Language Selection

11_2005.jpgநாலுவழிச் சாலை மக்களுக்கான நல்வழிச் சாலை அல்ல. இச்சாலைகளை உபயோகிக்க கூடுதல் கட்டணம் செலுத்தத் தயாராக உள்ள நடுத்தர வர்க்கம், இந்த உலகமயமாக்கம் தன்னையும் தகர்த்துக் கீழே தள்ளும் என்பதை உணரும்போது மட்டுமே, இப்பொருளாதார வளர்ச்சி யாருக்கானது என்பதைப் புரிந்து கொள்ளும். அல்லாதவரை ""நாடு, மக்கள்'' எனக் குறிப்பிடும்போது தம்மை மட்டுமே முன்னிறுத்தும் இந்த வகையினர், கட்டுரை உணர்த்தும் பொருளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, முழுமையான உள்விவரங்களுடன் கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஜீவா, சென்னை.

 

வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு அழிவு வந்தால் அதிலிருந்து மனித குலத்தைக் காக்கப் போராடுவதாகத் திரைப்படம் எடுக்கும் அமெரிக்கா, கத்ரீனா புயல் தாக்கிய போது சொந்த நாட்டு மக்களையே காப்பாற்ற முன்வரவில்லை. அமெரிக்க மாயையைக் கலைத்த கட்டுரை சிறப்பு. நால்வழிச் சாலைகள், கணினி மென்பொருள் பூங்காக்களால் நாடு முன்னேறுவதாகக் கருதுவோரின் கனவைக் கலைத்த, ""ஒட்டுண்ணித்தனத்தின் புதிய பரிமாணம்'' என்ற கட்டுரை அருமை.

வாசகர் வட்டம், தஞ்சை.

 

மத்தூர் சிறு சந்தை நகரம். இங்கு புதிய ஜனநாயகம் இதழ் நூறுக்கும் மேல் விற்பனையாகிறது. இதைப் பார்த்து, வங்கி ஊழியர்கள் சிலர், இவ்வளவு பத்திரிகை இங்கு விற்பனையாகிறதா என்று ஆச்சரியமாகக் கேட்டு, தாங்களும் பு.ஜ. இதழை வாங்கிப் படித்து பாராட்டினர். ஒவ்வொரு இதழும் கூர்மையான அரசியலோடு வெளிவருவது எங்களுக்கு உற்சாகமளிக்கிறது.

இராணி, போச்சம்பள்ளி.

 

அக். இதழின் அட்டைப்படம் போராட்ட உணர்வைத் தூண்டும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பணக்கார நாடு, மக்கள் சுகபோகமாக இருப்பார்கள் என்ற மாயையைத் தகர்த்து, அங்கு ஏழைகள் படும் அவலத்தையும் அரசின் அலட்சியத்தையும் கத்ரீனா புயல் பற்றிய கட்டுரை எடுப்பாக விளக்கியது. நாலுவழிச் சாலையால் நாடு முன்னேறப் போவதாக நம்பிய எங்களது தவறான கருத்தைக் களையும் விதமாக நாலுவழிச் சாலை பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. சாதிவெறியர்களின் கொட்டத்தை ஒடுக்க அவர்களது இடஒதுக்கீடு உரிமை, வாக்குரிமை உள்ளிட்டு அனைத்து உரிமைகளையும் பறிக்க வேண்டும் என்று பு.ஜ. வைத்துள்ள தீர்வு மிகச் சரியானது; நியாயமானது.

வாசகர்கள், பாடாலூர்.

 

செப். 12 அன்று நடந்த கோக் எதிர்ப்புப் போராட்டத்தில் உங்களது புதிய ஜனநாயகப் புரட்சிகர அமைப்புகளின் வீரியத்தையும் எழுச்சியையும் காண முடிந்தது. முற்போக்கு, ஜனநாயக, தமிழின அமைப்புகள் அனைத்தும் உங்களோடு ஒன்றிணைந்து முழுமூச்சில் அமெரிக்க எதிர்ப்பில் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மலர், திருச்சி.

