11_2006.jpg

இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு என்று கூறிக் கொள்வதற்கான ஆதõரமாகத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டப்படுவது, ""இந்த நாட்டுக் குடிமக்களின் எழுத்துரிமையும் பேச்சுரிமையும் அரசியல் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எழுத்துரிமையும் பேச்சுரிமையும் அடிப்படை உரிமைகள் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.''

 

பழைய அரச பரம்பரைக் கதை அமைப்புகளில் நாம் கண்டிருக்கிறோம். அதாவது, அரசக் குடும்பங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்து, ஒன்றினால் அரச பரம்பரைக்குக் கேடு விளையும் என்று அரசகுரு சொல்ல, அக்குழந்தையைக் கொன்று விடும்படி அரசன் உத்திரவு போடுவான். தற்செயலான காரணத்தால் தப்பிப் பிழைக்கும் அந்தக் குழந்தை காட்டிலே வளர்ந்து பெரியவனாகி, நாட்டுக்குத் திரும்பி சூழ்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடி ""புரட்சி'' செய்யும். அந்தக்கதை அமைப்பில் வருவதைப் போல எழுத்துரிமை பேச்சுரிமையுடன் சேர்ந்தே பிறப்பதுதான் தகவல் அறியும் உரிமை.

 

இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 19(1) (அ) பிரிவு, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும், அதாவது கருத்தறியச் செய்யும் உரிமையையும் உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது. ஆனால், இந்தியக் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பற்றி எதுவுமே கூறாது மௌனம் சாதிக்கிறது. தகவல் அறியும் உரிமையின்றிப் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் ஊனப்பிறவியாகவே இருக்கும். அதேசமயம், ஆங்கிலேயக் காலனி ஆட்சிக் காலத்தில் அந்நிய ஆதிக்க ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 1923இல் கொண்டு வரப்பட்ட அரசு நிர்வாக இரகசியச் சட்டம் அப்படியே பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 

பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையோடு பிரிக்க முடியாதபடி ஒட்டியிருப்பதுதான் தகவல் அறியும் உரிமை என்பதை உச்சநீதி மன்றம் பல ஆண்டுகளாகப் பல்வேறு தீர்ப்புகளில் சொல்லியிருக்கிறது. 1972 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் இந்திராகாந்தி செய்த அதிகார முறை கேடுகளை எதிர்த்து வழக்குப் போட்ட ராஜ்நாராயணன், பிரதமரின் பாதுகாப்புக் குறித்த ஆவணங்களைத் தரும்படி கோரினார். ""பிரதமரின் பாதுகாப்பு'' என்ற பெயரில் அரசு எந்திரத்தைக் கேடாகப் பயன்படுத்தித் தேர்தலில் இந்திராகாந்தி வெற்றி பெற்றார் என்பதுதான் வழக்கு. பிரதமரின் பாதுகாப்பு குறித்த தகவலைத் தரமுடியாது; அது தனக்குரிய தனிச்சிறப்பான உரிமையென்று அரசு கூறிவிட்டது. ஆனால், ""பொது ஊழியர்கள் பொதுப்பணிகள் ஆற்றும் போது, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் அறிந்து கொள்வதற்கு இந்த நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. பொதுப் பாதுகாப்பு சம்பந்தப்படாத எந்தவொரு விவகாரம் குறித்தும் அறிந்து கொள்ளும் உரிமை என்பது பேச்சுரிமை, எழுத்துரிமையிலிருந்து பெறப்படுகிறது'' என்று 1975இல் மேற்படி வழக்கின்போது உச்சநீதி மன்றம் தீர்ப்புச் சொன்னது.

