04_2006.gif

ஓட்டுக் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும், செய்தி ஊடகங்கள் வதந்திக் காற்றால்  விசிறி விடுவதாலும் தமிழக மக்களுக்கு மண்டைக் காய்ச்சல் ஏற்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்வதானால், கடந்த ஆண்டு மத்தியிலேயே வாக்காளர் பட்டியல் திருத்த வேலையின் போதே தேர்தல் பரபரப்புகள் தொடங்கி விட்டன. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான கடைசி நாளன்று இலட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கத்தை கத்தையாக கொடுக்கப்பட்டன.

 

            போலி வாக்காளர்களைச் சேர்க்க முயன்றிருப்பது உண்மைதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவ்வாறு முயன்றவர்கள் மீது வழக்குப் போடும் முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியபோது பதறிப் போனது ஆளும் அ.தி.மு.க.தான். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட பலரும் இந்தக் குற்றம் புரிந்துள்ளனர்; பதறிப்போன ஆளுங்கட்சி உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு, அம்பலமாகியது. ஆனால், போலி வாக்காளர்களைச் சேர்க்கவும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படுவதை தாமதப்படுத்தவும் ஆளுங்கட்சி தொடர்ந்து முயலுகிறது. போலி புகைப்பட அடையாள அட்டைகள் தயாரிக்கும் வேலையிலும் கூட இறங்கியுள்ளனர். ஆளுங்கட்சியின் தேர்தல் அராஜகங்களை எதிர்கொள்ள முடியாது என்றஞ்சிய எதிர்க்கட்சிகள், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வாக்குப்பதிவு கோரி, அதையே அடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த வேலை முடிவதற்குள்ளாகவே, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. உடனடியாகவே தேர்தல் விதிமுறை மீறல்கள்  முறைகேடுகள் பற்றிய புகார்கள், குவியத் தொடங்கிவிட்டன. குறிப்பாக ஆளும் அ.தி.மு.க பல்வேறு முறைகேடுகளில் இறங்கி விட்டது. இலவச சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள், வேட்டி சேலைகள், கடன்நிதி வழங்குதல்கள், இன்னும் பல இலவசங்கள், வழங்கி வருவதாக சரமாரியாகப் புகார்கள் கிளம்பியுள்ளன.

           ஓட்டுக் கட்சி அரசியலில் ஜெயலலிதா, வைகோ, திருமாவளவன், இராமதாசு ஆகியோர் புதிய சிகரங்களைத் தொட்டிருக்கிறார்கள். தேர்தல் முறைகேடுள்  அராஜகத்தை கிரிமினல்மயமாக்கி தொழில்முறை சுத்தமாகச் செய்வதிலும், அரசியல் இலஞ்ச  ஊழலில் வாக்காளர்களைப் பங்கு பெறச் செய்வதிலும் அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவியும் முதல்வருமான ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். ஓட்டுக் கட்சிகளிடையே கூட்டணி அரசியல் ""பண்ணுவதற்கு'' கூடுதல் சீட்டுக்கள், பதவியில் பங்கு என்பதற்கு மேல் வேறு எந்த வகை நியாயமும் தேவையில்லை என்பதை இலக்கண விதியாக நிறுவுவதில் வைகோ, திருமா, இராமதாசு ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.  பதவிக்காகவும் பணத்துக்காகவும் வெட்கங்கெட்டுப் போய் எதையும் செய்யக் கூடியவர் இராமதாசு என்பது மீண்டும் மீண்டும் அம்பலமாகி விட்டது. தனது கட்சி ""ஓ பாசிட்டிவ்'' இரத்தம் போன்று யாருடனும் கூட்டுச் சேரக்கூடியது என்று பெருமை பேசுகிறார் ""உறுமும் புலி'' வைகோ. தன் கட்சிக்கு எம்.எல்.ஏ. சீட்டுக் கிடைத்ததில், தலித் சமுதாயத்துக்கே அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்று புளுகித் திரிகிறார், செரித்த வாழைப்பழமான திருமா.

