12_2005.jpg"ஐயோ! பயங்கரவாதம்! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது!'' என்று முதல் பக்கச் செய்தியுடன் "தேசிய' பத்திரிகைகள் தலையங்கம் தீட்டி அலறின. ""இராணுவத்தைக் கொண்டு காடுகளில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளோம்; பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளோம்'' என்று கிளிப்பிள்ளை போல் அறிக்கை விடுகிறார்கள் போலீசு அதிகாரிகள். பீதி ஒருபுறம்; அற்பமாகக் கருதப்பட்டவர்கள் இப்படித் திடீர் தாக்குதல் நடத்தி முகத்தில் கரிபூசி விட்டார்களே என்ற அவமானமும் கவலையும் மறுபுறம். அண்மையில் பீகாரின் ஜெகன்னாபாத் சிறைச்சாலை ""மாவோயிஸ்டுகள்'' எனப்படும் நக்சல்பாரி புரட்சியாளர்களால் தகர்க்கப்பட்டதைக் கண்டு செய்வதறியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள்.

 

கடந்த நவம்பர் 13ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் ஜெகன்னாபாத் நகரில் குவிந்த நக்சல்பாரி புரட்சியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போலீசு தலைமை நிலையத்தைச் சுற்றி வளைத்து, அடுத்த சில நிமிடங்களில் சிறைச்சாலைக்கும் போலீசு குடியிருப்புக்கும் இடையிலான பாலத்தை வெடிகுண்டுகளால் தகர்த்து துண்டித்தனர். துப்பாக்கிகளால் சுட்டபடியே முன்னேறிச் சென்று, சிறைச்சாலையைத் தகர்த்து அங்கு அடைக்கப்பட்டிருந்த நக்சல்பாரி அரசியல் கைதிகள் 341 பேரை விடுதலை செய்தனர். தாழ்த்தப்பட்டோரை நரவேட்டையாடிய ரன்வீர்சேனா எனும் நிலப்பிரபுக்களின் குண்டர்படைத் தளபதிகளில் முக்கிய புள்ளியான படே சர்மா என்பவனை அங்கேயே கொன்றொழித்துவிட்டு, ரன்வீர்சேனாவைச் சேர்ந்த 20 பேரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

 

பீகார் மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அன்று மாலையில்தான் முடிவடைந்திருந்தது. ஜெகன்னாபாத் சிறைக் காவல் பணியில் இருந்த போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்கு அனுப்பபட்டிருந்ததால் அன்று சிறையில் பாதுகாப்புக்காக இருந்த போலீசார் 9 பேர் மட்டுமே. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தாக்குதலை நடத்திய நக்சல்பாரிகள், சிறைச்சாலையை நோக்கி முன்னேறிய போது, ""ஓர் முக்கிய அறிவிப்பு! பொதுமக்களே, நீங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். நீங்கள் எங்கள் எதிரிகள் அல்ல. போலீசுக்கும் பண்ணையார்களுக்கும் பாடம் புகட்டப் போகிறோம். ஜெகன்னாபாத் சிறையில் தாக்குதல் நடத்தப் போகிறோம். போலீசுக்காரர்களே, துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிடுங்கள்!'' என்று தொடர்ந்து அறிவிப்பு செய்தார்கள்.

 

அடுத்த சில நிமிடங்களில், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ஜெகன்னாபாத் சிறை முற்றுகையிடப்பட்டு, நக்சல்பாரி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கிளைச் சிறையில் ஏறத்தாழ 140 பேரை மட்டுமே அடைக்க முடியும். ஆனால், சுமார் 650 கைதிகள் மிருகங்களைப் போல இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

 

இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்று முதல் தகவல் அறிக்கை கூட கிடையாது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாகச் சிறையிடப்பட்டுள்ள இவர்கள் மீது இதுவரை வழக்கு விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆண்டுக்கணக்கில் எந்த உரிமையுமின்றி பீகார்சிறைகளில் நக்சல்பாரிகள் வதைக்கப்படுகின்றனர். ஜெகன்னாபாத் மட்டுமின்றி, மாநிலமெங்கும் இன்னும் நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகள் இப்படி பல்வேறு சிறைகளில் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம், ரன்வீர்சேனா போன்ற நிலப்பிரபுத்துவ குண்டர் படையினருக்கு சிறைச்சாலைகளில் ராஜ உபச்சாரம் அளிக்கப்படுகிறது. அக்குண்டர்கள் வெளியே இருப்பதற்கும் சிறையினுள் இருப்பதற்கும் வேறுபாடு எதுவும் கிடையாது. எனவேதான், ஆண்டுக்கணக்கில் எவ்வித உரிமையுமின்றி, சிறைகளில் வதைபடும் தமது தோழர்களை விடுவிக்க நக்சல்பாரி போராளிகள் இச்சிறைத்தகர்ப்பை நடத்த வேண்டியது அவசியமாகி விட்டது.

