05_2006.jpg

ஜனநாயகத்தின் பெயரால் ஓட்டுப் பொறுக்கிகள் எழுப்பும் இரைச்சலில் ஒரு ஜனநாயகப் படுகொலை குறித்த தீர்ப்பு சத்தமில்லாமல் புதைக்கப்பட்டிருக்கிறது. "மேலவளவுப் படுகொலை' என்று அறியப்படும் தலித்துகள் மீதான வன்கொடுமைப் படுகொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கள்ளர் சாதிவெறியர்கள் 17 பேரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து, அவர்களுடைய தண்டனையை உறுதி செய்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்.

 

            30.6.97 அன்று மதுரை மாவட்டம் மேலவளவு (ரிசர்வ்) ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் முருகேசன், துணைத்தலைவர் மூக்கன் மற்றும் ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, பூபதி ஆகிய தலித்துகள் பட்டப்பகலில் பேருந்தை வழிமறித்துப் படுகொலை செய்யப்பட்டனர். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இந்தப் படுகொலை மீதான அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் (26.7.01) வந்தது.

            ""இந்தக் குற்றத்தைச் செய்வதற்கான நோக்கம் இவர்களுக்கு இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை'' என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட 40 பேரில் 23 பேரை விடுவித்தார் சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராமலிங்கம். இதற்குக் கண்டனம் தெரிவித்து தனது தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது உயர்நீதி மன்றம்: ""40 பேரையும் தண்டிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989இன் படியும் அனைவரையும் தண்டிப்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. ஊராட்சி மன்றத்தின் தலைவரும் துணைத்தலைவரும் குறி வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்ட 6 பேர் மட்டுமல்ல, படுகாயமடைந்தவர்கள் அனைவரும் தலித் சமூகத்தினர்தான். அவர்களைத் தேர்தலில் நிற்கவொட்டாமல் அச்சுறுத்துவதுதான் இந்தக் கொலைகளின் நோக்கம் என்று முடிவுக்கு வருவதற்குப் போதுமான சாட்சியங்களும் இருக்கின்றன.''

 

            ""ஆனால் விசாரணை நீதிமன்றம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளவே இல்லை. 23 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கெதிராக தமிழக அரசும் உயர்நீதி மன்றத்துக்கு மேல்முறையீடு செய்யவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. எனினும், சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் கடந்து விட்டதால் இவ்வழக்கின் மீது மறுவிசாரணை நடத்துமாறு உத்தரவிட நாங்கள் விரும்பவில்லை'' என்று கூறுகிறது உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு.

            9 ஆண்டுகள் ஆகிவிட்டதால் "மறப்போம் மன்னிப்போம்' என்று விட்டுவிடுவதற்கு இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த படுகொலையோ, சொத்துத் தகராறுக்காக நடந்துவிட்ட கொலையோ அல்ல. இதே மதுரை மாவட்டத்தின் பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார்மங்கலம், கொட்டகாச்சினேந்தல் போன்ற தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சிகளில் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை என்பதுடன், சாதி ஆதிக்கவெறியர்களின் கைப்பாவைகளாகத் தேர்தலில் நிறுத்தப்படும் தலித்துகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாளே பதவி விலகும் அவலமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. சாதி ஆதிக்கவாதிகளுக்குப் பணியாமல் முருகேசனைப் போல யாரேனும் எதிர்த்து நிற்பார்களேயானால் அவர்களைக் கொலை செய்வதற்கும் சாதிவெறியர்கள் தயங்கமாட்டார்கள் என்பதே இன்றளவும் உண்மை.

            மேலவளவு வழக்கில் துவக்கம் முதல் இன்று வரை தலித் மக்களுக்காகப் போராடி வரும் வழக்குரைஞர் இரத்தினம் அவர்களை இத்தீர்ப்பு வந்தவுடன் சந்தித்தோம். இந்த வழக்கின் வரலாறு குறித்து அவர் கூறும் விவரங்களும், சமூக நீதிக்கான வழக்குரைஞர் மையத்தின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள துண்டறிக்கையும் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக நீதித்துறையும் அரசும் ஓரணியில் நின்று செயல்பட்டதை அம்பலமாக்குகின்றன.

