Language Selection

03_2006.jpg

காங்கிரசு அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொள்வார்களா? ""மன்மோகனுக்கு மார்க்சிஸ்டுகள் குடைச்சல்'', ""சிதம்பரத்துக்கு நமைச்சல்'', ""நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புவார்கள் இடதுசாரிகள்'' என்பன போன்ற தலைப்புச் செய்திகளைப் படித்தால், அப்படி ஏதோ நடக்கப் போவதைப் போன்ற பிரமை ஏற்படத்தான் செய்கிறது. பிரமைகளை விடுத்து நாம் உண்மைகளைப் பரிசீலிப்போம்.

கடந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் போலி கம்யூனிஸ்டுகளின் ஆசி பெற்ற இந்த "மதச்சார்பற்ற', ஐக்கிய முற்போக்கு ஏலக்கம்பெனி சாதித்தது என்ன?

 

தொலைபேசி, வங்கி, காப்பீடு ஆகிய துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன கோரினார்களோ, அவற்றைச் செய்து கொடுத்திருக்கிறது காங்கிரசு அரசு. நவரத்தினக் கம்பெனிகளைப் பாதுகாப்பது என்ற பெயரில், "மற்றெல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கிக் கொள்ளலாம்' என்று சிதம்பரத்துக்கு புரோநோட்டு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் "மார்க்சிஸ்டு'கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தம் விருப்பம் போல சட்டமியற்றிக் கொண்டு "கும்பினியாட்சி' நடத்திக் கொள்ளவும் காங்கிரசு அரசு அனுமதித்திருக்கிறது. விரைவிலேயே எல்லா தொழிலாளர் சட்டங்களையும் ரத்து செய்யவிருப்பதாக மன்மோகன் சிங்கும், ஓய்வூதிய நிதியைப் பன்னாட்டு முதலாளிகள் வசம் ஒப்படைக்கவிருப்பதாக சிதம்பரமும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு நோட்டீசு கொடுத்துள்ளனர்.

 

"மார்க்சிஸ்டு'களின் மனங்கவர்ந்த குறைந்தபட்ச பொதுத்திட்டத்தை பொருளாதாரத் துறையில் மட்டுமின்றி, வெளியுறவுத் துறையிலும் கந்தலாக்கி வருகிறது மன்மோகன் அரசு. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இந்திய இராணுவத்தை அதன் காலாட்படையாக மாற்றும் இந்தோஅமெரிக்க இராணுவ ஒப்பந்தமும், இந்திய அணு ஆய்வுகளை அமெரிக்கா சோதனையிட வாய்ப்பளிக்கும் இரகசிய ஒப்பந்தமும் மன்மோகன் அரசால் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. சென்ற ஆண்டில் கையெழுத்தான அந்த இரகசிய ஒப்பந்தங்களின் விவரங்களை வெளியிடுமாறு "மார்க்சிஸ்டு'கள் பலமுறை கதறிவிட்டார்கள்; காங்கிரசு அரசோ அதைச் சட்டை செய்யக்கூட இல்லை.

 

இரான் விவகாரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சண்டியர்தனத்தை விஞ்சுகிறது "மார்க்சிஸ்டு'கள் அரங்கேற்றும் ""காமெடி'' நாடகம். அமெரிக்காவின் ஆணைப்படி சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இரானுக்கு எதிராக வாக்களித்தது காங்கிரசு அரசு. ""அடுத்த முறை இப்படி வாக்களித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்'' என்று எச்சரிக்கை செய்தார் "மார்க்சிஸ்டு' தலைவர் பிரகாஷ் காரத். இரண்டாவது முறையும் அவ்வாறே வாக்களித்தது காங்கிரசு அரசு. ""மூன்றாவது முறையும் இப்படி வாக்களித்தால் நாடாளுமன்றத்தில் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்'' என்று கடைசியோ கடைசியாக எச்சரிக்கை செய்திருக்கிறது, "மார்க்சிஸ்டு' கட்சி.

 

""இந்த முறை உண்மையிலேயே கவிழ்த்து விடுவார்கள் போலிருக்கிறது'' என்று யாரும் கனவு காண வேண்டாம். விமான நிலையங்கள் தனியார்மயம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானமாம்! சில்லறை வணிகம் மற்றும் இரான் பிரச்சினை குறித்து ஓட்டெடுப்பு நடத்தவே தேவையில்லாத விதி எண் 173இன் கீழ் விவாதமாம்! ""கம்யூ. மிரட்டல், குடைச்சல்'' போன்ற செய்திகளின் உண்மைச் சொரூபம் இதுதான்!

