"நான் ஒரு சாமானியன் என்பதால்தான், என் மீது இப்படிப் பழிபோடுகிறார்கள். இதையே மேட்டுக்குடியினர் செய்யும்போது என்ன செய்தார்கள்? மேட்டுக்குடிக்கு ஒரு நீதி, சாமானியனுக்கு ஒரு நீதியா?'' இப்படி தி.மு.க. தலைவர் கருணாநிதி வசனம் பேசுவதைத் தமிழக மக்கள் பலமுறை கேட்டிருக்கிறார்கள்.
""நான் ஒரு பெண் என்பதாலேயே என்மீது வீண் பழியும் பொய்யான குற்றச்சாட்டுக்களும் சுமத்தி, அரசியலில் இருந்தே என்னை ஒழித்துக் கட்டுவதற்கு தீய சக்திகள் சதி செய்கின்றன'' இப்படி அ.தி.மு.க.வின் ஏகபோகத் தலைவி ஜெயலலிதா ஒப்பாரி வைப்பதையும் தமிழக மக்கள் பலமுறை பார்த்திருக்கிறார்கள்.
தங்கள் நிலையை நியாயப்படுத்த முடியாதபோது, வெறுமனே அனுதாபம் தேடிக் கொள்வதற்காக இப்படிப் பேசி, தங்கள் பிறப்பு என்னும் கேடயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நழுவிக் கொள்வது இந்த அரசியல் தலைவர்களின் வழக்கமான பாணி.
இதே பாணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனும் "அரசியல் பண்ணி'க் கொண்டிருக்கிறார். அவரது தவறுகளை, குறிப்பாக அவருடைய அரசியல் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையும், சந்தர்ப்பவாத சாதியக் கூட்டுக்களையும் கேள்விக்குள்ளாக்கினாலே, அவற்றுக்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக, தான் ஒரு தலித் என்பதாலேயே இவ்வாறு குறை கூறப்படுவதாகச் சித்தரிக்கிறார்.
இவ்வாறு தனது பிறப்பை முன்னிறுத்தித் தன் நிலையை நியாயப்படுத்தும் அவரது முயற்சி, உண்மையில் அவரது நிலைக்கு வலுச் சேர்ப்பதில்லை; மாறாக, அவரது அரசியல், சமூகக் கண்ணோட்டத்தில் உள்ள பலவீனங்களைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஆதிக்க சாதிவெறியர்களும், தற்போது தொல்.திருமா கூட்டணி வைத்துக் கொண்டுள்ள சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்தாம் அவர் ஒரு தலித் என்பதை முன்னிறுத்திப் பேசி வந்திருக்கின்றனர். அவர்கள்தாம் தம் இயல்பிலேயும், தமது சாதியினைத் திரட்டிக் கொள்ளவும் சாதிய ஓட்டு வங்கியை உருவாக்கித் தக்க வைத்துக் கொள்ளவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பை உமிழ்பவர்களாகவும் உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருமே ஏறக்குறைய உழைக்கும் மக்களாக உள்ள நிலையில், உழைக்கும் மக்களை அணிதிரட்டி அரசியல்சமூக மாற்றங்கள் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புரட்சிகர இயக்கங்கள் மட்டுமல்ல் தனியொரு சாதிய ஓட்டுவங்கியை நம்பி அரசியல் நடத்தாத ஓட்டுக் கட்சிகள் கூட யாரையும் சாதிய அடையாளத்தை முன்னிறுத்திக் குறைகூறுவதில்லை.
ஆனால், தொல்.திருமாவளவனோ, தன் நிலையை நியாயப்படுத்த முடியாமல், தனது சந்தர்ப்பவாத அரசியல் தவறுகளை மூடிமறைக்கவும் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை தனக்கு விசுவாசமான ஓட்டு வங்கியாக்கி வைத்துக் கொண்டு, பிற கட்சிகளிடம் பேரம் பேசுவதற்கும்கூடத் தனது சாதி அடையாளத்தை எப்போதும் முன்னிறுத்திக் கொள்கிறார்.