            1996ஆம் ஆண்டு மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 10.9.96 அன்று வேட்பு மனு தாக்கல் செய்த முருகேசன் உள்ளிட்டோர் ஆதிக்கசாதியினரின் மிரட்டலுக்குப் பயந்து மனுவை வாபஸ் பெற்றனர். பிறகு சமாதானக் கூட்டம், மீண்டும் தேர்தல் ஓட்டுப் பெட்டிகள் களவாடப்பட்டன. மீண்டும் 31.12.96இல் நடைபெற்ற தேர்தலை ஆதிக்க சாதியினர் புறக்கணித்தனர். தலித் மக்கள் மட்டுமே வாக்களிக்க, முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 30.6.97 அன்று முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை.

            27.3.98 அன்று கொலைகாரர்கள்அனைவருக்கும் உயர்நீதி மன்றம் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது. பீதியடைந்த தலித் மக்கள சார்பில் இந்த ஜாமீனை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்கு மனு செய்யப்பட்டது. ஜாமீனை ரத்து செய்யலாமா கூடாதா என மீண்டும் பரிசீலிக்குமாறு உயர்நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டது உச்சநீதி மன்றம்.

            இதற்குள் வழக்கு விசாரைணக்கு வந்துவிட்டது. ""எங்கள் தரப்பில் அரசு வழக்குரைஞராக திருமலைராசன் அவர்களை நியமிக்க வேண்டும்'' என்று முருகேசனின் அண்ணன் கருப்பையா கொடுத்த மனுவுக்கு அரசு பதிலளிக்கவில்லை. ""வழக்கை மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றினால்தான் சாட்சிகள் பயமின்றி சாட்சி சொல்லமுடியும் என்றும் திருமலைராசனை நியமிக்க வேண்டும்'' என்றும் அரசுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார் கருப்பையா. வழக்கு சேலத்துக்கு மாற்றப்பட்டது. திருமலைராசன் இவ்வழக்கிற்கான சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.

            சாதிவெறியர்களின் மிரட்டலுக்குப் பயந்து சில சாட்சிகள் எதிராகத் திரும்பினர். அரசுத் தரப்பு சாட்சியான தாசில்தார் ""இந்தக் கொலைக்கு வேறு சிலர் காரணமாக இருக்கக் கூடும்'' என்று கொலைகாரர்களைத் தப்பவைக்கும் நோக்கில் அறிக்கை கொடுத்தார். கொலைக்குற்றத்துக்காகவும், தீண்டாமைக் குற்றத்துக்காகவும் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, 23 பேரை விடுவித்தார் நீதிபதி ராமலிங்கம். (இவர் தற்போது உயர்நீதி மன்ற நீதிபதி என்பதும், இந்தக் கொலை வழக்கின் முதல் குற்றவாளி ராமருக்கு உறவினர் என்பதும் கூடுதல் செய்திகள்.)

            வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 8, இது தேர்தல் தொடர்பான கொலை என்று ஊகிக்க அனுமதித்த போதிலும் நீதிபதி இதை நிராகரித்தார். பேருந்தை 40 பேர் வழிமறித்துக் கொலை செய்திருந்த போதிலும் ""இது சதித்திட்டம் தீட்டி நடத்தப்பட்ட கொலை'' என்ற குற்றச்சாட்டையும் ""கொலையில் நேரடியாகப் பங்கேற்காமல் பின்புலத்தில் இயங்கிய சதிகாரர்களையும் கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்க வேண்டும்'' என்பதையும் நீதிபதி நிராகரித்து விட்டார். இத்தீர்ப்பின்படி, இது தற்செயலாக உணர்ச்சி வசப்பட்டு நடந்த கொலை  அவ்வளவுதான்.

            ""இத்தீர்ப்பை எதிர்த்து உடனே மேல்முறையீடு செய்யவேண்டும். 40 பேரும் தண்டிக்கப்பட வேண்டும். பொய்சாட்சி சொன்ன குற்றத்துக்காக தாசில்தாரும் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று தனது கருத்தை அரசு வழக்குரைஞர் என்ற முறையில் அரசுக்குத் தெரிவித்தார் திருமலைராசன். ஆனால், இதில் மேல்முறையீடு செய்ய எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று கூறி நிராகரித்துவிட்டது ஜெ. அரசு.

