Language Selection

புதிய ஜனநாயகம் 2005

10_2005.jpg'நான் 2001இல் நைஜீரியா நாட்டில் வேலை செய்து வந்தபொழுது, குழாயில் வரும் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தேன். என்னுடன் வேலை செய்து வந்த அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி, இதைக் கண்டு பதறிப் போய், இந்தத் தண்ணீரெல்லாம் வாயிலேயே படக்கூடாது என எனக்கு அறிவுரை செய்தார். ஒரு ஏழை நாட்டைச் சேர்ந்த சாதாரண தொழிலாளி இப்படிச் சொல்லியது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படிப்பட்ட மாற்றங்கள் நம்மைச் சுற்றி நடந்து வருவதைப் பற்றி நாம் விழிப்புணர்வு கொள்ளாமல் இருக்கிறோம்" எனப் புதிய தாராளவாதக் கொள்கை நமது கலாச்சாரத்தில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களைத் தனது உரையெங்கும் ஆழமாக விவரித்தார், தோழர் ஆனந்த் தெல்தும்ப்டெ.

 

'சுதந்திரச் சந்தை என்பது பொது மக்களைச் சுரண்டுவதில் எந்தளவிற்குச் செல்லக் கூடும் என்பதற்கு கோக் தான் மிகச் சிறந்த உதாரணம். ஏனென்றால், எதற்குமே பயனில்லாத ஒரு பானத்தை நமது தலையில் கட்டி, பல ஆயிரம் கோடி ரூபாய் இலாபமீட்டுகிறது கோக்."

 

'நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கித் திளைப்பதைவிட வாழ்க்கையில் வேறெந்த நோக்கமும் கிடையாது என்ற சிந்தனையை நம்முள் ஏற்படுத்தி விடுகிறது, இப்புதிய தாராளமய ஏகாதிபத்திய கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் நம்மிடம் எஞ்சியிருக்கும் கூட்டுத்துவ சிந்தனையைக் கொன்றுவிட்டு, தனிநபர்வாதத்தை ஊட்டி வார்க்கிறது; இத்தனிநபர் வாதத்தை வீரம் எனப் போற்ற வைக்கிறது. இதன் மூலம், கம்யூனிசம் தவறு; முதலாளித்துவம்தான் சரியானது என்று நம்மை ஒத்துக் கொள்ள வைக்கிறது. இதுமட்டுமின்றி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில், அமெரிக்கா ஆப்கான் மீதும், ஈராக் மீதும் குண்டு வீசி நாசப்படுத்துவதையும், அமெரிக்கா சில நாடுகளை போக்கிரி நாடுகள் எனக் குற்றஞ்சுமத்துவதையும், மறுப்பேதுமின்றி நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கிறது."

 

'ஒருபுறம் இப்படி புதிய தாராளமய கலாச்சாரம் பொது மக்களின் சிந்தனையை நஞ்சாக்கினாலும், இன்னொருபுறம், இதற்கு எதிரான போராட்டங்களும் உலகு தழுவிய அளவில் நடந்து வருகின்றன. பிளாச்சிமடாவிலும், திருநெல்வேலியிலும் நடந்து வரும் போராட்டங்கள் உலகமயத்துக்கு எதிரான போராட்டங்கள்தான். அதனை கோக்கிற்கு எதிரான போராட்டமாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது."

 

'தண்ணீர் தனியார்மயம் என்பது நமக்குப் புதியதல்ல் ஒரு தலித்திற்கு உள்ளூர் குளத்தில் தண்ணீர் மறுக்கப்பட்டால், அது தனியார்மயமில்லையா? அம்பேத்கர் தண்ணீருக்காகப் போராட்டம் நடத்தினார் என்றால், அது மேல்சாதியினரின் தனியார்மயத்தை எதிர்த்த போராட்டம் இல்லையா? அது வழக்காக நடந்த போது, அந்த ஊர்க்குளம் எங்களது சொத்து என வாதாடித்தான் மேல்சாதிக்காரர்கள் வென்றார்கள்"

 

'திட்டக் கமிசன் துணைத் தலைவராக இருக்கும் மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் தண்ணீரைத் தனியார்மயமாக்கினால், தண்ணீருக்கு உரிய விலை வைத்தால், தண்ணீர் வீணாவது தடுக்கப்படும் என்கிறார்கள். இது பதில் சொல்லவே தகுதியற்ற வாதம்."

 

'தண்ணீருக்கு உரிய விலை வைத்தால் ஏழைகளால் தண்ணீரை வாங்க முடியாது. இதன் மூலம் தண்ணீர் பணக்காரர்களுக்குப் போய்ச் சேரும். கிராமப்புற தண்ணீர், நகர்ப்புறங்களைப் போய்ச் சேரும். உணவு தானிய பயிர்களுக்குப் பதிலாக ஏற்றுமதிக்குத் தேவைப்படும் பணப்பயிர்களைப் பயிரிடச் சொல்வதன் மூலம், தண்ணீர் மறைமுகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது."

 

'மகாராஷ்டிராவில், நீர் ஆதார ஒழுங்கு முறைச் சட்டம் போட்டு, பாசனக் கட்டணத்தை ஒரு ஏக்கருக்கு ரூ. 8,000ஃ என உயர்த்தி விட்டார்கள். ஏற்கெனவே போண்டியாகிப் போய் நிற்கும் விவசாயிகளை, இக்கட்டண உயர்வு நிலத்தில் இருந்து துரத்தியடித்து விடும். வளமான நிலங்கள் பணக்காரர்களிடமும், தரகு முதலாளித்துவ நிறுவனங்களிடமும் குவிவதை இச்சட்டம் இனி துரிதப்படுத்தும்."

 

'தில்லியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் 344 கோடி ரூபாய்தான் செலவழித்து வருகிறது. அதேசமயம், பொதுமக்களிடமிருந்து குடிநீர் கட்டணமாக 270 கோடி ரூபாய் வசூலித்து வந்தது. இதனால் ஏற்பட்ட 'நட்டம்" 70 கோடி ரூபாய்தான். இந்த நட்டத்தை ஈடுகட்ட டிசம்பர் 2004இல் குடிநீர் வருவாய் 3,000 கோடி ரூபாயாக உயரும்படி, தண்ணீர் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தண்ணீருக்கு உரிய விலை வைப்பது என்பது இப்படிப்பட்ட பகற்கொள்ளையில்தான் முடிவடைகிறது."

 

'மேலும், இத்தண்ணீர் தனியார்மயக் கொள்கை, உள்நாட்டில் தண்ணீருக்காக ஒரு போரை நடத்தும்படியான நிலைமையை உருவாக்குகிறது. ராசஸ்தானில், பாசன வசதி கோரிப் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டனர்."

 

'தண்ணீர் தனியார்மயத்தின் குறியீடான கோக்கிற்கு எதிராக பிளாச்சிமடாவில் நடக்கும் போராட்டம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. ஆனால், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக மும்பையிலும், தில்லியிலும் வாழும் மக்கள் கோக்கைக் குடிக்காமல், புறக்கணிப்பு செய்யாமல் இருக்கக் காரணம், புதிய தாராளவாத ஏகாதிபத்திய கலாச்சாரம் மக்களின் சிந்தனையில் தனிநபர் வாதம் என்ற நஞ்சைக் கலந்திருப்பதுதான்" எனக் குற்றஞ்சாட்டிய ஆனந்த் தெல்தும்ப்டெ, 'திருநெல்வேலியில் ம.க.இ.க. நடத்தும் போராட்டம் கலங்கரை விளக்காகத் திகழட்டும்" என வாழ்த்தினார்.