11_2005.jpgமிழகத்தின் தலைநகரைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவது என்ற திட்டத்தின் கீழ், இரண்டாண்டுகளில், குடிசைப் பகுதிகளைக் காலி செய்து 20,000 குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் 20 மைல்களுக்கு அப்பால் உள்ள துரைப்பாக்கத்தில் குப்பையாகக் கொட்டியது, தமிழக அரசு. அவர்களோடு, சுனாமியால் பாதிக்கப்பட்டவை என்ற பெயரில் கடற்கரைக் குடிசைகளை இடித்துவிட்டு, ஒரே நாளில் 2,000 குடும்பங்களையும் அங்கு கொண்டு குவித்தனர்.

அங்கு குடிதண்ணீர், மின்சாரம், பள்ளி, மருத்துவமனை, போக்குவரத்து, தொழில் என்று மக்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைக்கான வசதி எதுவுமே கிடையாது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பிழைப்புத் தேடி உழைப்பாளிகளும், படிப்புக்காக பிள்ளைகளும் கிழக்குக் கடற்கரை பழைய மாமல்லபுரம் சாலைகளில் போக்குவரத்துக்கு வழியின்றி அலைமோதிய போது அவர்களை எதிர்கொண்டது போலீசு அதிகாரிகள்தாம். ""சமாதானம்'' பேசிக் கொண்டே, அதிரடி ""கமாண்டோ'' போலீசைக் குவித்து கொலைவெறித் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு, சிறுவர்கள், பெண்கள் மண்டையைப் பிளந்து, இளைஞர்களைத் தாக்கி, பொய்வழக்குப் போட்டு சிறையிலடைத்தனர்.

 

கடந்த ஆகஸ்டு மாதம் ஒருநாள், சென்னையின் தெற்கு புறநகர் பகுதிக் குடியிருப்புகளில் இருந்து, போலி கம்யூனிஸ்டு மற்றும் பிற சமூக நல அமைப்புகளின் தலைமையில் திரண்ட மக்கள், குடிதண்ணீர், சாக்கடை கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கோரி ஆயிரக்கணக்கானோர் கோட்டை நோக்கிப் புறப்பட்டனர். முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து மனுக் கொடுத்து முறையிடுவதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், சென்னையின் தெற்கு நுழைவாயிலில் அவர்களை எதிர்கொண்டவர்கள், சென்னை மாநகர உயர் போலீசு அதிகாரிகள், குறிப்பாக உளவுப் பிரிவு போலீசு உயர் அதிகாரி சிவனாண்டி; கூடவே, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனம்; சாதாரண மற்றும் ஏ.கே 47 வகை இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய பலவகைப் போலீசுப் படை. சிவனாண்டி முதலிய அதிகாரிகள் ""சமாதானம்'' பேசிக் கொண்டிருந்த போதே, போலீசு உளவாளிகளின் ஆத்திரமூட்டும் சதிச் செயல்களைத் தொடர்ந்து சென்னை அடையாறு பகுதியே அதிரடிப்படைத் தாக்குதலால் இரத்தக் காடாகியது. அடிப்படை வசதி கோரிய மக்கள் அடித்து நொறுக்கித் தூக்கியெறியப்பட்டனர்.

 

இந்த செப்டம்பர் மாதம் முதல் வாரம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, சி.பி.எம். கட்சியின் விவசாய சங்கத்தினர், அக்கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் பேரணியாகப் புறப்பட்டுப் போய் அதிகாரியிடம் மனுக் கொடுப்பதற்கு விழைந்தனர். அதற்கு அனுமதி மறுத்த மாவட்ட உயர் போலீசு அதிகாரிகள், ""தேசிய நெடுஞ்சாலையில் கும்பலாக நடந்து போனார்கள்'' என்று குற்றஞ்சாட்டி, நூற்றுக்கணக்கான விவசாயிகளைக் கைது செய்தனர்.

 

கோவையில் மூடிக் கிடக்கும் ஆலைகளைத் திறக்கக் கோரி சமீபத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது கொடூரமான தடியடி நடத்தி, விரட்டியடித்தது போலீசு. பள்ளி கல்லூரிக் கட்டண உயர்வை எதிர்த்து, சென்னையில் கல்வி இயக்குநரிடம் மனுக் கொடுப்பதற்குத் திரண்ட மாணவமாணவிகளைப் பிடித்துக் கொண்டு போய், போலீசு நிலையத்தில் வைத்துச் சித்திரவதை செய்துள்ளது, போலீசு.

