Language Selection

புதிய ஜனநாயகம் 2006

08_2006.jpg

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தி.மு.க. அரசு சட்டம் இயற்றியுள்ள போதிலும், கண்டதேவியில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குத் தேர்வடம் பிடிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு, அவர்களது வழிபாட்டு உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று நடந்த தேரோட்டம், தேவர் சாதிவெறியர்களின் அதிகாரத் திமிரை நிலை நாட்டும் திருவிழாவாக புதிய பரிமாணத்தை இவ்வாண்டில் எட்டியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகிலுள்ள சிறு கிராமம்தான் கண்டதேவி. கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கச் சாதியினரான தேவர் சாதிவெறியர்களின் வன்கொடுமை அட்டூழியங்களால் இந்த ஊர்க் கோயிலின் தேரோட்டம் நின்று போனது. பின்னர் கடந்த ஆண்டில் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தேவர் சாதிவெறியர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி ஒப்புக்கு சில தாழ்த்தப்பட்டோரைத் தேர்வு செய்து, வடத்தைத் தொட்டு இழுப்பது போல நாடகமாடி, போலீசை வைத்துத் தேரை இழுத்து, "சமத்துவத்தை' நிலைநாட்டியது, முந்தைய ஜெயா அரசு.

 

இந்த ஆண்டின் தேரோட்டம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள சொர்ணமகால் திருமண மண்டபத்தைப் புறக்காவல் நிலையமாக்கி, கூடுதல் டி.ஜி.பி. மூர்த்தி தலைமையில் 20,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அதில் கணிசமானோர் கிராமப்புற விவசாயிபோல வேட்டிசட்டை அணிந்து கொண்டு கூட்டத்தில் புகுந்து கொண்டனர். மாவட்டத்தின் புதிய கலெக்டர் சித்திக், ஐ.ஜி. சஞ்சீவ் குமார் தலைமையிலான அரசு எந்திரம் இக்கிராமத்திலிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டி வெளியேற்றியது. கண்டதேவி கோயிலுக்குப் பின்புறம் சுமார் 20 வீடுகளைக் கொண்ட காலனியிலுள்ள தாழ்த்தப்பட்டோரே ஊரில் எஞ்சியிருந்தனர். அக்காலனியைச் சுற்றி சவுக்குக் கம்புகளால் வேலி கட்டி, ஏறத்தாழ 100 போலீசார் சுற்றி வளைத்து, அத்தாழ்த்தப்பட்ட மக்கள் தேரோட்டத்தை எட்டிக் கூடப் பார்க்க முடியாமல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

 

தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி ஒதுக்கி வைத்துவிட்டு உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, தென்னல் நாடு, இரவுசேரி நாடு ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த நாட்டார்களின் சாதிவெறித் தலைவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்பட்டு, தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் சுமார் 750 பேர் மாலை மரியாதையோடு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, அவர்கள் மட்டுமே தேர்வடம் பிடித்தனர். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தேரோட்டத்தைத் தொடங்கி வைக்க, இராகு காலத்துக்குள் இத்தேரோட்டம் வீதி உலா வந்து முடிவுற்றது. நாட்டார்கள் மட்டுமே பங்கேற்க, அதற்கு போலீசும் அதிகாரவர்க்கமும் ஒத்துழைத்ததைக் கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடிய நாட்டார்களிடம் சாதிவெறி போதை தலைக்கேற, ""தேவரினத் தேரோட்டத்தை நடத்திய கலைஞர் வாழ்க!'', ""கும்தலக்கா கும்மாவா, தேவருன்னா சும்மாவா?'', ""தேவரின பாரம்பரிய உரிமையைப் பாதுகாப்போம்!'' என்று கூச்சலிட்டனர். அடுத்துவரும் ஆண்டுகளில் கண்டதேவி தேரோட்டம், கோவில் திருவிழா என்ற நிலையிலிருந்து, இன்னுமொரு தேவர் குருபூசையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

நீதிமன்றமே கூட, அனைவரும் சமத்துவமாக தேர்வடமிழுக்க வேண்டும் என்று உத்தரவிடாமல், முதலில் நாட்டார்கள் இழுக்க பின்னர் அனைவரும் இழுக்க வேண்டும் என்றுதான் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், "எனது மகனுக்குத் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பெண் எடுத்துள்ளேன்' என்று கூறிக் கொள்ளும் கருணாநிதியின் அரசோ, தாழ்த்தப்பட்டோர் தேர் இழுக்கும் உரிமையைக் கூடப் பறித்துவிட்டு, சாதிவெறியர்களுக்கே முழு சமத்துவம் அளித்துள்ளது.

 

முன்பு, தாழ்த்தப்பட்டோர் தேர் வடம் பிடித்த "குற்ற'த்திற்காக தேரில் ஏற்றிய சாமியை வீதியில் அம்போவென விட்டுவிட்டு, கடவுளையே தீண்டத்தகாதவராக்கிக் கொட்டமடித்த இச்சாதிவெறியர்கள், இப்போது தமது சாதிவெறி பாரம்பரிய உரிமை எவ்வித எதிர்ப்புமின்றி நிலைநாட்டப்பட்ட பெருமையில் கூத்தாடிக் கொண்டிருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கும் இந்த ஆதிக்க சாதியினர் சூத்திரர்களாம்! ஒடுக்கப்பட்ட பிற்பட்ட சாதியினராம்! இவர்கள் இடஒதுக்கீடு சலுகை பெற்று முன்னேற வேண்டுமாம்! இப்படி இந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கு வக்காலத்து வாங்குவது சமூக நீதியா அல்லது மனுதர்ம நீதியா?

 

பு.ஜ. செய்தியாளர், மானாமதுரை.