பெட்ரோல் டீசல் விலையேற்றத்தின் மூலம் மக்கள் மீது மிகப்பெரும் பொருளாதாரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ள காங்கிரசு கூட்டணி அரசை எதிர்த்து, 17.6.06 அன்று மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு. பொருளாளர் தோழர்
விஜயகுமார், உள்நாட்டு பெட்ரோல் வளங்கள் ரிலையன்ஸ அம்பானி குடும்பத்துக்குத் தாரை வார்க்கப்பட்டு அக்குடும்பம் ஆண்டுக்கு ரூ. 4000 கோடிக்கு மேல் கொள்ளை லாபமடிப்பதையும், இறக்குமதி பெட்ரோல் மீது ஏறத்தாழ 57மூ அளவுக்கு தீர்வை வரிகளை விதித்து ஆசியாவிலேயே மிகப் பெரிய கொள்ளை நிறுவனமாக இந்திய அரசு இருப்பதையும், உலகச் சந்தையுடன் இந்தியச் சந்தையை இணைத்து அதனால் ஏற்படும் சுமைகளை மக்கள் மீது திணிப்பதையும், சேவைத்துறையாகிய அரசு எண்ணெய் நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி வருவதையும், இவை மறுகாலனியாதிக்கத்தின் கொடிய தாக்குதல் என்பதைப் புள்ளிவிவர ஆதாரங்களோடு விளக்கினார்.
உடனடி பொருளாதார நலன் என்ற வரம்போடு இதர ஓட்டுக் கட்சிகள் பெட்ரோல் விலையேற்றத்துக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திய சூழலில், உலகமயத்தால் ஏற்பட்டுள்ள கோரவிளைவையும் மறுகாலனிய தாக்குதலையும் எதிர்த்து விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப் பாட்டமும், இதர நாடுகளின் பெட்ரோல் விலையை ஒப்பிட்டு பட்டியலிட்டுக் காட்டிய துண்டுப் பிரசுரமும் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.
பு.ஜ. செய்தியாளர்கள்