 

தமது தோழர்களை விடுவித்துக் கொண்டு வெளியேறிய நக்சல்பாரி போராளிகள் மீது, சிறையில் காவல் பணியில் இருந்த ஒருசில போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த, தற்காப்புக்காக நக்சல்பாரிகள் பதிலடி கொடுக்க, இருத ரப்பிலும் நான்கு பேர் மாண்டனர். இச்சிறைத் தகர்ப்புச் சம்பவம் நடந்த பிறகு சுமார் பத்து மணி நேரம் வரை போலீசார் இந்தச் சிறை பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. காவல் எதுவுமின்றி சிறைச்சாலை திறந்து கிடப்பதையும் போலீசாரின் "வீர'த்தையும், பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் படம் பிடித்து வெளியிட்டன. ஒருவழியாக மெதுவாக வந்து சேர்ந்த போலீசாரும் துணை ராணுவப் படைகளும் மாவட்ட அதிகாரிகளும் இதைக் கண்டு ஆத்திரமடைந்து, பத்திரிகையாளர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தடியடித் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

 

தப்பிச் சென்ற நக்சல்பாரி போராளிகளையும் அரசியல் கைதிகளையும் பிடிக்க மாநில போலீசுப் படை புழுதியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டது. ஆனால், அவர்களால் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட 8 ரன்வீர்சேனா குண்டர்களின் உடல்களைத் தான் கைப்பற்ற முடிந்தது. பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட எஞ்சிய 12 ரன்வீர்சேனாவினர் நக்சல்பாரிகளால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கடலில் சங்கமமாகி விட்ட நக்சல்பாரி போராளிகளை இன்னமும் போலீசுப் படையால் பிடிக்க முடியவில்லை.

இந்திய வரலாற்றிலேயே இப்படியொரு சிறைத்தகர்ப்பு நிகழ்ச்சி நடந்ததில்லை. நக்சல்பாரி இயக்க வரலாற்றில் இப்படியொரு வீரசாகச நடவடிக்கை இதுவரை நடந்ததில்லை. வெறுமனே இதுவொரு ஆயுதந்தாங்கிய குழுவின் அதிரடி சாகச நடவடிக்கை அல்ல. பெருந்திரளான மக்கள் பங்கேற்புடனும் ஆதரவுடனும் இத்தாக்குதல் நடந்துள்ளது. ஏறத்தாழ 1000 பேர் இத்தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றதாக பத்திரிகைகள் எழுதின. ஆனால், இதில் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கினர்தான் நக்சல்பாரிகளின் மக்கள் கொரில்லா விடுதலைப் படை (கஎஃஅ)யினராவர். மற்றவர்கள், நக்சல்பாரி இயக்கத்தை ஆதரிக்கும் உள்ளூர் சுற்றுப்புற கிராமங்களின் உழைக்கும் மக்கள்!

 

நக்சல்பாரி இயக்கம் என்பது ஏதோ விரக்தியுற்ற வேலையில்லாத இளைஞர்களின் தீவிரவாத எண்ணம் கொண்டோரின் சிறுகுழு என்றும், 100200 பேரைக் கொண்ட ஆயுதமேந்திய சிறு கும்பல் என்றும் அவதூறு செய்து புளுகிய பத்திரிகைகள், இப்போது 1000 பேர் திரண்டு வந்தார்கள் என்றும், நக்சல்பாரிகளை மக்கள் ஆதரிப்பது விபரீதமானது என்றும் செய்தி வெளியிடுகின்றன.

 

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநிலமான பீகார், சாதிய அரசியலும் கிரிமினல் அரசியலும் கொடிகட்டிப் பறக்கும் மாநிலமாகும். ராஜபுத்திரர், பூமிகார், பார்ப்பனர், குர்மி ஆகிய நிலப்பிரபுத்துவ ஆதிக்க சாதியினர்; அதற்குக் கீழே யாதவர் எனும் பிற்பட்ட சாதியினர்; இவர்களால் ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சேவைத் தொழில் செய்வோர் என்கிற சாதிய சமூக அடக்குமுறை நீண்ட நெடுங்காலமாக பீகாரில் நீடித்து வருகிறது. ஆதிக்க சாதியினரான நிலப்பிரபுக்கள், தமது ஆளுமைக்கும், அதிகாரத்துக்கும் எதிராக சிறுசலனம் ஏற்பட்டால் கூட, கொலை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவது சர்வசாதாரணமாக உள்ளது. அதிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக ரன்வீர்சேனா உள்ள நிலையில், அதன் பயங்கரவாதக் கொட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