பாரதிய ஜனதா எனும் பேரபாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காகத்தான் காங்கிரசு அரசை ஆதரிப்பதாகவும், மற்றபடி தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் இரண்டு கட்சிகளுக்கும் எவ்வித வேறுபாடு இல்லையென்பது தங்களுக்குத் தெரியுமென்றும் கூறிப் புன்னகைக்கிறார்கள் "மார்க்சிஸ்டு'கள். இவ்வாறு கூறுவதன் மூலம் மதவெறி எதிர்ப்பாளன் என்ற மணிமகுடத்தை இவர்கள் மன்மோகனுக்குச் சூட்டுகிறார்கள். நாடே அமெரிக்காவுக்கு அடிமையாவதைக் கூடச் சகித்துக் கொள்ளும் அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்து மதவெறிக்கு எதிராக காங்கிரசு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் என்னவென்பதை "மார்க்சிஸ்டு'கள் நமக்குத் தெரிவிக்க வேண்டும்.

குஜராத் படுகொலை வழக்குகளை விசாரிக்கச் சொல்லி உச்சநீதி மன்றம்தான் உத்தரவு பிறப்பித்துள்ளதேயன்றி காங்கிரசுக் கட்சி அது குறித்து வாய் திறக்கக்கூட இல்லை. மும்பை படுகொலை, அயோத்தி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் பாதுகாப்பாகத் தூங்குகின்றன. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் முதலான பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்படவில்லை. குஜராத் படுகொலை குறித்த கே.ஆர்.நாராயணனின் கடிதத்தை வெளியிட மறுப்பது, நானாவதி கமிசன் விவகாரம், மதக்கலவரத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் அரசு எந்திரத்திற்கு வரம்பற்ற அதிகாரம் வழங்குவது... ஆகியவைதான் காங்கிரசு அரசின் மதவெறி எதிர்ப்பு சாதனைகள். கல்வி, கலாச்சாரத் துறைகளில் "முற்போக்காளர்கள்' எனப்படும் சிலருக்கு பதவி வழங்கியிருப்பதற்கு மேல் ஒரு வெங்காயமும் நடக்கவில்லை.

 

தனது உட்கட்சிப் பூசல்கள் மற்றும் ஊழல்களால் நாறிப் போயிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரசு மீதான அதிருப்தியை அறுவடை செய்வதற்காகக் காத்திருக்கிறது. இந்துத்துவ அரசியலையும் இராமன் கோயிலையும் வைத்து இரண்டு ஓட்டுகூட வாங்க முடியாது என்று உணர்ந்திருப்பதனால் தற்போது அமைதி காக்கிறதேயன்றி, காங்கிரசின் மதவெறி எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அது முடக்கப்பட்டு விடவில்லை. பார்ப்பன மதவெறியின் வர்க்கத் தன்மையில் ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் அழுத்தமாகப் பதிக்கப்பட்டுள்ளது.

 

மறுகாலனியாதிக்கத்தையும் மதவெறியையும் தமது தேர்தல் அரசியலின் சந்தர்ப்பவாதத்துக்காக இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒரு பிரிவுடன் கூட்டு வைத்துக் கொள்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள். ஆனால், அவர்களோ அவசியமான தருணங்களிலெல்லாம் ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொள்கிறார்கள். அன்று "காட்' ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நரசிம்மராவுக்கு துணை நின்றார் அத்வானி. அயோத்தி மசூதியை இடிக்க அத்வானிக்கு உதவினார் ராவ். இன்று இரான் பிரச்சினையில் உடுக்கை இழந்தவன் கை போல காங்கிரசுக்கு உதவ வருகிறது பாரதிய ஜனதா. எவ்விதக் "குறைந்த பட்ச திட்டமும்' இல்லாமலேயே இவர்களுக்கிடையில் உருவாகும் இந்த கொள்கைக் கூட்டணி பற்றி "மார்க்சிஸ்டு'கள் வாய் திறப்பதில்லை. ஏனென்றால், காங்கிரசுக்கு இவர்கள் அணிவித்திருக்கும் மதசார்பின்மைக் கோவணத்தை ஆத்திரப்பட்டு உருவி விட்டால், அதன் விளைவாக தாங்கள்தான் முதலில் அம்மணமாக நேரிடும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

