05_2006.jpg

வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சிக்கு வந்தபின் வஞ்சிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடிவதில்லை. தமது விருப்பத்தையும் விதியையும் நிறைவேற்றாத ஓட்டுக்கட்சிகளையும் ஆட்சியாளர்களையும் அடுத்தடுத்த போராட்டங்களில் மக்கள் தூக்கியெறிகிறார்கள். மக்கள் தீர்ப்பைச் செயல்படுத்தாத பழைய வகைப்பட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் மக்களின் நம்பிக்கையை இழந்து செல்லாக் காசாகி விட்டன.

 மக்கள் கோரிக்கைகளைச் செயல்படுத்த விழையும் ஆட்சியாளர்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடிகிறது. துரோகமிழைத்தால், உடனே மக்கள் போராட்டங்களில் இறங்குகிறார்கள். மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி துரோக ஆட்சியாளர்கள் நாட்டை விட்டே தப்பியோடுகிறார்கள்.

 

            தென்னமெரிக்க கண்டம் முழுவதும் இத்தகைய மக்கள்திரள் போராட்டங்கள் காட்டுத் தீயாக பற்றிப் பரவுகிறது. தென்னமெரிக்க  மத்திய அமெரிக்க நாடுகளில் அடுத்தடுத்து நடந்துவரும் மக்கள் பேரெழுச்சிகளைக் கண்டு உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்கா, விழிபிதுங்கி நிற்கிறது. ஒருநாட்டில் மக்கள் போராட்டங்களால் தனது விசுவாச ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து அமெரிக்கா தப்பிக்குமுன், அடுத்த நாட்டில் மக்கள் போராட்டங்கள் பற்றி எரியத் தொடங்கி விடுகிறது. அர்ஜெண்டினா, வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார் முதலான நாடுகளைத் தொடர்ந்து மத்திய அமெரிக்காவிலுள்ள சின்னஞ்சிறு நாடான ஹெய்தியில் அண்மையில் நடந்த மக்கள் பேரெழுச்சியானது, அமெரிக்காவின் முகத்தில் கரி பூசியுள்ளது.

 

            ஹெய்தி  உலகின் நான்காவது ஏழை நாடு. அந்நாட்டின் மக்கள் தொகையில் 75 சதவீதத்தினர் நாளொன்றுக்கு ரூ. 50க்கும் குறைவாக ஊதியம் பெறும் சாமானியர்கள். அமெரிக்கக் கைப்பாவைகளின் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் சிக்கித் தவித்த ஹெய்தி மக்கள், 2000வது ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில், ""விடுதலை இறையியல்'' கொள்கையைக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியாரான பெர்டினாண்டு அரிஸ்டைடு என்பவரை அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். ஹெய்தியின் 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ஆகப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தவர்தான் அரிஸ்டைடு.

 

            அவர் முந்தைய கைக்கூலி ஆட்சியாளர்களைப் போல அமெரிக்காவுக்கு காவடி தூக்காமல், மக்களுக்குத் தொண்டாற்றும் மனிதாபிமான உள்ளத்தோடு நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கினார். அமெரிக்க விசுவாச இராணுவப் படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தார். இத்தகைய அற்ப சீர்திருத்த நடவடிக்கைகளைக் கூட சகித்துக் கொள்ளாத அமெரிக்கா, முன்னாள் இராணுவத்தினர்  சமூக விரோதிகளைக் கொண்ட இரகசிய கொலைக் குழுக்களை ஹெய்தியில் கட்டியமைத்து சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அதிபரை அச்சுறுத்தியது. அண்டை நாடான டொமினிகன் குடியரசிலிருந்து இக்கூலிப் படைகளைக் கொண்டு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி பேரழிவுகளை விளைவித்தது. 2004ஆம் ஆண்டு பிப்ரவரியில் இக்கூலிப் படைகள் அதிநவீன ஆயுதங்களுடன் நாடெங்கும் பெருந்தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டன. இவற்றை ""ஹெய்தியில் ஜனநாயகத்துக்காக நடக்கும் கலகங்கள்'' என்று ஏகாதிபத்திய உலகம் கொண்டாடியது. இக்கூலிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் ஹெய்தி கடற்கரையில் கப்பலில் தயாராக நின்றன.

