Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

09_2005.jpg"எங்கள் பகுதியில் பு.ஜ. இதழைப் பிரச்சாரம் செய்து நாங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது, ஒரு பாமர விவசாயி, பு.ஜ. இதழின் அட்டைப்படத்தைப் பார்த்து பக்தியோடு கும்பிட்டு, இந்த அனுமார் சாமி புத்தகத்தை எனக்கும் கொடுங்கள் என்று கேட்டார். இது சாமி இல்லை; கொத்தடிமை ஆசாமி என்று நாங்கள் அவரிடம் விவரமாக விளக்கிக் கொண்டிருந்ததைக் கேட்டு, அங்கு 1020 பேர் கூடிவிட, அதுவே ஒரு தெருமுனைக் கூட்டம் போல அமைந்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய உதவியது. அமெரிக்க அடிமை "அணு' மன்மோகன் சிங்கை அம்பலப்படுத்திய அட்டைப்படம் வெகுசிறப்பு.
இராணி, போச்சம்பள்ளி.

 குர்கானில் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய கொலைகார போலீசை எதிர்த்து தன்னந்தனியே துணிவாகப் போராடிய வீரமதியின் வீரம் வியக்கத்தக்கது. மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக இன்னும் பல வீரமதிகளின் கரங்கள் ஓங்க வேண்டும்.
ஆர். ராஜா, ஊரப்பாக்கம்.

 

ழதமிழ்நாடு ஆதிக்க சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாக மாறியிருக்கும் வெட்கக்கேட்டை ஆதாரத்துடன் வெளியிட்டு அழுத்தமான எச்சரிக்கையுடன் பதிவு செய்திருப்பது உணர்வூட்டுகிறது. ஆதிக்க சாதிகள், அரசு ஆதரவுடன் அடக்குமுறைகளை நீட்டித்துக் கொள்ளலாமே தவிர, ஒருக்காலும் நிலைநிறுத்திக் கொள்ள முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
ப.க. இராசா இராவணன், பழனி.

 

ழநடிகர் விஜயகாந்தின் உண்மையான முகத்தை உண்மையான பொருளில் சுட்டிக் காட்டியிருப்பது சிறப்பு. தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம்; புதிய ஜனநாயகம் என்பது போராட்டத்தின் ஆதாரம்!
அர்ச்சுனன், பூந்தோட்டம்.

 

ஆகஸ்ட் இதழின் அட்டைப்படமே அற்புதம். குர்கான் கொலைவெறித் தாக்குதலுக்குப் பிறகாவது தொழிலாளி வர்க்கம் தொழிற்சங்க வாதத்திலிருந்து விலகி புரட்சிகர அரசியலைக் கைக்கொள்ள வேண்டும். கொலைகார ராமன் கோயில் தாக்குதல் நிகழ்விற்கு ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் அலறியிருப்பது, அவற்றின் இந்துவெறி சார்பை அம்பலப்படுத்திக் காட்டி விட்டது. கண்டதேவி தேரோட்டமும் தொடரும் சாதிவெறிக் கொடுமைகளும் தமிழகத்தின் அவமானச் சின்னங்கள்.
மா. சத்தியசீலன், தேரெழுந்தூர்.

 

வியாபார நோக்கில் வெளிவரும் இதழ்களுக்கு மத்தியில் இருள் விலக்கும் செங்கதிர் போல் பு.ஜ. தொடர்ந்து வெளிவருவது, பாராட்டத்தக்கது. இதழின் மகுடமெனத் திகழ்வது ""கார்ல் மார்க்ஸ் இன்றைய காலத்திற்கேயுரிய வழிகாட்டி'' என்ற கட்டுரையாகும். ஆர்.எஸ்.எஸ். உறைக்குள் இருந்து கொண்டு தமிழ், தமிழன், சாதி எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு என்று சவடால் பேசும் விஜயகாந்தை அம்பலப்படுத்தியிருப்பது சிறப்பு.
செம்மலர் மா. நடராசன், அறந்தாங்கி

 

படமாத்தூர் கொக்கோ கோலா எதிர்ப்புப் போராட்டத்திலும், மானாமதுரையில் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மாநாட்டிலும், இப்போது நெல்லை கங்கை கொண்டான் கோக் எதிர்ப்பு பிரச்சார வேலைகளிலும் சி.பி.எம்.மும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான மக்கள் கண்காணிப்பகமும் கூடிக் குழைந்தது ஊரறிந்த உண்மை. இவ்வளவு இருந்தும் மக்கள் கண்காணிப்பகத்தின் சித்திரவதைக்கு எதிரான கலை இரவு நடந்த அன்று, சி.பி.எம். தனது ""தீக்கதிர்'' நாளேட்டில், ""தொண்டு நிறுவனங்களா? பசுத்தோல் போர்த்திய புலிகளா? என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருப்பது யாரை ஏமாற்ற? மக்கள் கண்காணிப்பகம் எனும் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளை மட்டுமல்ல் தனது கட்சி ஊழியர்களிடமே முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் சி.பி.எம்.மின் பித்தலாட்டத்தையும் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்.
குருசாமி மயில்வாகனன், சிவகங்கை.

 

ஆதாரம் கேட்ட ஹென்றிடிபேனுக்கு, கைக்கூலிகள் நடத்திய கூட்டத்தின் புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டு மூக்குடைத்திருப்பது அருமை. இத்தகைய ஏகாதிபத்திய கைக்கூலிகளை மக்களிடம் அம்பலப்படுத்தி துடைத்தெறிய வேண்டும்.
ப. இசக்கிமுத்து, திருநெல்வேலி.

