09_2005.jpgதண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வீறுகொண்டு ஏழத் தொடங்கிவிட்டன

நாடு முழுவதும் ஏன், உலகெங்கும் தண்ணீர் தனியார்மயமாவதையும் வியாபாரமாவதையும் எதிர்த்து போராட்டங்கள் பெருகி வருகின்றன. உயிருக்கே ஆதாரமான தண்ணீரைத் தனது கொள்ளை லாப வெறிக்காக சரக்காக்கிற "ஷைலக்'குகளான பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை ஒழித்துக் கட்டாத வரை இப்போராட்டங்கள் ஓயப் போவதுமில்லை.

 

கேரள பாலக்காடு மாவட்டத்திலுள்ள குற்றியாடி கிராம பஞ்சாயத்து தலைவர், வியாபாரிகள் என மக்களனைவரும் இணைந்து ஆகஸ்ட் 15இல் கிராமத்தை "கோலா' இல்லாத கிராமம் என அறிவித்துள்ளனர்.

 

அதே ஆகஸ்ட் 15இல் பிளாச்சிமடாவில் ""கோக் ஆலையைக் கைப்பற்றுவோம்!'' என்ற முழக்கத்துடன் கே.என்.ராமச்சந்திரன் தலைமையிலான இ.பொ.க. (மாலெ) கட்சியைச் சேர்ந்த ""யுவ ஜன வேதி'' என்ற இளைஞர் அமைப்பு கோக் ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீசு கவசஉடை, இரும்புத் தொப்பி, நீர் பீச்சியடிக்கும் எந்திரத்துடன் வந்து ஆர்ப்பாட்டத்தைத் தடுத்தது.

 

""யுவ ஜன வேதி'' அமைப்பினர் தடையை மீறிய போது கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தடியடியை நடத்தியது, போலீசு. உற்பத்தி முடக்கப்பட்டுள்ள கோக் ஆலையினுள் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்தங்களை வீசினர். அதேநேரம் தடியடி நடத்திய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சட்டையைப் பிடித்து உலுக்கிய ஒரு இளைஞர் ""தேசத்தையே சூறையாடும் கோக்கின் எடுபிடியா நீ?'' என சரமாரி கேள்விகள் எழுப்பி அவனது மனச்சாட்சியையும் உலுக்கினார்.

 

அப்போது வந்திறங்கிய கூடுதல் போலீசுப் படை மீண்டும் ஒரு கொடூர தடியடியை அரங்கேற்றியது. ""யுவஜன வேதி'' இளைஞர்களைக் கைது செய்ததோடு உள்ளூரிலுள்ள ""கோலா எதிர்ப்பு சமிதி'' அமைப்பின் தலைவரையும் அவ்வமைப்பின் முன்னணியாளர்களையும் கைது செய்தது கோக்கின் எடுபிடியான போலீசு.

 

உள்ளூர் மக்களோ, போலீசை மறித்து தமது தலைவர்களை விடுவிக்காமல் ஓரடி கூட நகர விடமாட்டோம் எனப் போராடவே பீதியடைந்த போலீசு ""கோலா எதிர்ப்பு சமிதி'' அமைப்பினரை விடுதலை செய்து ""யுவஜன வேதி'' அமைப்பினரை மட்டும் கைது செய்து கொண்டு சென்றது.

 

தெற்கே மட்டுமல்ல, தண்ணீரைத் தனியார்மயமாக்க நிர்பந்திக்கும் உலக வங்கி தலைவர் பால் ஓல்ஃபோவிஸ் இந்தியப் பயணமாக தில்லி வந்தபோது ""தண்ணீரில் கை வைக்காதே!'' என உலக வங்கி அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ""கொல்லைப்புற வழியாக தண்ணீரைத் தனியார்மயமாக்கும் உலக வங்கியின் கொள்கைகள், நிபந்தனைகளை எதிர்த்து'' ஆகஸ்ட் 20ஆம் தேதி ""தண்ணீர் ஜனநாயகத்திற்கான குடிமக்கள் முன்னணி'' என்ற கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தில்லியையே உலுக்கியது.

 

அக்கூட்டமைப்பின் தலைவர்கள் (இதில் டாக்டர் வந்தனா சிவா என்ற உயிரிவாழ் சூழலியல் விஞ்ஞானியும் ஒருவர்) உலக வங்கித் தலைவரைச் சந்தித்து, ""இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையுள்ளது. அதை ஒருபோதும் வியாபாரமாக்க அனுமதிக்க மாட்டோம்!'' என எச்சரித்துள்ளனர்.

 

தில்லிக்கு குடிநீர் வழங்கும் சோனியா விகார் திட்ட ஆலோசனைக்கான ஒப்பந்தத்தைப் பெற ""பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்'' (பி.டபிள்யு.சி.) என்ற நிறுவனம் 3 முறை போட்டியிட்டும், நிராகரிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உலக வங்கி தலையிட்டு, இறுதியில் தில்லி குடிநீர் வாரிய அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, பி.டபிள்யு.சி. நிறுவனத்திற்கே ஆலோசனைக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுத் தந்தது.

 

தண்ணீரை வியாபாரமாக்குவது தனியார்மயமாக்குவது மட்டுமின்றி, தான் கைகாட்டும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கே ஒப்பந்தங்களை வழங்க வேண்டும் என அடாவடித்தனம் செய்கிறது உலக வங்கி. கடன் பெறும் இந்தியா, கைகட்டி சேவகம் செய்கிறது.


தில்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை கண்டு அரண்டுபோன உலக வங்கித் தலைவர், சோனியா விகார் திட்டத்திற்கும் உலக வங்கிக்கும் சம்பந்தமில்லை என யாரும் நம்ப இயலாத பொய்யைக் கூறினார்.

 

தில்லி ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாளே கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாச்சிமடாவில் "கோக்' ஆலையால் நிலத்தடி நீரின் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளதாகக் கூறி, உற்பத்தியை முற்றாக நிறுத்தக் கோரி உத்திரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசோ தாமிரவருணியை நஞ்சõக்க கோக்கிற்கு அனுமதியளித்துள்ளது.

 

நெல்லை தாமிரவருணியில் "கோக்'கை எதிர்த்த புரட்சிகர அமைப்புகளின் வீச்சான பிரச்சாரம் நடந்து வருகிறது. இப்போராட்டம் தனித்து நடக்கும் ஒன்றல்ல என்பதையே பிளாச்சிமடாவிலும், தில்லியிலும் நடந்த போராட்டங்கள் நிரூபிக்கின்றன. பொலிவியாவின் கொச்சபம்பா நகர மக்கள் ""பெக்டெல்''லை விரட்டியடித்தது போல, தண்ணீர் மீதான சமூக உரிமையைப் பறிக்க வரும் பன்னாட்டு பகாசுர கம்பெனிகளை இந்திய மக்கள் விரட்டியடிக்கும் நாளும் வெகு தூரமில்லை.


மு சுப்பு