 

பீகாரில் கூலிஏழை விவசாயிகளான தாழ்த்தப்பட்டோர் தமது உரிமைக்காகப் போராடவோ, சங்கமாக அணிதிரளவோ முடியாது. ஆதிக்கசாதி நிலப்பிரபுக்கள் வைத்ததுதான் சட்டம்; இட்டதுதான் நீதி. அவர்களது பாலியல் வன்முறைகளையோ அடக்குமுறைகளையோ எதிர்த்து வாய் திறக்கக் கூடாது என்கிற நிலப்பிரபுத்து கொடுங்கோன்மைதான் அங்கு நிலவுகிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்டோரையும் கூலிஏழை விவசாயிகளையும் பெருமளவில் அணிதிரட்டி உரிமைக்காகப் போராடி வருவது நக்சல்பாரி அமைப்புகள் மட்டும்தான்.

 

எனவேதான், இத்தகைய நியாயமான போராட்டங்களைத் தீவிரவாதம் என்று சித்தரித்து நக்சல்பாரி இயக்கத்தினரை நரவேட்டையாடுவது, சிறையிலிட்டு வதைப்பது என்பதாக எல்லா ஆட்சியாளர்களும் இந்த விவகாரத்தில் ஓரணியில் நிற்கின்றனர். பீகாரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் நக்சல்பாரி ஆதரவு கிராமங்களில் போலீசு முகாமிட்டு அரசு பயங்கரவாதத்தை ஏவி கூலிஏழை விவசாயிகளை மிருகத்தனமாக ஒடுக்கி வருகிறது. ஒருபுறம் அரசு பயங்கரவாத அடக்குமுறை, மறுபுறம் நிலப்பிரபுக்களின் சாதிய வர்க்கக் கொலைவெறியாட்டங்கள் எனும் இரட்டைக் கொடுங்கோன்மையின் கீழ் சிக்கி பீகார் தவிக்கிறது.

 

இந்நிலையில், நக்சல்பாரி புரட்சியாளர்களின் இச்சிறை தகர்ப்பு வீரசாகச நடவடிக்கையானது, போராடும் உழைக்கும் மக்களின் புரட்சிகர உணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உத்வேகத்தையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கும். பீகாரின் சிறப்பியல்பு காரணமாகவே, அங்கே இப்படியொரு வீரசாகசத்தை நக்சல்பாரிகளால் சாதிக்க முடிந்தது. அதேசமயம், பீகாரில் நடந்த இத்தகைய சாகச நடவடிக்கையை அப்படியே பெயர்த்தெடுத்து பிற மாநிலங்களில் செயல்படுத்திவிட முடியாது.

 

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் லல்லு குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்து, ஐக்கிய ஜனதா தளம் பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி, நிதிஷ்குமார் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆதிக்கசாதி நிலப்பிரபுத்துவ வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரதிய ஜனதாவும், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட சாதியினரைக் கணிசமாகத் திரட்டிக் கொண்டுள்ள நிதிஷ் குமாரும் கூட்டணி கட்டிக் கொண்டு வெற்றி பெற்றுள்ள போதிலும், நிதிஷ்குமாரால் ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் கைப்பாவையாகச் செயல்படுவதற்கு மேலாக வேறொன்றையும் செய்துவிட முடியாது. லல்லு குடும்ப ஆட்சியில் சற்றே பின்னிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சாதிவெறி நிலப்பிரபுக்கள், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமது இழந்த சொர்க்கத்தை மீட்கவும், தமது சமூக பொருளாதார சாதிய ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவுமே கிளம்புவார்கள். ஏற்கெனவே, ரன்வீர்சேனா குண்டர்கள் ஜெகன்னாபாத் சிறைத் தகர்ப்பின் போது கொல்லப்பட்டதைக் கண்டித்து, தீவட்டி ஊர்வலம் நடத்தி எச்சரிக்கை விடுத்த இவர்கள், அடுத்தகட்டமாக தமது தாக்குதலை நக்சல்பாரி ஆதரவு கிராமங்களில் ஏவி தாழ்த்தப்பட்டோரைக் கொன்றொழிக்கத் தயங்கமாட்டார்கள்.

