02_2006.jpg"தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கங்கை கொண்டானில் நாங்கள் நடத்திய போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. இயற்கை வளமான தண்ணீரை, உயிரின் ஆதாரமான தண்ணீரை விற்பனைச் சரக்காகவும் பன்னாட்டு முதலாளிகளின் தனியுடைமையாகவும் மாற்றும் மறுகாலனியாக்கக் கொள்கையின் கொடிய முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வியக்கத்தின் குறியிலக்காக, கோக் என்னும் அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னத்தைத் தெரிவு செய்தோம்.

 

இவ்வியக்கம் தமிழகமெங்கும் மக்களின் ஆதரவைப் பெற்றது மட்டுமல்ல, நெல்லை மற்றும் கங்கைகொண்டான் சுற்று வட்டாரத்து மக்கள் மத்தியில் ஒரு புதிய எழுச்சியையும் தோற்றுவித்திருக்கிறது. மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் அப்பகுதி முழுவதும் கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்யச் சென்ற எமது தோழர்களுக்கு உணவும் இடமும் கொடுத்து ஆதரித்ததுடன், சுற்று வட்டார கிராம மக்கள் 10,000 பேர் ""கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்ற மனுவில் தமது பெயர், முகவரியுடன் கையெழுத்திட்டுத் தந்தார்கள். ""தாமிரவருணி எங்கள் ஆறு, அமெரிக்க கோக்கே வெளியேறு!'' என்ற முழக்கத்தை மக்கள் முழக்கமாக மாற்றியது, இந்தப் பிரச்சார இயக்கம்.

 

மறுகாலனியாக்கத்திற்கு எதிரான எமது போராட்டத்திற்கு மக்கள் வழங்கிய ஆதரவிற்கு இது சான்று; கோக் அடிமைத்தனத்திற்கோ நெல்லை போலீசின் நடவடிக்கைகள் சான்று கூறின. முதலில் ஒரு சில கூட்டங்களுக்கு அனுமதி அளித்து, பேச்சாளர் மீது ராஜத்துரோக வழக்குப் பதிவு செய்வதற்கு அவற்றை முகாந்திரமாக்கிக் கொண்ட பின், அக்.நவ. மாதங்களில் எமது எல்லாக் கூட்டங்களுக்கும் தடை விதித்தது, போலீசு. வழக்கமாக, ""சட்டம் ஒழுங்கு, பொது அமைதி'' என்ற சொற்களில் ஒளிந்து கொண்டு பேச்சுரிமையை மறுக்கும் போலீசு அதிகாரிகள், இந்த முறை தமது கோக் விசுவாசத்தைக் கடிதமாகவே எழுதிக் கொடுத்தனர்.

 

""நீங்கள் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரியுள்ள கிராமங்கள் பெரும்பாலானவற்றில் உள்ள மக்கள் மேற்படி கம்பெனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவ்வாறான கிராமங்களில் இது போன்ற பிரச்சாரங்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக அமைய வாய்ப்புகள் நிறைய உள்ளன.'' ""திருநெல்வேலியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போயிருக்கிறது. நீங்களும் தேர்தலைப் புறக்கணிப்பவர்கள். உங்கள் பிரச்சாரம் சாதிக் கலவரத்தைத் தூண்ட வாய்ப்பு உள்ளது'', ""முதலில் சட்டப்படி பிரச்சாரம் செய்வது, பிறகு சட்ட விரோதமான முறைகளில் ஈடுபடுவது என்பது உங்கள் வழிமுறை'' எனப் பொய்யும் புனைசுருட்டும் அடங்கிய ஒரு நீண்ட "குற்றப் பத்திரிக்கையை'யே தனது அனுமதி மறுப்புக் கடிதமாக எழுதிக் கொடுத்தது, நெல்லை போலீசு.

 

எம் மீதான அடக்குமுறைகளைப் பட்டியலிட்டுக் காட்டுவதற்காக இவற்றைக் கூறவில்லை. கங்கைகொண்டான் சுற்றுவட்டாரத்தில் கோக் எதிர்ப்புப் பிரச்சாரம் எங்கே நடந்தாலும், அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே வந்திறங்குகிறது ""கியூ'' பிரிவு போலீசு. ஆயுத போலீசுப் படையோ களத்தில் இறங்கத் தயாராக நிற்கிறது. கோக் ஆலைக்கெதிராக ஊர் மறியல் அறிவித்த நாட்டாமைகள் மிரட்டப்படுகிறார்கள். கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரால் முடக்கப்படுகிறது. கேவலம் ஒரு சோடா கலர் கம்பெனிக்கு கங்காணி வேலை பார்க்கிறார் மாவட்ட கலெக்டர். வாட்சுமேன் வேலை பார்க்கிறது போலீசு. கோக் சார்பில் மக்களை வேவு பார்க்கிறது உளவுத்துறை.