            இலஞ்ச  ஊழல், அதிகாரமுறைகேடுகள் மூலம் பல ஆயிரங்கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் குவிப்பது, அரசியல் எதிரிகளைக் கிரிமினல் முறைகளில் தாக்கிப் பழிவாங்குவது, உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவது, ஆபாச  ஆடம்பர  உல்லாச  உதாரித்தனங்களில் திளைப்பது போன்ற கேடுகளை 199196 ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாகவே செய்தது ஜெயலலிதா  சசிகலா கும்பல். இதனால் தமிழக மக்களிடமும் ஓட்டுக் கட்சிகளிடமும் இருந்து முற்றிலும் தனிமைப்பட்டு 1996 சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வி கண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்ததோடு, பல கிரிமினல் வழக்குகளிலும் சிக்கியது.

            ஆனால், அது குவித்து வைத்திருந்த பல ஆயிரம் கோடி சொத்துக்கள்  கள்ளப் பணத்தை இழந்துவிடவில்லை. அதை வைத்து நீதித்துறையிலும் அரசியலிலும் செல்வாக்குள்ள நபர்களை விலைக்கு வாங்கி வழக்குகளை சமாளித்ததோடு அரசியலிலும் புத்துயிர் பெற்றது.

            பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, 1998 நாடாளுமன்றத் தேர்தல்களில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி மத்திய கூட்டு மந்திரி சபையில் இடமும் பெற்றது ஜெயலலிதா சசிகலா கும்பல். தி.மு.க. அரசைக் கவிழ்ப்பது, குற்றவழக்குகளை இரத்து செய்வது ஆகிய தனது இரு கோரிக்கைகளை உடனடியாகவும், தான் விரும்பியவாறும் பா.ஜ.க. கூட்டணி அரசு நிறைவேற்ற மறுத்ததால் ஆத்திரமுற்ற ஜெயாசசி கும்பல் மத்திய அரசைக் கவிழ்த்தபோது, அதனிடத்தில் தி.மு.க. போய் உட்கார்ந்து கொண்டது.

            தி.மு.க.  பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, மத்திய அரசிலும் பங்கேற்றதைக் காட்டி இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளும், காங்கிரசும் ஜெயா  சசி கும்பலுடன் தேர்தல் கூட்டணி அமைத்தனர். அதுவரை பா.ஜ.க.தி.மு.க. கூட்டணியின் மத்திய அரசில் அதிகார சுகத்தை அனுபவித்து வந்த பா.ம.க. திடீரென்று ஜெயலலிதாவுடன் பேரம்பேசி, மத்திய அமைச்சர் பதவிகளைத் துறந்து கூட்டணி அமைத்தது. தனிமைப்பட்டுப் போன தி.மு.க.  பா.ஜ.க. கூட்டணி 2001 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி கண்டது. அதோடு ஒட்டிக் கொண்டிருந்த வைகோ கட்சியும் படுதோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தல்கள் முடிந்த சில வாரங்களிலேயே பா.ம.க. மீண்டும் பா.ஜ.க.தி.மு.க. கூட்டணி அரசில் போய் சேர்ந்து கொண்டு நாடே நாறுமளவு பா.ம.க. இராமதாசின் பச்சோந்தித்தனம் அம்பலமானது.

            19962001 ஆகிய ஐந்தாண்டுகளில் நடந்து முடிந்த ஓட்டுக் கட்சிகளின் இந்த சந்தர்ப்பவாத கேலிக் கூத்துக்களால் ஜெயாசசி கும்பல் வலுப்பெற்று ஜெயாசசி கும்பல் ஆட்சியைப் பிடித்தது; அசைக்க முடியாத சில நம்பிக்கைகளுக்கு வந்தது. ""எலும்புத் துண்டுகளை வீசி எறிந்தால் கவ்விக் கொண்டு வாலை ஆட்டாத நாய்களே கிடையாது''; அதேபோலத்தான் ஓட் டுக் கட்சிகளும் அவற்றின் தலைவர்க ளும், சில பதவிகளையும் பணப்பெட்டிகளையும் விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்று அக்கும்பல் உறுதியாக நம்பியது.

