Language Selection

புதிய ஜனநாயகம் 2008

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த விலைவாசி உயர்வு, இப்பொழுது எரிமலையைப் போல வெடித்திருக்கிறது. அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய், பால் போன்ற உணவுப் பொருட்கள் தொடங்கி, இரும்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இந்தியா மட்டுமின்றி, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த அனைத்து ஏழை நாடுகளும் இவ்விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

 

சென்னையைச் சேர்ந்த சுமதி, மூன்றுநான்கு வீடுகளில் வேலை பார்ப்பதன் மூலம் மாதம் ரூ. 3,000 வரை கூலி பெறுகிறார். ""தனது மாதாந்திர வருமானம் உயராதபொழுது, விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டே செல்வதாக''க் கவலைப்படும் சுமதி, ""இவ்விலை உயர்வைச் சமாளிக்கத் தனது குடும்பத்தின் உணவுத் தேவைகளைச் சுருங்கிக் கொண்டதாக''க் கூறுகிறார்.


வங்காள தேசத்தில், ஒரு கூலித் தொழிலாளி உணவுக்காக இரண்டு கிலோ அரிசி வாங்க வேண்டும் என்றால், தனது தினக்கூலியில் சரிபாதியை அரிசிக்கு மட்டுமே ஒதுக்க வேண்டிய அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது.


ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள ஏழைநாடான ஏமனில், ஒரு ""லோஃப்'' ரொட்டியின் விலை, தொழிலாளர்களின் தினக்கூலியில் கால் பாகத்தை முழுங்கி விடுகிறது.


இந்த விலை உயர்வினால், பல்வேறு ஏழை நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவார்கள் என உலக வங்கியே எச்சரித்திருக்கிறது.


எனினும் மன்மோகன் சிங்ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை விலைவாசி உயர்வு என்பது ஒரு பிரச்சினையே அல்ல. ""பொருளாதார வளர்ச்சி இருக்கும்பொழுது, விலைவாசி உயரத்தான் செய்யும்'' என்ற பொருளாதார சூத்திரத்தைக் கூறி அவர்கள் இக்கொள்ளைநோயை நியாயப்படுத்தியும் வருகிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என அவர்களும், தரகு முதலாளிகளும் பீதியூட்டுகிறார்கள். மேலும், ""மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகி, அவர்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பதால்தான், (அதிக கிராக்கி, குறைந்த வரத்து என்ற அடிப்படையில்) அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வதாக''க் கூறி, பழியை மக்களின் தலையில் சுமத்துகிறார்கள். விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், ""தென்னிந்திய மக்கள் அதிகமாக சப்பாத்தி சாப்பிடத் தொடங்கியதையடுத்துதான், கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக''க் கூறியிருக்கிறார்.


அமைப்பு சாராத் தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைகளைப் பற்றி ஆராய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா கமிட்டி, ""77 சதவீத இந்தியக் குடும்பங்கள், நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான கூலியைக் கொண்டே பிழைப்பதாக''த் தெரிவித்திருக்கிறது. இந்த இருபது ரூபாய், ஒரு குடும்பத்தின் ஒருநாள் உணவுத் தேவையைக் கூட ஈடுகட்டப் போதாது என்பதை நிரூபிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் நடத்த வேண்டிய அவசியமில்லை.


இந்தியாவில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சரிபாதி குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல் சவலைக் குழந்தைகளாக இருப்பதாக இன்னொரு புள்ளி விவரம் கூறுகிறது.


இந்த உண்மைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, இந்திய மக்கள் அனைவரும் புளித்த ஏப்பக்காரனைப் போல வாழ்வதாகவும், தாராளமான பணப்புழக்கத்தால் நுகர்பொருள் மோகம் கொண்டு அலைவதாகவும் சித்தரிப்பது, மன்மோகன் சிங் கும்பலின் அயோக்கியத்தனத்தையும், மேட்டுக்குடி வக்கிரத்தையும் தான் வெளிப்படுத்துகிறது.


""சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால், விலைவாசி உயர்வு சுமையாக இருக்காது'' என்றொரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், தமிழக முதல்வர் மு.க. ஆனால், முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களோ, ""வாங்கும் சக்தி அதிகரித்தால், அதற்கேற்ப விலைவாசியும் உயர்ந்துவிடும்'' எனப் பீதியூட்டுகிறார்கள். "கொழுத்த சம்பளம்' தரும் ""பி.பி.ஓ.'' நிறுவனங்கள் பெருத்தபிறகுதான், சென்னையில் நடுத்தர வர்க்கத்தினரைக்கூடப் பதம் பார்க்கும் அளவிற்கு வீட்டு வாடகை எகிறிப் பாய்ந்தது என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.


பொருட்கள் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்றால், தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க வேண்டும் என்பதுதான் தனியார்மயத்தின் விதி. குறைந்தபட்ச கூலி என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் தரகு முதலாளிகளின் விருப்பம். இதுவொருபுறமிருக்க, சாதாரண மக்களை விட வாங்கும்திறன் அதிகம் கொண்ட மாதச் சம்பளக்காரர்களால்கூட இவ்விலைவாசி உயர்வைத் தாங்க முடியவில்லை என்பதல்லவா உண்மை! எனவே மு.க.வின் ""வாங்கும் சக்தி உயர்ந்தால்...'' என்ற ஆலோசனையை, சோகப்படத்தில் சேர்க்கப்படும் மலினமான நகைச்சுவை காட்சியோடுதான் ஒப்பிடமுடியும்.


உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற ஆலோசனையை முதலாளித்துவப் பத்திரிகைகள் அனைத்தும் வாரி வழங்கியுள்ளன. இந்தியாவில் விவசாய உற்பத்தி வளர்ச்சி அடையாமல், தேங்கிப் போய்விட்டது என்பது உண்மைதான். ஆனாலும், தற்போதைய விலையேற்றத்துக்கு உற்பத்தித் தேக்கத்தை முக்கியக் காரணமாகக் கூறிவிட முடியாது. விவசாய உற்பத்தியைத் தீர்மானிப்பதிலும், விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும், விநியோகிப்பதிலும் அரசு படிப்படியாகக் கழன்று கொண்டு, அப்பொறுப்பை மெல்ல மெல்லத் தனியார்மயப்படுத்தி வருவதுதான் இந்த விலையேற்றத்துக்குப் பின்னுள்ள அடிப்படையான காரணம்.


உணவுப் பொருள் விலையேற்றத்துக்கு காரணங்களாகச் சொல்லப்படும் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியும்; கச்சா எண்ணெய் விலை உயர்வும்; உயிரிஎரிபொருள் தயாரிக்க உணவுப் பொருட்கள் ஒதுக்கப்படுவதும் இரண்டாம்பட்சமானவைதான். விலைவாசி உயர்வுக்கும் தனியார்மயத்துக்கும் இடையேயுள்ள உறவை மூடி மறைப்பதற்காகவே, இந்த இரண்டாம்பட்ச காரணங்களை ஓட்டுக்கட்சிகளும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும் ஊதிப் பெருக்குகின்றனர்.


தனியார்மயம் தாராளமயத்திற்கு முன்பு, உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதை இந்திய அரசு கொள்கை அளவிலாவது ஏற்றுக் கொண்டு இருந்தது. உலகமயத்திற்குப் பிறகோ, விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படும் கொள்கை கைவிடப்பட்டு, தேவையென்றால், உணவுப் பொருட்களை அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம்; அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அரசின் நிலைப்பாடாகிவிட்டது. இப்படிப்பட்ட கொள்கையைக் கொண்ட அரசாங்கம், விவசாய உற்பத்தியைப் பெருக்கி, உணவுப் பொருள் தட்டுப்பாட்டையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தி விடும் எனப் பகற்கனவு காண்பவர்களால்தான் நம்ப முடியும்.