 

பின்னர் 1982 மற்றும் 1995இல் இரு வேறு வழக்குகளின் மீது தீர்ப்புகள் சொன்ன போதும், ""தகவல் அறியும் உரிமையை உள்ளடக்கியதுதான் பேச்சுரிமையும் எழுத்துரிமையும்'' என்று உச்சநீதி மன்றம் கூறியது. ஆனால், ஒவ்வொருமுறை இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் செய்து அம்பலப்படும்போதும் அரசு நிர்வாக இரகசியச் சட்டத்தின் பின்னே ஒளிந்து கொண்டு, நாட்டின் நலன் கருதி, பாதுகாப்புக் கருதித் தகவல்கள் தரமுடியாது என்று ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் தப்பித்துக் கொண்டு வருவதுண்டு. குறிப்பாக, இராணுவம், துணை இராணுவம், போலீசின் ஏராளமான அராஜகக் கொடுஞ்செயல்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் பல்வேறு ஆயுதபேர ஊழல்கள் பற்றிய புகார்கள் வரும்போதெல்லாம் நாட்டின் பாதுகாப்பு இரகசியங்கள் என்று கூறித் தகவல் அறியும் உரிமை முற்றாகப் பறிக்கப்பட்டது.

 

இதனால், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஆட்சியாளர்கள் யாரானாலும் இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை. 1990களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, ஏற்கெனவே இந்திய அரசு கடைப்பிடித்துவரும் நிர்வாக இரகசியங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நடைமுறை பன்னாட்டுத் தொழில் கழகங்களின் மூலதன நலன்களுக்குத் தடையாக இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, அந்த அந்நிய ஏகபோகங்கள் திறந்த அரசு நிர்வாகத்தையும், அதன் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமையையும் கோரினார்கள்.

 

எனவேதான் முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளைவிட அதிக ஆர்வத்தோடு தகவல் அறியும் சட்டம் இயற்றுவதற்கான இயக்கத்தை, ஏகாதிபத்திய நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் நடத்தின. இவற்றின் விளைவாக 2002ஆம் ஆண்டு தகவல் சுதந்திரச் சட்டம் ஒன்றை பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசு ஒரு குறைப்பிரசவமாகப் பெற்றெடுத்தது. ஆனால், இச்சட்டமும் மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. அதன் போதாமையை உணர்ந்த ஏகாதிபத்திய பன்னாட்டுத் தொழில் கழகங்களின் முன்முயற்சியினால், சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழு வேறொரு தகவல் அறியும் சட்டத்தைக் கொண்டு வரும்படி நிர்பந்தித்து, 2005, மே மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

மேலோட்டமான முதல் நோக்கில், தகவல் அறியும் சட்டம் என்பது பிரமிக்கத்தக்கவாறான ஜனநாயக உரிமை போலவே தெரிகிறது. மத்திய, மாநில அரசுகள், உள்ளூராட்சி அமைப்புகள், இன்னும் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு ஓரளவு நிதி உதவி பெற்று இயக்கப்படும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட எல்லா அமைப்புகள் அதிகாரிகளிடமும் இருந்து தேவையான தகவலைப் பெறும் உரிமையை ஒவ்வொரு குடிமக்களுக்கும் இச்சட்டம் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களிடமிருந்து கூட அரசாங்கத்தின் மூலம் தகவல் பெறும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு இரகசியங்கள், அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ள விவகாரங்கள் தவிர, எல்லா விஷயங்களிலும் தகவல்களைக் கேட்டுப் பெற முடியும்.

 

சட்டம் நிறைவேற்றப்பட்ட 120 நாட்களில், தேர்தல் ஆணையத்துக்கு நிகரானத் தன்னதிகாரம் கொண்ட மத்திய, மாநில அளவிலான தகவல் ஆணையம் நிறுவப்படும்; தகவல் அறியும் உரிமை மறுக்கப்படும் ஒவ்வொரு வழக்கையும் ஒரு நடுவர் மன்றம் போல விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்த ஆணையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்ட நூறு நாட்களுக்குள் ஒவ்வொரு அலுவலகமும் பொதுமக்களுக்கான தகவல் தரும் அதிகாரிகளை நியமித்து விடவேண்டும்.


