Language Selection

புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

05_2006.jpg

 "வெற்றி! மகத்தான வெற்றி! நேற்றுவரை மன்னரின் தயவில் மக்கள்; இன்று எங்கள் தயவில்தான் மன்னர்!'' என்று எக்காளமிட்டு நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலுள்ள நாராயணன்ஹிதி அரண்மனை வாயிலருகே தர்பார் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்ட வெற்றியை குதூகலத்துடன் கொண்டாடினர். ""இனி இந்த அரண்மனை மன்னரது சொர்க்கபுரி அல்ல;

 இதை மக்கள் மன்றம் என்று அறிவிப்போம்! இந்த அரண்மனையில் நாங்கள் பதவியேற்பு விழா நடத்துவோம்! மக்கள் குடியரசு நீடுழி வாழ்க என்று முழங்குவோம்!'' என்று ஆர்ப்பரித்தனர் இளைஞர்கள்.

 

            கடந்த ஏப்ரல் 25ஆம் தேதியன்று அரண்மனை நெடுஞ்சாலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். புத்தாடை அணிந்து குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாகத் திரண்டு ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் தாங்கள் அடைந்த முதற்கட்ட வெற்றியைத் திருவிழாவைப் போலக் கொண்டாடினர்.

 

            ஏறத்தாழ இரண்டேகால் கோடி மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறு ஏழை நாடான நேபாளத்தில் அண்மையில் நடந்த மக்கள் திரள் எழுச்சியானது, அந்நாட்டின் வரலாற்றில் புரட்சிகரமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. 1950இல் ஆட்சிக்கு வந்த அன்றைய நேபாள மன்னர், அரசியல் நிர்ணய சபையை நிறுவி மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்து ஏய்த்தார். 1990 வரை பல வகையான மோசடிகள்  பித்தலாட்டங்கள், அடக்குமுறைகள் மூலம் நேபாளத்தின் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகள் மன்னராட்சியைத் தக்க வைத்துக் கொண்டன. 1990களில் ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் வெடித்தெழுந்தபோது, சில சில்லரை சீர்திருத்தங்கள் வழங்கப்பட்டனவே தவிர, அரசியல் நிர்ணயசபை தேர்ந்தெடுக்கப்படவில்லை. பெயரளவிலான நாடாளுமன்றமும், நாடாளுமன்றத்தை விஞ்சிய வரம்பற்ற அதிகாரத்தை மன்னருக்கு வழங்குவதாகவே நேபாள அரசியல் சட்டம் அமைந்திருந்தது.

 

            மன்னராட்சிக் கொடுங்கோன்மையும் நேபாள அரசியல் கட்சிகளின் துரோகமும் சமரசமும் தொடர்ந்த நிலையில் 1996இல் கம்யூனிசப் புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள் மன்னராட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை அறிவித்தனர். மாவோயிஸ்டுகள் போராட்டம் காட்டுத் தீயாகப் பற் றிப் படர்ந்து முன்னேறத் தொடங்கியதும், மாவோயிஸ்டுகளை ஒடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைத்து வரம்பற்ற அதிகாரத்தைக் கையிலேந்தி இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது மன்னர் ஞானேந்திரா கும்பல். அடுத்தடுத்து நான்கு பிரதமர்கள் பதவியிலிருந்து விரட்டப்பட்டு, நாடாளுமன்றம் கேலிக் கூத்தாகியது.

 

            மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிரான மாவோயிஸ்டுகளின் போராட்டம் விரிவடைந்து, ஆகப் பெரும்பான்மையான பகுதிகள் அவர்களின் செல்வாக்கின் கீழ் வந்தன.  கம்யூனிச அபாயத்தை முறியடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் ஆயுத உதவி  பயிற்சிகள் கொடுத்து மன்னராட்சியை முட்டுக் கொடுத்து ஆதரித்தன. ஆனாலும், இற்று விழுந்து கொண்டிருக்கும் மன்னராட்சியை தூக்கி நிறுத்த முடியவில்லை. உள்நாட்டுப் போருக்கான அபாயம் நிலவுவதாகக் கூறி, இன்னும் 3 ஆண்டுகளுக்கு மன்னராட்சி அமல் செய்யப்படுவதாக அறிவித்து, அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து, தொலைபேசி  இணையத் தொடர்புகளைத் துண்டித்து, பத்திரிகைகள்  வானொலி  தொலைக்காட்சிகளை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து, இராணுவமுடியாட்சிக் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்து விட்டது ஞானேந்திரா கும்பல்.