தேவைக்கேற்ப உற்பத்தி இருந்தால், விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்பது உண்மையானால், சர்க்கரை, சிமெண்ட், இரும்புக் கம்பிகளின் விலைகள் உயர்ந்திருக்கக் கூடாது. ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிச்சந்தையில் ரூ. 13க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை இன்று ரூ. 17/ ஆக அதிகரித்து விட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின் பொழுது ரூ. 190200/ ஆக இருந்த சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை, தற்பொழுது, ரூ. 250/ஐத் தாண்டிவிட்டது. கடந்த மூன்றே மாதங்களுக்குள் கட்டுமானக் கம்பிகளின் விலை 20 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. எனவே, உற்பத்திப் பெருகுவதற்கும் சில்லறை விற்பனை விலைக்கும் நேரடித் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, உற்பத்தியிலும், விநியோகத்திலும் எந்தளவிற்குத் தனியார் முதலாளிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்படுகிறதோ, அந்தளவிற்குத்தான் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதே உண்மை.


···


சிதறுண்டும், நலிவடைந்தும் இருக்கும் இந்திய விவசாயத்தை, விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டுப் பண்ணைகளாக அமைத்து, நவீன வேளாண் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியைப் பெருக்குவதுதான் மக்கள் நலன்சார்ந்த வழிமுறை. ஆனால், அரசோ, நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையை நிர்ணயிக்க மறுப்பதன் மூலம் விவசாயிகளைப் போண்டியாக்கி, அவர்கள் நிலத்தில் இருந்து வெளியேறுவதைத் துரிப்படுத்துகிறது. போண்டியாகி நிற்கும் விவசாயிகளை ""ஒப்பந்த விவசாயம்'' என்ற திட்டத்தின் மூலம் தரகு முதலாளித்துவ / பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முயலுகிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் விவசாயத்தில் முதலாளித்துவ நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வழி ஏற்படுத்தித் தருகிறது; பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்காமல் அழிய விடுவதன் மூலமும், காப்புரிமை என்ற பெயரிலும் விவசாயிகளை விதைகளுக்குப் பன்னாட்டு நிறுவனங்களை அண்டிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி வருகிறது.


விவசாய உற்பத்தியில் திணிக்கப்படும் இத்தனியார்மயத்திற்கு இணையாக உணவுப் பொருள் விநியோகமும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்படுகிறது. பொது விநியோக முறையைப் பலப்படுத்துவதன் மூலம்தான் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்க முடியும். ஆனால், அரசோ, உணவு மானியத்தைக் குறைப்பதன் மூலம் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் கைவிடுவது; அதில் தனியாரை அனுமதிப்பது; உணவுப் பொருள் வணிகத்தில் இணைய தள வர்த்தகத்தை அனுமதிப்பது ஆகிய ""சீர்திருத்தங்களின்'' மூலம், உணவுப் பொருள் விநியோகத்தைச் சூதாட்டமாக மாற்றி வருகிறது.


உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, அரசு நடத்தும் நெல், கோதுமை கொள்முதலை 1.5 கோடி டன்னில் இருந்து 4 கோடி டன்னாக அதிகரிக்க வேண்டும்'' என்கிறார், அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழகத் தலைவர் கே.பாலகிருஷ்ணன். ஆனால், தி.மு.க. அரசோ, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்ட நெல் கொள்முதலை மீண்டும் தொடங்க மறுக்கிறது. அரசியலில் எலியும் பூனையுமாக இருக்கும் மு.க.வும், ஜெயாவும் உலக வங்கியின் கட்டளையை நிறைவேற்றுவதில் பங்காளிகளாக இருப்பதற்கு இதுவொரு சான்று.


மைய அரசோ, 1.5 கோடி டன்னுக்கு மேல் ஒரு மணிகூட கூடுதலாகக் கொள்முதல் செய்ய முடியாது என அடம் பிடிக்கிறது. ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதை அனைத்து மக்களுக்கும் விரிவாக்க முடியாது; வறுமைக் கோட்டுக்குக் கீழே / மேலே எனப் பொது விநியோகம் பிரிக்கப்பட்டுள்ளதைக் கைவிட முடியாது என உணவு அமைச்சர் சரத்பவார் அறிவிக்கிறார். 200404இல் 1.68 கோடி டன், 200506இல் 1.48 கோடி டன், 200607இல் 92 இலட்சம் டன் என கோதுமை கொள்முதல் படிப்படியாகக் குறைந்து வருவதை இந்த அறிவிப்போடு இணைத்துப் பார்க்க வேண்டும்.