இந்த நோக்கத்துடனேயே, இன்னொரு திரித்துக் கூறும் வேலையையும் தொல்.திருமா செய்கிறார். அதாவது, தொல்.திருமாவளவன் மற்றும் அவரது அமைப்பான விடுதலைச் சிறுத்தைகள் மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் எல்லாமே தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவர் மீதான தாக்குதலாகத் திரித்துச் சொல்லி, தனக்கு ஒரு பாதுகாப்புக் கவசத்தை தேடிக் கொள்ள எத்தணிக்கிறார். இன்னொருபுறம், இப்படிச் சொல்வதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்குமான ஏகபோகப் பிரதிநிதி தானே என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார். சமீபகாலமாக, தமிழர் தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்ட இவர், ஒட்டு மொத்தத் தமிழர்களின் பிரதிநிதியாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.
பல இலட்சம் உறுப்பினர்கள் தம் பின்னால் இருப்பதாக பல ஓட்டுக் கட்சிகளும், நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் கணக்குக் காட்டுவதைப் போன்றதுதான் திருமாவளவனின் செய்கையாகும்; சாதி சங்கங்கள்கூட இப்படித்தான், இத்தனை கோடிப்பேர் தம் சாதியினர் என்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள். ஏதோ அந்தச் சாதிக்காரர்கள் எல்லாம் அந்த சாதி சங்கங்களின் பின்னால் அணிவகுத்து ஆதரவு தெரிவிப்பது போல நாடகமாடுகிறார்கள்.
தொல்.திருமாவும் அவரது அமைப்பும் தாழ்த்தப்பட்ட சாதிகளிலேயே ஒரு உட்பிரிவு மற்றும் அந்த உட்பிரிவலும் ஒரு பகுதி ஆதரவை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இவர்களின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. அந்த உட்சாதிப் பிரிவுக்குள்ளும் செ.கு.தமிழரசன், சக்திதாசன், வை.பாலசுந்தரம், லெமூரியன், பாக்கியராஜ், கிருஷ்ணப்பறையனார், சந்திரசேகரன் இன்னும் பல பத்து தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர்கள் என்றும் உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகபோகத் தலைவர் எனத் தன்னை தொல்.திருமா வேண்டுமானால் கருதிக் கொள்ளலாம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளைப் போலவே, தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே உள்ள மேற்கண்டவாறான அமைப்புகள் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்கள், மற்ற பிரிவு மக்களோடு பங்கேற்கும் அமைப்புகளும் உள்ளன. இவ்வா றான அமைப்புகளில் உள்ள ""தாழ்த்தப்பட்ட சாதி உறுப்பினர்கள், பிற சாதியினரின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றனர்'' என்று தொல்.திருமா கொச்சைப்படுத்துகிறார். அவர்கள் சுயசிந்தனை இல்லாதவர்கள் என்பதைப் போலவும், சுயநலனுக்காகக் கட்டுப்பட்டுக் கிடப்பதாகவும் கூறுவது அவர்களைக் கொச்சைப்படுத்துவதை தவிர வேறென்ன?
முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளும், செய்தி ஊடகமும் யாரை எளிதில் விலைபேசி வாங்க முடியும் என்று கருதுகிறார்களோ, அந்த அடிப்படையில் தொல்.திருமாவை தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்தித் தள்ளுகின்றன. தேவையான போது பயன்படுத்திக் கொண்டு வீசியெறிந்து விடுகின்றன. அவை முன்னிறுத்தித் தள்ளும்போது ""புகழ் போதை''யில் மயங்கி, ""மூப்பனார் ஒரு புரட்சித்தலைவர்'', ""ஜக்கி வாசுதேவ் சாமியார் மார்க்சைப் போன்றவர்'' என்றெல்லாம் உளருவதும், ஒதுக்கித் தள்ளி விடும்போது தாழ்த்தப்பட்ட மக்களை மதிக்காது, சாதி ஆதிக்க உணர்வோடு நடந்து கொண்டார்கள் என்று புலம்புவதுமாக இருக்கிறார், தொல்.திருமா.
