இந்து மதவெறியர்கள் எங்கெல்லாம் காலூன்றத் திட்டமிடுகிறார்களோ அங்குள்ள சிறுபான்மையினரை வம்புக்கிழுத்துத் தகராறை உருவாக்குவதற்காகப் பல உத்திகளைக் கையாளுகின்றனர். உள்ளூர் மசூதியில் வம்படியாகக் காவிக்கொடி ஏற்றுவது, பாகிஸ்தான் கொடியை பள்ளிவாசலில் ஏற்றி உள்ளனர் என்று வதந்தியைப் பரப்புவது, பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் வெற்றி பெறும்போது இங்குள்ள முசுலீம்கள் வெடி வெடிக்கிறார்கள் என்று புரளி கிளப்புவது இப்படிப் பல உத்திகளைக் கையாண்டு மக்களை மதரீதியில் பிளந்து கலவரத்தின் மூலம் வேரூன்றுவது என்பதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.


இவர்களின் சதிச்செயல்களில் ஒன்றுதான், "இந்துக்கள் தெய்வமாக வணங்கும் கோமாதாவை (!) முசுலீம்கள் உயிரோடு தோலை உரித்துக் கொல்கின்றனர்' என்று வதந்தியைப் பரப்பி இந்துக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி, கலவரத்தை உருவாக்குவது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகத்தில், கோமாதா கொல்லப்படுவதாக பொய்ப் பிரச்சாரத்தை இந்துவெறியர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.


கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி, கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டம், சாந்திபுரா பகுதியில், ஒரு பசு மாட்டைக் கொன்றதற்காக பஜ்ரங் தள் வெறியர்கள் ஜெயராம் என்ற ஒரு தலித்தையும், இரண்டு முசுலீம்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். 500 பேர் முன்னிலையில் சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை அடித்துப் படுகாயப்படுத்தியதுடன், அவர்களை நிர்வாணப்படுத்தி, மாட்டிறைச்சியைத் தலையில் வைத்து ஊர்வலமாக இழுத்து வந்துள்ளனர்.


சாந்திபுராவில் இருக்கும் முசுலீம் பெரியவர் குனியமுடு, தனது வீட்டு விழாவொன்றில் மாட்டிறைச்சி விருந்து பரிமாறுவதற்காக ஒரு பசுவை விலைக்கு வாங்கியுள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவரையும் அவரது வீட்டில் அப்போதிருந்த மற்ற இருவரையும் பிடித்து இழுத்து வந்து தாக்கியவர்கள் யாரோ முன்பின் தெரியாத நபர்கள் அல்லர். குனியமுடுவிடம் பலகாலம் நட்புடன் இருந்த அவரது பக்கத்து வீட்டுக்காரரின் பேரனும், தற்போது பஜ்ரங் தளத்தின் தலைவராக இருப்பவனுமான சுந்தரேச கௌடாதான். தாக்கப்பட்டவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவர். இந்துவெறியர்கள் ஜெயராம் மீது கடுமையான கோபத்துடன் ""ஒட்டுமொத்த இந்துக்களின் துரோகி'' எனச் சொல்லிச் சொல்லி அடித்துள்ளனர்.


இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து, முதிகெரே என்ற பக்கத்து ஊரிலுள்ள ஓர் உணவு விடுதியில் மாட்டிறைச்சி பரிமாறியதற்காக அதன் முதலாளியை பஜ்ரங் தளைச் சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர். அதற்கு இரண்டு நாள் கழித்து ஹெலன் மேரி என்ற பள்ளித் தலைமையாசிரியரை, மதம் மாற்ற முயற்சித்ததாகக் கூறித் தாக்கியுள்ளனர். தேர்தல் தேதி நெருங்க நெருங்க, சாதாரண விசயங்களைக் கூட ஊதிப் பெரிதாக்கி அதற்கு மதச்சாயம் பூசி மக்களை மோதவிடுவது கர்நாடகத்தில் வாடிக்கையாகி வருகிறது.


இதே பசுமாட்டு விவகாரத்தை வைத்துத்தான் கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மங்களூர், பரங்கிப்பேட்டை, உல்லால் போன்ற நகரங்களில் முசுலீம்களுக்கெதிராக தாக்குதல்களை நடத்தினர்.


பசுமாட்டைக் கொன்றதற்காக தலித்துகளைத் தாக்குவதும், கொல்வதும் இது முதல்முறையன்று. சில வருடங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் இறந்து போன பசுத்தோலை உரித்ததற்காக 5 தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டனர். அப்போது பேட்டியளித்த விசுவ இந்து பரிசத்தின் துணைத்தலைவர் கிரிராஜ் கிஷோர், "ஒரு பசுவின் உயிரைவிட 5 தலித்துகளின் உயிர் பெரிதில்லை' என்று திமிராகக் கூறினார்.


"பசுவைக் கொல்லக் கூடாது' எனக் கட்டளையிடும் இந்துவெறியர்கள், அமெரிக்காவிற்குப் பிழைக்கச் சென்ற தங்களது வாரிசுகள், அங்கே தினசரி கோமாதா கறி தின்பதற்கு வருந்துவதொன்றுமில்லை. மாடுகளை வெட்டிக் கொன்று அவற்றின் தோல்களைப் பதனிடும் தொழிலை நடத்துபவர்களிடம் நன்கொடை வாங்கிக் கொள்ளவும் இவர்கள் கூச்சப்படுவதில்லை.


பசுமாட்டைத் தெய்வமாக வணங்குவது பார்ப்பனிய மதத்தில் மட்டும்தான் வழக்கமாக உள்ளது. பார்ப்பனியத்தின் நம்பிக்கையை பிற மக்கள் மீதும் இவ்வாறு வன்முறைத் தாக்குதல்கள் மூலம் திணித்து முசுலீம்கள், தலித்துகளின் உணவுப் பழக்கத்தையே குற்றச்செயல் என்ற கருத்தை உருவாக்கி வருகின்றனர். ஒரு மனிதன் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்பதை முடிவு செய்வதைக் கூட இந்து பாசிஸ்டுகள் தீர்மானிக்கும் நிலை உருவாகிறது. சிக்மகளூர் பகுதியில் மாட்டுத் தோலை உரிப்பதைத் தொழிலாகச் செய்துவரும் ஆயிரக்கணக்கான தலித்களும், முசுலீம்களும், பிழைப்பதற்கு இனி என்ன செய்ய முடியும்?


கர்நாடகத்தில் சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் எதிராக இந்துவெறியர்கள் தாக்குதல் நடத்துவதை அம்மாநிலத்திலிருக்கும் எந்த ஓட்டுக் கட்சியும் கண்டிக்க முன்வரவில்லை. பெயரிலே மதச்சார்பின்மையைக் கொண்டிருக்கும் ஜனதா தளமாகட்டும், இந்திய அளவில் மதவெறிக்கு மாற்றாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் காங்கிரசாகட்டும் இத்தாக்குதல்களை மவுனமாக ஆதரிப்பதன் மூலம் இந்துவெறி ஓட்டுக்களைப் பொறுக்கி, மதவெறியில் குளிர்காயவே காத்துக் கிடக்கின்றன.

 

· அழகு