Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

09_2005.jpg  "என்னைப் போன்றவர்கள் அமெரிக்காவின் சார்பாக உலகெங்கும் பல ஆண்டுகள் நச்சுக் காற்றை விதைத்தோம்.... அவை இன்று ஒன்றுதிரண்டு புயலாய் வீசுகின்றன....'', என்கிறார் ஜான் பெர்கின்ஸ். "செப்டம்பர் 11' நிகழ்வானது, உலக வர்த்தகக் கட்டிடங்களை மட்டுமல்ல் ஜான்பெர்கின்ஸ் போன்றோரின் துரோகங்களையும் குத்திக் கிழித்துவிட்டது; பலரது "கோமா' உறக்கங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டது.

 

இந்த ஜான்பெர்கின்ஸ் அமெரிக்க அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட "பொரு ளாதாரக் கூலிப் படையாள்', அதாவது ஓர் அடியாள். ஆங்கிலத்தில் "எகனாமிக் ஹிட்மேன்', "இ எச் எம்' (உஏஆ) என்கிறார்கள். இப்போது ஜான் பெர்கின்ஸ் மாறிய இதயம். நொறுங்கிய உலக வர்த்தகக் கழக இடிபாடுகளில் எத்தனையோ பேர் அழிந்ததைக் கண்ணால் கண்ட பெர்கின்ஸ், இப்போது உயிரோடிருக்கும் 22 வயதான தன் மகளுக்கு ஓர் எதிர்காலம் இருக்குமா, அதைத் தன்னால் உருவாக்க முடியுமா, அப்படி ஓர் எதிர்காலத்தை முழுதாக உருவாக்கிக் கொடுப்பதற்குப் பதிலாக அதில் ஒரு பகுதி அழிவதற்குத் தானே காரணமாக இருந்துவிட்டோமே என்று சுயவிசாரணைக் கேள்விகளால் நிலைகுலைந்து போனார். இதுநாள் வரை அமெரிக்காவின் தேசங்கடந்த நிறுவனங்களுக்காக அடியாள் வேலை பார்த்தவர், அதற்கெல்லாம் கழுவாயாக, திரைமறைவில் நடந்த பல அரசியல் அந்தரங்கக் கிரிமினல் குற்றங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். இதை எழுதி முடிப்பதற்குள் நான்குமுறை அவர் மிரட்டப்பட்டார் இது எதிர்பார்க்கக் கூடியதுதான்.

 

2005ன் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 10 வாரங்கள் 70 நாட்களில் பல இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த அந்த நூலில் (""பொருளாதார அடியாள் ஒருவரின் வாக்குமூலங்கள்'') அப்படி என்னதான் எழுதியிருந்தார் ஜான் பெர்கின்ஸ்? தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைத் திறந்து காட்டுவதற்கும் ஒரு தார்மீகத் துணிச்சல் வேண்டும் அப்படிப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலங்கள் நிறைந்ததே அந்த நூல்.

 

****

 


ஜான் பெர்கின்ஸ் வர்த்தகத் துறை சம்பந்தமாக பட்டப் படிப்புக்கும் கீழ்நிலை வரைதான் படித்தார். ஏழ்மைக் குடும்பம். முதல் மனைவியின் மாமா, தேசியப் பாதுகாப்பு முகமைக்கு (இந்த ஏஜென்சிதான் என்.எஸ்.ஏ. எனப்படும் அமெரிக்க உளவு நிறுவனம்) இவரைச் சிபாரிசு செய்தார்.

 

இந்த என்.எஸ்.ஏ. 1952இல் அதிபர் ட்ரூமேனால் நிறுவப்பட்டது. இங்கிலாந்து, ஜெர்மனி என்று இரு கிளைகளோடு இயங்கும் உளவு நிறுவனம், இது. ஜேம்ஸ் பாம்ஃபோர்டு என்ற எழுத்தாளரின் வருணனையில் என்.எஸ்.ஏ. ஒரு "புதிரான அரண்மனை'; 1970 கணக்குப்படி சுமார் 70,000 அடியாட்கள் வேலை செய்த மர்ம மாளிகை. அதன் தலைவர்கள் சங்கேத (ரகசிய) மொழியில் வல்லவர்கள். பிரசித்தி பெற்ற அமெரிக்க சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தின் சகோதரன்தான் என்.எஸ்.ஏ.

