Language Selection

புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

08_2006.jpg

மும்பை ஜூலை 11, மாலை 6.24 மணி தொடங்கி 6.31 மணி வரை ஏழு நிமிடங்களில் ஏழு தொடர் வண்டிகளில் நடந்த ஏழு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் 200 முதல் வகுப்பு பயணிகளைப் பலிகொண்டு, 800 பேர்களைப் படுகாயமுறச் செய்த கோரங்களைச் செய்தி ஊடகங்கள் நிறையவே விவரமாகச் சித்தரித்துவிட்டன.

 

""தேசிய சர்வதேசியத் தலைவர்கள்'' என்று அறியப்பட்ட அனைவரும் கடும் கண்டங்கள் தெரிவித்துவிட்டனர். அரசுத் தலைவர், பிரதமர், ஆளுங்கட்சித் தலைவர், ரயில்வேத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், அதேபோல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்த இடங்களைப் பார்வையிட்டு விட்டு, இறந்தோர் குடும்பங்களையும் காயமுற்றோரையும் கண்டு ஆறுதல்கள் வழங்கினர். பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு நிதி உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டு விட்டன.

 

குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தவுடன், போலீசு மற்றும் சிவில் நிர்வாகத்துக்கு முன்பாகப் பொதுமக்கள் விரைந்து வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பல்வேறு செய்திகள், சம்பவங்களை நேரில் பார்த்தவர்களின் விவரணைகள், துயரச் சம்பவங்களை மும்பைவாசிகள் எதிர்கொண்ட விதம், துணிவு, மத வேறுபாடுகளைக் கடந்த நிவாரணப் பணிகள், அடுத்தநாளே மும்பை வழமையான நிலைமைக்குத் திரும்பிய வியப்பு, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரங்கள் ஏதும் வெடிக்காமல் தடுத்து, மும்பைவாசிகள் அமைதிகாத்த பெருந்தன்மை என ஏராளமாகப் பத்திரிகைகளில் நிரம்பி வழிந்தன.

 

கடந்த சில ஆண்டுகளில் இவை போன்ற பயங்கரவாதச் சம்பவங்கள் பல நடந்தும், குறிப்பாக மகாராட்டிரத்தில் கடந்த ஆறு மாதங்களில் பல இடங்களில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டும், பல தீவிரவாதக் குழுக்கள் பிடிபட்டும் இந்த ஜூலை 11 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கத் தவறிய உளவுத் துறை, உளவுத்துறை எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திவிட்டு, கோரச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய போலீசு துறை, அரசு நிர்வாகம் ஆகியவை கடும் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டன.

 

நியூயார்க், இலண்டன், மாட்ரிட்க், கேசபிளங்கா, பாலி, ரியாத், கெய்ரோ என்று கோரமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலியான நகரங்களின் வரிசையில் மும்பை மேலும் தனிச்சிறப்பான இடம் பெற்றுள்ளதை ஏடுகள் குறிப்பிடுகின்றன. அதாவது, அங்கெல்லாம் ஓரிருமுறைகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மும்பையிலோ திரும்பத் திரும்ப பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில், ஆறு இடங்களில் பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து மிக அதிகம் நாசம் விளைவிக்கக் கூடிய வெடிபொருட்கள்ஆயுதங்கள் மகாராட்டிரத்தில் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. 1993இல் 257 பேரைப் பலிகொண்ட தொடர்குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு ஆறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மும்பையில் நடந்துள்ளன.

