02_2006.jpgசூடு, சொரணை ஏதுமில்லாத அமெரிக்க அடிமைத்தனத்திற்கு இலக்கணம் படைத்து வருகிறது காங்கிரசு அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை வெகு விசுவாசமாகவும் வெறித்தனமாகவும் மன்மோகன் சிங் அரசு அமல்படுத்தி வருவதனால் மட்டும் நாம் இவ்வாறு கூறவில்லை. இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் அப்பட்டமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் சென்ற மாதத்தில் மட்டும்

 பல தலையீடுகளை அமெரிக்க அரசு செய்துள்ளது. எனினும், காங்கிரசு அரசு சம்பிரதாய எதிர்ப்பு கூடக் காட்டாதது மட்டுமல்ல, அமெரிக்காவின் மனம் கோணாமலிருக்கும் பொருட்டு ஒரு புழுவைப் போல நெளிந்தும் வருகிறது.

 

""பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கூட்டத்தில், இரானுக்கு எதிராக (மீண்டும்) வாக்களிக்காவிட்டால் அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேரிடும்... மேலும், தங்களது அணுசக்தி ஆராய்ச்சியில் எது சிவில் நோக்கத்திற்கானது, எது இராணுவ நோக்கத்திற்கானது என்பது குறித்து இந்திய அரசு எங்களுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை திருப்திகரமாக இல்லை. எங்களுடைய பரிட்சையில் இந்தியா தேறவில்லை'' என்று டிச. 25ஆம் தேதியன்று பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் முல்ஃபோர்டு. ""இது இந்தியாவின் இறையாண்மையில் தலையிடுவதாகுமென்றும், மிரட்டுவதாகுமென்றும் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டோர் கூச்சல் எழுப்பினர். "தூதரின் கருத்துத்தான் எங்கள் அரசின் கருத்து' என்று தெனாவெட்டாக பதிலளித்தது அமெரிக்கா.

 

தூதர் விவகாரம் முடிவதற்குள் தனது அடுத்த ஆணையை அமெரிக்க அரசே நேரடியாக அறிவித்தது. ""இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சீன நிறுவனத்துடன் இணைந்து சிரியாவின் எண்ணெய் வயலில் முதலீடு செய்ய போட்டுள்ள திட்டத்தை இந்தியா உடனே ரத்து செய்யவேண்டும்'' என்று எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பித்தது. அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் முல்ஃபோர்டு பேசினார். இந்தியாவில் வங்கி, இன்சூரன்சு, சில்லறை வணிகம் ஆகியவற்றில் 100மூ பன்னாட்டு மூலதனம் இன்னமும் அனுமதிக்கப்படாததைச் சாடினார். காங்கிரசு அரசோ எதற்குமே மூச்சு விடவில்லை. மறுகாலனியாக்கம் என்பது பொருளாதார அடிமைத்தனம் மட்டுமல்ல என்பதற்கு இவை சான்றுகள்.

 

நாடாளுமன்றத்திற்கோ கூட்டணிக் கட்சிகளுக்கோ, தனது சொந்தக் கட்சியினருக்கோ கூடத் தெரியாமல், சென்ற ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அமெரிக்காவில் பிரணாப் முகர்ஜி போட்ட பாதுகாப்பு ஒப்பந்தமும், அதன் பின் ஜூலை 18ஆம் தேதி மன்மோகன் சிங் புஷ்ஷûடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையும்தான் இந்த அமெரிக்க அடிமைத்தனத்திற்கான அடிப்படை ஆவணங்கள். அமெரிக்காவின் ஆணையை ஏற்று இரானிலிருந்து குழாய் மூலம் எரிவாயு பெறும் திட்டத்தை முடக்கியது, அதற்குப் பதிலாக அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் எனும் பெயரில் இந்தியாவின் அணுமின் நிலையங்கள், ஆயுதங்கள், ஆய்வுகள் அனைத்தையும் அமெரிக்காவின் சோதனைக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்த ஒப்புக் கொண்டது, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அதன் காலாட்படையாக இந்திய இராணுவத்தை இறக்க ஒப்புக் கொண்டது, அமெரிக்க இந்திய கூட்டு இராணுவப் பயிற்சி... என விரிகிறது இந்த ரகசிய ஒப்பந்தம். இந்தக் கணம் வரை இவ்வொப்பந்தத்தின் ஷரத்துகளை வெளியிட காங். அரசு மறுக்கிறது.

 

சீனாவுக்கு எதிரான இராணுவத்தளமாகவும் அடியாளாகவும் இந்தியாவைப் பயன்படுத்துவதுதான் அமெரிக்கா வகுத்திருக்கும் ஆசியாவுக்கான யுத்த தந்திரத் திட்டம். பேரழிவு ஆயுத அபாயம் என்று புளுகி இராக்கை ஆக்கிரமிப்பதற்கான முகாந்திரங்களை உருவாக்கியதைப் போலவே, இரான் மீது போர் தொடுக்கவும் திட்டமிட்டு வருகிறது அமெரிக்கா. இதற்குத் துணை நிற்கிறது மன்மோகன் சிங் அரசு. எனவேதான், அமெரிக்காவின் இந்த யுத்ததந்திரத் திட்டத்திற்கு இடையூறாக இரான், சிரியா, சீனா ஆகிய நாடுகளுடனான எண்ணெய் எரிவாயு ஒப்பந்தங்களை உருவாக்க முயன்ற மணிசங்கர் அய்யரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தில் பிரபல அமெரிக்க கைக்கூலியும் மும்பை தரகு முதலாளிகளின் அபிமான புரோக்கருமான முரளி தியோராவை எண்ணெய் எரிவாயு அமைச்சராக நியமித்திருக்கிறது. "தேசிய நலன்' என்ற பெயரில் நாம் அமெரிக்க அடிமைகளாக்கப்படுகிறோம். வல்லரசாக்குவது என்ற பெயரில் நமது நாடு அமெரிக்காவின் அடியாளாக்கப்படுகிறது. அபாயகரமான இந்தத் தேசத்துரோகிகள் உடனே தூக்கியெறியப்படவில்லையானால் அமெரிக்காவின் போர்ச் சக்கரத்தில் சிக்கி நாடே சின்னாபின்னமாகி விடும்.