 

ரன்வீர்சேனா, நக்சல்பாரிகள் ஆகிய இருதரப்புகளையும் கடுமையாக ஒடுக்கி, இனியும் படுகொலைகள் நடக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று "தேசிய' பத்திரிகைகள் பீகாரின் புதிய ஆட்சியாளர்களுக்கு உபதேசிக்கின்றன. ஆனால், நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளுக்கும், நிலப்பிரபுக்களின் கொலைகார குண்டர் படைகளுக்கும் இடையே நடக்கும் சாதிய வர்க்க மோதலை மூடிமறைத்து விட்டு இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எதுவும் காண முடியாது. கிரிமினல் குற்றமாகச் சித்தரிக்கப்படும் — உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் சாதியவர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடும் நக்சல்பாரிகளின் மக்கள்திரள் சிவப்பு பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்திடவும் முடியாது.

பாலன்

 

ரன்வீர் சேனா: நக்சல்பாரி ஆதரவு தாழ்த்தப்பட்டோரை நரவேட்டையாடும் பயங்கரவாத குண்டர்படை

ஆதிக்க சாதிவெறியர்களான பூமிகார் நிலப்பிரபுக்களின் குண்டர் படையான ரன்வீர்சேனா, பீகாரில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். ஆனால், 1994லிருந்து 2000வது ஆண்டு வரை 27 இடங்களில் தாழ்த்தப்பட்டோர் மீது பயங்கரவாதக் கொலை வெறியாட்டங்களை நடத்தியுள்ளது. ரன்வீர்சேனா மட்டுமல்ல, நக்சல்பாரி பேரெழுச்சிக்குப் பிறகு, கடந்த 20 ஆண்டுகளில் யாதவ சாதி நிலப்பிரபுக்களின் லோரிக்சேனா, ராஜபுத்திர சாதி நிலப்பிரபுக்களின் குன்வர்சேனா, கங்காசேனா, பார்ப்பனபூமிகார் சாதி நிலப்பிரபுக்களின் சன்லைட்சேனா என கணக்கற்ற நிலப்பிரபுத்துவ குண்டர் படைகள் கட்டியமைக்கப்பட்டு, உரிமைக்காகப் போராடும் கூலிஏழை விவசாயிகள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வந்தன. இன்று இவை ஒன்று கலந்து பூமிகார் சாதிவெறி பண்ணையார்களால் தலைமை தாங்கப்படும் ரன்வீர்சேனாவாக உருவெடுத்துள்ளது. துப்பாக்கிகளும் அதிநவீன ஆயுதங்களும் கொண்ட இக்குண்டர் படை ஏறத்தாழ 1000க்கும் மேற்பட்டோரைப் படுகொலை செய்துள்ளது. ரன்வீர்சேனாவுக்குப் புரவலராக இருந்து கட்டி வளர்த்தவர் பாசிச ஜெயா ஆட்சிக்குப் பக்கமேளம் வாசித்த முன்னாள் தமிழக ஆளுநரான பீஷ்ம நாராயண் சிங்கின் மூத்த சகோதரர் ஆவார்.

 

சாதிவெறி பிடித்த நிலப்பிரபுக்களின் ஆதரவோடும் அதிகார வர்க்கத்தின் துணையோடும் போஜ்பூர் ஜெகன்னாபாத் மாவட்டங்களில் ரன்வீர்சேனா கணக்கற்ற கொலைவெறியாட்டங்களை நடத்தியுள்ளது. 1994 டிசம்பரில் ஜெகன்னாபாத் மாவட்டம் லட்சுமண்பூர்பதே கிராமத்தில் 61 தாழ்த்தப்பட்டோரை அவர்கள் உழைத்த களைப்பில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு வேளையில், அவர்களின் குரல் வளையையும் நெஞ்சையும் கத்தியாலும் கோடாரியாலும் பிளந்து துடிக்கத் துடிக்கக் கொன்றொழித்தனர். 1999 ஜனவரியில் சங்கர்பிகா கிராமத்தில் 23 பெண்கள் 16 குழந்தைகள் உள்ளிட்டு 58 தாழ்த்தப்பட்டோரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். ""தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாளை நக்சலைட்டாக மாறிவிடும்; எனவேதான் இந்த எச்சரிக்கை!'' என்று பகிரங்கமாகவே ரன்வீர்சேனா குண்டர்கள் அப்போது கொக்கரித்தனர்.

 

லட்சுமண்பூர்பதே கிராமத்தில் ரன்வீர்சேனா நடத்திய பயங்கரவாதக் கொலைவெறியாட்டத்துக்குத் தலைமையேற்ற படேசர்மா, ஜெகன்னாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அண்மையில் நடந்த சிறை தகர்ப்பின்போது, இச்சாதிவெறி பிடித்த நிலப்பிரபுத்துவ பயங்கரவாதி, நக்சல்பாரி புரட்சியாளர்களால் கொன்றொழிக்கப்பட்டான்.