"எங்கள் குளிர்பானம்தான் நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பனது'' என்று தன்னிலை விளக்கமளிக்கும் விளம்பரங்களைப் பக்கம் பக்கமாக முன்னணி செய்தி ஏடுகளில் வெளியிடுகின்றன கோக்பெப்சி குளிர்பானக் கம்பெனிகள். ஒவ்வொரு நாளும் விளம்பரத்துக்காக மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்து சந்தை ஆதிக்கத்தைப் பிடித்து வைத்திருக்கும் அக்கம்பெனிகள், அது மணல்கோட்டையைப் போல சரிந்து விழுவதைத் தடுக்க இப்படி விளம்பரம் செய்கின்றன.
கோக்பெப்சி கம்பெனிகளின் சார்பாக, அவற்றின் வியாபார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல(!) மந்திரி அன்புமணி இராமதாசு களத்தில் குதித்திருக்கிறார். கோக்பெப்சி குளிர்பானங்களில், சராசரி 30 மடங்கு பூச்சிக் கொல்லி நச்சுப் பொருட்கள் இருப்பதாக தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இப்போது அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியத் தரத்தை விட 24 மடங்கு அதிகமாக நச்சுக் கலந்திருப்பதாகவும் கூறுகிறது.
நாடு முழுவதும் கோக்பெப்சி 16 பெயர்களில் விற்பனை செய்யும் குளிர்பானங்களில் 57 மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில், மனிதர்களின் ஈரல், சிறுநீரகம், நோய் எதிர்ப்பு உறுப்புகளைப் பதிக்கும் லிண்டேன் முதலிய பூச்சிக்கொல்லி நச்சுக்கள் எல்லா மாதிரிகளிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரில்தான் நச்சு இருக்கிறது என்று கோக் பெப்சி நிறுவனங்கள் புளுகுவதையும் அந்த நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
கோக்பெப்சி குளிர்பானங்களில் 90 சதவீதம் தண்ணீரும், 8 சதவீதம் சர்க்கரையும், 2 சதவீதம் அக்கம்பெனிகளின் ருசியூட்டும் வேதிப் பொருட்களும்தாம் உள்ளன. கோக், பெப்சி விற்பனை செய்யும் குடிதண்ணீர்களில் நச்சுப் பொருட்கள் இல்லை; சர்க்கரையிலும் நச்சுப் பொருட்கள் இல்லை; கோக்பெப்சி நிறுவனங்கள் விற்கும் குடிதண்ணீரில் மட்டும் நச்சுப் பொருட்களை சுத்தமாக்கிவிட முடியும்போது குளிர்பானங்களில் மட்டும் ஏன் நச்சுப் பொருட்கள் இருக்கின்றன? அக்கம்பெனிகளின் வேதிப் பொருட்களில்தான் நச்சுப் பொருட்கள் கலக்கப்படுகின்றன என்பது தெளிவாகிவிட்டது. அதனால்தான் இந்தக் கம்பெனிகள் தமது குளிர்பானங்களில் என்னென்ன வேதிப் பொருட்களை எந்த அளவு கலக்கின்றன என்பதனை வியாபார இரகசியம் என்ற பெயரில் 120 ஆண்டுகளாக மறைத்து வருகின்றன.
மற்ற எல்லா உணவுப் பொருட்கள், மருந்துகளில் உள்ள உள்ளடக்க விவரங்களை ""பாக்கட்டுகள்'', புட்டிகள், டப்பாக்களின் மீது அச்சிட வேண்டும்; அதை அறிந்து கொள்வது நுகர்வோரின் உரிமை என்றிருக்கிறபோது, கோக் பெப்சி கம்பெனிகள் மட்டும் அந்த உரிமையைப் பிடிவாதமாக மறுக்கின்றன. 2006, ஆக. 4ஆம் தேதி உச்சநீதி மன்றம் கோக், பெப்சி கம்பெனிகளுக்கு ஒரு உத்தரவு போட்டது. அதாவது, அவை தமது குளிர்பானங்களில் கலக்கும் வேதிப் பொருட்களைப் பற்றிய விவரத்தைப் பகிரங்கப் படுத்த வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.
1954ஆம் ஆண்டு உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டப்படி, உணவுப் பொருட்களில் காணப்படும் பூச்சிக் கொல்லி நச்சுப் பொருட்களின் அளவு வரையறுக்கப்பட்டிருக்கிறது. 2003இல் கோக்பெப்சி கம்பெனி குளிர்பானங்களில் அந்த வரையறுக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக நச்சுக் கலந்திருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அறிவித்த பிறகு, நாடு முழுவதும் அக்கம்பெனிகளுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது, விற்கப்படும் குடிதண்ணீரில் பூச்சிக் கொல்லி நச்சின் அளவை வரையறுத்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு, குளிர்பானங்களில் அதன் அளவை வேண்டுமென்றே வரையறுக்காமல் விட்டு விட்டது.
