கிருஷ்ணிகிரி மாவட்டத்திலுள்ள சந்தை நகரமான சூளகிரியில் ""போக்குவரத்துக்கு இடையூறு'' என்ற பெயரில் கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சூளகிரி மற்றும் சுற்று வட்டார உழைக்கும் மக்களுடன் பின்னிப் பிணைந்திருந்த சிறு வியாபாரிகள் இப்போது வாழ்வை இழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர்.
""சாலையோர ஆக்கிரமிப்பு'', ""போக்குவரத்துக்கு இடையூறு'' என்று ஆட்சியாளர்களும் ஓட்டுக் கட்சிகளும் சொல்லும் காரணம் உண்மையல்ல. அதுதான் காரணமென்றால், ஊராட்சி இச்சிறுகடைகளுக்கு அனுமதி கொடுத்து வரியும் வசூலித்தது ஏன்? மின் வாரியம் மின்சார இணைப்பு கொடுத்தது ஏன்?
ஏழைகளுக்குக் கல்வி இல்லை; ரேசன் அரிசிக்கும் மண்ணெண்ணெய்க்கும் மானியம் இல்லை; இளைஞர்களுக்கு வேலை இல்லை; அரசு ஊழியர்கள்தொழிலாளர்கள் போராட உரிமையில்லை; உழைக்கும் மக்களுக்கு நாட்டில் வாழத் தகுதியில்லை என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையின் ஓர் அங்கம்தான் சில்லரை வியாபாரிகள் மீதான இத்தாக்குதல். ஏகாதிபத்திய நாடுகளின் ""வால்மார்ட்'', ""மெட்ரோ'' போன்ற ஏகபோக அங்காடிகள், இந்தியாவில் சில்லரை வியாபாரக் கடைகளை நடத்திக் கொள்ள இந்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஏகாதிபத்திய நிறுவனங்கள் வருவதற்கு முன்னதாக உள்நாட்டு சிறு வியாபாரிகளை விரட்டியடிக்கும் தாக்குதலாகவே இச்சிறுகடைகள் இடிப்பு நடந்துள்ளது. மேலும், நாட்டை மீண்டும் அடிமைப்படுத்தும் இப்புதிய பொருளாதாரக் கொள்கையின் ஓர் அங்கமாக, கச்சாப் பொருட்களையும் சரக்குகளையும் முக்கிய நகரங்களுக்கும் துறைமுகங்களுக்கும் விரைவாகக் கொண்டு சென்று பெருமுதலாளிகளும் அந்நிய நிறுவனங்களும் இலாபமீட்டுவதற்கு ஏற்ப, "வளர்ச்சி' என்ற பெயரில் சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன் மேம்பாலங்கள் கட்டியமைக்கப்படுகின்றன் போக்குவரத்துக்கு இடையூறு என்று காரணம் காட்டி சிறுகடைகளும் குடியிருப்புகளும் இடித்துத் தள்ளப்படுகின்றன.
இந்த உண்மைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வெளியிட்ட வி.வி.மு.; இதர பிரிவு உழைக்கும் மக்கள், பாதிக்கப்பட்ட சிறுவியாபாரிகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், வாழ்விழந்த சிறு வியாபாரிகளை அணிதிரட்டி துவளாமல் போராட அறைகூவியும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.
விவசாயிகள் விடுதலை முன்னணி, சூளகிரி.