எந்தவொரு நபரும் தகவல் அதிகாரிகளிடம் மனுப்போட்டு 30 நாட்களுக்குள் வேண்டியதைப் பெறலாம். தொடர்பு முகவரி தவிர வேறு எந்த விவரமும் தரத் தேவையில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவரிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மற்றவரிடம் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள், அதாவது தகவல் கோரி விண்ணப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கப்படாவிட்டால் தகவல் அதிகாரிகள் மீது அபராதத் தண்டனையாக நாளொன்றுக்கு ரூ. 250 விதிக்கப்படும். அதிகபட்சம் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதுதவிர, வேண்டுமென்றே தகவல் தர மறுக்கும் அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

சரி தகவல் அறியும் உரிமையை வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்கள் என்ன செய்ய முடியும் என்று பலரும் எண்ணக் கூடும்.

 

மஜுலூம் நடாஃப் என்னும் ""ரிக்ஷா'' தொழிலாளி, இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஒரு வீடு பெறுவதற்கு முயன்றபோது அதிகாரிகளால் பந்தாடப்பட்டிருக்கிறார். எந்த அதிகாரியால் தனக்குரிய வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதை அறியும் முயற்சியாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ், அவர் மனுப் போட்டதும் அரச மரியாதையுடன் வரவேற்றுக் கடன் வழங்கி, மனுவைத் திரும்பப் பெறும்படி நிர்பந்திக்கப்பட்டார். நன்னு என்ற கிழக்கு தில்லியில் வாழும் தினக்கூலித் தொழிலாளி தொலைந்துபோன தனது குடும்ப அட்டைக்கு நகல் அட்டை தரும்படி நடையாய் நடந்து, இறுதியில் தன்னை இப்படி இழுத்தடிக்கும் அதிகாரி பற்றிய விவரத்தைக் கேட்டு, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு போட்டார். உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு வரவழைத்து தேநீர் உபசரணையோடு, மனுவை விலக்கிக் கொள்ளும்படிக் கோரி, குடும்ப அட்டையும் வழங்கப்பட்டது.

 

ஆனால், இதெல்லாம் தகவல் அறியும் சட்டத்தின் விளைவுகள் பாதிப்புகள் குறித்து முழுமையõக விழித்துக் கொள்ளும் முன்பு அதிகார வர்க்கம், அதிலும் கீழ்நிலை அதிகாரிகள் துவக்கநிலைப் பதற்றத்தின் காரணமாக நிகழ்ந்தது. ஆனால், விரைவிலேயே விழித்துக் கொண்ட அதிகார வர்க்கமும், ஆட்சியாளர்களும் தகவல் அறியும் முயற்சிகளுக்குக் கடுமையான எதிர்ப்புக் காட்டத் தொடங்கிவிட்டனர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட சில மாதங்களிலேயே, தமிழ்நாட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில், குறிப்பிட்ட காலத்திற்குள் தர மறுத்துவிட்ட அதிகாரிகள் மீது மாநிலத் தகவல் ஆணையம் "நோட்டீசு' கொடுத்திருக்கிறது. இப்படி நாடு முழுவதும் பல ஆயிரம் வழக்குகள் குவிந்திருக்கின்றன.

 