இப்படித்தான் 2003 நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்த்துக் கொள்ள கருணாநிதி மறுத்தபோது, ஒரு சுற்று புலம்பித் தீர்த்தார். சாதிக் கட்சியான இராமதாசின் பா.ம.க.வை மட்டும் சேர்த்துக் கொண்டார்களே என்று அரற்றினார். ஆனால், அதே இராமதாசுடனும் முக்குலத்தோர் சாதி அமைப்புத் தலைவர் சேதுராமனுடனும் பின்னர் கை கோர்த்துக் கொண்டார்.
தொல்.திருமாவளவன் மற்றும் அவரது அமைப்பின் மீது ம.க.இ.க. மற்றும் பிற புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் வைக்கும் விமர்சனங்கள் எல்லாமே அரசியல் ரீதியானவைதாம். ஆனால், அவற்றுக்குப் பதில் சொல்ல முடியாத தொல்.திருமா தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றித் தரக் குறைவாக எழுதிவிட்டதாகவும், அவர் தலித் என்பதால்தான் அப்படிச் செய்வதாகவும், ஒட்டு மொத்த தலித் மக்களையும் அப்படிச் செய்து விட்டதாகவும் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல்களில் பங்கேற்பவர்களைப் பற்றி எவ்வளவு கடுமையாகச் சாடி வந்த தொல்.திருமா, தானே அந்தச் சாக்கடையில் வீழ்ந்துவிட்டபோது அவர் சொன்ன வாசகத்தை அவருக்கே பொருத்தி எழுதினோம். தன்னார்வக் குழுக்களுடன் அவருக்குள்ள உறவைப் பற்றி எழுதினோம். முன்பு கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனாருடன், தற்போது இராமதாசு, சேதுராமனுடன் கை கோர்த்துக் கொண்டபோது அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை விமர்சித்தோம். பார்ப்பனப் பத்திரிகைகளுடன் உறவு வைத்துக் கொண்டு, பார்ப்பன எதிர்ப்பாளராக நாடகமாடுவதை விமர்சித்தோம். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாதந்தாங்கி ஜார்ஜ் பெர்ணான்டசை வைத்துக் கொண்டு இந்துக் கலாச்சார எதிர்ப்பு மாநாடு நடத்துவதை விமர்சித்தோம்.
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் சிக்கிக் கொண்டபோது, தொல்.திருமாவும் அவரது அமைப்பினரும் அடக்கி வாசித்தார்கள். சங்கராச்சாரியை அவர் சந்தித்தாக புகார் எழுந்தபோது, சங்கராச்சாரி சந்திக்கக் கூடாதவர் அல்ல என்று மறைமுக ஆதரவு தெரிவித்தார். சிதம்பரம் கோவிலுக்குப் போய் பரிவட்டம் கட்டிக் கொண்டதைப் பெருமைக்குரியதென்று பீற்றினார். அவ்வப்பொழுது பார்ப்பன பாசிச ஜெயலலிதாவைப் பாராட்டி நல்லுறவை வளர்த்தார். இப்படிப்பட்ட செய்கைகளை விமர்சித்தோம்.
இந்த விமர்சனங்கள் எதுவும் தொல். திருமா ஒரு தலித் என்பதால் செய்யப்பட்டவை அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் எதிரானவையும் அல்ல. இருந்தாலும் அப்படி இருப்பதாக திருமாவும் அவரது அமைப்பும் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். என்ன எழுதினார்கள், என்ன பேசினார்கள் என்ற விவரத்துக்குள் போகாத மூளை சோம்பேறிகளும், அவர்களின் விசுவாசிகளும், ""நம்ம ஆளுக்கு எதிராக ஏதோ எழுதிவிட்டார்கள், பேசிவிட்டார்கள்'' என்ற சொற்பேச்சைக் கேட்டுவிட்டுக் குதிக்கிறார்கள்.
நமது குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில் கூறத் திராணியற்ற நிலையில் மேற்கண்டவாறு திசை திருப்புவதோடு, அவற்றுக்கு உள்நோக்கம் கற்பிக்கவும் செய்கிறார்கள். புரட்சி செய்து சாதியத்தை ஒழிப்பதாகக் கூறி தலித் இளைஞர்களை ஏய்த்து பாதுகாப்பும் உணவும் தேடிக் கொண்டிருந்த நக்சல்பாரிகள், இப்போது தொல்.திருமாவால் விழிப்புணர்வு பெற்ற தலித்துக்களால் விரட்டப்படுவதால் ஆத்திரமுற்றுத் தம்மைப் பற்றி கீழ்த்தரமாக(!) எழுதியும் பேசியும் வருவதாக உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.