 

இதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதே விசித்திரமான சடங்கு என்பார்கள். நன்கு படித்த பார்வைக்கு அழகான, மிகக் குறுகிய காலத்தில் சம்பாதித்துப் பெரிய மனிதராக ஆக வேண்டுமென்ற பேராசையும், வெறியும் கொண்ட சிறு நகர இளைஞர் இளைஞிகளை இந்த அமைப்பு "கொக்கி' போட்டு இழுக்கும். "அதிகாரம், செக்ஸ், பணம்' - மூன்றும் கொடுத்துக் குளிப்பாட்டுவார்கள். ""இதெல்லாம் சரிப்படாது, ஆளை விடுங்கப்பா'' என்று யாராவது "ஜகா' வாங்கினால் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டப்படுவார்கள். தேர்ந்தெடுக்கும்போதே அவர்களின் மனச்சாட்சிகளைக் கொன்று விட்டுத்தான் களத்தில் இறங்குவார்கள். பெர்கின்ஸ{ம் இப்படித்தான் பலிகடா போலத் தள்ளப்பட்டார்.

 

அவர் வேலையை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம். ஏழை நாடுகளுக்குப் பறந்து செல்லவேண்டும். அங்கே எல்லாவித உள்கட்டுமான வேலைகள் செய்வதற்கும், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் எந்தெந்த நாடுகளுக்குக் கடன் கொடுக்கலாம் என்றும் பரிந்துரைக்க வேண்டும். நினைத்த நேரத்தில் அதிபர்கள், பிரதமர்கள், மந்திரிகள், எம்.பி எம்.எல்.ஏ.க்கள்., எல்லாத்துறை அதிகாரிகள், தூதரகங்கள், கலாச்சார மையங்களிடம் போகலாம், வரலாம், பேசலாம்; விருந்துகள், பேச்சுவார்த்தைகள் நடத்தலாம்.

 

எத்தனையோ நாடுகளின் தலைவர்களை அணுகி, புகழ்ந்து பேசி ஏய்த்து ஆசைகாட்டி மிரட்டி வசப்படுத்தியிருக்கிறார் இந்த அடியாள் பெர்கின்ஸ். அவரது இலக்கு பல ஆயிரம் கோடி கடன் தரக்கூடிய ஏகாதிபத்திய நாடுகளின் திட்டங்களைக் கொண்டு ஏழை நாடுகளைச் சிக்க வைக்க வேண்டும். இதற்கு இலஞ்சமாக பல ஆட்களுக்குப் பலவிதமான பரிசுகள் சூட்கேசிலிருந்து தொடங்கி சென்ட் குப்பிவரை தள்ளிவிட வேண்டும். இதற்கு வழங்கப்படும் அசிங்கமான பெயர் லஞ்சம். கௌரவமான பெயர் "பரிசு'; பரஸ்பரம் நம்பிக்கையைப் பெற உதவும் "உறவு'.

 

கடனைத் தருவது உலக வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் அமெரிக்க நிதி நிறுவனம் போன்றவை. அந்தக் கடனை வைத்து அந்த நாடுகள் திட்டத்தை நிறைவேற்ற அமெரிக்க கம்பெனிகளோடு ஒப்பந்தம் போட வேண்டும். பெர்கின்ஸ் செய்ய வேண்டிய முக்கிய வேலை இதுதான். அமெரிக்க கம்பெனிகள் ஆதாயம் அடைய வேண்டும். சிந்தாமல் சிதறாமல் ஒப்பந்தங்களை அடைவதே அவர் இலக்கு.