அதற்குப் பதிலாக, வேண்டுமென்றே, துரோகத்தனமாக ஒரு வேலையை பா.ஜ.க. அரசு செய்தது. குளிர்பானத் தயாரிப்புக்குப் பயன்படும் தண்ணீரில் பூச்சிக் கொல்லி நச்சின் அளவை வரையறுத்துவிட்டு, தயாரித்து முடித்து விற்பனைக்கு வரும் குளிர்பானத்தில் எந்த அளவு மட்டும் இருக்க வேண்டும் என்று வரையறுக்காமல் விட்டது. கம்பெனிகள் குளிர்பானம் தயாரிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள நச்சுப் பொருட்களின் அளவை எப்படிக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்? இப்படி ஒரு பெரிய ஓட்டையைக் கொண்ட அரசு ஆணையின்படி, உச்சநீதி மன்றத்தின் ஆணையை அமலாக்க முடியாமல் போனது.
இதனால், இந்தியத் தரக் கட்டுப்பாட்டுக் கழகம், பல அறிவியலாளர்கள், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், கோலா கம்பெனிகளின் பிரதிநிதிகள் ஆய்வு செய்து, விற்கப்படும் குளிர்பானங்களில் அனுமதிக்கக் கூடிய நச்சுப் பொருளின் அளவை வரையறுத்தனர். அந்த வரையறையை அவர்கள் வெளியிடுவதற்கு ஒருநாள் முன்னதாக மக்கள் துரோகி அன்புமணி இராமதாசு பொறுப்பில் உள்ள சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகச் செயலாளர் தனது முடிவை வெளியிடாது தள்ளி வைக்கும்படி இந்தியத் தரக் கட்டுப்பாட்டுக் கழகத்துக்கு கடிதம் எழுதினார். குளிர்பானங்களில் அனுமதிக்கப்படக்கூடிய நச்சுப் பொருட்களின் அளவை வரையறுத்து அறிவிக்கை வெளியிடவில்லை என்கிற இந்த ஒரு காரணத்தை வைத்தே கோக்பெப்சி கம்பெனிகள் தனது கொலைகார குளிர்பான விற்பனையைத் தடையின்றி நடத்தி வருகின்றன.
இந்த உண்மைகளைத் தனது இணையத்தளம் மூலம் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் பகிரங்கப்படுத்திய பிறகு, நாடு முழுவதும் ஆத்திரம் பொங்கியது. 2003 ஆண்டே மக்களிடையே எழுந்த கோக்பெப்சி எதிர்ப்பை சமாளித்து, நாடாளுமன்றக் கமிட்டி அமைத்து, பூசி மெழுகி துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ் . பா.ஜ.க. கும்பல், தாம் ஆட்சி நடத்தும் குஜராத், ம.பி., இராஜஸ்தான், சட்டிஸ்கரில் தேசபக்தி நாடகமாடி அந்தக் குளிர்பானங்களைக் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் விற்பதற்குத் தடைவிதித்தன. தான் மட்டும் பின்தங்கி அம்பலப்பட்டு விடக்கூடாது என்று காங்கிரசும் பஞ்சாப், ஆந்திரப்பிரதேசத்தில் இதேபோல தடை விதித்தன. போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா முழுவதும் கோக்பெப்சிக்கு உற்பத்தி, விற்பனை இரண்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்தையும்விட போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில் மட்டும் இவ்வளவு கடுமையான உறுதியான நடவடிக்கை எடுக்கக் காரணம் ஒன்று உள்ளது. கோக் ஆலையை கேரளா பிளாச்சிமடாவில் நிறுவ உரிமம் வழங்கி, அதன் மூலம் அங்கு நிலத்தடி நீரை நஞ்சாக்கி, அதற்கு எதிராக, மக்கள் இயக்கங்கள் நடந்து போலி கம்யூனிஸ்டுகள் பெருமளவு அம்பலப்பட்டுப் போயிருக்கிறார்கள்.