அதேசமயம், இந்தப் பற்றாக்குறை கொள்முதலைக் காரணமாகக் காட்டி, 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில், 75 இலட்சம் டன் கோதுமை அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஒரு குவிண்டால் கோதுமையை ரூ. 1,000/ கொடுத்து உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய (அப்பொழுது) மறுத்த மைய அரசு, அதைவிட ஒன்றரை மடங்கு அதிகவிலையில் புளுத்த கோதுமையைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்தது.


காங்கிரசிற்கு முன்பு ஆண்ட பா.ஜ.க.வின் ஆட்சியில் 2.2 கோடி டன் கோதுமை ரேசன் விலையைவிட மலிவாக, ஐரோப்பிய பன்றிகளுக்குத் தீவனமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. பா.ஜ.க. காங். அரசுகளின் இந்த இரண்டு நடவடிக்கைகளும், பன்னாட்டு உணவுக் கழகங்களின் நலனுக்கு ஏற்ப, இந்தியாவின் பொது விநியோகமுறை மாற்றியமைக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள். இதற்கு இணையாகவே, தரகு முதலாளித்துவ நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் நெல்கோதுமை போன்ற உணவுப் பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும்; பல சரக்கு சில்லறை வியாபாரத்தில் இறங்கவும் அனுமதிக்கப்பட்டன.


இத்தனியார்மய நடவடிக்கைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல, கடந்த ஐம்பது ஆண்டு காலமாக முன்பேர வர்த்தகத்துக்கு இருந்துவந்த தடை, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் இறுதியில் (2003ஆம் ஆண்டில்) முற்றிலுமாக நீக்கப்பட்டது. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்டு 103 பொருட்கள், முன்பேர இணைய தள வர்த்தகம் மூலம் வியாபாரம் செய்வதற்கு அனுமதியும் கொடுத்தது. பா.ஜ.க. அடுத்து வந்த காங். கூட்டணி ஆட்சி, உலகமயக் காலக் கட்டத்தில் முன்பேர வர்த்தகத்தைத் தவிர்க்க முடியாது எனக் கூறி, அச்சூதாட்டத்தைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகே 2006ஆம் ஆண்டில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளுக்கு மட்டும் இணைய தள வர்த்தகத்தில் தடை விதிக்கப்பட்டது.


முன்பேர வர்த்தகம், உணவுப் பொருள் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி, சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து நுழைய அனுமதி ஆகிய இந்தத் தனித்தனியான இழைகளை இணைத்துப் பார்த்தால்தான், உணவுப் பொருள் விநியோகம் முன்பு போலன்றி, முதலாளித்துவ நிறுவனங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள அபாயத்தின் பரிணாமம் விளங்கும்.
மக்காச் சோளம் முன்பேர வர்த்தகத்தில் நுழைக்கப்பட்ட பிறகு, ஒரு கிலோ மக்காச்சோளத்தின் விலை


ரூ. 5/ லிருந்து ரூ. 9/ ஆக அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிடும் தேசிய முட்டை உற்பத்தியாளர் சங்கம், ""முன்பேர வர்த்தகத்தில் இருந்து மக்கா சோளத்தை நீக்க வேண்டும்; இல்லையென்றால் அதில் இருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவணத்தின் விலை உயர்ந்து அடுத்த ஓரிரு மாதங்களில் ஒரு முட்டையின் விலை ரூ. 3 ஆக உயர்ந்துவிடும்'' என எச்சரித்துள்ளது. முன்பேர வர்த்தகத்தின் பாதிப்புகள் பற்றி ஆராய மைய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அபிஜித் சென் கமிட்டி, ""விலை உயர்வுக்கும் முன்பேர வர்த்தகத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதனைக் கண்டறிந்துள்ளதாக'' முதலாளித்துவப் பத்திரிகைகளே ஒப்புக் கொள்கின்றன.