 

உளவு பார்ப்பது, உளவு நிறுவனங்களில் வேலை பார்ப்பது புதியதல்லவே; பணம் வியாபாரம் தோன்றிய நாள்முதல் நடந்து வருவதுதானே என்று உங்களுக்குச் சந்தேகம் எழலாம். ஆனால், அடியாள் (ஹிட்மேன்) வேலை, முன்பெல்லாம் பல துறைகளில் நடந்த பலவேலைகளையும் ஒரே ஆளில் இணைப்பது. பன்னாட்டு மூலதனம் ஒரு நாட்டுக்குள் இறங்குவதற்கான எல்லா உத்தரவாதமான தயாரிப்புகளையும் செய்து முடிக்கக்கூடிய உயிருள்ள மனித கம்ப்யூட்டர். இந்த முள்ளு பொறுக்கிச் சாமி முன்னே போய் எல்லா தடைகள், தடங்கல்களையும் நீக்கிச் சுத்தப்படுத்திவிட்டால், அமெரிக்க கம்பெனிகளின் மூலதனம் நேராக உள்ளே இறங்கி, ஊர்வலம் வரும்.

 

முன்பு இந்த வேலைகளை நேரடியாக அமெரிக்க அரசு ஊழியர்களே செய்தார்கள். போய் வேலை செய்கின்ற நாடுகளில் பிடிபட்டு விட்டால் அமெரிக்க அரசின் பெயர் கெட்டுப் போய்விடுமல்லவா, அதனால்தான் ஏதோ ஒரு தனியார் கம்பெனியின் ஊழியனாக இருந்துவிட்டால், அது அப்படியே போய் விடும். பிடிபட்டுத் தண்டனை அடைந்தாலும் எல்லாவற்றையும் "ஏற்றவித'த்தில் கவனித்துச் சரி செய்து விடுவார்கள். இதனால் மற்ற எத்தனையோ உளவாளிகளை விட, ஹிட்மேன்களுக்கு இவ்வகை அடியாட்களுக்கு மவுசு கூடுதல்.

 

உலகில் உள்ள எல்லா நாடுகளுமே இந்த அடியாட்களுக்குப் பயந்து நடுங்க வேண்டும் என்றில்லை. அந்தக் கம்பெனிகளுக்குப் பணிய மறுக்கலாம், மறுத்திருக்கிறார்கள். அதற்கடுத்து "வேட்டை நாய்கள்' அமெரிக்காவிலிருந்து வரும். அரசியல் கொலைகள் நடக்கும்; தலைவர்கள் சிக்கவில்லையானால், அவரோடு உடன் இருப்பவர்கள், கட்சிக்காரர்களுக்கும் வலைவிரிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் கூட நடக்கும்; தேவையானால் இரண்டும் சேர்த்தே கூட நடத்துவார்கள்.

 

ஈரானின் மொஸாதேக் அரசு கவிழ்க்கப்பட்டு, ஷா ஆட்சி வந்தது எதனால்? அமெரிக்காவின் ஸ்டாண்டர்டு ஆயில் மற்றும் கல்ஃப் ஆயில் என்ற கம்பெனிகளின் நலன்களை மொஸாதேக் காப்பாற்றவில்லை.

 

கவுதமாலாவில் ஆயுதப்படை எடுப்பு அத்துமீறி அமெரிக்கா நுழைந்தது ஏன்? யுனைடெட் ஃப்ரூட் பழக்கம்பெனியின் நலன் காப்பாற்றப்படவில்லை. அந்தக் கம்பெனி அமெரிக்காவுடையது.

 

கியூபாவில் அமெரிக்கத் தொழிற் கழகங்கள் பலவற்றின் சொத்துக்களைத் தேசியமயமாக்க ஃபிடல் காஸ்ட்ரோ முயன்றதற்தாக, அவரது ஆட்சியைக் கவிழ்க்க அதிரடி முயற்சிகள் நடந்தன.

 

சிலியில் அலெண்டே அரசை அசைத்துக் கவிழ்த்தது அமெரிக்க ஐ.டி.டி. கம்பெனி; உதவி செய்தது அமெரிக்க உளவு நிறுவனம். அலெண்டே கொல்லப்பட்டார்.