 

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுக்குச் சேவை செய்யும் இந்திய ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தலையங்கம் எடுப்பாக விளக்கியது. புரட்சி பேசும் சி.பி.எம். தலைவர்களின் பித்தலாட்டச் செயலுக்கு புத்ததேவ் பட்டாச்சார்யா எடுப்பான சான்று. கோக் எதிர்ப்புப் போராட்டச் செய்திகள் உணர்வூட்டுபவையாக அமைந்துள்ளன.

செம்மலர் மா. நடராசன், அறந்தாங்கி.

 

தந்தை பெரியார் எதிர்பார்த்த போர்க்குணம் மிகுந்த இலட்சியப் பயணத்தை புதிய ஜனநாயகப் புரட்சிகர அமைப்புகள் மட்டுமே நடத்தி வருகின்றன. எந்தவொரு ஓட்டு அரசியல் கட்சியும் செய்யத் துணியாத பிரச்சாரத்தை, போராட்டத்தை கோக் எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் சாதித்துள்ளன. நெல்லை ஆர்ப்பாட்டத்தில் பெண் தோழர்களின் உணர்ச்சிகரமான அந்தப் பறையொலியானது, அமெரிக்கக் கொள்ளையர்களின் தலையில் இடியாய் இறங்கப் போவது நிச்சயம்.

இராசா இராவணன், பழனி.

 

காந்திகாங்கிரசு துரோகங்களின் களர் நிலத்தில் விளைந்த பதரான மன்மோகன் சிங்கின் கழுத்தறுப்பு ஒருபுறம். காங்கிரசு கயவாளிகளை முட்டுக் கொடுத்து ஆதரிக்கும் போலி கம்யூனிஸ்டுகள் மறுபுறம். இவை மதச் சார்பற்ற அரசியல் நாணயத்தின் இரு பக்கங்கள். இதைச் சுண்டி விளையாடுகிறது மறுகாலனியாக்கம். காங்கிரசுக்கும் போலி கம்யூனிஸ்டுகளுக்கும் கொடிகள்தான் வேறுபாடு; கொள்கை ஒன்றுதான் என்பதை பு.ஜ. கட்டுரைகள் உணர்த்துகின்றன.

கதிரவன், சென்னை.

 

தன் சொந்த நாட்டு மக்களையே காப்பாற்ற வக்கற்று நிற்கும் அமெரிக்க வல்லரசு, இதர ஏழை நாடுகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கப்பலில் அனுப்புவதும், ஏன் ஜனநாயகத்தையே ஏற்றுமதி செய்து அந்நாடுகளை ஆக்கிரமிப்பதும் எதற்காக? இந்தக் கேள்வியின் மூலம் அமெரிக்க மாயையைக் கலைத்து, அதன் கோர முகத்தை கத்ரீனா பற்றிய கட்டுரை அம்பலப்படுத்திக் காட்டியது.

நிர்மலா, திருச்சி.

 

கிராமப்புற சாலைகள் போட நிதியில்லை என்று கையை விரிக்கும் ஆட்சியாளர்கள், தங்க நாற்கரண நெடுஞ்சாலைகள் நாலுவழிச் சாலைகளுக்கு கோடி கோடியாய் வாரியிறைப்பது ஏன் என்பதை ஒட்டுண்ணித்தனத்தின் புதிய பரிமாணம் கட்டுரை தெளிவுபடுத்தியது. அமெரிக்கா சொர்க்கபுரி அல்ல் ஏழைகளும் பணக்காரர்களும் கொண்ட வர்க்க முரண்பாடு நிலவும் நாடு என்பதையும், அமெரிக்க ஆட்சியாளர்களின் கொடூர முகத்தையும் கத்ரீனா பற்றிய கட்டுரை படம் பிடித்துக் காட்டியது. மார்க்கிய லெனினிய இயக்கத்தில், பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்துள்ள புதிய ஜனநாயகத்துக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்கள்!

வாசகர் வட்டம், திருச்சி