 

            அதற்குப் பிறகும் மாவோயிஸ்டுகளால் தொடங்கி வைக்கப்பட்ட புரட்சியைத் தடுக்க முடியவில்லை. மாவோயிஸ்டுகளின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றக் கட்சிகளின் அணிகளே தமது தலைமையை நிர்பந்திக்கத் தொடங்கியதும், வேறு வழியின்றி ஏழு நாடாளுமன்றக் கட்சிகள் இணைந்து மன்னராட்சிக் கொடுங்கோன்மையை வீழ்த்த, கடந்த ஆண்டு நவம்பரில் மாவோயிஸ்டுகளுடன் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்தன. மன்னராட்சியை வீழ்த்துவது, புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற மையமான கோரிக்கைகளுடன் முன்னேறிய போராட்டம், கடந்த ஏப்ரல் முதலாக நாடு தழுவிய மக்கள் பேரெழுச்சியாக வெடித்தெழுந்தது.

 

            மக்கள் போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதும், அது நாடு முழுவதும் காட்டுத் தீயாகப் பரவத் தொடங்கியதும், அடக்குமுறைகளைத் துச்சமாக மதித்து அது தீர்மானகரமான முடிவோடு முன்னேறத் தொடங்கியதும், வேறு வழியின்றி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதாகவும், சிறையிடப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்வதாகவும் மன்னர் அறிவித்துள்ளார். மன்னராட்சிக்கு எதிராகப் போராடி வரும் ஏழு கட்சிகளின் கூட்டணி இதை வரவேற்று, போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், நேபாள காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவரான கொய்ராலாவை ஏகமனதாக பிரதமராகத் தேர்வு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளன.

 

            ஆனால் கம்யூனிசப் புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள், அதிகாரமில்லாத நாடாளுமன்றம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதை நிராகரிப்பதாக அறிவித்து, மக்கள் இயக்கத்துக்குத் துரோகமிழைத்து மன்னராட்சியின் சதிவலையில் ஏழு கட்சிகளின் கூட்டணி வீழ்ந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தம்மைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இக்கூட்டணி, மன்னரது முடிவை ஆதரிப்பதானது, ஐக்கிய முன்னணியின் ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்றும், அரசியல் நிர்ணய சபைக்கான நிபந்தனையற்ற தேர்தல் அறிவிக்கப்படும்வரை தமது போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

 

            நாடாளுமன்றத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலம் மக்கள் எழுச்சியைச் சாந்தப்படுத்தி, ஏழு கட்சி கூட்டணியை நைச்சியமாக விலைபேசி, மாவோயிஸ்டுகளுக்கும் இக்கூட்டணிக் கட்சிகளுக்குமிடையிலான ஐக்கிய முன்னணியைத் தகர்த்து, இற்று விழுந்து கொண்டிருக்கும் மன்னராட்சியைத் தக்க வைக்கலாம் என்பது மன்னர் ஞானேந்திரா போடும் கணக்கு. சட்டவாத மன்னராட்சி, அதிகாரமில்லாத நாடாளுமன்றம் என்கிற இரட்டை குதிரைகளில் நேபாளம் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறது இந்தியா. எனவேதான், மன்னரது இராணுவம் போராடும் மக்களைச் சுட்டுக் கொண்டிருக்கும்போது, தனது பொருள் பொதிந்த மவுனத்தின் மூலம் மன்னராட்சிக்கு முட்டுக் கொடுத்து ஆதரித்துவந்த இந்தியா, இப்போது காற்று திசைமாறி வீசத் தொடங்கியதும், நேபாள மக்களின் போராட்டத்தை உச்சிமுகர்ந்து, நாடாளுமன்றம் மீண்டும் நடைமுறைக்கு வருவதை ஆதரித்து "ஜனநாயக' நாடகமாடுகிறது. அதேநேரத்தில், அரசியல் நிர்ணய சபை நிறுவுவதைப் பற்றி வாய்திறக்க மறுக்கிறது.

 

            ஈராக்கை ஆக்கிரமித்து நரவேட்டையாடிவரும் அமெரிக்கா, கௌரவப் பதவியுடன் மன்னரை ஒதுங்கிக் கொள்ளுமாறும் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிறுவுமாறும் உபதேசித்து ஜனநாயக அரிதாரம் பூசிக் கொள்கிறது. அண்டை நாடான சீனா, அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட மன்னர் ஞானேந்திரா எடுத்துள்ள நேர்மறையான முயற்சியை வரவேற்கிறது.