 

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது கிரிமினல் குற்றக்கும்பல் தலைவர்களான தாவுது இப்ராகீம் மமேன் கூட்டணி என்றும், அயோத்தி பாபரி மசூதி இடிப்பைத் தொடர்ந்து 199293 ஆம் ஆண்டில் மும்பையில் ஆர்.எஸ்.எஸ். சிவசேனா இந்து பாசிச வெறியர்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைப் படுகொலை செய்ததற்கு நடந்த பழிவாங்கும் செயல் என்றும் கூறப்பட்டது. இந்த ஜூலை 11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஸ்கர்இதொய்பா மற்றும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான ""சிமி'' ஆகியவற்றின் கூட்டுச் செயல் என்றும் செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

 

இந்தியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான காரண காரியங்கள், பின்னணி அமைப்புகள் குறித்து இந்திய உளவுத் துறைகளில் உள்ள நம்பகமான நபர்கள் கூறியதாக முக்கியமாக மூன்று கோணங்களிலான ""வதந்திகள் ஊகங்கள் புலனாய்வுச் செய்திகள்'' வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் முதன்மையானது, பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சில பத்து பயங்கரவாத அமைப்புகள் (லஸ்கர், ஜெய்சா, ஹர்கத், ஹிஸ்புல்லா போன்றவை) பாக். அரசு மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் நிதி, ஆயுத உதவி, பயிற்சி தரப்பட்டு இந்திய அரசியல், பொருளாதார, சமூக வாழ்வைச் சீர்குலைக்கவும் மதக் கலவரங்களைத் தூண்டவும் ஏவிவிடப்படுகின்றன. பாக். மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் இளைஞர்களும், இந்தியாவிலுள்ள இஸ்லாம் மதபோதனை நிறுவனங்கள் மதரசாக்களில் பயின்ற மாணவர்களும், கிரிமினல்குற்றக் கும்பல்களும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

இரண்டாவதாக, உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள். இஸ்ரேலின் ஜியோனிசம், அமெரிக்காவின் கிறித்தவ ஏகாதிபத்தியம், இந்தியாவின் இந்துத்துவம் போன்றவை உலக இஸ்லாத்தை அழித்து வருகின்றன. உலக இஸ்லாமிய மக்களையும் நாடுகளையும், அடக்கி ஒடுக்குவதாகவும் உலகு தழுவிய இஸ்லாமியப் புனிதப் போர் மூலம் அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் மேற்கே மொராக்கோ, அல்ஜீரியா, எகிப்து முதல் கிழக்கே பிலிப்பைன்ஸ், பாலி வரை தற்போதுள்ள அரசுகளைத் தூக்கி எறிந்து விட்டு இஸ்லாமிய அரசுகளை நிறுவ வேண்டும் ஈராக், ஆப்கானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா பிரிட்டன் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அரபு நாடுகளைத் தாக்கி வரும் இஸ்ரேல் காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்திய முஸ்லீம்களை ஒடுக்கிவரும் இந்துத்துவ இந்தியா ஆகியவை உடனடி எதிரிகள் இந்நாடுகளோடு பல வகையிலும் கூட்டுச் சேர்ந்துள்ள அரபுஇஸ்லாமியத் துரோகிகளையும் தாக்கும் புனிதப் போர் என்ற முறையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்பதுதான் பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா மற்றும் பல நாட்டு மத அடிப்படைவாதக் குழுக்களின் திட்டம். அவர்களால் ஏவிவிடப்படும் பயங்கரவாதக் குழுக்கள் தாம் ஜூலை 11 மும்பை தொடர்வண்டி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளன என்று செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

 

மூன்றாவதாக, அயோத்தி பாபரி மசூதி இடிப்பு அதைத் தொடர்ந்து, குறிப்பாக மும்பை உட்பட நாடு முழுவதும் இந்து மதவெறி சங்க பரிவாரங்கள் நடத்திய படுகொலைகள், அதன் பிறகு ""கோத்ரா'' இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நடந்த கொலைவெறியாட்டம், தடா, பொடா போன்ற கொடிய சட்டங்களால் பல ஆயிரம் இஸ்லாமிய இளைஞர்களை அடக்கி ஒடுக்கும் அரச பயங்கரவாதம் இவையெல்லாம் அல்உம்மா, குஜராத்துக்கு பழிவாங்கும் படை, அஞ்சுமான் போன்ற உள்ளூர் அளவிலான பல பயங்கரவாதக் குழுக்கள் தோன்றக் காரணமாகி உள்ளன. நாட்டிலுள்ள பல மதரசாக்களில் மதபோதனை பெற்று, பாகிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்று, வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய செல்வந்தர்களின் நிதி உதவி பெற்று, ஆயுதங்களைக் கடத்தி வந்து, தகுந்த தருணம் பார்த்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துகின்றன.