 

            ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பது போல நாடகமாடிய பிரான்சு, ஹெய்தியில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக நின்று படைகளை அனுப்பியது. ஜனநாயக சொர்க்கபுரியாகச் சித்தரிக்கப்படும் கனடா, அமெரிக்காவுக்கு விசுவாசமாக தனது படைகளை அனுப்பி வைத்தது. பிப்ரவரி இறுதியில் ஏகாதிபத்திய உலகின் ஆதரவோடு இக்கூலிப் படைகள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு அச்சுறுத்திய போதிலும், அரிஸ்டைடு பதவி விலக மறுத்து விட்டார். எனவே அவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கொண்டு போய் இக்கூலிப் படைகள் தள்ளின. ஹெய்தியில் மக்கள் பேராதரவோடு ஜனநாயகத்துக்கான போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ஏகாதிபத்தியவாதிகள் கோலாகலமாகக் கொண்டாடினர். கிறித்துவ வெறிபிடித்த அமெரிக்க அதிபர் புஷ், ஒரு கிறித்து பாதிரியாரின் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆக்கிரமித்ததை கிறித்துவ உலகம் வாய்மூடி வேடிக்கை பார்த்தது. ஒருநாட்டின் அதிபரைக் கடத்திச் சென்று "ஜனநாயகத்தை' நிலைநாட்டிய அமெரிக்காவின் "வீரதீர சாகச'த்தைக் கண்டு ஜனநாயக உலகம் கைகட்டி நின்றது.

 

            ஈராண்டுகளுக்குப் பிறகு ஹெய்தியில் கடந்த பிப்ரவரியில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதன் பெயரால் அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பால் குமுறிக் கொண்டிருந்த ஹெய்தி மக்கள், நாடு கடத்தப்பட்ட முன்னாள் அதிபர் அரிஸ்டைடின் சீடரான ரெனே ப்ரீவல் என்பவரை தமது வேட்பாளராக நிறுத்தினர். ஆகப் பெரும்பான்மையான மக்கள் ஆதரவுடன் பெருவாரியான வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், அமெரிக்க கைக்கூலிகளின் தேர்தல் கவுன்சில், மோசடிகளில் இறங்கி முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடித்தது. வெகுண்டெழுந்த மக்கள் தெருப் போராட்டங்களில் இறங்கினர். நிலைமை விபரீதமாவதைக் கண்டு அஞ்சி, ரெனே ப்ரீவல் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்கக் கைக்கூலிகள் அறிவித்தனர். உள்நாட்டு வெளிநாட்டு சீர்குலைவுவாதிகளை முறியடித்து ஹெய்தி மக்கள் தமது போராட்டத்தில் வெற்றியைச் சாதித்துள்ளனர்.

 

            ஹெய்தியில் நடந்த மக்கள் பேரெழுச்சிக்கு முன்னதாக ஈக்வடாரில் மக்கள் பேரெழுச்சிகள் நடந்தன. ஹெய்தி மக்கள் அமெரிக்கக் கைக்கூலிகளுக்கு எதிராகப் போராடியதைப் போலவே, ஈக்வடார் மக்கள் அமெரிக்காவும் உலக வங்கியும் திணிக்கும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைச் செயல்படுத்திய அதிபர் லூசியோ குடியர்ஸுசுக்கு எதிராக பேரெழுச்சியில் இறங்கினார்கள். மக்களின் வெஞ்சினத்தை எதிர்கொள்ள முடியாமல் அதிபர் அமெரிக்காவுக்குத் தப்பியோடினார். அடுத்து வந்த அதிபர் ஆல்பிரடோ பலசியோ, அமெரிக்காவின் உத்தரவுகளை மறுபரிசீலனை செய்த பின்னரே நடைமுறைப்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளார். இல்லையேல், அவரும் மக்களின் பேரெழுச்சியில் வீசியெறியப்படுவார் என்பது நிச்சயமாகிவிட்டது.

 

            இதேபோல, அர்ஜெண்டினாவில் அடுத்தடுத்து மூன்று அதிபர்கள் மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடியுள்ளனர். ஐ.எம்.எப்.இன் உத்தரவுகளை எதிர்ப்பதாகவும், ஏகாதிபத்திய நாடுகள் அர்ஜென்டினாவுக்குக் கொடுத்த கந்துவட்டி கடனில் மூன்றில் இரண்டு பங்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றப் பாடுபடுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார், புதிய அதிபர் நிஸ்டர் கிர்சனர். இதனாலேயே அவர் பதவியில் நீடிக்க முடிகிறது; இல்லையேல் அவரும் முந்தைய அதிபர்களைப் போல மக்களால் விரட்டியடிக்கப்படுவார்.