            எனவே, வேறு எந்த ஓட்டுக் கட்சியின் தயவும், கூட்டும் தனக்குத் தேவையில்லை என கருதி, தனது தேர்தல் வெற்றிக்கும், ஆட்சி அமைவதற்கும் காரணமாக இருந்த கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்தி, எட்டி உதைப்பதைப்போல வெளியேற்றினர். ஜெயாசசி கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாக இருந்த மூப்பனார் காங்கிரசு, இரு போலி கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ம.க. இராமதாசு ஆகியோர் கொஞ்சமும் வெட்கமின்றி ஜெயலலிதா மீது பழிபோட்டு விலகும்படியானது. நாட்டையும் ஆட்சியையும் வழிநடத்தும் தகுதி வாய்ந்தவை என்று கூறிக் கொள்ளும் இந்தக் கட்சிகள் ஜெயாசசி கும்பலைப் பற்றி என்ன மதிப்பீடு வைத்திருந்தன? ""ஜெயலலிதாவை நம்பி ஏமாந்தோம்; துரோகம் செய்துவிட்டார்'' என்று கூட சொல்லவில்லை; அவர் மாறிவிட்டார் என்று புலம்பினர்.

            அடுத்து, 1996 தேர்தல்களில் தன்னைத் தோற்கடித்த மக்களைப் பழிவாங்கும் வேலையில் ஈடுபட்டது ஜெயாசசி கும்பல். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவு வரி, கட்டணங்களை சுமத்தி சுமையேற்றியது; நெசவாளர்களை கஞ்சித் தொட்டிக்கும், விவசாயிகளை எலிக்கறி தின்னவும், தொழிலாளர்கள் வேலை இழக்கவும், அதேசமயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிக்கவும் செய்தது; நெசவாளிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்களை அடக்கி ஒடுக்கியது. அன்னதானங்கள், குடமுழுக்குகள், ஆறுகால பூசைகள் நடத்தியது. மதமாற்றத் தடைச்சட்டம், ஆடுகோழி வெட்டத் தடைச் சட்டம், அரசு ஊழியர்களின் ஊதிய உரிமைகளைப் பறித்ததோடு, அவர்கள் போராடியபோது வேலை பறிப்புச் சட்டம், வீடு புகுந்து தாக்குவது, இலட்சக்கணக்கில் சிறை, வேலை பறிப்பு எனப் பாசிச அடக்குமுறையை ஏவியது.

            இராமதாசு, வைகோவைப் போலவே, பா.ஜ.க. கும்பலோடு கூட்டணி அரசில் பங்கு வகித்து ஆதாயம் அடைந்திருந்த தி.மு.க., கடைசி நேரம் வரை அதை அனுபவித்துவிட்டு, ஜெயலலிதா  பா.ஜ.க. எதிர்ப்பு அலைவீசுவதை சாதகமாக்கிக் கொண்டு இவ்விரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளின் கூட்டணி அமைத்து 2004 நாடாளுமன்ற தேர்தல்களில் ஏகபோக வெற்றி கண்டது.

            தமிழக மக்களின் வெறுப்பும், பிற அரசியல் கட்சிகளிடமிருந்து தனிமைப்பட்டும், தேர்தல்களில் படுதோல்வியும் அடைந்த ஜெயாசசி கும்பல் தனது அரசியல் அணுகுமுறையை அடியோடு மாற்றிக் கொண்டது. முதலில் மக்களுக்கு எதிரான பார்ப்பன  பாசிச அடக்குமுறை நடவடிக்கைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. அடுத்து, பல ஆயிரங்கோடி ரூபாய் இலவசத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அரசு சொத்துக்களைத் தானும் தனது கட்சியினரும் மட்டும் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பதை நிறுத்தவில்லை. அரசு ஆதாயங்களை வாக்காளர்களுக்கும் பங்கு வைப்பது என்ற புதிய உத்தியை அமலாக்கியது.

            அன்னதானங்களுக்கும், கஞ்சித் தொட்டிக்கும், எலிக்கறிக்கும் தள்ளப்பட்ட ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவது என்ற வகையில் ஓட்டு வங்கிகளை உருவாக்குவதோடு, தனது கட்சியினர் பொறுக்கித் தின்ன வழிவகுக்கப்படுவதை அனுபவம் மூலம் உணர்ந்து கொண்ட ஜெயாசசி கும்பல், அந்த வழியிலேயே ஆட்சியை நடத்துவது என்று முடிவு செய்தது. சுனாமி நிவாரணம், வெள்ள நிவாரணம், ஏழை மாணமாணவிகளுக்கு சைக்கிள், விவசாயி வீட்டுப் பிள்ளைகளுக்கு நிதி உதவி, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் குடும்பப் பெண்களுக்கும் நிதி உதவி போன்றவை மூலம் ரொக்கத் தொகை, அரிசி, மண்ணெண்ணெய், வேட்டிசேலை, தையல் இயந்திரம் ""இஸ்திரி'' பெட்டி என்று பல ஆயிரம் கோடி ரூபாய் வாரி இறைக்கத் தொடங்கியது.

