Language Selection

புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

08_2006.jpg

தூத்துக்குடி மாவட்டம், கே.வேலாயுதபுரம் கிராமத்தின் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் மீது ஒரு உள்நாட்டுப் போரைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள். அந்த ஊரில் தலித் மக்களின் எண்ணிக்கை 200. சாதி இந்துக்களின் மக்கள் தொகையோ 2000.

ரெட்டியார் சாதி வெறியர்களின் தலைமையிலான ஊர்ப் பஞ்சாயத்து கடந்த ஜூன் மாதம் அறிவித்துள்ள சமூகப் புறக்கணிப்பு நடவடிக்கையின்படி, ""தலித்துகள் பொதுக் குழாய்களிலோ, கிணறுகளிலோ தண்ணீர் எடுக்கக் கூடாது, கடைக்காரர்கள் பொருள் விற் கக் கூடாது, அவர்களை யாரும் விவசாய வேலைக்கு அழைக்கக் கூடாது, சுற்று வட்டாரத்திலுள்ள தீப்பெட்டிக் கம்பெனிகளில் கூட யாரும் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது, பிள்ளைகளைக் கூடப் பள்ளிகளுக்குள் அனுமதிக்கக் கூடாது.'' இந்த உத்தரவை வார்த்தை பிசகாமல் அமல்படுத்தி வருகிறார்கள் ஆதிக்க சாதிக்காரர்கள்.

 

இராக் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத இந்தக் கொடிய நடவடிக்கைக்குக் காரணம் என்ன? தங்கள் தெருவிலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அருந்ததியின மக்கள் திருவிழா நடத்தினார்கள்; ஆனால் "மரபுப்படி' அதற்கு சாதி இந்துக்களிடம் முன் அனுமதி வாங்கவில்லை. "தீண்டத்தகாதோரின் சாமிக்கு' குற்றாலத்திலிருந்து "புனிதநீர்' கொண்டு வந்து முழுக்காட்டினார்கள். இது இரண்டாவது குற்றம். இதனால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்களால் திருவிழா முடிந்த மறுநாளே (ஜூன் 8) அருந்ததியினப் பெரியவர் சுப்பிரமணியன் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டார். தன்னைத் தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் செய்தார் சுப்பிரமணியன். தீண்டாமைக் குற்றத்தின் கீழ் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பதிலடி சமூகப் புறக்கணிப்பு.

 

""இந்தக் காலத்தில் எங்கே சார் இருக்கிறது தீண்டாமை'' என்று பேசும் புத்திசாலிகள், சாமி கும்பிட்டதற்காக சமூகப் புறக்கணிப்பா என்று ஆச்சரியப்படலாம். அந்தக் கிராமத்தில் தங்களுக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமை அமல்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் வேலாயுதபுரம் தலித் மக்கள்.

 

அவர்கள் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. பொதுக் கோயிலில் வழிபட முடியாது, தேநீர்க் கடைகளில் தனிக்குவளை என்பன போன்ற "வழமையான' தீண்டாமைக் கொடுமைகள் மட்டுமல்ல் சாதி இந்துக்களின் தெருக்களில் செருப்பு போட்டு நடக்கக் கூடாது, சைக்கிளில் போகக் கூடாது, அவ்வளவு ஏன், சைக்கிளே வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அங்கே சட்டம்.

 

தலித் மாணவர்கள் யாரும் கல்லூரிப் படிப்புக்குப் போகக் கூடாது, வெளியூரிலிருந்து உறவினர்களோ நண்பர்களோ வந்தால் சாதி இந்துக்களிடம் ""விசா'' வாங்கிக் கொண்டு தான் ஊருக்குள் நுழைய வேண்டும். தலித்துகள் யாரும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடாது, வெளியூருக்கு வேலைக்குப் போகக் கூடாது, உள்ளூரில் அவர்களது சாதிக்கு விதிக்கப்பட்ட அடிமைத் தொழில்கள் அனைத்தையும் கூலியில்லாமல் செய்ய வேண்டும்.

