Language Selection

புதிய ஜனநாயகம் 2006

02_2006.jpg"கொலைகார கோக்கைக் குடிக்காதே!'' இது கேரளத்தின் பிளாச்சிமடாவிலும் தமிழகத்தின் நெல்லையிலும் எதிரொலிக்கும் போராட்டக் குரல் அல்ல. ""கோக்''கின் தாயகமான அமெரிக்காவிலிருந்து இந்தப் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க மாணவர்களால் தொடங்கப்பட்ட ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தின் விளைவாக, இப்போது 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த 2004 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழக மாணவர்கள் ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இந்தியாவில் கேரளத்தின் பிளாச்சிமடாவில் நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி சுடுகாடாக்கியுள்ளதையும், கொலம்பியாவில் தொழிற்சங்க முன்னணியாளர்களைப் படுகொலை செய்து வருவதையும், இன்னும் பல நாடுகளில் தனது கொலைக்கரங்களை நீட்டியுள்ளதையும், எல்லாவற்றுக்கும் மேலாக பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொண்டு குளிர்பானம் தயாரித்து விற்பதையும் எதிர்த்து அம்மாணவர்கள் பிரச்சாரம் செய்தனர். கலிபோர்னியா, நியூஜெர்சி, இல்லினாய்ஸ், மசசூட்ஸ் முதலான இதர பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து ""கோக்''குடன் உறவை முறித்துக் கொள்வதற்கான கூட்டணி என்ற அமைப்பின் மூலம் விரிவாக பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். கல்லூரி வளாகத்திலேயே கொலைகார ""கோக்''கிற்கு எதிராகப் பல வடிவங்களில் போராட்டங்களையும் நடத்தினர்.

 

மாணவர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக, கடந்த ஜனவரியிலிருந்து மிச்சிகன் பல்கலைக்கழகம் உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கும் நுரையுடன் ""என்ஜாய் கோக்'', ""ட்ரிங்க் கோக்'' முதலான பளபளப்பான விளம்பரங்களுடன் கூடிய தானியங்கி ""கோக்'' விற்பனை நிலையங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவில் ""கோக்'', நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தியுள்ளதா? நச்சுக் கழிவுகளைக் கொட்டி நிலத்தையும் சுற்றுச் சூழலையும் நாசப்படுத்தியுள்ளதா என்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்த பிறகே விற்பனை செய்ய அனுமதிக்க முடியும் என்று மிச்சிகன் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

தனது வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு பீதியடைந்த கோக், ""இந்தியாவில் விவசாயத்திற்குப் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் அந்நாட்டு தண்ணீரே நஞ்சாகியுள்ளதே தவிர, கோக்கில் எவ்வித பூச்சிக் கொல்லி மருந்தும் இல்லை; நிலத்தடி நீரை கோக் உறிஞ்சுவது முன்பை விட இப்போது 24மூ குறைந்துவிட்டது; இயற்கையின் சீற்றத்தால் பிளாச்சிமடாவில் ஏற்பட்ட வறட்சியிலிருந்து மீள, மழைநீர் சேகரிப்பு திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்'' என்றெல்லாம் கூசாமல் புளுகுகிறது.

 

ஏற்கெனவே ""கோக்''கில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகமாக உள்ளதென்று ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்த டெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கழகத்தின் (இகுஉ) இயக்குனரான சுனிதா நாராயணன், ""இது அப்பட்டமான பொய்!'' என்று சாடுகிறார். ""பிளாச்சிமடா வறண்டுபோய் நாசமானதற்குக் காரணம் யார் என்பதை நாடே நன்கறியும். அங்கே மழைநீர் சேகரித்து அதிலிருந்து கோக் தயாரிக்கப்படுவதாக கூறுவது மிகப் பெரிய மோசடி'' என்று கோக்கின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்துகிறார்.

 

அமெரிக்காவில் ""கோக்'' எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வரும் மாணவர்கள், ""பொய்கள், சதிகள், கொலைகள், வஞ்சகம், மோசடி நிறைந்ததுதான் கோக். அது பல ஏழை நாடுகளையும் மக்களையும் நாசமாக்கி விட்டது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமானது, கோக். அதைக் குடிப்பதும் ஆபத்தானது; அநீதியானது'' என்று தமது வெஞ்சினத்தை வெளிப்படுத்துகின்றனர்

 

அமெரிக்க மாணவர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த இந்திய உதவியாதார மையம் எனும் அமைப்பினரும் ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ""இந்தியாவிலிருந்து கொலைகார கோக் வெளியேறாத வரை, இன்னும் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கோக் புறக்கணிப்பு பரவவே செய்யும்'' என்று உறுதியாகக் கூறுகிறார், இம்மையத்தைச் சேர்ந்த சிறீவத்சவா.

 

அமெரிக்க மாணவர்கள் கொலைகார ""கோக்''கைப் புறக்கணித்து, தமது போராட்டத்தில் முதல் கட்ட வெற்றியைச் சாதித்து, உலகெங்கும் ""கோக்''கிற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளனர். அமெரிக்க மாணவர்களின் ""கோக்'' புறக்கணிப்பு இயக்கமும், ""கோக்''கிற்கு எதிரான பொதுக் கருத்தும், உலகெங்கும் ""கோக்''கிற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு இன்னுமொரு வலுவான ஆயுதமாகத் திகழவே செய்யும். தமிழகத்தில் ""கோக்''கிற்கு எதிரான பிரச்சாரம் தடை செய்யப்பட்டு, ""கோக்''கை எதிர்ப்போர் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாலும், ஓட்டுக் கட்சிகள் பொருள் பொதித்த மவுனத்துடன் ""கோக்''கிற்குத் தமது விவசுவாசத்தைக் காட்டினாலும், ""கோக்'' கிற்கு எதிராகத் திரண்டு வரும் பொதுக்கருத்தும், அந்தக் கருத்திற்குச் செயல்வடிவம் தரவிருக்கும் மக்கள் போராட்டங்களும் காட்டுத் தீயாகப் பரவவே செய்யும். கொலைகார ""கோக்''கை இப்புவிப்பரப்பிலிருந்தே விரட்டியடிக்கும் விடுதலைப் போராட்டமாக விரிவடையவே செய்யும்.

 

குமார்