 

பெர்கின்ஸோடு நன்கு பழகி அறிமுகமான பனாமா அதிபர் ஓமார் டோர்ரி ஜோஸ{ம், ஈக்குவடாரின் அதிபர் ஜெய்மே ரோல்டோஸ{ம் ஒரே மாதிரியான பின்னணியில் மிகக் கொடூரமான விமான விபத்துகளில், 1981 மேஜூலை என்று இருமாத இடைவெளிகளில் கொல்லப்பட்டார்கள்.

 

மேலே சொன்ன எல்லாச் சதிகளிலும் அடியாள்கள்தான் முன்தயாரிப்பு வேலை செய்தார்கள்.

 

இந்தியாவில் என்ன நடந்தது என்று உங்களால் ஊகிக்க முடியும். ரகசியமாக ஒரு விசவாயு தயாரிப்பு ஆலையாக "போபால் யூனியன் கார்பைடு' சட்டப்புறம்பாக தொடங்க, இயங்க, கசிவு "விபத்து'க்குப் பிறகு அதன் முதலாளி ஆண்டர்சன் அமெரிக்காவுக்குத் தப்பிக்க உள்வேலை செய்தவர்கள் அடியாட்கள்தான். அமெரிக்க "என்ரான்' மகாராஷ்டிராவில் நுழைந்து கொள்ளையடிக்க ஏற்பாடு செய்ததும் அவர்களே.

 

பெர்கின்ஸ், சவூதியில் தான் செய்த வேலைகளைப் பச்சையாகவே வைத்திருக்கிறார் தன் நூலில். 1970ஆம் ஆண்டுகளில் எண்ணெய் விலையேற்றம் உலகை உலுக்கிய போது அமெரிக்காவின் பார்வை சவூதி மீது விழுந்தது; பல லட்சம் கோடி பெட்ரோ டாலர் அமெரிக்காவைச் சேருவதற்கு சவூதி சரிக்கட்டப்பட்டது. வெளியே தெரிய வராத "சாணக்கியத் தந்திரம்' பெர்கின்ஸ் போன்ற அடியாட்களுடையதுதான். அமெரிக்க அரசும், உயர்மட்ட அதிகாரிகளும் சம்பந்தப்படாமல் அங்கு ஓரணுவும் அசையவில்லை என்பதை அவர் அம்பலப்படுத்துகிறார்.

 

இவை சட்டப்புறம்பான கிரிமினல் குற்றங்களல்லவா? ஆமாம். ஆனால் சாதாரணமானவை அல்ல் "மேட்டுக் குடி வகைக் குற்றங்கள்'. பொதுவாக, இவை ரத்தமின்றி நடத்தப்படும் பொருளாதார யுத்தங்கள். தேவையானால், கொஞ்சமாக ரத்தமும் சேர்ப்பார்களாம்.

 

*****


உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் பரப்புகின்ற "புனிதக் கடமை' தன் தோளில் சுமத்தப்பட்டுள்ளதாக அடிக்கடி பிதற்றும் அமெரிக்க அதிபர்களை எள்ளி நகையாடும் பெர்கின்ஸ், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீரழிந்த உலகப் பொருளாதார நிலைமையிலிருந்து தொடங்கி, ஐ.எம்.எஃப்., உலக வங்கி போன்ற கடன் நிறுவனங்கள் உருவாகியதிலிருந்து அவை முழுக்க முழுக்க அமெரிக்கக் கைகளில் அதிகார சக்தியாக உருவெடுத்தது வரை அமெரிக்காவின் ஈராக் ஆப்கான் போர்கள் வரை நார் நாராய்க் கிழித்தெறிகிறார். "நாடுகளின் அரசுகள் வங்கிகள் பன்னாட்டுக் கம்பெனிகள்' ஆகிய மூன்றின் கூட்டாக உருவெடுத்துள்ள கார்ப்பொரேட்÷டாக்ரசி (கார்ப்பொரேட் என்றால் மிகப் பெரும் வர்த்தக இணைக் கழகம் என்று பொருள்) அதாவது, "கம்பெனி நாயகம்' தான் உலகின் முதல் எதிரி என்கிறார், ஜான்பெர்கின்ஸ். அரசியல் ரீதியில், ஏகாதிபத்தியத்தின் மறுகாலனியாக்கம் என்பது இதுதான். அமெரிக்கா நல்ல அரசு அல்ல, உலகின் பேரரசாகத் துடிக்கின்ற சாத்தானின் பேரரசு என்கிறார் அவர்.