 

            பொலிவியாவில், அண்மையில் நடந்த தேர்தலில் அமெரிக்க கைக்கூலிகளின் ஆட்சி வீழ்த்தப்பட்டு புதிய அதிபராக இவா மொரேல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டங்களால் பிரபலமான கொச்சபம்பா பகுதியைச் சேர்ந்தவர்தான் இவாமெரேல்ஸ். இப்போராட்டங்களின் மூலம் முன்னணித் தலைவராக உயர்ந்த அவர், ""சோசலிசத்தை நோக்கிய இயக்கம்'' என்ற அமைப்பை நிறுவி தொழிற்சங்க  விவசாய சங்கங்களின் சம்மேளனத் தலைவராக உயர்ந்து, மக்களின் பேராதரவோடு அதிபராகியுள்ளார். அமெரிக்கத் தடையால் வாழ்விழந்துள்ள பாரம்பரிய கோகோ விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்கப் போவதாகவும், பொலிவியாவின் இயற்கை எரிவாயுதாதுவளங்களை நாட்டுடமையாக்கி ஏகாதிபத்திய ஆதிக்கத்தை வீழ்த்தப் போவதாகவும் இவர் வாக்குறுதி அளித்துள்ளார். அதிபராகப் பொறுப்பேற்ற உடனேயே, அமெரிக்க எதிர்ப்புணர்வு கொண்ட வெனிசுலா அதிபர் சாவெஸ், கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரைச் சந்தித்து ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராகவும் சோசலிசத்துக்காகவும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியளித்துள்ளார். இவாமொரேல்சும் சாவெசும் தமது வழியை ""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்று குறிப்பிடுகின்றனர்.

 

            பொலிவியாவைத் தொடர்ந்து சிலி நாட்டில் சோசலிஸ்டு கட்சியைச் சேர்ந்த மிசெல் பெச்லெட், அண்மையில் நடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று முதல் பெண் அதிபராகியுள்ளார். அமெரிக்கக் கைக்கூலியான பினோசெட்டின் ராணுவ சர்வாதிகார ஆட்சியில் தந்தை கொல்லப்பட்டு, சித்திரவதை முகாமில் அவதிப்பட்டு, பின்னர் அகதியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து, இறுதியில் நாடு திரும்பிய அவர், அதிபராக உயர்ந்துள்ளதை பத்திரிகைகள் பாராட்டி எழுதுகின்றன.

 

            ஏற்கெனவே கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து நின்று மக்கள் நல்வாழ்வுக்கான சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சோசலிசத்தைக் கட்டியமைப்பதே தமது லட்சியம் என்றும் அந்நாடுகளின் அதிபர்கள் அறிவித்துள்ளனர். "சோசலிச சிற்பி'யாகச் சித்தரிக்கப்படும் பிரேசில் நாட்டின் அதிபர் லூலா, ""இன்னொரு உலகம் சாத்தியம்தான்!'' என்று உலக சமூக மன்ற (ஙிகுஊ) மாநாடுகளில் முழங்குகிறார். இப்போது, பொலிவியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சோசலிச சிந்தனையும் கொண்டவராகக் காட்டிக் கொள்ளும் இவா மொரேல்ஸ் அதிபராகியுள்ளார். சிலி நாட்டில் சோசலிஸ்டு கட்சியைச் சேர்ந்த மிசெல் பெச்லெட் அதிபராகியுள்ளார்.

 

            இந்நாடுகள் மட்டுமின்றி ஈக்வடார், மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளில் "இடதுசாரி' களும், நிகரகுவாவில் அமெரிக்க எதிர்ப்பாளர்களான சான்டினிஸ்டாக்களும் அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. இவற்றையெல்லாம் காட்டி தென்னமெரிக்க கண்டம் முழுவதும் ""இடதுசாரி அலை'' வீசுவதாக போலி கம்யூனிஸ்டுகளும் போலி சோசலிஸ்டுகளும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ""நம்மவர்கள் அதிகாரத்துக்கு வந்துவிட்டார்கள்'' என்று பூரித்துப் போய் தமது பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். இவையும் சோசலிச ஆட்சிகள்தாம் என்று நம்பச் சொல்கின்றனர்.

