Language Selection

புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

02_2006.jpgதஞ்சை திருவையாற்றில் கடந்த 19.1.06 அன்று நடந்த தியாகராசர் ஆராதனை விழா நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்கச் சென்ற ""தினமணி'' நாளேட்டின் புகைப்படக்காரர் கதிரவனை, திருவையாறு போலீசு ஆய்வாளர் முருகவேல் மற்றும் சில போலீசாரும், திருவாரூரிலிருந்து வந்த சீருடையணியாதப் போலீசு முருகதாசும் சேர்ந்து மூர்க்கத்தனமாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். புகைப்படக்காரர் கதிரவன் செய்த மிகப் பெரிய "குற்றம்' என்னவென்றால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மனைவியையும் அம்மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மனைவியையும் ஆராதனை நிகழ்ச்சியைப் பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு நின்று படம் எடுத்ததுதான்.

தியாகராஜர் ஆராதனை நிகழ்ச்சியில் பஞ்சரத்தினக் கீர்த்தனை பாடப்படும் நேரம் மிகமிகப் புனிதமானது என்ற பொய்யை பார்ப்பனக் கும்பலும், அதிகார வர்க்கமும் பத்திரிகைகள் மூலம்தான் பரப்பி வருகின்றன. அந்த நிகழ்ச்சியைப் படம் பிடிப்பதைத் தவறவிட்டால், பத்திரிகை நிர்வாகம் அந்தப் புகைப்படக்காரர் மேல் ஆத்திரமடையும். எனவே, அந்த நேரத்தைத் தவறவிடாமல் புகைப்படம் எடுப்பதில் எல்லா நிரூபர்களும் முனைப்புக் காட்டுவர். அப்படித்தான் ""தினமணி'' புகைப்படக்காரர் கதிரவனும் புகைப்படம் எடுக்க முற்பட்டார். இந்தச் சில நிமிட இடையூறு கூட எஸ்.பி. மனைவிக்கும், கலெக்டர் மனைவிக்கும் நேர்ந்து விடக் கூடாது என்பதால்தான் போலீசு மிருகங்கள் கதிரவனைத் தாக்கியிருக்கின்றன. தாக்கிய போலீசார் தெருப் பொறுக்கிகளை விடக் கேவலமான, ஆபாசமான வார்த்தைகளால் கதிரவனைத் திட்டியிருக்கின்றனர். இதனைக் கண்டு, அங்கிருந்த சாதாரண மக்கள் போலீசைத் தடுத்து எதிர்த்துப் பேசினர். விழாப் பாதுகாப்புக்குப் பொறுப்பான டி.எஸ்.பி. மற்றும் அரசு வழக்குரைஞர் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. ஆனால் அவர்களோ, அங்கிருந்த விழா அமைப்பாளர்கள் ஜி.ஆர். மூப்பனாரோ, குன்னக்குடி வைத்தியநாதனோ இந்த அநீதிக்கு எதிராக வாயே திறக்கவில்லை. பாதுகாப்புக்கு என வரும் போலீசு, இப்பார்ப்பன விழாவை கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, இப்போது போலீசுதுறை விழாவாக மாற்றிவிட்டது என்பதற்கு இத்தாக்குதலே சான்று கூறப் போதுமானது.

 

பத்து ஆண்டுகளுக்கு முன் இதே ஆராதனை விழாவில், ""தமிழில் பாடு'' என ம.க.இ.க. தோழர்கள் முழக்கமிட்டதைக் கண்டித்து பத்திரிகைகளில் எழுதிய பார்ப்பனக் கும்பல், ஒரு பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதை விட்டு விடட்டும்; ஒரு போலீசுகாரன் அத்தனை பெண்கள் மத்தியில் அருவெறுப்பாகவும், ஆபாசமாகவும் பேசி "புனித'த்தைக் கெடுத்திருக்கிறானே அதைப்பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?

 

விழாக்குழுவினர் கதிரவனுக்கு வி.ஐ.பி. அட்டை வழங்கியிருந்தனர். ஆனால், போலீசுகாரனைப் பொருத்தவரை வி.ஐ.பி. அட்டை வைத்திருப்பதால் வி.ஐ.பி. ஆகிவிட முடியாது; சொத்தும் அதிகாரமும் இருந்தால்தான் வி.ஐ.பி! அதனால்தான், அரசு வாகனங்களைத் தன் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திய கலெக்டர் மனைவியும், எஸ்.பி. மனைவியும் குற்றவாளிகளாகத் தெரியவில்லை. சட்டபூர்வமாகத் தன் கடமையைச் செய்த புகைப்படக்காரர் கதிரவன், போலீசுக்குக் குற்றவாளியாகிவிட்டார். வழக்குப்பதிவு, ஆர்.டி.ஓ. விசாரணை என நாடகமாடி, இப்பிரச்சினையை மூட்டைகட்டி குப்பையில் போட்டுவிட்டது, போலீசு.

 

குற்றமிழைத்த போலீசார் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை பத்திரிகையாளர்கள் அரசு நிகழ்ச்சிகளை முற்றாகப் புறக்கணிப்பதே சரியான எதிர்நடவடிக்கையாக அமையும். ஆனால், தஞ்சையில் உள்ள பத்திரிகையாளர்களோ இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஜனநாயக உணர்வு சுயமரியாதையைவிட சுயநலனும், பொருளாதார ஆதாயமுமே பெரும்பாலான பத்திரிகையாளர்களிடம் மேலோங்கி நிற்கிறது.

 

— ம.க.இ.க., தஞ்சை.