            ஆனால், தண்டிக்கப்பட்ட 17 கொலைக் குற்றவாளிகளும் உடனே மேல் முறையீடு செய்தனர். இதற்கெதிராக வாதாடவும் விடுவிக்கப்பட்ட 23 குற்றவாளிகளை தண்டிக்கவும் ஆந்திரத்தின் சிவில் உரிமை இயக்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான கே.ஜி.கண்ணபிரான் சிறப்பு அரசு வழக்குரைஞராக ஆஜராக முன்வந்தார். அவரை நியமிக்கவேண்டுமென முருகேசனின் அண்ணன் கருப்பையா கொடுத்த மனுவையும் ஜெ. அரசு நிராகரித்தது.

            26.7.2001 அன்று விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட மேலவளவு குற்றவாளிகளுக்கு ஒரே மாதத்தில் (27.8.2001) ஜாமீன் வழங்கியது உயர்நீதி மன்றம். பொதுவாக, கொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்ட யாருக்கும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக உயர்நீதி மன்றம் ஜாமீன் தருவதில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

            ""இந்த ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரி உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் 12 பேர் உச்சநீதி மன்றத்திற்கு மனுச் செய்தனர். ""இந்த மனுவைத் திரும்பப் பெறாவிட்டால் சென்னைக்கே வந்து உங்களைக் கொலை செய்வோம்'' என்று தங்களுடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்து மேலவளவிலிருந்து மிரட்டல் கடிதம் எழுதினர் சாதிவெறியர்கள். இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தரப்பட்ட புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 4 ஆண்டுகள் சுதந்திரப் பறவைகளாக மேலவளவில் சுற்றி வந்த கொலைகாரர்கள், 11.2.2005இல் தான் உச்சீநீதி மன்ற உத்தரவின்படி மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர். சென்னை உயர்நீதி மன்றத்தால் ""கவனக்குறைவு, துரதிருஷ்டம்'' என்று வருணிக்கப்பட்டுள்ள சம்பவங்களின் வரலாறு இதுதான்.

            இந்த நெடிய கடுமையான போராட்டத்தை உணர்வுபூர்வமாகவும் விடாப்பிடியாகவும் நடத்திவருகிறார் வழக்குரைஞர் இரத்தினம். ஆதிக்க சாதிகளை எதிர்த்துப் போராடும் வழக்குரைஞர்களின் பணி நீதிமன்றத்தோடு முடிந்து விடுவதில்லை. சாதிவெறியர்களால் ஒவ்வொரு கணமும் மிரட்டப்படும் தலித் மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதும், உயிருக்கு அஞ்சாமல் சாட்சி சொல்ல அவர்களுக்கு தைரியம் கொடுப்பதும் சாதாரணக் காரியங்களல்ல.

            மேலவளவுப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலைமறியல் நடத்திய சவுந்தரபாண்டியன் என்ற தலித், கள்ளர் சாதிவெறியர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருமாவளவனுடன் தமிழால் ஒன்றுபட்டிருக்கும் சேதுராமன், மேலவளவுக் கொலைகாரர்கள் 40 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று, 1000 கள்ளர் சாதிப் பெண்களைத் திரட்டிச் சென்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தை 1998இல் முற்றுகையிட்டார். இதே காலகட்டத்தில் பாப்பாபட்டிக்கு பஞ்சாயத்து பேசப்போன முதல்வர் ஓ.பன்னீர், சாதிவெறியர்களை நாற்காலியில் உட்காரவைத்து, தான் தரையிலமர்ந்து பேசிய காட்சியையும் வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

            தலித் மக்களுக்கு எதிராக நிற்பதில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்ற போதிலும், கடந்த 5 ஆண்டுகளில் சசிகலாவின் கள்ளர் சாதி ஆதிக்கக் கும்பல், மேலவளவுக் கொலைகாரர்களை விடுதலை செய்வதற்காக அரசு எந்திரத்தை ஆட்டி வைத்திருக்கிறது. சங்கராச்சாரிக்கு ஜாமீன மறுப்பதற்காக டெல்லியிலிருந்து வழக்குரைஞர் துளசி, சாலைப் பணியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டுமென்ற உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் அப்பீல்; ஆனால், அப்பீல் செய்ய வேண்டுமென்ற வழக்குரைஞர் திருமலைராசனின் சிபாரிசுக்கும், கண்ணபிரானை நியமிப்பதற்கும் மறுப்பு.