 

இந்தச் சட்டங்கள் எல்லாம் கொடூரமான முறையில் தலித்துகள் மீது திணிக்கப்பட்டு அமல்படுத்தப்படுகின்றன. வேலாயுதபுரத்தில் அஞ்சல் அலுவலகம் திறந்தபோது, பெரியவர் சுப்பிரமணியனின் மகன் முத்துகிருஷ்ணனுக்கு அங்கே சப்போஸ்ட் மாஸ்டர் வேலை கிடைத்தது. ""ஒரு சக்கிலியனிடம் கைநீட்டி நாம் ஸ்டாம்பு வாங்க முடியுமா?'' என்று கூறி அந்த இளைஞனை நேர்முகத் தேர்வுக்கே போகவிடாமல் தடுத்து விட்டார்கள் சாதிவெறியர்கள். கல்யாணி என்ற பெண்ணுக்கு கிடைத்த சத்துணவு அமைப்பாளர் வேலையும் இதேபோலப் பறி போனது. பெயிண்டர் வேலை செய்யும் மாரியப்பன் என்பவர் சுற்று வட்டாரக் கிராமங்களில் வேலை செய்ய உதவுமென்று ஒரு ஸ்கூட்டர் வாங்கினார். அந்தக் குற்றத்துக்காக அவர் ஊரைவிட்டே வெளியேற்றப்பட்டார். உடல் ஊனமுற்றவரான கணேசன் என்பவர் தனக்கு அரசு வழங்கிய மூன்று சக்கர வாகனத்தைப் பயன்படுத்த முடியவில்லை. சாதி இந்துக்களின் "சாலை விதிகள்' அவருக்குக் கூட இரக்கம் காட்டவில்லை. சாதிவெறியர்களிடம் கெஞ்சிக் கூத்தாடித்தான் இந்தச் சலுகையை அவர் பெறவேண்டியிருந்தது. முத்தையா என்பவருடைய வீட்டின் வாசலிலேயே பஞ்சாயத்து குடிநீர்க் குழாய் இருக்கிறது. எனினும் அவர் அதில் தண்ணீர் பிடிக்க முடியாது. தலித்துகளுக்கென்று ஒதுக்கப்பட்ட குழாய்க்கு நடந்து சென்று அங்கிருந்துதான் தண்ணீர் பிடித்து வரவேண்டும். இந்தக் கொடுமைகளின் உச்சம்தான் கோயில் பிரச்சினை.

 

""2000 பேருக்கெதிராக 200 பேர் என்ன செய்ய முடியும், நிலச் சுவான்தார்களுக்கு எதிராக அவர்களை அண்டி வாழும் கூலி விவசாயிகள் என்ன செய்துவிட முடியும், அதிகார பலம் கொண்ட ஆதிக்க சாதியினர்க்கு எதிராக ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் என்ன செய்துவிட முடியும்'' என்று தங்கள் குமுறலை அடக்கிக் கொண்டிருந்த மக்கள், "இனிமேலும் பொறுக்க முடியாது' என்று பொங்கி எழுந்ததற்குச் சான்றுதான் சுப்பிரமணியனின் நடவடிக்கை.

 

ஆதிக்க சாதியினர்க்கு எதிராக வேலாயுதபுரம் தலித் மக்கள் போலீசில் புகார் கொடுத்திருப்பதென்பது சாதாரண நடவடிக்கை அல்ல, தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நடவடிக்கை. தலித் சமூகத்திலேயே ஆகக் கடைநிலையில் வைக்கப்பட்டுள்ளவர்களான அருந்ததியின மக்கள், இந்தப் போராட்டத்தை தாங்கள் தனித்து நின்றுதான் சமாளிக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார்கள். அதிகார வர்க்கமும் போலீசும் ஓட்டுக் கட்சிகளும் ஆதிக்க சாதியினர் பக்கம்தான் என்ற உண்மையையும் அறிந்தேயிருந்தார்கள்.

 

சமூகப் புறக்கணிப்பு என்று அறிவித்தவுடனே ஆதிக்க சாதியினரின் கட்டைப் பஞ்சாயத்தார்களை தீண்டாமைக் குற்றத்தின் கீழ் போலீசு கைது செய்திருக்க முடியும். சமூகப் புறக்கணிப்பை அமல்படுத்தும் ஒவ்வொருவரையும் சிறையில் வைத்து, சாதி பேதமில்லாமல் பட்டை சோத்துக்கு வரிசையில் நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அவ்வாறு எங்கும் எப்போதும் நடந்ததில்லை. சாதியின் ஆட்சியை சட்டத்தின் ஆட்சி கேள்விக்குள்ளாக்கியதில்லை.

 

எனவே, குற்றவாளிகள் ஊரில் சொகுசாக அமர்ந்திருக்க, சமூகப் புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் ஜூன் 12ஆம் தேதியன்று ஊர்வலமாக கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுத்தார்கள். தீண்டாமைக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆர்.டி.ஓ.விற்கு இருந்த போதிலும், மாவட்ட ஆட்சியரைக் கேட்காமல் எதுவும் செய்ய இயலாது என்றும் ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறும் கூறினார்.