 

            ஆனால், இந்நாடுகளில் மக்கள் ஆதரவுடன் புதிய ஆட்சிகள் வந்துள்ளனவே தவிர, இவை சோசலிச ஆட்சிகள் அல்ல. வெனிசுலா அதிபர் சாவெசும் கியூபா அதிபர் காஸ்ட்ரோவும் மட்டுமே அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் காலனியாதிக்க சதிகளையும் வெளிப்படையாக எதிர்த்து நிற்கின்றனர். ஆனால், இதர தென்னமெரிக்க நாடுகளின் அதிபர்கள் அவ்வாறு வெளிப்படையாக அமெரிக்க எதிர்ப்பில் நிற்பதில்லை. இந்நாடுகளில் ஆட்சிகள் மாறியுள்ளனவே தவிர, கீழிருந்து புரட்சிகரமான முறையில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படவில்லை. புரட்சிகர சித்தாந்தம் கொண்ட கட்சியின் தலைமையுமில்லை.

 

            ""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்று முழங்கும் பொலிவிய அதிபர் இவா மொரேல்ஸ், நாட்டின் தாதுவளத்தை ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து மீட்டு நாட்டுடமையாக்காகப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளாரே தவிர, இன்றுவரை அதற்கான எந்த முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை. சோசலிசம் பேசும் அவர், பொலிவிய அரசுத்துறை மின் நிலையங்களில் அந்நிய நிறுவனங்களைப் பங்குதாரர்களாகச் சேருமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார். தனது இடதுசாரி கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியிலிருந்து தப்பிக்க இவர் காஸ்ட்ரோவுடனும் சாவெசுடனும் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். ஆனால், அவர்களது ஆலோசனைகளையோ வழிகாட்டல்களையோ அவர் செயல்படுத்த முயற்சிப்பதில்லை.

 

            வெளிப்படையான ஏகாதிபத்திய கைக்கூலிகளையே விஞ்சும் வகையில், சோசலிசம் பேசும் பிரேசில் நாட்டின் அதிபர் லூலா, ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்து கொண்டிருக்கிறார். லூலா அரசாங்கம், முந்தைய ஆட்சிகளை விட மிக வேகமாக உலக வங்கி  ஐ.எம்.எப்.பின் கடன்களை வட்டியோடு செலுத்திக் கொண்டிருக்கிறது. 1980களில் உலகவங்கிஐ.எம்.எப். இன் கடன்களைத் திருப்பிச் செலுத்த மாட்டோம் என்று மக்கள் போராட்டங்கள் பீறிட்டு எழுந்த அர்ஜெண்டினாவில், சோசலிசம் பேசும் புதிய அரசாங்கம் இக்கடன்களை விசுவாசமாகத் திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிலி நாட்டின் புதிய பெண் அதிபரான மிசெல் பெச்லெட், முந்தைய ஆட்சியாளர்களின் வழியில் உலகமயச் சந்தையுடன் பிணைக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தையே மேற்கொள்ளப் போவதாகக் கூறுகிறார். உருகுவே நாட்டின் புதிய "இடதுசாரி' ஆட்சியாளர்களோ, அமெரிக்க முதலீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்து தொழில் தொடங்க அழைப்பு விடுக்கின்றனர். ஹெய்தியின் புதிய அதிபரோ அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட இராணுவம் மற்றும் எதிர்ப்புரட்சி குண்டர்படைகளை முறியடிக்கவோ, சுதந்திரமாகச் செயல்படவோ முடியாமல் தத்தளிக்கிறார்.

 

            இருப்பினும், தென்னமெரிக்க நாடுகளின் புதிய ஆட்சியாளர்கள் சோசலிசம் பேசுகின்றனர். அவ்வப்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரவசனங்களைப் பொழிகின்றனர். விடுதலை இறையியல், அதிகாரத்துவ எதிர்ப்பு, சுற்றுச்சூழல், மண்ணின் மைந்தர்களது பண்பாட்டுப் பாதுகாப்பு, அந்நியக் கடன் எதிர்ப்பு, ஜனநாயகத்துக்கான கோரிக்கைகள் முதலானவற்றைக் கொண்ட கலவையாக இவர்களது சோசலிசம் அமைந்துள்ளது. இதையே இவர்கள் ""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்கின்றனர்.