            அரசு சாரா நிறுவனங்கள் மூலம் உதவிகள், சுயவேலை வாய்ப்புகள், நுண்கடன்கள், எய்ட்ஸ் நிவாரணம், வறுமை ஒழிப்பு, சுனாமிவெள்ள நிவாரணம் என்று பல வழிகளில் மேல்நிலை வல்லரசுகள், உலகவங்கி  ஐ.எம்.எஃப், ஐ.நா. சபை, பன்னாட்டு தொழில்நிதி நிறுவனங்கள் கொண்டு வரும் திட்டங்களையும் வழங்கீடுகளையும் தனது பொறுக்கி அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் ஜெயாசசி கும்பல் வெற்றி பெற்றுள்ளது.

            தான் கோடி கோடியாகக் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம்  கருப்புப் பணத்தை வாரி இறைத்து வைகோ  திருமாவளவன் இன்னும் பிற கீழ்நிலைப் பிழைப்புவாத, பொறுக்கி அரசியல் பிரமுகர்களையும் பதவிகளையும்பணப்பெட்டிகளையும் கொடுத்து தன் பக்கம் இழுத்து விடுவதிலும் வெற்றி பெற்றுவிட்டது. இதற்கும் இன்னும் பல பொறுக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கும் மிக மிக அவசியமான போலீசுஅரசு அதிகாரிகளையும் குறிப்பாக, ஜெயாசசி கும்பலின் செல்லப் பிராணிகளான போலீசு உளவுத்துறையையும் செய்தி ஊடகங்களையும் கைப்பாவைகளாக்கிக் கொண்டது.

            தி.மு.க., காங்கிரசு உட்பட மற்ற பிற அரசியல் கட்சிகள் ஜெயாசசி கும்பலின் இத்தகைய பிழைப்புவாத  கிரிமினல்  பொறுக்கி அரசியலுக்கு எதிரானவர்கள் கிடையாது. ஜெயலலிதாசசிகலா கும்பல் இத்தகைய அணுகுமுறையில் முந்திக் கொண்டு விட்டதே என்று ஆத்திரமடைபவர்கள்தாம். நிவாரணநிதி, சுய உதவிக்குழு, நுண்கடன் போன்ற பல திட்டங்கள் தமது அரசு கொண்டு வந்தவை என்று உரிமை பாராட்டிக் கொள்கிறது, தி.மு.க.  காங்கிரசு கூட்டணி. வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவிப்பதில் ஜெயாசசி கும்பலையும் விஞ்சிவிட இறுதி நேரத்தில் எத்தணிக்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ தரமான அரிசி, வீடுதோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச ""கேஸ்'' அடுப்பு, இலவச மின்சாரம், வேலையற்றோருக்கு மானியம், திருமண உதவித் தொகை, நிலமற்ற விவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலம் இப்படி அடுக்கிக் கொண்டே போகிறது. அதேசமயம் தேர்தல் ஆணையம் மூலம் ஜெயலலிதாவின் இலவச வழங்கீடுகளைத் தடுக்க முயல்கிறது. ஜெயா கும்பல் இலவசமாக வழங்குவதைத் தடுப்பது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும். போலீசுஅரசு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக  ஒரு சார்பாக நடக்கக் கூடாது என்று புலம்பிக் கொண்டேஅரசு ஊழியருக்குப் பறிக்கப்பட்ட உரிமைகளைத் திருப்பித் தருவதாகவும் போலீசுக்கு மூன்றாவது ஊதியக் கமிசன் போடுவதாகவும் வாக்களித்துள்ளது.