 

ஆகவே, மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதற்காகத்தான் மன்மோகன் சிங்கின் மறுகாலனியாக்கக் கொள்கைகளைச் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பதாக "மார்க்சிஸ்டு'கள் கூறும் காரணம் பொய்யானது. மாறாக, தனியார்மய தாராளமயக் கொள்கைகளில் தாங்கள் கொண்டிருக்கும் உடன்பாட்டை மறைப்பதற்காகத்தான் "மதச்சார்பின்மை' எனும் கோவணத்தை இவர்கள் காங்கிரசுக்கு அணிவித்திருக்கிறார்கள். தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் பாரதிய ஜனதா அரசுக்கு மதச்சார்பற்ற முகமூடிகளாகப் பயன்பட்டதைப் போல, மன்மோகன் சிங்கின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு "மனிதமுகம்' வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் "மார்க்சிஸ்டு'கள்.

 

""பொதுத்துறையைத் தனியார்மயமாக்கலாம், ஆனால், தொழிலாளிகளுக்கு வேலை உத்திரவாதம் வேண்டும்; விவசாயத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம்; ஆனால், அளவோடு இருக்க வேண்டும்; சில்லறை வணிகத்தில் பன்னாட்டு முதலீட்டை அனுமதிக்கலாம்; ஆனால், சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்'' இதுதான் மனித முகத்துக்கான விளக்கம். அதாவது, ""தூக்கு தண்டனையை நிறைவேற்றலாம்; ஆனால், பலகையை மெதுவாக இழுக்க வேண்டும்'' என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் உலகமயமாக்கல் எதிர்ப்புக் கொள்கை. "வங்கத்து சிதம்பரம்' புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தனியார்மய ஆதரவு சண்டமாருதங்களைப் படித்திருக்கும் வாசகர்களுக்கு இது விசயத்தில் அதிக விளக்கம் தேவையில்லை.

 

அமெரிக்க இந்திய இராணுவ ஒப்பந்தம் போன்ற அடிமை ஒப்பந்தங்களில் இரகசியமாகக் கையெழுத்திட்டிருந்த போதிலும், பா.ஜனதாவுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் மன்மோகன் சிங்கின் மத்திய அரசை ஆதரிப்பதாகக் கூறுகிறார்கள் "மார்க்சிஸ்டு'கள். அப்படியானால் தங்களுடைய சொந்த ஆட்சி நடக்கும் மே.வங்கத்தில் அமெரிக்க இராணுவம் பயிற்சிக்கு வந்திறங்கிய போது, ""எங்கள் மாநிலத்தில் அமெரிக்க இராணுவம் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம்'' என்று புத்ததேவ் முழங்கியிருக்கலாமே! மிஞ்சிப் போனால் மே.வங்க அரசை மன்மோகன் சிங் ""டிஸ்மிஸ்'' செய்திருக்கக் கூடும். ஆனால், அதனைப் பயன்படுத்தி ஒரு மாபெரும் அமெரிக்க எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை நாடெங்கும் எழுப்பியிருக்கலாமே! மசூதி இடிப்புக்காக மாநில அரசாங்கங்களை இழக்கத் துணிந்த பார்ப்பன பாசிஸ்டுகளின் "கொள்கைப்பற்று' கூட மார்க்சிஸ்டுகளிடம் இல்லாமல் போனதேன்? கியூபாவுக்கு ஆதரவுக் கூட்டமும் வெனிசூலாவின் சாவேஸ{க்கு வரவேற்பு விழாவும் நடத்திவிட்டு அமெரிக்க இராணுவத்துக்கும் சலாம் போடும் இந்த சந்தர்ப்பவாதத்துக்குக் காரணம் என்ன? மதச்சார்பின்மையா?