 

இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எதுவொன்றையும் அடியோடு நிராகரித்துவிட முடியாது. என்றாலும் இந்தியாவைக் குறி வைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்துக்கும் இந்திய எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதக் குழுக்களின் சதிவேலைகள் தாம் என்பதை உறுதிப்படுத்தவே இந்திய ஆளும் வர்க்கங்களும், உளவுத்துறைகளும் விழைகின்றன. மதச்சார்பற்றவை என்று கூறிக் கொள்ளும் காங்கிரசு, இடதுசாரி அணி முதல் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. சிவசேனா முதலிய இந்து மதவெறி பாசிசக் கும்பல்கள் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இந்தக் கோணத்திலேயே அணுகி வருகின்றன. இத்தகைய அணுகுமுறைதான் இந்த நாடு இவ்வளவு காலமும் கடைப்பிடித்து வரும் இந்துத்துவ ""இந்திய தேசிய''க் கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கிறது.

 

அதனால்தான், மும்பை ஜூலை 11 தொடர் வண்டி தொடர் குண்டு வெடிப்புகளை ரயில்வே போலீசு விசாரிப்பதா, பயங்கரவாத எதிர்ப்பு மாநிலப் போலீசு குழு விசாரணை மேற்கொள்வதா என்ற தகராறு தீர்வதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் ""லஸ்கர் சிமி'' பின்னணிதான் என்று உடனடியாகவே புலனாய்வுச் செய்திகள் வருகின்றன. ஓரிரு நாட்களிலேயே, நேபாளபீகார் எல்லையில் இரு பயங்கரவாதிகள் பிடிபட்டதாகவும், லஸ்கர் தலைவர் ""தண்டா'' கென்யாவில் பிடிபட்டதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், மும்பை புறநகரில் உள்ள சதுப்பு நிலக் குடிசைகளில் வாழும் முசுலீம் ஏழைகள் நள்ளிரவில் சுற்றி வளைக்கப்பட்டு, 200 அப்பாவிகளை இழுத்துக் கொண்டு போய் ""விசாரணை'' நடத்துகின்றது, மும்பை போலீசு.

 

அடுத்த நாளே மும்பை வந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரு சேர பாகிஸ்தான் நோக்கி குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானை எச்சரிக்கிறார். வாக்குறுதி அளித்தவாறு பயங்கரவாதிகளை ஏவிவிடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும், பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை உடனடியாக மூடவேண்டும். இல்லையென்றால் சமாதானம் பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கிறார். எச்சரித்தவாறே, குண்டு வெடிப்புக்குப் பின் சில தினங்களில் நடக்கவிருந்த இந்தியபாக். அயலுறவுத் துறை செயலர்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது. புஷ்பிளேர் முதலிய தனது எஜமானர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிராக புகார் கூறிய மன்மோகன் சிங், ஜி8 நாடுகளின் மாநாட்டில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ச்சியை எழுப்பி பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றச் செய்தார்.

 

அமெரிக்காவின் மீது பின்லேடன் தலைமையிலான அல்கொய்தாவின் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ""பயங்கரவாதத்துக்கு எதிரான உலகு தழுவிய போர்'' பிரகடனம் செய்து ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்புப் போர் உட்பட பல பாசிசத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன அமெரிக்காவும் பிரிட்டனும். உலகின் பல்வேறு ஏகாதிபத்திய அடிவருடி நாடுகள் அதற்குத் துணை போகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் தானாகப் போய் இணைந்து கொண்ட இந்தியா, தாலிபான் மற்றும் அல்கொய்தாவுடன், பாகிஸ்தானையும் பயங்கரவாத சக்தியாக வைத்து, அதற்கு எதிராக ""அமெரிக்க பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்புப் போரை'' திருப்பிவிடும்படி தொடர்ந்து மன்றாடுகிறது.