            தலித் மக்களின் தன்னிகரில்லாத தலைவர்களாகத் தம்மைச் சித்தரித்துக் கொள்ளும் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் இவ்வழக்கு தொடர்பாக எதுவும் செய்யவில்லை. ""மேலவளவு தியாகிகளுக்கு மண்டபம் கட்டி நினைவுநாள் கொண்டாடுவதோடு சரி, நிராதரவாக நிற்கும் அந்த மக்களுக்குத் தைரியம் சொல்லி அவர்களைச் சாட்சிகளாக அழைத்து வருவதற்குக் கூட எந்த உதவியும் செய்யவில்லை'' என்கிறார் இரத்தினம். உதவி செய்யாதது இருக்கட்டும், ""ஜெயாவின் ஆட்சியில்தான் தமிழகம் சாதிக்கலவரங்கள் இல்லாத அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது'' என்று குறிஞ்சாக்குளம் புகழ் வைகோவுடன் இணைந்து புரட்சித்தலைவிக்குப் பாராட்டுப் பத்திரம் படித்துக் கொண்டிருக்கிறார் திருமா.

            ""திருமாவின் கட்சிக்காரர்களோ, திண்ணியத்தில் மலத்தைத் திணித்த சாதிவெறியனின் வீட்டில் உட்கார்ந்து சோறு தின்று, அவனிடம் நன்கொடையும் வாங்கிக் கொண்டு சாட்சிகளைக் கலைத்துவிடுவதாக அந்த கிரிமினலுக்கு தைரியமும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்'' என்று தனது குமுறலை வெளியிடுகிறார் இரத்தினம். பொறுக்க முடியாமல் இந்த உண்மைகளை வெளியில் சொன்னவுடன் "சாதிப்புத்தியைக் காட்டிவிட்டதாக' வழக்குரைஞர் இரத்தினத்தின் மீது சேறு பூசுகிறார்கள் சிறுத்தைகள்.

            இது தனிப்பட்ட தலைவர்கள் அல்லது தொண்டர்களின் அரசியல் ஒழுக்கம் குறித்த பிரச்சினை அல்ல; ஓட்டுப் பொறுக்கி அரசியலிலிருந்து பிறந்து வரும் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் தான் இவர்களைச் சாதிவெறியர்களோடு சமரசம் செய்து கொள்ளத் தூண்டுகிறது; கொலைகாரர்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்து நண்பர்களை அவதூறு செய்யும் கேவலமான நிலைக்கு இவர்களைத் தாழ்த்துகிறது.

            மேலவளவு முருகேசனும் அவருடன் 6 பேரும் கொலை செய்யப்படக் காரணம் அவர்கள் தலித்துகள் என்பது மட்டுமல்ல; சுயமரியாதையுள்ள தலித்துகள் என்பதனால்தான் அவர்கள் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். ""தமிழகத்தில் தீண்டாமைக் குற்றத்துக்காகத் தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு மேலவளவுதான்'' என்று கூறுகிறார் திருமலைராசன். இந்த உண்மை ஒருபுறமிருக்க, நீதிமன்றம் உள்ளிட்ட இந்த அரசமைப்பின் மூலம் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதற்கும் மேலவளவு வழக்கின் வரலாறு சாட்சி கூறுகிறது. தனது உயிர்த்தியாகத்தின் மூலம் இந்த உண்மையை உறுதி செய்திருக்கிறார் முருகேசன்.

            இது பொய் என்றால், தலித் மக்களுக்கு அரசதிகாரத்தில் பங்கு வாங்கப் போவதாக கூறும் திருமாவளவன், ஜெயலலிதாவிடமிருந்து தேர்தலுக்கு முன் ஒரேயொரு வாக்குறுதியை மட்டும் நமக்கு வாங்கித் தரட்டும். கருணாநிதியின் 2 ரூபாய் அரிசிக்கு போட்டியாக இலவச அரிசியை அறிவித்த அன்புச் சகோதரி, ""மேலவளவு கொலைகாரர்கள் 20 பேரின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்'' என்ற செலவில்லாத இலவச வாக்குறுதியை ஒரேயொருமுறை அறிவிப்பாரா? திருமாவளவன் முயன்று பார்க்கட்டும்.

மு மணி

            நீதிபதிகள் பி.சதாசிவம், என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, கொலைகாரர்கள் 23 பேரைத் தப்பவைக்க ஜெயலலிதா அரசும் விசாரணை நீதிமன்றமும் துணை நின்றிருப்பதையும் அம்பலமாக்கியுள்ளது.