 

"மார்க்சிஸ்டு' தலைவர்களை இத்தகைய கேள்விகளால் அசைத்து விடமுடியாது. ""ஒரு மத்திய அரசுக்கு மாநில அரசு கட்டுப்படவில்லையென்றால் தேசிய ஒருமைப்பாடு என்னாவது, அரசியல் சட்டம் என்னாவது'' என்பதுதான் அவர்கள் கவலை. ஏனென்றால், இவர்கள் மன்னனை விஞ்சிய ராஜ விசுவாசிகள். நரசிம்மராவ் அரசு நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் ""காட்'' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மன்மோகன் அரசும் அதேவழியில் இரகசியமாக அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது; இரானுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. ஆளும் வர்க்க கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பன்றிகளுக்கு உரிய மரியாதையைக் கூட வழங்குவதில்லை. ஜனநாயகத்தின் மேன்மை குறித்து "நற்செய்தி' வழங்க நேரும் "குடியரசு' தினம் போன்ற "நல்ல' நாள், "பெரிய' நாளில் மட்டும்தான் அவர்கள் சரக்கடித்து விட்டுச் சாமியாடுகிறார்கள். "மார்க்சிஸ்டு'களோ, நாடாளுமன்றக் கோயிலில் அன்றாடம் விரதமிருந்து மருள் வந்து சாமியாடுகிறார்கள்.

 

இரான் பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டுமென்று கேட்டால், ""குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் நன்றி தெரிவித்துப் பேசிய பின்னர்தான் அனுமதிப்பேன்'' என்று கூறி உட்காரச் சொல்கிறார் சபாநாயகர் சாட்டர்ஜி. மரபின் மீதுதான் எத்தனை பக்தி! "மார்க்சிஸ்டு'களின் கையில் மணியைக் கொடுத்து சபாநாயகராக உட்கார வைத்திருக்கிறார்கள் என்றால் காங்கிரசுக்காரர்களுக்கு அவர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கவேண்டும்!

 

இந்திய இராணுவத்தை அமெரிக்காவின் அடியாள் படையாக மாற்றவும், இந்திய மண்ணில் அமெரிக்க இராணுவம் பயிற்சி எடுக்கவும், இந்திய அணு ஆய்வுகளை அமெரிக்கா சோதனையிடவும் அதிகாரம் தரும் ஒரு அடிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு, புஷ்ஷின் ஆணைப்படி இரானுக்கு எதிராக ஓட்டும் போட்டிருக்கும் இந்தக் கயமையைக் கேட்ட மாத்திரத்தில் நாடாளுமன்றமென்ன, நாடே தீப்பிடித்திருக்க வேண்டும். ஆனால் மரபு என்று சொல்லி மணியடிக்கிறார் "மார்க்சிஸ்டு' சபாநாயகர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறித் தலையிட்டு வரும் அமெரிக்க தூதர் முல்போர்டை திரும்பப் பெறுமாறு மத்திய அரசு அமெரிக்காவைக் கோர வேண்டும் என்று குரலெழுப்புகிறார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். ""கடுமையான சொற்களால் எலும்பை நொறுக்கிவிட முடியாது. அமெரிக்கா நமது நேச நாடு என்பதை மனதில் வைத்து வார்த்தைகளை அளந்து பேசுங்கள்'' என்று பதறுகிறார் சோம்நாத் சாட்டர்ஜி. மரபுக்கு மணியடிக்கும் இந்தப் பூசாரிகள் மன்மோகன் சிங் அரசைக் கவிழ்த்து விடுவார்களென்று யாராவது கனவு காணவும் முடியுமா?

 

தமது அரசியல் மொண்ணைத்தனத்துக்குப் பொருத்தமான வகையில் தங்களால் வழிநடத்தப்படும் தொழிலாளி வர்க்கத்தையும் சட்டவாதத்தில் தேய்த்துத் தேய்த்து முனை மழுங்க வைக்கிறார்கள் போலிகள். டெல்லி, மும்பை விமான நிலையங்கள் தனியார்மயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை கோரிக்கை நிறைவேறாமலேயே திரும்பப் பெற்று, போராடிய தொழிலாளர்களைச் சோர்வடையச் செய்தார்கள். ""போராடியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை'' என்பதையே மாபெரும் சாதனையாகச் சித்தரித்ததுடன், தங்களது கருத்தை வலிமையாகப் பதிவு செய்து விட்டதாகப் பெருமை பேசினார்கள். வேலை நிறுத்தத்தினால் முதலாளி வர்க்கத்துக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு வருத்தம் தெரிவித்தன் மூலம் தங்களது கட்சியின் கருத்தை மேலும் வலிமையாகப் பதிவு செய்து விட்டார் மே.வங்க முதல்வர் புத்ததேவ்.