தம்மை விமர்சிப்பவர்கள் மீது உள்நோக்கம் கற்பிப்பதோடு, எதிர்த்தாக்குதல் நடத்தவும் செய்கிறார்கள். இதனால் நட்பு முரண்பாட்டைப் பகை முரண்பாடாக்கும் ஐந்தாம்படை வேலையும் செய்கிறார்கள். அம்பேத்கரைப் போலவே பெரியாரையும் மதித்து நடப்பதாகப் பேசிக் கொண்டே, தொல்.திருமா தனது சித்தாந்த குருவான (!) இரவிக்குமார் எழுதும் பெரியாரைக் கொச்சைப்படுத்தி, பார்ப்பனதலித் கூட்டணியை உருவாக்கும் வகையிலான கட்டுரைகளை திருமா பொறுப்பாசிரியராக உள்ள பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டார்.
பெரியாருக்கு எதிராக திருமாஇரவிக்குமார் இணை செய்துவந்த பிரச்சாரத்தைக் கண்டித்து பெரியாரியவாதிகளும், பற்றாளர்களும் நடத்திய அரங்கக் கூட்டத்தில் புகுந்து திருமா விசுவாசிகள் தாக்குதல் நடத்தினர். திருமாவைத் தரக்குறைவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களை நேரடியாகவும் தாக்கிய ஆதிக்க சாதித் தலைவர்களோடு கூட்டு வைத்துக் கொண்டுள்ள திருமாவும் அவரது விசுவாசிகளும், புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளைப் பற்றித் தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசுவதோடு நேரடித் தாக்குதலும் நடத்த விழைகின்றனர். ""தலித் அமைப்பு'' என்று கூறிக் கொள்பவர்களிடம் பகை முரண்பாடு கொள்ளக்கூடாது என்று இவர்கள் அமைதி காப்பதைப் பலவீனமானதென்று கருதுகின்றனர்.
தொல்.திருமாவளவனும் அவரது அமைப்பும் தம்மிடம் உள்ள அரசியல், சித்தாந்தம் மற்றும் பண்பாட்டுத் துறையிலான ஓட்டாண்டித்தனத்தை மூடி மறைக்கவும், அதற்கு ஈடுகட்டவும்தான் மேற்கண்ட தகிடுதத்தங்களில் ஈடுபடுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைதான் தமது இலட்சிய நோக்கம் என்று அவர்கள் ஆரம்ப காலத்தில் கூறிக் கொண்டார்கள். அதற்கான அறிக்கை (நகல்) ஒன்றைப் பின்நவீனத்துவவாதிகளுடன் சேர்ந்து வெளியிட்டனர். அதையும் கிடப்பில் போட்டு விட்டனர்.
""அடங்க மறு! அத்துமீறு!'' என்று முழக்கமிட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் ""அடங்க மறுப்பதும் அத்துமீறுவதும்'' சரியானதுதான். ஆனால், அதுவே அவர்களின் சமூக விடுதலைக்கான ஒருங்கிணைந்த முழுமையான பார்வையோ, வழியோ கொண்டதில்லை. சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து முறியடிப்பதற்கான எந்தவித அரசியல் அமைப்புத் தயாரிப்புமின்றி அடங்க மறுத்துப் போராடிய தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதியினரின் தாக்குதல்கள், அரசுபோலீசின் ஒடுக்குமுறை பொய்வழக்குகளை எதிர்கொண்டார்கள்.
அரசுபோலீசு ஒடுக்குமுறை பொய்வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கும், அமைப்புப் பிரமுகர்கள் உள்ளூர் அளவில் ""மதிப்பு''ப் பெறவும் தேர்தல் அரசியலில் குதிப்பது என்று முடிவு செய்தார்கள். தேர்தல் அரசியலுக்கு வசதியாகவும் ஆதிக்க சாதிகளின் தாக்குதல்களில் இருந்து "தப்பிப்பதற்கும்' ""அடங்க மறு! அத்துமீறு!'' என்ற முழக்கத்தைக் கைவிட்டு ""இனி சாதிச் சண்டைகள் கிடையாது!'' என்று அறிவித்து, சாதி அமைப்புகளின் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்தார்கள்.