 

            இந்த இளஞ்சிகப்பு (கடிணடு) சோசலிசமானது பாதி புலம்பலாகவும் பாதி வசைபாடலாகவும், கடந்த காலத்தின் எதிரொலியாகவும் எதிர்காலத்தைப் பற்றிய மிரட்டலாகவும் இருக்கிறது. தற்கால வரலாற்றின் போக்கைப் புரிந்து கொள்ளும் திறனற்றதாக இருக்கிறது. இதனால் கோமாளித்தனமான  அவலமான விளைவை உண்டாக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தை மிரட்டுவதற்கான கிலியூட்டும் பொம்மையாகத்தான் இந்த சோசலிசம் பயன்படுகிறது. காலனியாதிக்கத்தாலும் சர்வாதிகார ஆட்சிகளாலும் வதைபட்ட தென்னமெரிக்க மக்களுக்கு இந்த சோசலிசம் தற்போதைக்கு இனிப்பான நம்பிக்கையாக மாறியுள்ளது.

 

            ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கூட கட்டியமைக்காமல், ஏகாதிபத்திய நிறுவனங்களையும் முதலீடுகளையும் நட்டஈடின்றிப் பறிமுதல் செய்யாமல், அந்நிய முதலீடுகளை வரவேற்றுக் கொண்டு ""இன்னொரு உலகம் சாத்தியம்தான்!'' என்று பகற்கனவு காணும் இந்தக் குட்டி முதலாளித்துவ சோசலிசம், பெயரளவில் இடது சாரியாகவும் சாராம்சத்தில் வலதுசாரியாகவும் உள்ள மையவாதக் கலவையாகவே இருக்கிறது. இந்த "இடதுசாரி' கானல்நீரைக் காட்டி இதுவும் சோசலிசம்தான் என்று தென்னமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகெங்குமுள்ள உழைக்கும் மக்கள் ஏய்க்கப்பட்டு வருகிறார்கள். நாளை இந்தப் புதிய வகை "இடதுசாரி' ஆட்சியாளர்களின் துரோகங்கள் அம்பலமாகும்போது, உழைக்கும் மக்களுக்கு சோசலிசத்தின் மீதே வெறுப்பைத்தான் விளைவிக்கும். அது, தெனாலிராமன் பூனைக்குப் பால் வைத்த கதையாகவே முடியும்.

 

            கீழிருந்து பீறிட்டு எழும் மக்களின் பேரெழுச்சிகளில் அமெரிக்க கைக்கூலிகளின் ஆட்சிகள் தூக்கியெறியப்பட்டு, தென்னமெரிக்க நாடுகளில் புதிய ஆட்சிகள் வந்துள்ளனவே தவிர, இவை இடதுசாரி ஆட்சிகளோ, சோசலிச ஆட்சிகளோ அல்ல; குறைந்தபட்சம் ஏகாதிபத்திய எதிர்ப்புசுதந்திர தேசிய ஆட்சிகளும் அல்ல. சோசலிசம் பேசும் குட்டி முதலாளித்துவ தலைமையிலான இப்புதிய ஆட்சிகள் தொடர்ந்து நீடிக்குமா, அல்லது வீழ்த்தப்படுமா என்பது தென்னமெரிக்க மக்களின் அரசியல் விழிப்புணர்வையும் போராட்டத்தையும் பொருத்தே உள்ளது. ஆனால், ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்கும் புரட்சிக்குக் குறைவான எந்தவொரு ஆட்சி மாற்றத்தாலும் தென்னமெரிக்க மக்களைச் சாந்தப்படுத்தி விட முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

 

            இந்நிலையில், அமெரிக்க கைக்கூலிகளின் சர்வாதிகார ஆட்சிகளுக்குப் பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்புதிய ஆட்சிகளைக் கவிழ்க்க அமெரிக்கா மேற்கொண்டுவரும் சூழ்ச்சிகள்  சதிகளை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது புரட்சிகர  ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதேசமயம், இத்தகைய புதிய ஆட்சிகளையே சோசலிசம் என்று சித்தரித்துவரும் போலி கம்யூனிஸ்டுகள்  போலி சோசலிஸ்டுகளின் பித்தலாட்டங்களை முறியடிக்க வேண்டியது அதைவிட முக்கிய கடமையாகும்.

 

மு மனோகரன்