 

அவமானச் சின்னமான கொலைகார ராமன் கோயில் மீதான தாக்குதலைக் கண்டு பதறுகின்றன, "மதச்சார்பற்ற' மார்க்சிஸ்டும் காங்கிரசும், ராமன் கோயிலைப் பாதுகாக்கவும், மத நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் தமது ""டைஃபி''யை போலீசுக்குத் துணையாக சி.பி.எம். கட்சி அனுப்பி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கதிரவன், சென்னை.

 

அயோத்தி ராமன் கோயிலுக்கு இவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது பிரமிப்பூட்டுகிறது. எந்தப் பயன்பாடும் இல்லாத ஒரு கல்லுக்கு உணர்வோடு பாதுகாப்பு அளிக்கும் ஆட்சியாளர்களையும் மதச்சார்பின்மை வேடம் போடும் ஓட்டுக் கட்சிகளையும் மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.
ஜீவா, சென்னை.

 

காலனியாதிக்கத்தின் கொடூரத்தை அறிந்திராத இன்றைய தலைமுறையினருக்கு குர்கான் கொடூரத்தைக் கண்டதிலிருந்து அன்றைய ஜாலியன்வாலாபாக்கும் இன்றைய மறுகாலனியாதிக்கமும் என்னவென்று புரியும். தலையங்கக் கட்டுரை எடுப்பாகவும் உணர்வூட்டுவதாகவும் அமைந்துள்ளது. விஜயகாந்த் பற்றிய கட்டுரை சரியான நேரத்தில் வந்திருப்பது சிறப்பு. சிறீராம் ஃபைபர்ஸ் ஆலையில் பு.ஜ.தொ.சங்கத்தின் சமரசமற்ற போராட்டமும் போர்க்குணமும் நம்பிக்கையின் தொடக்கமாக அமைந்துள்ளது.
வாசகர் வட்டம், சென்னை.

 

இந்திய இராணுவம் அமெரிக்காவின் நேரடியான கூலிப்படையாகவும், இந்திய விவசாயிகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் கூலிகளாகவும் மாற்றப்பட்டு வருவதை அட்டைப்படக் கட்டுரையும் ஒப்பந்த விவசாயம் பற்றிய கட்டுரையும் பேரபாயமாக உணர்த்துகிறது. கார்ல் மார்க்ஸ், இன்றைய காலத்திற்கேயுரிய வழிகாட்டி மட்டுமல்ல் எக்காலத்துக்குமான வழிகாட்டி என்பதையும் இனி வருங்காலம் கம்யூனிஸ்டுகளுக்கே உரியது என்பதையும் பு.ஜ. படித்த எவரும் உணர முடியும்.
புரட்சித்தூயன், தருமபுரி.

 

அரசுத்துறை நிறுவனமான ""பெல்'' (ஆஏஉஃ) பங்குகளை விற்க முயன்ற காங்கிரசை கடித்துக் குதறி ""பெல்''லைக் காப்பது போல நடித்த போலி கம்யூனிஸ்டுகள் மீது ""பெல்'' நிறுவனத்துக்கான ஒப்பந்தத்திலிருந்தே புதிதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்து கேரளாவில் சி.பி.எம். கட்சியினரை நாறடித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவில் "இடதுசாரி' கூட்டணி ஆட்சியின் போது அக்கட்சியின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த விஜயன் மூன்று நீர் மின் நிலையங்களை புதுப்பிக்கும் ஒப்பந்தத்தை ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். நியாயமாக இந்த ஒப்பந்தம் ""பெல்''லுக்கு கிடைத்திருக்க வேண்டும், அவ்வாறு கிடைத்திருந்தால் அதே வேலையை ""பெல்'' நிறுவனம் தரமாகவும், பாதி செலவிலும் முடித்துக் கொடுத்திரக்கும். ""பெல்''லும் இதையே கூறி ஒப்பந்தத்தை பெற முன் வந்தது; ஆனால் மாண்புமிகு அமைச்சரோ "தேசப்பற்றோடு' ""பெல்''லைத் துரத்திவிட்டு ஒப்பந்தத்தை பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கி பணியை முடித்துக் கொடுக்க ரூ. 374 கோடியும் கொடுத்துள்ளார். இந்த "தேசபக்தர்கள்'தான் ""பெல்'' பங்குகள் விற்கப்படுவதை தேசத் துரோகமென்று குரைக்கிறார்கள்.

 

தற்போது இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரூ. 110 கோடி நட்டமடைந்து விட்டதாக விஜயன் மீது கேரள மின்வாரியம் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. கள்ளச்சாராய ரவுடிகளுக்கே வழிகாட்டிய போலிகளுக்கு இதெல்லாம் சுண்டைக்காய் சமாச்சாரம், ஆனாலும் இதில் வேடிக்கை என்னவென்றால் விஜயனின் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் அச்சுதானந்தனும் விஜயனுக்கு எதிரான அணியில் நின்று கொண்டு கோஷம் போடுகிறாராம். ஏன்? அச்சுதானந்தனுடைய பங்கையும் சேர்த்து விழுங்கி விட்டாரா விஜயன்? போலிகளுக்கே வெளிச்சம்!


வெண்மணி.