 

வெற்றிகரமாக முன்னேறி வந்த இப்போராட்டத்தை போலிகள் அவசரமாகக் கவிழ்க்கக் காரணம், அதன் போர்க்குணம்தான். ஊழியர்களே இல்லாமல் அதிகாரிகளையும் விமானப் படையையும் வைத்து சேவையை நடத்த முடியாமல் தடுமாறியது அரசு. இந்நிலை நீடித்து நாடு முழுவதும் போராட்டம் பரவினாலோ, கோபம் கொண்ட தொழிலாளர்கள் சேவையை நிறுத்த சட்டவிரோத வழிமுறைகளை மேற்கொள்ளத் தொடங்கினாலோ காங்கிரசு அரசின் கொடூர முகம் வெளிப்பட்டிருக்கும்; போலி கம்யூனிஸ்டுகளோ ஆளும் வர்க்கத்தின் கோபத்தை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு தொழிலாளிகளைத் தூண்டியதற்காக மே.வங்க முதல்வர் அந்நிய முதலாளிகளுக்கு பதில் சொல்ல வேண்டி வந்திருக்கும். பதவி, பந்தா, கார், கட்சி, ஆபீசு, ஊடகங்களின் விளம்பரம் ஆகிய அனைத்தையும் இழந்து கம்யூனிஸ்டுகளுக்குரிய இடத்திற்கு அவர்கள் வந்து சேர வேண்டி இருந்திருக்கும். இரண்டு நாள் சிரமத்திற்காக முதலாளிகளிடம் மன்னிப்பு கேட்கும் முதல்வரைக் கொண்ட கட்சி இவற்றுக்கெல்லாம் எப்படித் தயாராக இருக்கும்?

 

தனியார்மயம் தாராளமயத்திற்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தினால் ஹோண்டா தொழிலாளர் மீதான தாக்குதல், கலிங்காநகர் துப்பாக்கிச் சூடு போன்ற அடக்குமுறைகளும் தொடரும். இவற்றை எதிர்கொள்வதற்கான மாற்று வழிமுறைகளைப் பற்றியும் தொழிலாளி வர்க்கம் சிந்திக்கத் தொடங்கும். ஆகவேதான், தமது நாடாளுமன்ற அரசியலுக்குத் தோதான வரம்பிற்குள் மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் முடக்குகிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள். ""நாளை முதல் நாடே அமெரிக்காவின் அடிமை'' என்று மன்மோகன் சிங் அறிவித்தால் கூட போலி கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது. "நாடாளுமன்றத்தைக் கலக்காமல் தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை பிரதமர் வெளியிட்டதற்காக' உரிமைப் பிரச்சினையோ கவனஈர்ப்புத் தீர்மானமோதான் கொண்டு வருவார்கள்.

 

இது நகைச்சுவையல்ல,உண்மை. நடப்பது உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி என்பதும் இதில் நாடாளுமன்றம் ஒரு பொம்மை என்பதும் உலகறிந்த உண்மைகள். இந்த மறுகாலனியாக்கத்தை தேர்தல் அரசியல் மூலம் தடுத்து விடலாம் என்று கூறுவது, புஷ்ஷை கைது செய்யச் சொல்லி நம் ஊர் போலீசு ஸ்டேசனில் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாம் என்று கூறுவதற்கு நிகரானது. போலிகள் இதைத்தான் சொல்கிறார்கள். ஏனென்றால், மறுகாலனியாக்கத்தை முறியடிப்பதோ நாட்டின் இறையாண்மையை நிலைநாட்டுவதோ அவர்களுடைய நோக்கமல்ல. "உலகமயமாக்கலைத் தடுக்க முனைவது மடமை' என்று புத்ததேவ் பட்டாச்சார்யா தெளிவாகவே கூறியிருக்கிறார். அப்படியானால் போலி கம்யூனிஸ்டுகள் காட்டி வரும் எதிர்ப்புகளின் பொருள்தான் என்ன? தனியார்மய தாராளமயக் கொள்கைகள் தவிர்க்க முடியாதவை என்பதில் கொள்கைரீதியில் உடன்படுகின்ற அதேநேரத்தில், அவற்றை எவ்வாறு திணிப்பது என்கிற விசயத்தில் மன்மோகன் சிங்குடன் அவர்கள் நடைமுறையில் வேறுபடுகிறார்கள்.