            அரசு அமைப்பின் ஆதாயங்களை  இலஞ்ச ஊழல் கொள்ளைகளை கட்சித் தலைவர்கள் மட்டுமே சுருட்டிக் கொள்வது என்பதோடு காங்கிரசு ஆட்சி காலத்தில் நிறுத்திக் கொண்டார்கள். அவற்றைத் தலைவர்கள் மட்டுமல்ல, கட்சிப் பிரமுகர்கள்  அணிகள் வரை பங்கு போட்டுக் கொள்வது என்பது தி.மு.க. மற்றும் பிற மாநிலக் கட்சிகளில் இருந்தது. ஜெயாசசி கும்பலோ அந்தக் கொள்ளையில் குவிக்கப்பட்டதை ஒரு பிரிவு மக்களை நிரந்தரக் கையேந்திகளாக மாற்றி தனது விசுவாச ஓட்டு வங்கியை உருவாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்துகிறது. மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமல்ல, பல்வேறு கட்டுமானத் திட்டங்கள் வகுப்பதிலும் இத்தகைய உள்நோக்கங்களோடுதான் இந்த அரசு செயல்படுகிறது.

            தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்ற காலகட்டத்தில் ஓட்டுக் கட்சி அரசியல் என்பதே இவ்வாறான பிழைப்புவாத  கிரிமினல்  பொறுக்கி அரசியலாக பரிணாம வளர்ச்சி அடைவது இயல்பானதுதான். நாடாளுமன்ற  சட்டமன்ற அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் ஏகாதிபத்தியபன்னாட்டு தொழில்  நிதி நிறுவனங்களுக்கும், மேல்நிலை வல்லரசுகளுக்கும் ஒரு பொருட்டே கிடையாது. இவற்றுக்கு வெளியேதான், அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடுதான் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி  ஐ.எம்.எஃப், புஷ் நிர்வாகம் ஆகியவற்றுடன் நாட்டை மறுகாலனியாக்கும் பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன. அவை நேரடியாக அரசு எந்திரத்துடன் உறவு வைத்துக் கொண்டு, மேற்பார்வையிட்டு தமது நோக்கில் இயக்குகின்றன. அரசியல் கட்சிகளை நம்ப முடியாமல்தான் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவும் தனது காரியங்களை  நோக்கங்களை சாதித்துக் கொள்கின்றன.

            நாட்டை ஏகாதிபத்திய பன்னாட்டு தொழில்  நிதி நிறுவனங்களுக்கு விற்று மறுகாலனியாக்குவதில் எவ்விதக் கொள்கை வேறுபாடும் இல்லாத ஓட்டுக் கட்சிகள் வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று பதவிக்கும் கொள்ளைக்கும்தான் போராடுகின்றன. அதனால் கொள்கைகள் பேசுவதையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு, தனிநபர் தாக்குதல்கள், ஆபாச வசவுகள், "ரெக்கார்டு டான்சுகள்', கவர்ச்சிப் பிம்பங்களைக் கொண்ட தலைவர்களின் வழிபாடு, தனக்கும் தனது சமுதாயத்துக்கும் தொகுதிப் பங்கீட்டில் அநீதி இழைத்துவிட்டதாக நீலிக் கண்ணீர் வடிப்பது, காயடிக்கப்பட்ட பிராணியைப் போலக் கதறுவது என்று அரசியலற்ற பல வடிவங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய அரசியல் சூழல் காரணமாக சினிமா புகழ், கதாநாயகன் பிம்பங்கள் ஆகியவற்றை வைத்து அரசியலில் தானும் பதவியை பிடித்து விடலாம் என்று விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்கள் கருதுகின்றனர்.

            ஆனõல் மக்களோ, குறிப்பாக இளைஞர்களோ, இவை எல்லாவற்றுக்கும் வெளியே யாராவது புதிய சக்தி எழவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். நாடாளுமன்ற  சட்டமன்ற ஓட்டுக்கட்சி அரசியல் என்ற அமைப்புக்குள்ளாகவே அத்தகைய புதிய சத்தியின் எழுச்சியை எதிர்பார்ப்பது, புதைசேற்றில் வீழ்ந்தவன் தனது கால்களை மேலும் அழுத்தி உந்தி வெளியே வர எத்தணிப்பது போன்றதுதான். முதலில் ஓட்டுக்கட்சி அரசியல் அமைப்புக்கு வெளியே வருவதற்கான முயற்சியும் உறுதியும்தான் இப்போதைய உடனடி தேவை.