 

ஆனால், அமெரிக்காவும் பிரிட்டனும் தமது ""பயங்கரவாத எதிர்ப்புப் போரின்'' இன்றைய பங்காளியாக பாகிஸ்தானையே சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ""இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு இசுலாமிய நாட்டுடன் கூட்டு வைத்துக் கொள்வதுதான் சரியான செயல்தந்திரம்'' என்றே ஏகாதிபத்தியங்கள் கருதுகின்றன. அதுமட்டுமல்ல, காஷ்மீர் பிரச்சினை தோன்றிய காலத்திலிருந்தே, இந்தியாவின் நிலையை ஏற்க மறுத்து, பாகிஸ்தான் ஆதரவு நிலையெடுத்து வரும் ஏகாதிபத்தியங்கள், குறிப்பாக பாக்.குடன் நீண்டகாலமாகவே இராணுவ ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு தொடர்ந்து ஆயுதநிதி உதவி அளித்துவரும் அமெரிக்கா, இந்தியாவின் புகார்களை ஏற்று பாகிஸ்தான் எதிர்ப்பு நிலையெடுக்கும் என்று எதிர்பார்ப்பதே முட்டாள்தனமாகும்.

 

மேலும், பாகிஸ்தான் ஏவிவிட்டு எல்லைக்கு அப்பாலிலிருந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதில் உதவுவதில்லை என்பதோடு, அமெரிக்கா பிரிட்டன் முதலிய ஏகாதிபத்தியங்கள், பாகிஸ்தானுடன் சமாதானமாகப் போகும்படி கடுமையான நிர்பந்தமும் கொடுத்து வருகின்றன. அதனால்தான், இஸ்லாமிய எதிர்ப்புபாக். எதிர்ப்பில் அதிதீவிரம் காட்டும் இந்து பாசிச பயங்கரவாத ஆட்சியாளர்களே கூட வலியப் போய் கார்கில் போருக்கு முன்னும் பின்னும் பாகிஸ்தானுடன் சமாதான உறவை ஏற்படுத்தினர். இந்திய விமானம் ஆப்கானுக்குக் கடத்தப்பட்டபோது பா.ஜ.க. மந்திரியே, இந்தியச் சிறையிலிருந்த இரு பயங்கரவாதிகளோடு தனி விமானத்தில் கந்தகார் போய் அவர்களை ஒப்படைத்துவிட்டு, பணயக் கைதிகளை மீட்டு வந்தார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தபின் எல்லையில் இராணுவத்தை குவித்து போர் மிரட்டல்கள் விடுத்துவிட்டு, அமெரிக்க பிரிட்டன் நிர்பந்தத்துக்குப் பிறகு ஒரு தோட்டா கூடச் சுடாமல் இந்தியா திரும்பிவிட்டது.

 

ஆக, எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் உண்மையில் எதிர்க்கவோ, எதிர்த்து முறியடிக்கவோ முடியாது. அது ""சிவபெருமான்'' கழுத்தில் சுற்றிப் பாதுகாப்பாக தவழ்ந்து கொண்டிருக்கும் ""பாம்பு'' போன்றது. இந்தியக் ""கருட''னுக்கு அது அஞ்சுவதே இல்லை. எனவே, எல்லை கடந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் மீது அதிரடிப் படைத் தாக்குதல்கள் நடத்துவது பாலஸ்தீன, அரபுப் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் பாசிச இராணுவ பயங்கரவாதத் தாக்குதல் போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். ஃ பா.ஜ.க. முதல் காங்கிரசு வரை எந்த இந்திய ஆட்சியாளர்களும் ஒருபோதும் துணியப்போவதில்லை.

 

இந்த நிலையில் உள்ளூர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஒன்றே, மும்பை ஜூலை 11 போன்று, அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை முறியடிக்கக் கூடியது என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் நம்புகின்றன. அதற்கான பிரச்சாரத்திலும் தயாரிப்பிலும் இந்துத்துவ தேசியவாதிகள் முதல் போலி மதச்சார்பற்ற ஆளும் கூட்டணி வரை அனைவரும் இறங்கிவிட்டனர்.