அமெரிக்கப் பொருளாதார மந்தம், அமெரிக்க டாலர் சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி இவற்றால் வர்த்தகச் சூதாடிகளுக்கு இப்பொழுது உணவுப் பொருள் முன்பேர வர்த்தகம்தான் கொழுத்த இலாபம் தரும் சூதாட்டமாக மாறிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகம்தான் காரணம் என வெனிசுலா நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். பங்குச் சந்தைக்குள் பாய்ந்து வந்த வங்கிகளின் கடன் மூலதனம், இப்பொழுது முன்பேர வர்த்தகத்தில் பாய்கிறது.


பாண்டிச்சேரியில் சமீபத்தில் கடத்தல் அரிசி பிடிபட்டபொழுது, அக்கடத்தல் வியாபாரத்துக்கு இந்தியாவின் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் வழங்கியிருந்தது அம்பலமானது. இத்தனியார்மய நடவடிக்கைகள், பழைய பதுக்கல் வியாபாரிகளின் இடத்தில், ஐ.டி.சி., கார்கில், ஏ.டபிள்யூ.பி.இந்தியா, பிரிட்டானியா, ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு / தரகு முதலாளித்துவ நிறுவனங்களைக் கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறது.


அதனால்தான் நாடாளுமன்ற நிலைக்குழு 25 விவசாய விளைபொருட்களை முன்பேர வர்த்தகப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறிய பிறகும், மன்மோகன் சிங் கும்பல் அந்த ஆலோசனையைக் காதில் போட்டுக் கொள்ளவே மறுக்கிறது.


இரும்பு உருக்காலை அதிபர்களுக்கும், கட்டுமானக் கம்பிகளின் விலை உயர்வுக்கும் தொடர்பில்லை என அத்துறையின் அமைச்சரே சான்றிதழ் அளிக்கிறார்; வர்த்தக அமைச்சர் கமல்நாத், விலை உயர்வைக் காட்டி ஏற்றுமதிக்குத் தடை போடக்கூடாது என முட்டுக்கட்டை போடுகிறார்; நிதியமைச்சர் ப.சிதம்பரமோ விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் உணவுப் பொருட்களின் தாராள இறக்குமதிக்கு அனுமதி கொடுக்கும் சதித்தனத்தில் இறங்கிவிட்டார்.


இவையாவும் விலை உயர்வுக்குக் காரணமான தனியார்மயத்தைக் கைவிடவோ, அல்லது குறைந்தபட்சம் தனியார்மயத்தைக் கட்டுப்படுத்தவோ கூட காங்.கூட்டணி ஆட்சி தயாராக இல்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.


கடந்த பதினெட்டு வருடங்களில் உணவு தானியத்திற்கான நிலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.26 சதவீதம் குறைந்து கொண்டே வருவதற்குக் காரணம் தனியார்மயம்தான். 197374இல் சராசரியாக ஆண்டொன்றுக்கு ஒரு இந்தியக் குடிமகனுக்குச் சாப்பிடக் கிடைத்த தானியத்தின் அளவு 154.24 கிலோ. அது, 200405இல் 132.58 கிலோவாக வீழ்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் தனியார்மயம்தான். உணவுப் பொருளைப் பதுக்கும் பேர்வழிகளைத் தண்டிக்கும் சட்டம், ரிலையன்ஸ் ஃபிரஷ் மீதோ, பிக் பஜார் மீதோ, ஹெரிடேஜ் பிரஷ் மீதோ பாய மறுப்பதற்குக் காரணம் தனியார்மயம்தான். மூலப்பொருட்களின் விலை உயர்வினால் சிறுதொழில்கள் முடங்கி கோவையில் மட்டும் 15 ஆயிரம் சிறு தொழில்கூடங்களில் 40 சதவீத ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது தொழிலாளர்கள் வேலையிழந்து வருவதற்குக் காரணம் தனியார்மயம் தான்.


இத்தனியார்மயத் தாக்குதலைத் தேர்தல்கள் மூலம் வீழ்த்துவிட முடியாது. அப்படிச் சொல்லி ஓட்டுப் பொறுக்கிவரும் போலி கம்யூனிஸ்டுகளை விட, உலகமகா மோசடிப் பேர்வழிகள் வேறு யாரும் இருக்கவும் முடியாது!

 

· செல்வம்