 

""தண்ணீரைத் தனியார்மயமாக்காதே! வியாபாரமாக்காதே! தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!'' ஆகிய முழக்கங்களை முன்வைத்து, கடந்த செப்.12 அன்று, பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல் நடத்துவதற்காக பாளையங்கோட்டை வ.உ.சி. திடலுக்கு வந்து இறங்கினர் புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்பினர். அவர்களை வரவேற்றது, இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் ஆயுதமேந்திய ஆண்பெண் அதிரடி கமாண்டோ போலீசு படை, ரிசர்வ் போலீசு பட்டாளம், மற்றும் உள்ளூர் போலீசுடன் மாவட்ட, மண்டல உயர் போலீசு அதிகாரிகளின் கூட்டம். கையில் செங்கொடிகளையும், நெஞ்சில் உறுதியும் மட்டுமே ஏந்தியிருந்த போராட்டக்காரர்களை எதிர்கொள்வதற்கு எதற்கு இவ்வளவு நவீன ஆயுதமேந்திய படை என்று பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இவையெல்லாம் வெறும் செய்தித் தொகுப்பு அல்ல. எங்கும் எதிலும் போலீசு அதிகாரிகளின் தலையீட்டைக் குறிக்கின்றன. அதாவது, இந்த நாட்டு ஆட்சிமுறை, அனைத்துத் துறைகளிலும் போலீசின் அதிகாரத்தை நிலைநாட்டுவதாக மாறி வருகிறது.

 

இந்த நாட்டு ஆட்சி நிர்வாகம் அதிகாரபூர்வமாகவும், சட்டபூர்வமாகவும், நிர்வாகபூர்வமாகவும் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது? தொழில், விவசாயம், சட்டம் ஒழுங்கு, நீதிசிறை, கல்வி, மருத்துவம், பொதுமராமத்து, சமூக நலன், தொழிலாளர் நலன், கூட்டுறவு, உணவுப் பொருள் விநியோகம், வருவாய் வரி, விளையாட்டு, கால்நடை, கைத்தறி, செய்தித் தொடர்பு இப்படிப் பல பத்துத் துறைகளாக நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் முதல் கிராமப் பஞ்சாயத்து வரை ஒன்றின் கீழ் ஒன்றாக பல அடுக்குகளில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். இலட்சக்கணக்கான அதிகாரிகளும், அலுவலர்களும், ஊழியர்களும் அந்தந்தத் துறைப் பணிகளைச் செய்திட வேண்டும். அந்தந்தத் துறைசார்ந்த அமைச்சகப் பொறுப்பு அதிகாரிகளும், அமைச்சர்களும் கூட உண்டு.

 

ஆனால் நடப்பது என்ன? பள்ளி கல்லூரிக் கட்டண உயர்வை எதிர்த்து மாணவ மாணவிகள் போராடினால் கல்வித்துறை அதிகாரிகளோ, அமைச்சரோ வருவதில்லை. மூடிய ஆலைகளைத் திறக்கக் கோரித் தொழிலாளர்கள் போராடினால் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளோ, அமைச்சரோ வருவதில்லை. நீர்ப்பாசன வசதிகோரி விவசாயிகள் போராடினால் பொதுப்பணித் துறை அதிகாரிகளோ, ஆட்சியரோ, அமைச்சரோ வருவதில்லை.

 

இவ்வாறு பிரச்சினை கோரிக்கை எதுவானாலும் சம்பந்தமே இல்லாத போலீசு அதிகாரிகள், தாக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளுடனும் முழு ஆயுதபாணியாக வந்து, நிராயுதபாணியான மக்களைச் சந்தித்து ""சமாதானம்'' பேசுகிறார்கள். எதற்கு? கலைந்து போய்விடுங்கள்; பிரச்சினை பிறகு தீர்க்கப்படும்; இல்லையேல் விரட்டியடிப்போம் என்று மிரட்டுவதற்கு! கூடவே, ஓரிரு கீழ்நிலை அலுவலர்கள் வருகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் குளுகுளு அறையில் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

 

கும்பல் கூடினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்; அதைச் சமாளிக்கவே போலீசு வருகிறது என்று நியாயப்படுத்தப்படுகிறது. கும்பல் கூடுவதும், போராடுவதும் ஏன் அவசியமாகிறது? ஏற்கெனவே மனுப் போட்டு, மன்றாடிச் சலித்துப் போகும் நிலையில் தான் மக்கள் தெருவில் இறங்குகிறார்கள். வசதியானவன் எவனும் போராடக் கிளம்புவதில்லை. அன்றாடப் பிழைப்பை நம்பி வாழும் மக்கள் வேறு வழியில்லாத நிலையில்தான் போராடத் துணிகிறார்கள்.

