளியேறிக் கொண்டுள்ளனர்.

 

செயற்கை நூலிழை தயாரிக்கும் விஸ்கோஸ் ஆலை முதலாளி லாபவெறி பிடித்து நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி விட்டான். 5000 பேருக்கும் மேல் வேலை செய்த ஆலையைச் சட்டவிரோதமாக மூடியது மட்டுமின்றி அபாயகரமான இரசாயனப் பொருட்களையும் அப்புறப்படுத்தாமல் உள்ளான். இன்னும் வேலையிழந்த தொழிலாளர்களுக்குரிய சேமிப்புப் பணத்தைக் கூடத் தராமல் இருக்கிறான். நலிவடைந்த ஆலை என நட்டக் கணக்கெழுதி அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் பட்டை நாமம் சாத்தி விட்டான். இப்போது பொது மக்களின் உயிருக்கும் எமனாகி வருகிறான். இதை தட்டிக் கேட்க துப்பு கெட்ட போலீசும் அதிகாரிகளும் மக்கள் மீது பாய்ந்து குதறுகின்றனர்.

 

பெருநகரங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போவதாகக் கூறிக்கொண்டு குப்பை கொட்டும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துப் போடாவிட்டால் அபராதம் என மிரட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், அபாயகரமான இரசாயனப் பொருட்களை கொட்டி, நிலம், நிலத்தடி நீர், ஆறு அனைத்தையும் நஞ்சாக்கி விட்டு பொது மக்களின் உயிரோடு விளையாடுகிற விஸ்கோஸ் முதலாளி மீது மட்டும் நடவடிக்கை இல்லையே! ஏன்? சட்டமும், நீதியும், போலீசும் யாருக்கானது என்பதையும், இனி தொடர்ந்து போராடாமல் வாழ்வில்லை என்பதையும் இந்நிகழ்ச்சி மீண்டும் நிரூபித்துக் காட்டி விட்டது.


பு.ஜ. செய்தியாளர்,
கோவை.