 

            ஆனால், இச்சதிகாரர்கள் போடும் தப்புக் கணக்கு ஒருக்காலும் வெற்றி பெற முடியாது. ஏனெனில், வரலாற்றைப் படைக்கும் உந்துசக்தியான நேபாள மக்கள் வரலாற்றின் சக்கரத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லத் தயாராக இல்லை. மாவோயிஸ்டுகளின் ""அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து!'' என்ற முழக்கம் இப்போது மக்கள் முழக்கமாக எங்கும் எதிரொலிக்கிறது. ஏழு கட்சி கூட்டணியினர் தேர்வு செய்துள்ள கொய்ரலா வீட்டு முன்பு, ""தலைவர்களே, எச்சரிக்கை! எங்களு க்கு அரசியல் நிர்ணய சபைதான் வேண்டும்! துரோகம் வேண்டாம்!'' என்று எழுதப்பட்ட பதாகையை போராடும் நேபாள மக்கள் கட்டி வைத்துள்ளனர்.

 

            போராட்டத்தின் முதற்கட்ட வெற்றிவிழா கூட்டங்களில் உரையாற்றும் ஜனநாயகத்துக்கான இயக்கத்தின் முன்னணியாளர்கள், ""அரசியல் கட்சிகள் எங்களை வஞ்சித்தால், மன்னராட்சியோடு சேர்த்து அவற்றையும் குப்பைத் தொட்டியில் வீசியெறிவோம்! அரசியல் கட்சிகளே, எச்சரிக்கை! துரோகமிழைத்தால் உங்களைத் தூக்கில் தொங்க விடுவோம்!'' என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப் போடும் சடங்கு அல்ல; அது மக்கள் தமது கரங்களில் ஏந்திச் சுழற்றும் அதிகாரமாக மாறவேண்டும் என்ற வேட்கைதான் நேபாள மக்களின் நெஞ்சங்களில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

 

            இந்தப் புரட்சிப் பேரலையைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில், ""நாடாளுமன்றம் கூடியதும் முதல் நிகழ்ச்சி நிரலாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் பற்றி விவாதித்து முடிவு செய்வோம்'' என்று ஏழு கட்சி கூட்டணியினர் உறுதியளித்துள்ளனர். ஆனால், கடந்த நவம்பர் வரை ""மாவோயிச பேரபாயத்திலிருந்து நாட்டைக் காப்போம்'' என்று மன்னராட்சிக் கொடுமையையும் மாவோயிஸ்டுகளின் புரட்சிகரப் போராட்டங்களையும் சமமாகச் சித்தரித்து வந்த ஏழு கட்சி கூட்டணியினர், வாக்குறுதி அளித்தபடி அரசியல் நிர்ணய சபையை நிறுவுவார்களா அல்லது மன்னரது சூழ்ச்சிகளுக்குப் பலியாகி துரோகமிழைப்பார்களா என்று உறுதியாகக் கூற இயலாது. நிபந்தனையற்ற முறையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை அக்கூட்டணி நடத்த முன்வந்தாலும், அதை அமெரிக்க வல்லரசும் நேபாளத்தின் அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் அங்கீகரிக்குமா, ஒரு சிவப்பு புரட்சியை  எவரெஸ்ட் சிகரத்தின் மீது செங்கொடி பட்டொளி வீசிப் பறப்பதை அனுமதிக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை. நேபாள மக்களின் புரட்சியை நசுக்க எதிரிகளும் துரோகிகளும் எதையும் செய்வார்கள்.

 

            முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் கம்யூனிசத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டம் நடந்தபோது, அவற்றை "ஜனநாயகத்துக்கான எழுச்சி' என்று ஓடோடிச் சென்று வரவேற்று ஆதரித்த ஏகாதிபத்தியங்கள், நேபாள மக்கள் இராணுவ அடக்குமுறையை எதிர்த்து ஜனநாயகத்துக்காக 18 நாட்களாக வீதிகளில் போராடியபோது கைகட்டி நின்றன. மன்னராட்சியை தூக்கி நிறுத்த அதிநவீன போர்த் தளவாடங்களைக் கொண்டு வந்து குவித்தன. ஆனால், எந்தவொரு ஏகாதிபத்திய நாட்டின் ஆதரவு இல்லாமல், அண்டை நாடுகளின் தார்மீக ஆதரவு கூட இல்லாமல் தமது சொந்தக் காலில் நின்று தன்னந்தனியே போராடி முதற்கட்ட வெற்றியைச் சாதித்துள்ளார்கள் நேபாள மக்கள். அம்மக்களின் புரட்சிப் போரை ஆதரித்து இமயத்தின் உச்சியில் உயரும் செங்கொடி தாழாமல் தாங்கிப் பிடித்து நிறுத்த வேண்டியது உலகெங்குமுள்ள புரட்சிகர  ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை.

 

மு குமார்