 

அவர்கள் எழுப்பும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத — அவர்களை எதிர்கொள்ளும் திராணியற்ற நிலையில், அவர்களைச் ""சமாளிக்கும்'' பொறுப்பை போலீசிடம் ஒப்படைத்து விடுகிறார்கள் பொறுப்பேற்க வேண்டிய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும். பகுதி வாழ் மக்கள் எந்தப் பிரச்சினையானாலும் போலீசை அணுகும்படி ""போர்டு'' போட்டு தெருவுக்குத் தெரு சாவடிகளும் கட்டியுள்ளனர். தங்களை அறியாமலோ, தங்களிடம் நேரடியாகவோ எந்தவொரு பிரச்சினையும் தோன்றிவிடக் கூடாது என்று மக்களைக் கண்காணிப்பதற்காகவே இந்தச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் மத்தியிலே இருந்து, தகவல் சொல்வதற்கு என்றே ""சிறுவர் குழு'', ""போலீசின் நண்பர்கள்'' என்ற பெயரில் உளவாளிகளையும் தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

 

சரியாகச் சொல்வதானால், ""ஆக்டோபஸ்'' போல தன் கணக்கற்ற கரங்களையும் நீட்டி, சிவில் சமூகமே போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகிறது. அரசின் ஒரே பணி சட்டம் ஒழுங்கு பராமரிப்பு; அதாவது, போலீசு வேலை என்றாக்கப்படுகிறது. அரசின் எல்லாத் துறைகளிலும் தனியார்மயம், ஆட்குறைப்பு, சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதேசமயம், போலீசுத்துறை மட்டும் விரிவாக்கப்பட்டுக் கொண்டே போகிறது.

 

மருத்துவர், ஆசிரியர் உட்பட பல அவசிய வேலைகளுக்கு ஆளெடுப்பதையும் நிதி ஒதுக்குவதையும் அரசு பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால், போலீசு, கமாண்டோ அதிரடிப்படை போன்றவைகளுக்கு ஆளெடுத்துக் கொண்டே போகிறது. கார்கள், கணினிகள், குடியிருப்புகள், ""ரேசன்'' பொருட்கள், ஊக்கத்தொகை ஊதிய உயர்வுகள், வழங்குவதோடு, கணக்கில் வராத நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

ஜெயலலிதா, நிர்வாக சூரப்புலி என்ற பெயரெடுத்த கருணாநிதி இருவருமே போலீசை நம்பித்தான் அரசு நிர்வாகத்தை நடத்துகின்றனர். போட்டி போட்டுக் கொண்டு போலீசுக்கு சலுகைகளை வாரி இறைக்கின்றனர். அரசு நிர்வாகம் மட்டுமல்ல, சொந்தக் கட்சியினரையும், மாற்றுக் கட்சியினரையும் உளவு பார்ப்பதும் பழிவாங்குவதும் கூட போலீசை வைத்தே செய்கின்றனர். ""தேசியக் கட்சிகளின் அறிவு ஜீவிகளோ'', அரசியல் தலையீடின்றி அதிகாரிகளும், போலீசும் நிர்வாகத்தைக் கவனித்தால் எல்லாம் சரியாக நடக்கும் என்று புலம்புகிறார்கள்.

 

ஆனால், போலீசு இதற்கெல்லாம் தகுதியானதுதானா? கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், கொலை, கொள்ளை, வழிப்பறி, மோசடி, ஆள் மாறாட்டம் என்று 17 கிரிமினல் குற்றங்கள் புரிந்ததாக போலீசார் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. ""வேலியே பயிரை மேய்கிறதே'' என்று முதலாளிய அரசியல் பார்வையாளர்கள் புலம்புகின்றனர். மாநில டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி. சென்னை மாநகர ஆணையர், மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. முதல் சாதாரண போலீசுக்காரர்கள் வரை குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். போலீசு தேர்வு வினாத்தாள்களே வெளியிட்டு விற்கப்படுகின்றன.

 

சட்டவிரோதக் கைது, சித்திரவதைகள், போலீசுடன் மோதல் என்ற பெயரில் கொலைகள் (""என்கவுண்டர்'') ஆகியவை வழக்கமான விகிதத்தில் பெருகிவரும் அதேசமயம், உயர் நீதிமன்ற உத்தரவுகளை மதியாது குற்றங்கள் புரிவது சமீப காலங்களில் அதிகரித்து விட்டது. மதம் பிடிக்கும் யானை அதன் பாகனையே தூக்கிப் போட்டு மிதித்துக் கொல்வதுண்டு. அதைப்போன்று, அதிகார வெறி பிடித்த போலீசு மிருகம் எந்த சமூகத்தின் பாதுகாப்புக்கு என்று உருவாக்கப்பட்டதோ அதையே தாக்கிச் சின்னாபின்னப்படுத்துவதாகி விட்டது.