இந்த முடிவுகளும் நடைமுறையும் ஒடுக்கும் சாதிகளுக்கும் ஒடுக்கப்படும் சாதிக்கும் இடையே ""சாதி அமைதியை'' வேண்டுமானால் ஏற்படுத்தலாம். தொல்.திருமாவைப் போன்று அவரது அமைப்புப் பிரமுகர்கள் சிலரைப் பதவிக்குக் கொண்டு வரலாம். ஆனால், இந்தப் பாதை தலித் மக்கள் மீதான தாக்குதல் ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்தி விடுமா? இல்லை, அவர்களின் சமூக விடுதலைக்குத்தான் வழிவகுக்குமா? மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான், அதாவலே போன்றவர்கள் என்ன சாதித்தார்கள்?
""வேறு கட்சிகளில் உள்ள தலித்துகள் அந்தக் கட்சிக்குத்தான் விசுவாசமாக இருந்து, தலைவர்கள் சொன்னபடி ஆடி, அடிமைகளாகவே உள்ளனர். தங்களுடையதைப் போன்ற தலித் கட்சிகளில் இருந்தால்தான் தம் மக்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்'' என்று சொல்கிறார்கள் திருமாவும் அவரது அமைப்பினரும். ஆனால் மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்தார்கள்? அமைச்சர் பதவிக்கு ஆசை காட்டியவுடன் பார்ப்பன பாசிச பா.ஜ.க.வுக்கு சோரம் போய்விடவில்லையா? துரோகிகளாவும், பிழைப்புவாதிகளாகவும் சீரழிந்து போய்விடவில்லையா?
அதோடு, தலித்துக்களே முதலமைச்சர்களானாலும், இந்த அரசமைப்பில் தலித் விடுதலைக்காக இல்லாவிட்டாலும், சாதி மற்றும் அரசுபோலீசு ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றும் செய்துவிட முடியாது என்பதற்கு மாயாவதியே சான்றாக இருந்திருக்கிறார்.
தற்போது நடக்கும் கூட்டணி அரசியல் விளையாட்டில் ""ஒரு நல்வினை விபத்து'' நடந்து, தொல்.திருமா ஏதாவது பதவிக்கு வந்துவிட்டாலும் வியப்பில்லை. இப்படிப்பட்ட ""விபத்து''க்களால் தலித் மக்களின் வாழ்நிலையில் எந்த மாற்றமும் வந்துவிடாது. ஆனாலும், அதைக் குறிவைத்துத்தான் அரசியல் சூதாட்டத்தில் அவர் காய்களை நகர்த்துகிறார். அம்பேத்கர், பெரியார், இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்களை தமது வழிகாட்டிகள் என்று தொல்.திருமா கூறிக் கொண்டாலும் மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான், அதாவலே காட்டிய பாதையிலேயே நடைபோடுகிறார். அதையும் விரைவில் எட்டிவிடும் நோக்கத்தோடு, திராவிட இயக்கத்தவர் கடைப்பிடித்த வெறுக்கத்தக்க, கேலிக் கூத்தான தனிநபர் கவர்ச்சி, தனிநபர் துதி தனிநபர் வழிநாடு மூலம் சாதித்துவிட எத்தணிக்கிறார்.