 

போராட்டக் களத்தில் தம் பின்னே திரண்டிருக்கும் தொழிலாளிகளிடம் மாபெரும் தனியார்மய எதிர்ப்பாளர்கள் போல வீரமுழக்கமிடுகிறார்கள். சிதம்பரத்தின் வேட்டி சட்டையை உருவப் போவது போலச் சவடால் அடிக்கிறார்கள். பிறகு, தொழிலாளி வர்க்கம் தயாராக இல்லாததனால்தான் போராட்டத்தை தீவிரப்படுத்த முடியவில்லை என்று அவர்கள் மீதே பழி போடுகிறார்கள். ""தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்த முடியாது'' என்ற தங்களுடைய கருத்தை தொழிலாளிகளிடம் வெளிப்படையாகக் கூறாமல், போராட்டங்களின் தொடர் தோல்வியின் ஊடாக அவர்களே பட்டுத் தெரிந்து கொள்ளுமாறு விட்டுவிடுகிறார்கள்.

 

மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களின் அரசியல் கூர்மையை முனை மழுங்கச் செய்வதும், விடுதலைப் போராட்ட உணர்வுக்கு உயர்த்தப்பட வேண்டிய மக்களை, தமது சொந்த வாழ்க்கையை எவ்வாறேனும் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வு நிலைக்குத் தாழ்த்துவதும் தான் போலிகள் நடத்தி வரும் போராட்டங்களின் சாரம். ஆனால், தமது இந்த ஐந்தாம் படை வேலையை செயற்கரிய சாதனையாக அவர்கள் கருதுகிறார்கள். சில சலுகைகளையும் வாக்குறுதிகளையும் காட்டி, மறுகாலனியாக்கத் தாக்குதலின் கூர்முனையை மழுங்கச் செய்துவிட்டதாக மக்களிடம் பீற்றிக் கொள்கிறார்கள். தாங்கள் மட்டும் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அச்சுறுத்துகிறார்கள். இதே உண்மையை இலக்கிய நயத்துடன் எடுத்துச் சொல்கிறார் ப.சிதம்பரம் ""இடதுசாரிகள்தான் இந்த அரசின் மனச்சாட்சி'' என்கிறார். அன்று மனித முகத்துடன் கூடிய மதவெறியை வாஜ்பாயிடம் கண்டுபிடித்தது தி.மு.க.! "மார்க்சிஸ்டு'களோ இன்று மன்மோகன் சிங்கின் இதயத்தில் மனச்சாட்சியாக அமர்ந்து கொண்டு மறுகாலனியாக்கத்தின் மனித முகத்திற்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆகவே, ஆட்சியதிகாரத்தில் மதவெறி அமருவதைத் தடுக்கும் பொருட்டுத்தான் மன்மோகன் அரசை ஆதரிக்கும் நிர்ப்பந்தம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக "மார்க்சிஸ்டு'கள் கூறுவது பொய். ஒருவேளை பா.ஜனதா என்ற கட்சியே அரசியல் அரங்கில் இல்லாமல் இருந்திருந்தால் கூட இவர்கள் என்ன செய்திருப்பார்கள்? காங்கிரசுக்கு எதிராக முலாயம், லாலு போன்றோருடன் கூட்டணி அமைத்திருப்பார்கள். ஒரு ஆளும் வர்க்கப் பிரிவுக்கு எதிராக இன்னொரு பிரிவுடன் கூட்டு சேர்ந்து கொள்வதுதான் இவர்களின் (திரிபுவாத கம்யூனிஸ்டுகளின்) பாரம்பரியம்.

 

இப்போது கூட அமெரிக்க அடிவருடியாகச் செயல்படும் காங்கிரசை வழிக்கு கொண்டு வருவதற்கு முலாயம், லாலு, கருணாநிதி, தேவேகவுடா போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைக் குன்றுகளைக் காட்டித்தான் மன்மோகன் சிங்கை இவர்கள் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

"முன் விட்டை முற்போக்கு, பின் விட்டை பிற்போக்கு' என்று பிரித்துக் கூட்டணி அமைக்கும் இந்தப் பாரம்பரியத்திற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது. கொள்கை உடன்பாடு என்ற கருத்தாக்கமே காலாவதியாகி, தொகுதி உடன்பாடு என்பது மட்டுமே தேர்தல் அரசியலில் எஞ்சி நிற்கிறது. ""1991 முதல் எங்கள் நாட்டில் 6 ஆட்சிகள் மாறியுள்ளன் ஆனால், தாராளமயக் கொள்கையை யாரும் மாற்றவில்லை; கம்யூனிஸ்டுகள் பன்னாட்டு மூலதனத்தை அறைகூவி அழைப்பதைக் காண வேண்டுமா, மே.வங்கத்தைப் பாருங்கள்!'' என்று மலேசிய முதலாளிகள் சங்கத்தில் பேசியிருக்கிறார், மன்மோகன் சிங்.