 

இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளின் எண்ணவோட்டத்தை மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் பார்ப்பன பாசிச குரு ""சோ'' தனது ""துக்ளக்'' வார இதழின் தலையங்கமாக எழுதியுள்ளார். ""நடந்துள்ள அராஜகத்திற்குக் காரணம் தேடி அலைவது, அந்த அட்டூழியத்தை நியாயப்படுத்துவதில்தான் முடியும். அதை விடுத்து, தீவிரவாதம் நசுக்கி, பொசுக்கப்பட வேண்டியது என்ற ஒரே உறுதியை மனதில் கொண்டு, அரசு செயல்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு சங்கடங்களையும், அவர்களுக்கு உதவுகிற பலருக்கு அச்சத்தையும், உளவுத்துறை துப்பறிவதற்குப் பல வசதிகளையும், போலீசு தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிற "பொடா' போன்ற சட்டம் அவசியத் தேவை என்பதை, மத்திய அரசு உணரவேண்டும்.'' (துக்ளக் 26.7.06, பக். 3,4)

 

பொடாவைத் திரும்பக் கொண்டு வருவது உட்பட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பாசிஸ்டுகளின் கருத்தை நிராகரிப்பதாகவும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு அது தீர்வல்ல என்று ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிக் கூட்டணிகளும் அவற்றின் அரசும் கூறுகின்றன. ஆனால், பொடா சட்ட நிறைவேற்றம் போன்ற பகிரங்க நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபடவில்லை என்றாலும் அதிகாரபூர்வமற்ற இரகசிய வழிகளில் அரசு பயங்கரவாதத்தை ஏற்கெனவே அமலாக்கி வருகிறது. அதற்காக மத்தியமாநில அரசு உளவுப் படைகளை இறக்கிவிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் என்ற பெயரில் தனிப்படைகள் இயங்குகின்றன. சந்தேகத்துக்குரியவர்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல், வழக்கு விசாரணைகள் நடத்தப்படாமல் சிறையிலடைக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் ஊடுருவல் பயங்கரவாதி என்ற பெயரில் போலி மோதல்கள் நடத்தி பல இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர். காஷ்மீரில் அப்பாவிச் சிறுவர்கள் கூட பயங்கரவாதிகள் என்ற பெயரில் கொல்லப்படுகின்றனர்.

 

காங்கிரசுத் தலைவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள், ஓய்வுபெற்ற உளவுத்துறை போலீசு உயரதிகாரிகளின் முடிவுகள் ஆகியவை இந்து பாசிச பயங்கரவாதிகளின் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. தடா, பொடா சட்டங்கள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதைப் போலவே, தற்போது கட்டவிழ்த்து விடப்படும் அரசு பயங்கரவாதம், எந்தத் தீவிரவாதத்துடனும் தொடர்பில்லாத ஜனநாயக, முற்போக்கு சக்திகள், பத்திரிக்கையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்று பிற பகுதி மக்களையும் பலிவாங்குவதற்கு ஏவிவிடப்படும் என்பதில் சந்தேகமில்லை.

 

என்னதான், கடுமையான அரசு பயங்கரவாத ஒடுக்குமுறையை ஏவிவிட்டபோதும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரவே முடியாது. ஏதோ ஒரு சில மாதங்கள் அமைதியாகி விட்டதாகத் தோன்றினாலும், நேரம் குறித்த வெடிகுண்டுகள் நிறையவே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை மும்பை தொடர்வண்டி தொடர் குண்டுகளைப் போல எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.