போலி கம்யூனிஸ்டுகள் தாங்கள் ஆளும் கேரளாவில், கோக்பெப்சிக்கு எதிராக நாட்டிலேயே ""அதிதீவிர'' நடவடிக்கை எடுத்தபோதும், துரோகக் கம்யூனிஸ்டுகளின் தளபதியும் மே.வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா அது பற்றித் தனக்குத் தெரியாது; மத்திய அரசுக்குத் தான் இதற்கு அதிகாரம் உள்ளது; விவரம் அறிந்தபின் கருத்துச் சொல்கிறேன் என்று துணிந்து புளுகித் தள்ளியிருக்கிறார். இத்தனைக்கும் கொல்கத்தாவில் விற்கப்படும் கோக் பெப்சியில்தான் நாட்டிலேயே மிக அதிகமாக அதாவது 140 மடங்கு நச்சுப் பொருள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புத்ததேவையும் முந்திக் கொண்டு கோக்பெப்சிக்கு வக்காலத்து வாங்குகிறார் இப்போதைய போலி முற்போக்கு போலி கம்யூனிஸ்டு அணியின் தளபதி கருணாநிதி. மத்திய அரசு தடை விதித்தால் தடைவிதிக்கத் தடையேதுமில்லை; புதுச்சேரியில் தடைவிதிக்காது, பயனேதும் இல்லை என்கிறார். அண்டை மாநிலங்களில் கள்ளும் சாராயமும் ஆறாக ஓடியபோது இங்கு மட்டும் மதுவிலக்கு இருந்தது எப்படி என்ற கேள்வி அந்தப் ""பகுத்தறிவாளருக்கு'' எழவில்லை. இப்படியே போனால், அமெரிக்காவில் கூட கோலா விற்கப்படுகின்றனவே என்றும் வாதம் புரிவார். ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வானொளி விளம்பரத்துக்கு கோகோ கோலா வாரியிறைக்கிறது. அதில் பெருந்தொகை, நான்கு மாநிலங்களில் 10 அலைவரிசைகளை நடத்தும் கருணாநிதி குடும்பத்து சன் குழுமத்திற்குப் போகிறது. அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரேயொரு அலைவரிசை நடத்தினாலும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தாமிரவருணியைத் தாரை வார்த்த ஜெயா சசி கும்பல் கணிசமான அளவு கறந்துவிட்டிருக்கிறது.
கடைசியாக கோக், பெப்சிக்கு எதிரான மக்கள் ஆத்திரத்தை தணிப்பதற்கு துரோகி அன்புமணி இராமதாசே நேரடியாக களத்தில் குதித்தார். அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வுகள் போதிய விவரங்களை, ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை; அவற்றை ஏற்கமுடியாது என்று கோலா கம்பெனிகளின் ஏஜெண்டாக மாறி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை எல்லா வகையிலும் காப்பி அடிக்கும் சமூகநீதி நடிகர் ராமதாசின் குலக்கொழுந்து அன்புமணி இராமதாசு, அவர்கள் எல்லோரையும் எடுத்து விழுங்கிவிடும் அளவுக்கு பன்னாட்டுத் தொழில்கழகங்களின் எடுபிடியாகவே செயல்படுகிறார். சினிமாவில் புகைபிடிப்பதைத் தடை செய்வதன் மூலம் மாபெரும் சுற்றுச்சூழல் போராளியாகவும், ஊரெங்கும் மரங்கள் நடும் மக்கள் தொண்டனாகவும் வேடங்கட்டி ஆடிய இந்த மத்திய சுகாதார மற்றும் குடும்பநல (!) மந்திரி அன்புமணி, இரு வன்னிய இளைஞர்கள் நடத்தி வந்த ""பசுமைத் தாயகம்'' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை அடாவடியாகவும் ஏமாற்றியும் கைப்பற்றிக் கொண்டு சுற்றுச்சூழல் காவலர் என்ற பெயரில் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் அமைப்பாக மாற்றிக் கொண்டு, அதையே தனது அரசியல் நுழைவுக்குப் பயன்படுத்திக் கொண்டார். இப்போது, பன்னாட்டு நச்சு வியாபாரிகளான கோக், பெப்சி நிறுவனங்களின் கைக்கூலியாகவே செயல்படுகிறார்.
இந்த நாட்டிலுள்ள போலி முற்போக்குகளும், போலி கம்யூனிஸ்டுகளும்தாம் ஏகாதிபத்தியங்களுக்குத் தொண்டூழியஞ் செய்வதில் முன்னணிப் பாத்திரம் ஆற்றுகிறார்கள் என்ற உண்மையை கோக்பெப்சியின் விவகாரம் வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது. இந்த வகையில் பரம்பரை ஏகாதிபத்திய அரசியல் கைக்கூலிகளான காங்கிரசையும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வையும் இவர்கள் விஞ்சி விட்டார்கள். அதனால்தான் ஏகாதிபத்திய பன்னாட்டுத் தொழில் வர்த்தக நிதி மூலதனங்களுக்கு நடைபாவாடை விரித்து வரவேற்பதில் குஜராத், மகாராட்டிரத்தை விஞ்சிவிட போலி கம்யூனிஸ்டுகளும் போலி முற்போக்குகளும் துடிக்கின்றனர்.
மு குப்பன்