 

உண்மை இவ்வாறு இருப்பினும், கையில் செங்கொடியை வைத்திருக்கும் வரை தங்களுக்கு ஒரு கொள்கை இருப்பதாகக் கூறிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் போலி கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கிறது. எனவே, காலத்திற்கேற்ற இடதுசாரிக் கொள்கையைத் தேடி மௌ;ள வலது பக்கம் நோக்கி நகர்கிறார்கள். தாங்கள் இதுகாறும் வலதுசாரி என்று வறட்டுத்தனமாகக் கருதிக் கொண்டிருந்த வாஜ்பாயிடம் கூட இடதுசாரிக் கூறுகள் இருப்பது இந்தப் புதிய ஒளியில்தான் அவர்களுக்குத் தெரியவருகிறது.

 

இராக்கிற்கு இந்திய துருப்புகளை அனுப்புமாறு புஷ் நிர்ப்பந்தித்தபோது, வாஜ்பாய் எப்படி முற்போக்காக நடந்து கொண்டாரென்பதை மன்மோகன் சிங்கிற்கு விளக்கியிருக்கிறார் ஏ.பி.பரதன். ""தோழர்களே, இராணுவத்தை அனுப்பக் கூடாது என்று சவுண்டு கொடுங்கள்; நீங்கள் போடும் சத்தம் வாஷிங்டனை எட்டவேண்டும். அப்போதுதான் உங்கள் எதிர்ப்பைக் காட்டி புஷ்ஷிடமிருந்து நான் எஸ்கேப் ஆக முடியும்'' என்று பரதனுக்கு ஐடியா கொடுத்தாராம் வாஜ்பாய். ""பாரதிய ஜனதா அளவுக்காவது முற்போக்காக நடந்து கொள்ளுங்கள்'' என்று காங்கிரசிடம் கெஞ்சியிருக்கிறார்கள், போலி கம்யூனிஸ்டுகள். (டெக்.கிரானிக்கிள் 15.2.06)

 

மன்மோகன் சிங்கோ பிளேட்டைத் திருப்பி விட்டார். வரவிருக்கும் கேரள, மே.வங்க சட்டமன்றத் தேர்தல்களில் முசுலீம் வாக்குவங்கியைக் குறி வைத்துத்தான் கம்யூனிஸ்டுகள் இரான் விவகாரத்தில் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள் என்று தன்னுடைய அமெரிக்கக் கைக்கூலித்தனத்திற்கு இந்து முலாம் பூசிக் கொண்டு விட்டார். மார்க்சிஸ்டுகளுக்கு மதவாத முத்திரையும் குத்திவிட்டார். போலி கம்யூனிஸ்டுகளோ ""ஒரு பிரதமர் இப்படிப் பேசலாமா?'' என்று புலம்புகின்றனர்.

 

""இசுலாமிய சக்திகளுக்கு எதிரான போரில் இந்து இந்தியா, அமெரிக்காவின் நட்பு சக்தியாக இருக்கும்'' என்று முன்னர் அசோக் சிங்கால் பிரகடனம் செய்தாரே, அதற்கும் மன்மோகன் சிங்கின் இந்தக் கூற்றுக்கும் என்ன வித்தியாசம்?

 

தன்னுடைய அமெரிக்கக் கைக்கூலித்தனத்திற்கு இந்து முலாம் பூசிக் கொள்ளும் காங்கிரசு, மதச்சார்பற்ற கட்சிதான் என்று "மார்க்சிஸ்டு'கள் நமக்கு நிரூபிக்க வேண்டும்.

 

அமெரிக்காவை எதிர்த்த போதிலும் தாங்கள் மதச்சார்பற்றவர்கள்தான் என்று மன்மோகன் சிங்கிற்கு வேறு அவர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

 

என்ன ஆச்சரியம்! மன்மோகன்

சிங் அரசை "மார்க்சிஸ்டு'கள் கவிழ்த்து விடுவார்கள் என்ற பரபரப்புச் செய்திகள் அடங்குவதற்கு முன்பே, மன்மோகன் சிங் அல்லவா "மார்க்சிஸ்டு'களைக் கவிழ்த்திருக்கிறார்!

 

பாலன்