 

அதற்கான அடிப்படையின் கர்த்தாவாக இந்திய ஆட்சியாளர்களே உள்ளனர். முதலாவதாக, இந்த நாட்டில் இஸ்லாமிய பயங்ரவாதம் மட்டும்தான் கோரத் தாண்டவமாடுகின்றது என்ற தவறான தோற்றம் உருவாக்கிப் பாதுகாக்கப்படுகிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குத் தூண்டுதல் சக்தியாக விளங்குவது இந்து பாசிச பயங்கரவாதம். நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சமூக அடிப்படையாகக் கொண்டிருப்பதால், குஜராத், 199293 ஆண்டுகளில் நடந்த மும்பை இந்து மதவெறிப் படுகொலைகள், 1985 டில்லி சீக்கியர் மீதான கொலை வெறியாட்டம் போன்ற இந்து பாசிச பயங்கரவாதச் செயல்கள் பெருந்திரள் தாக்குதல்களாக இருக்கின்றன. ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுபான்மை சமூக அடிப்படையைக் கொண்டிருப்பதால், பலமுறை நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர்குண்டு வெடிப்புகள், கடந்த தீபாவளிக்கு முன்பு நடந்த டெல்லி குண்டு வெடிப்புகள், சமீபத்தில் நடந்த வாரணாசி குண்டு வெடிப்புகள் போன்றவை முற்றிலும் சதிச் செயல்களாக உள்ளன. மேலும், காஷ்மீரில் நடத்தப்படும் அரசஇராணுவ பயங்கரவாதப் படுகொலைகள் எல்லாம் தேசிய நலன்களுக்கானது என்று நியாயப்படுத்தப்படுகின்றன. ஆகவே, இந்துமதவெறி, அரச பயங்கரவாதப் படுகொலைகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத எதிர்த் தாக்குதல்கள் என்ற சுழற்சியில் மாறிமாறி இந்த நாடும் மக்களும் சிக்கிக் கொண்டுள்ளனர்.

 

ஆனால், இந்திய ஆட்சியாளர்களும், பிற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ""இசட்'' முதல் ""ஏ'' வரை 26 வகை பிரிவுகளின் கீழ் பூனைப்படைகள் புடை சூழ நடமாடி வருகின்றனர். தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குவதற்குரிய காரணங்களை உருவாக்கிக் கொடுத்து வருகின்றனர். மத்திய கிழக்கில் அரபு மக்களுக்கு எதிராகப் பாசிச வெறியாட்டம் போடும் ஜியோனிய இஸ்ரேலுடனான இராணுவ உறவுகளை அதிகரித்து வருகின்றனர் ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கபிரிட்டன் ஆக்கிரமிப்பாளருக்குத் துணையாக (நேரடியாக இராணுவத்தை அனுப்பி வைக்க) பலமுறை எத்தணித்தனர். முடியாத நிலையில் தனியார் படை திரட்டி அனுப்பியுள்ளனர். இங்கேயும் இந்து மதவெறி பாசிஸ்டுகள் குஜராத், ஒரிசா, மராட்டியம் போன்ற கொலைவெறியாட்டங்கள் தங்குதடையின்றி நடத்தப்படுகின்றன.

 

இந்து பாசிச பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலடிதற்காப்பு நடவடிக்கைகள் என்பதாக மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இல்லை என்பதும் உண்மையே. வௌவேறு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களின் நோக்கங்கள் வௌவேறானவையாக உள்ளன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவுப் படைகளால் இயக்கப்படும் குழுக்களும் உள்ளன. அல்லாவின் ஆட்சியை நிறுவுவதற்கான புனிதப் போர் (ஜிகாத்) நடத்தும் குழுக்களும் உள்ளன. இஸ்லாம் எதிர்ப்பு, பாக். எதிர்ப்பு இந்துத்துவமே இந்திய தேசியம் என்பதும் தவறு அதேபோல, அல்லாவின் ஆட்சியை நிறுவும் புனிதப்போர் (ஜிகாத்) என்பதும் தவறு. இரண்டுமே மதவெறி பயங்கரவாதத்துக்கு இந்த நாட்டையும் மக்களையும் பலியிடுவதாகும். முன்னதற்குச் சான்று குஜராத் பின்னதற்குச் சான்று மும்பை ஜூலை 11. இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது என்பதையே இரண்டும் காட்டுகின்றன.

 

மு ஆர்.கே.