 

தங்களுடைய உயிருக்கும் வாழ்க்கைக்கும் உத்திரவாதம் இல்லாமல் அலுவலகத்தை விட்டுப் போக முடியாது என்று கூறி அங்கேயே அடுப்பு வைத்து சோறு பொங்கத் தொடங்கினார்கள் மக்கள். அடுப்பிலிருந்து புகை வருவதற்குள் போலீசு வந்தது. போலீசின் மிரட்டலுக்கு அஞ்சி மக்கள் கலைய மாட்டார்கள் என்பது புரிந்த பின்னர் 55 கி.மீ தூரத்திலுள்ள தூத்துக்குடியிலிருந்து மாவட்ட ஆட்சியர் வந்தார்.

 

பிறகு சமாதானக் கமிட்டி (ணீழூச்ஞிழூ ஞிணிட்ட்டிவவழூழூ) என்ற வழக்கமான அதிகார வர்க்க கட்டைப் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. ஜூன் 14ம் தேதியன்று வேலாயுதபுரத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர், ""தலித் மக்களை சுயசார்புள்ளவர்களாக ஆக்குவதுதான் தனது முதற்கடமை'' என்று அறிவித்திருக்கிறார். முதியோர் பென்சன், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தையல் பயிற்சி, தலித்துகள் சுயமாகக் கடை நடத்த அரசுக் கடன் உதவி எனக் கேட்காத உதவிகள் உடனே அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

 

தலித் மக்களுடைய பொருளாதாரச் சார்பு நிலையைப் பயன்படுத்தி அவர்கள் மீது சாதி வெறியர்கள் தீண்டாமைக் கொடுமையைத் திணிக்காமல் தடுப்பதற்கும் தீண்டாமைக்கெதிராகப் போராடும் வலிமையை தலித் மக்கள் பெறுவதற்கும் பொருளாதாரச் சுயசார்பு அவர்களுக்கு அவசியம். அவற்றில் தலையாயது நிலம். அதைப் பற்றி வாய் திறக்காத அரசு சில்லறைச் சலுகைகளால் தலித் மக்களைக் குளிப்பாட்ட நினைக்கிறது. பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லையா காலனிக்கு தனிக்குழாய், ஊரிலுள்ள ரேசன் கடையில் அரிசி வாங்க முடியவில்லையா தனி ரேசன் கடை, தனி மளிகைக் கடை என்று புதிய வகைத் தீண்டாமையை சட்டபூர்வமாகவே அமல்படுத்துகிறது.

 

தீண்டாமைக் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை? அதை "கவனிப்பதாக' வாக்குறுதி தந்திருக்கிறார் ஆட்சியர். ஆட்சியர் வந்து போய் 10 நாட்கள் ஆன பின்னரும் சமூகப் புறக்கணிப்பு தொடர்கிறது. வேலாயுதபுரம் அருந்ததியின மக்களுக்கு சுற்று வட்டாரத்தில் யாரும் வேலை தருவதில்லை. சாதிவெறியர்களோ, அரசின் இந்தக் கண்துடைப்பு நடவடிக்கைகளைக் கூடச் சகித்துக் கொள்ள முடியாமல் கருவிக் கொண்டிருக்கிறார்கள்.

 

எனினும் 2000 பேர் சேர்ந்து 200 பேரை அடிக்கும் தீண்டாமை எனும் இந்தக் கோழைத்தனத்திற்கு உள்ளூர நடுக்கமும் வந்திருக்கிறது. மலம் அள்ளவும், குப்பை வாரவும், பிணம் எரிக்கவும் விதிக்கப்பட்ட அந்த மக்கள், சக்கிலியென்றும் மாதாரியென்றும் இழிவுபடுத்தப்பட்ட அந்த மக்கள், தலித் மக்களிலேயே ஆகக் கீழ்நிலையில் வைக்கப்பட்டு "அடித்தால் கேட்க நாதியில்லாத அநாதைகள்' என்று மிகவும் அலட்சியமாகக் கருதப்பட்ட அருந்ததியின மக்கள் இதோ, திருப்பி அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

ஒண்டிவீரன் அவர்களுடைய குலதெய்வம்; நம்முடைய விடுதலைப் போரின் முன்னோடி. பூலித்தேவனின் தளபதியான வீரன், ஒண்டியாகச் சென்று வெள்ளையர்களின் பாசறையைத் தாக்கி அழித்தவன். அதன் காரணமாகவே ஒண்டிவீரன் என்று மக்களால் புகழப்பட்டவன். அவனுடைய வாரிசுகள் இதோ, தனித்து நின்று போராடுகிறார்கள். நாமும் ஒண்டிவீரனின் வாரிசுகள்தான் என்பது உண்மையானால், அவர்களை ஒண்டியாகப் போராடவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

 

மு இளநம்பி