 

பத்து ஆண்டுகள் ஒரு பொருளாதார அடியாளாக வேலை பார்த்த பெர்கின்ஸ் தன்முகத்தின் மூலமாக அமெரிக்க மக்களின் முகங்களையும் பளிச்சென்று காட்டுகிறார்: ""இனிமேலும் கார்ப்பொரேட் நாயகத்தை, உலகப் பேரரசை விரிவாக்குவதற்கு வேலை செய்யாதீர்கள். உங்கள் முகம் அதுவல்ல. டி.வி. பார்ப்பதை விட்டு வெளியே வாருங்கள், நமக்குள் பேசத் தொடங்குவோம். கம்பெனி நாயகத்துக்கு எடுத்துக்காட்டு டி.வி.யேதான். 1980களில் 50 கழகங்கள் டி.வி.யில் ஆதிக்கம்; இப்போது, செய்தி ஊடகச் சந்தையில் ஒன்றை ஒன்று கடித்துத் தின்று, ஆறே ஆறு பகாசுர நிறுவனங்களாகிவிட்டன. உலகப் பேரரசாக அமெரிக்கா பிரம்மாண்டமாக வளர்கிறது இது ஒரு சதவீத அமெரிக்கருக்கே சொந்தம்; உலகின் ஏழை நாடுகளிலோ, ஒவ்வொரு நாளும் 50,000 மக்கள் பசியால், வறுமைத் துன்பத்தால், நோயால் சாகிறார்கள். பேரரசுகள் நிலைக்காது; அப்படி ஒரு வரலாறும் கிடையாது; ஆனால், ஒன்று போனால் மிக மோசமான மற்றொன்று வரக்கூடும். இப்போதைக்கு நமக்குள்ள ஒரு நம்பிக்கை உலகெங்குமுள்ள ஏழை மக்கள். எந்த உலகமயம் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதோ, அதுவே உலக மக்களை இணைத்துவிட்டது.''

 

சாத்தானின் பேரரசு எங்கேயிருந்து இத்தனைக் கொடுங்கோன்மையைக் கற்றது? இட்லரிடமிருந்து என்று சொல்கிறார்கள். ஆனால், இட்லரைக் கேட்டபோது சொன்னானாம், செவ்விந்தியர்களை அமெரிக்கா அழித்ததிலிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன் என்று. இதுவொருபுறமிருக்கட்டும். ""மக்களாகிய நாம்தான், அமெரிக்கப் பேரரசின் விபரீதக் கனவு பற்றி ஆராய்ந்து, அந்தச் சாத்தானின் பேரரசை வெறுத்து, மாற வேண்டும். நாம் மாறினால் உலகை மாற்றலாம்'' என்கிறார் பெர்கின்ஸ்.

 

பெர்கின்சின் மனச்சாட்சி நம்மையும் உலுக்க வேண்டும். உலகப் பேரரசுக் கனவு காணும் கொலைகார அமெரிக்காவின் பிரம்மாண்டமான தேர்ச் சக்கரத்தில் இந்திய மக்களைப் பிணைத்துவிட இந்திய ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள்; பெர்கின்சின் அனுபவத்தையும் சேர்த்துக் கொண்டு சாத்தானின் பேரரசுக் கனவுகளை நொறுக்குவதற்காக, நமது மனச்சாட்சிகளை உலுக்கிக் கொள்வோம்!


மு வேலாயுதம்