 

இது வெறும் தண்ணீர் பிரச்சினை என்றோ, நெல்லை மாவட்ட மக்களின் உள்ளூர் பிரச்சினை என்றோ இன்னமும் யாராவது கருதிக் கொண்டிருந்தால், அவர்களுக்குத் தனது நடவடிக்கைகள் மூலம் "அரசியல் தெளிவு' ஏற்படுத்தி வருகிறது அரசு. தாமிரவருணி ஆறும் கங்கைகொண்டானின் நிலத்தடி நீரும் தனக்கு வேண்டுமென ஒரு அமெரிக்க கம்பெனி கேட்டால், அவற்றை மறுபேச்சில்லாமல் கொடுத்து விடவேண்டுமாம். கங்கை கொண்டான் அருகிலேயே உள்ள மானூர் ஏரி தூர்ந்து கிடக்கிறது; பாசனத்திற்குத் தண்ணீரில்லை; ஒரு குடம் குடிநீர் 2 ரூபாய் விற்கிறது. இந்நிலையில் குளிர்பானக் கம்பெனிக்கு ஆற்று நீரைத் தாரை வார்ப்பது மட்டுமல்ல, அதை எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூட அப்பகுதி மக்களுக்கு உரிமை கிடையாது என்கிறது அரசு. தான் ஒரு ஏகாதிபத்தியக் கைக்கூலி என்பதைத் தானே முன்வந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அன்று கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர்களும், கவர்னர் ஜெனரல்களும், ஆங்கிலேயப் போலீசு அதிகாரிகளும் அமர்ந்திருந்த இடத்தில், இன்று பிரதமரும், முதல்வரும், மாவட்ட ஆட்சியரும், போலீசு அதிகாரிகளும் அமர்ந்திருக்கிறார்கள்.

 

நெல்லையில் என்ன நடக்கிறதோ அதுதான் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. சுனாமியால் அகற்றப்பட்ட சென்னை மீனவர்களிடமிருந்து கடற்கரையைப் பறித்துக் கொண்ட அரசு, அவர்களை துரைப்பாக்கத்தின் பன்றித் தொழுவங்களில் குடி வைத்தது. அங்கே குடிநீர் இல்லையென மகாபலிபுரம் சாலையை அவர்கள் மறித்தவுடன் இரக்கமேயில்லாமல் அம்மீனவ மக்களின் மண்டையை உடைத்தது காரணம், பன்னாட்டு தகவல் தொழில் நுட்பக் கம்பெனிகளுக்கு அவர்களால் தொந்தரவாம்! தரகு முதலாளிகள் கனிவளங்களைக் கொள்ளையிடுவதற்காகத் தங்களது கிராமங்களைக் காலி செய்ய மறுத்த கலிங்கா நகர் பழங்குடி மக்கள் ஒரிசா போலீசால் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். ஜப்பானிய அதிகாரிகளால் அவமானப்படுத்தப்படுவதை எதிர்த்து ஊர்வலம் போன ஹோண்டா தொழிலாளர்களை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து நொறுக்கியது அரியானா போலீசு.

 

பன்னாட்டு நிறுவனங்கள் "எள்' என்றால் எண்ணெயாக நிற்கிறது மன்மோகன் சிங் அரசு. விவசாயம், சில்லறை வணிகம் எனப் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளித்த எல்லாத் தொழில்களும் தொழில் துறைகளும் வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தாக மாற்றப்படுகின்றன. ""ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்காதே, சிரியாவுடன் ஒப்பந்தம் போடாதே'' என அமெரிக்கா போடும் உத்தரவுகள் அனைத்தையும் ஏற்று புஷ்ஷின் காலை நக்குகிறது காங்கிரசு அரசு.

 

இது மறுகாலனியாதிக்கம் என்று நிரூபிப்பதற்கு மேலும் சான்றுகள் தேவையில்லை. கோக் எதிர்ப்புப் போராட்டத்தின் எல்லை, நெல்லை மாவட்டம் மட்டுமில்லை. எனவேதான் மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று தமிழகமெங்கும் ""கோக் மற்றும் பன்னாட்டுப் பொருட்கள் எரிப்புப் போராட்டம்'' நடத்துவதென அறிவித்திருக்கிறோம். கும்பினியாட்சியும் காலனியாதிக்கமும் திரும்பும்போது அவற்றுக்கெதிரான விடுதலைப் போராட்டமும் மீண்டும் உயிர்த்தெழுந்தே தீரும். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் நாட்டுப்பற்றும் கொண்ட ஜனநாயக சக்திகள் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

 

போராட்டக் குழு,

ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு.