Language Selection

புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

06_2006.jpg

இந்தியாவின் அறிவிக்கப்படாத காலனியாக உள்ள காசுமீரில் இப்போது வெடித்துக் கிளம்பியுள்ள விபச்சார பூகம்பம், "தேசபக்தி'யின் பெயரால் நடக்கும் காமவெறி பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டிவிட்டது.

 

            கடந்த மார்ச் மாத மத்தியில் சிறீநகரின் கர்ஃபாலி மொஹல்லா பகுதியைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி யாஸ்மீனாவின் நீலப்பட சி.டி. இப்பகுதியில் புழங்குவதாகக் கூறி,

 அப்பகுதியைச் சேர்ந்த சில பெரியவர்கள் போலீசு நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரினர். போலீசார் அந்த இளம் பெண்ணையும் அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்து போது, சபீனாபேகம் என்ற பெண் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போதை மருந்து கொடுத்து நிர்வாணப் படம் எடுத்து, அதைக் காட்டி மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி நீலப்படம் எடுத்ததாகவும், உயர் போலீசு  இராணுவ அதிகாரிகளுக்கு தான் இரையாக்கப்பட்டதையும், வெளியே சொன்னால் சுட்டுக் கொன்றுவிட்டு தீவிரவாதிகள் கொன்றதாகக் கதை கட்டி விடுவோம் என்று அச்சுறுத்தியதாகவும், தன்னைப் போல் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் இப்பயங்கரவாத கும்பலிடம் சிக்கித் தவிப்பதாகவும் யாஸ்மீனா வேதனையுடன் கூறியுள்ளார். இந்த விபச்சார கும்பலின் வாடிக்கையாளர்களாக உள்ள அமைச்சர்கள், அரசியல்வாதிகள், போலீசு இராணுவ உயரதிகாரிகளின் பட்டியலையும் அவர் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார்.

 

            அதிர்ச்சியில் உறைந்து போன போலீசார், முதலமைச்சர் குலாம்நபி ஆசாத்துக்குத் தகவல்களைத் தெரியப்படுத்திவிட்டு உளவுத்துறை போலீசாரைக் கொண்டு விசாரணையில் இறங்கினர். சபீனாபேகம் ஒரு விபச்சார தாதா என்பது ஏற்கெனவே போலீசாருக்குத் தெரியும். இப்போது மீண்டும் சபீனா விவகாரம் வெடித்ததும், வேறு வழியின்றி இதில் சம்பந்தப்பட்ட இரு போலீசு கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து விட்டு, உளவுத்துறை போலீசார் சபீனாவின் விபச்சார மாளிகையில் ரெய்டு நடத்தி பல இளம்பெண்களை மீட்டனர். அதைத் தொடர்ந்து ஏப்ரல் இறுதியில் சபீனாவும் அவரது தொழில் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். வழக்கம் போலவே இந்த விவகாரத்தை மூடிமறைத்துவிட உயர் போலீசு அதிகாரிகள் எத்தனித்த சூழலில், சிறீநகர மக்கள் ஆவேசமாகப் போராட்டத்தில் குதித்தனர். மே 5ஆம் தேதியன்று சிறீநகர் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை நடத்திய மக்கள், ஹப்பா கடால் பகுதியிலுள்ள சபீனாவின் நான்குமாடி வீட்டை அடித்து நொறுக்கி அங்கிருந்த பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். வீதிகளில் திரண்டு போராடிய மக்கள் மீது தண்ணீரைப் பீச்சியடித்தும் தடியடி நடத்தியும் போலீசார் விரட்டத் தொடங்கியதும், ஆத்திரமடைந்த மக்கள் போலீசார் மீது கல்லெறிந்து தொடர்ந்து போராடினர். சிறீநகரில் தொடங்கிய போராட்டம் காசுமீர் முழுவதும் பற்றிப் பரவத் தொடங்கியதம், மாநில உயர்நீதி மன்றம் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டு, மையப் புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைத்துள்ளது.

 

            இது ஏதோ காசுமீரில் மட்டும் நடந்த விவகாரமல்ல; தமிகத்தில் "ஆட்டோ' சங்கர், அதன் பின்னர் கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் என்று நாடு தழுவிய அளவில் விபச்சார கிரிமினல் குற்றக் கும்பல்களின் அட்டூழியங்கள் அடுத்தடுத்து வெளிவந்து நாறிப் போயுள்ளது. இவை எல்லாவற்றிலுமே அரசுயர் அதிகாரிகள், போலீசு அதிகாரிகள், சர்வ கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இருப்பினும் காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் இதுபோன்ற அட்டூழியங்கள் தேசபக்தி, தேசிய பாதுகாப்பு, தேச நலன், தேச ஒற்றுமை என்ற பெயரால் திட்டமிட்டே மூடிமறைக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதத்தை முறியடிப்பது, பயங்கரவாதத்தை முறியடிப்பது, எல்லைப் பாதுகாப்பு என்ற போர்வையில் இம்மாநிலங்களில் இந்திய இராணுவமும், போலீசும் நடத்திவரும் காமவெறி  கொலைவெறியாட்டங்கள் தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றன. மெதுவாகக் கசிந்து அம்பலமானாலும், "தேசநலன்' கருதி "தேசிய' பத்திரிகைகள் இவற்றை இருட்டடிப்பு செய்து விடுகின்றன.

 

            வீரப்பனைப் பிடிப்பது என்ற பெயரில் அதிரடிப்படையின் காமவெறி  கொலை வெறியாட்டங்கள் மூடிமறைக்கப்பட்டது போலவே நாடெங்கும் நடக்கும் போலீசு  இராணுவத்தின் அட்டூழியங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. மணிப்பூரில் இந்திய இராணுவத்தின் காமவெறி பயங்கரவாதம் மூடி மறைக்கப்பட்ட நிலையில் மணிப்பூர் தாய்மார்கள் இராணுவத் தலைமையகம் எதிரே நிர்வாணமாகப் போராடியபோதுதான், உண்மைகள் மெதுவாக வெளிவரத் தொடங்கின. ஆனாலும் இன்றுவரை அக்காமவெறி பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

               இந்திய இராணுவமும் போலீசும் தமது காமவெறி அட்டூழியங்களை மறைக்கப் பயன்படுத்தும் ஆணுறைதான் தேசபக்தி. போர்த்திக் கொள்ளும் போர்வைதான் தீவிரவாத  பயங்கரவாத எதிர்ப்பு. எங்கெல்லாம் தீவிரவாதம்  பயங்கரவாதம் என்ற பெயரில் இராணுவமும் போலீசும் நுழைகிறதோ, அங்கெல்லாம் காமவெறி பயங்கரவாத அட்டூழியங்களும் விபச்சார கிரிமினல் கும்பல்களின் அட்டகாசங்களும் தலைவிரித்தாடுகின்றன. நேற்று மணிப்பூர், இன்று காசுமீர் என்று தேசபக்தியின் பெயரால் அரசு பயங்கரவாத வெறியாட்டங்கள் தொடர்கின்றன.

 

மு குமார்