பேராசிரியர் கல்விமணி புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளின் சுவரெழுத்துப் பிரச்சாரத்தைக் கேலி செய்ததை, அப்படியே வாந்தி எடுத்தனர் திருமாவும் அவரது விசுவாசிகளும். ஆனால், தமிழகத்தின் வடமாவட்டங்கள், குறிப்பாகச் சென்னை மாநகரச் சுவர்களில் எல்லாம் திருமா, திருமா என்ற ஆளுயரச் சுவர் விளம்பரங்கள்; அவற்றில் அவரது, அவருடைய அமைப்புக் கருத்துக்கள் எதுவும் கிடையாது. ராமா, ராமா, கோவிந்தா, கோவிந்தா என்று கூச்சல் போட்டாலே புண்ணியம் கிட்டும் என்பதைப் போல, சினிமா நாயகர்களின் ""கவர்ச்சி''யை விஞ்சும் பலவித போஸ்களில் திருமாவின் சுவரொட்டிகள், தட்டிகள். அவரே நினைவில் வைத்துக் கொள்ள முடியாத எண்ணிக்கையில் பட்டங்கள், பாராட்டுப் புகழ் பாடுவதற்கென்றே பலவகை கூட்டங்கள் நிகழ்ச்சிகள். வீரவாள், மலர்கிரீடம், கார்கள் பவனிவர, பூனைப் படையைப் போல கருஞ்சிறுத்தைகள் புடைசூழ பயணங்கள். அவரது பத்திரிகையைப் புரட்டினால் பக்கத்துக்குப் பக்கம் திருமாவின் பலவகை நிழற்படங்கள். தன்னைத் தானே தலித் மற்றும் தமிழர் தலைவராக அறிவிக்கும் அவரே எழுதிய தலையங்கங்கள், சுயபுராணங்கள்.
திராவிட இயக்கத் தலைவர்களை விஞ்சும் இந்தச் சுயவிளம்பரங்கள், சுயதம்பட்டங்கள், அவர்களின் அமைப்புகளில் உள்ள காலில் விழுந்து கும்பிடும் வழக்கத்துக்கு முந்திய நிலையில்தான் நிற்கிறது. விரைவில் அதுவும் நடக்கும் என்றே எதிர்பார்க்கலாம். மக்களிடம் சொல்வதற்கும், எழுதுவதற்கும் எந்த விசயமும் இல்லாதபோது, இத்தகைய ""கவர்ச்சி''ப் பிரச்சாரங்கள் தாம் செய்ய முடியும்.
ஓட்டுக் கட்சிகள் எல்லாம், தேர்தலுக்குத் தேர்தல் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்கள். அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைப் பற்றி எப்போதும் பேசுவதில்லை. தேர்தல் முடிந்தவுடன் தமது வாக்குறுதிகளைப் பற்றியும் மூச்சுவிடுவதில்லை. அப்படித்தான் தொல்.திருமாவும் அவரது அமைப்பும் சாதிய ஒழிப்பு, தலித் விடுதலை ஆகியவை தமது இலட்சியம் என்று முழங்குகிறார்கள். ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான வழிவகை என்ன, நடைமுறை என்ன என்று எதுவும் பேசுவதில்லை. இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே பரபரப்பான அறிக்கைகள் பேட்டிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று திசைதிருப்புகிறார்கள்.
தான் தலித் மக்கள் அனைவரின் பிரதிநிதி, தமிழ் மக்கள் அனைவரின் தலைவர் என்று தொல். திருமா உரிமை பாராட்டிக் கொள்கிறார். வெறுமனே இப்படிச் சொல்வதாலும், தனிநபர் கவர்ச்சி, துதியாலுமே அவ்வாறு ஏற்றுக் கொள்வதற்கு தலித் மக்களும், தமிழ் மக்களும் ஏமாளிகள் அல்ல. தலித்துகளின் பிரதிநிதி, தமிழ் மக்களின் தலைவர் என்ற முறையில் அவர் என்ன செய்தார் என்பதன் அடிப்படையிலேயே ஏற்பார்கள்.
இந்த உண்மைகளைத்தான் நாம் எடுத்துச் சொல்கிறோம். நாம் எழுப்பும் கேள்விகள், முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் கூறுவதற்கு பதிலாக, தொல்.திருமாவளவன் ஒரு தலித் என்பதாலும், ஒரு தலித் தமிழ் மக்களின் தலைவராக உருவாவதை பொறுக்க முடியாத பொறாமையாலும்தான் தம்மீது ""குறை கூறுகிறார்கள்'' என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். அவரது விசுவாசிகளும், துதிபாடிகளும் மட்டுமே இத்தகைய பிரச்சாரத்தை ஏற்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும், தமிழ் மக்களும் ஏற்பதில்லை என்பதுதான் உண்மை.
ஆர்.கே.