""கோப்புக்களில் உள்ள பதிவுகள், ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்அஞ்சல்கள், கருத்துக்கள், ஆலோசனைகள்...'' ஆகிய அனைத்தும் அடங்கிய தகவல்களை அறியும், கேட்டுப் பெறும் உரிமை 12(எஃப்) பிரிவு இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அரசுக் கோப்புகளில் உள்ள ""கோப்புக் குறிப்புகளை''க் கேட்டு அறியும் உரிமையை இச்சட்டம் உள்ளடக்கி இருக்கிறது. இந்தக் கோப்புக் குறிப்புகள் மட்டும்தான், எந்தவொரு நிர்வாகச் செயல்பாட்டிலும், குறிப்பானதொரு முடிவை என்ன காரணத்திற்காக, யார் எடுத்தார்கள், மற்றவர்கள் அதன் மீது என்ன கருத்துக்கள், ஆலோசனைகள் கூறினார்கள் என்பதைத் தெளிவாக அறிய தரமுடியும்.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தக் கோப்புக் குறிப்புகளை யாருக்கும் தரக்கூடாது என்பதில் அரசுத் தலைவர், முப்படைத் தளபதிகள், உச்சநீதி மன்றம், மைய அலுவலர் சேர்க்கை ஆணையம், மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதை ஏற்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டு வந்து கோப்புக் குறிப்புகளைக் கோருவதற்குத் தடைவிதிப்பதென்று மைய அரசு முடிவு செய்து நாடாளுமன்றத்தில் அத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நாளும் குறித்தது.

 

தகவல் அறியும் உரிமையிலிருந்து கோப்புக் குறிப்புகளை விலக்கி வைப்பது என்பது த.அ. சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்வது; முடக்கி வைப்பது ஆகும். எடுத்துக்காட்டாக பின்வரும் முறைகேடுகள் நடந்திருப்பது கோப்புக் குறிப்புகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. டெல்லி குடிநீர் வாரியத்திற்கான குடிநீர் மற்றும் வடிகால் திட்டத்துக்கான ஆய்வு, உலக வங்கியின் தலையீடு காரணமாக ""பிரை வேர் அவுஸ் கூப்பர்ஸ்'' என்று நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங்கின் வலதுகரமும், சீடரும், திட்டக் கமிசன் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியாவின் மகன், திட்ட ஆலோசகர் பதவியில் நேர்காணலோ, விளம்பரமோ, போட்டியோ இல்லாமல் நியமிக்கப்பட்டார். டெல்லி உயர்நீதி மன்றத்தில் டெல்லி வளர்ச்சிக் குழுமம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, கிழக்கு டெல்லியில் ஒதுக்குவதாக இருந்த மனைகள் குற்றக் கும்பலுக்குத் தாரை வார்க்கப்பட்டன. இதுபோன்ற முறைகேடுகள் எப்படி யாரால் நடக்கின்றன என்பது கோப்புக் குறிப்புகளில் இருந்து மட்டுமே தெரியவருகின்றன.

 

அதனால்தான், 2006 ஜனவரியில் முதன்முதலாக கோப்புக் குறிப்புகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தரும்படி மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டபிறகு, எல்லா வழக்குகளிலும் கோப்புக் குறிப்புகளை தரமுடியாது என்று சம்பந்தப்பட்ட அமைச்சரகங்கள் மறுத்து வருவதோடு, தமது இணைய தளத்திலும், தமது முடிவை பிரசுரித்துள்ளன. இதையே சட்டத்திருத்தமாகக் கொண்டு வரும் முடிவை, பல தன்னார்வக் குழுக்களின் போராட்டங்களுக்குப் பிறகு, ஏகாதிபத்தியக் கைக்கூலி மன்மோகன் சிங் அரசு இப்போதைக்குக் கைவிட்டுள்ளது. ஆனால், துறைவாரியாக அதை அமலாக்கி வருகிறது.

 

இந்த இலட்சணத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட அமலாக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கருத்தரங்கை மூன்று நாட்கள் டெல்லியில் கொண்டாடியிருக்கிறது. இதன் மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வந்து தனது ஜனநாயக மாட்சியைப் பீற்றிக் கொள்ள எத்தணித்தது. ஆனால் அதன் போலித்தனம் இந்த நிறைவு விழாவின்போதே அம்பலப்பட்டுப் போனது. நிறைவுக் கருத்தரங்கில் உரையாற்ற மன்மோகன் வந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் கருத்தரங்குக்கு வந்த அழைப்பாளர்கள் அனைவரும் தடவித்தடவிச் சோதனை செய்யப்பட்டார்கள். முகம் துடைக்கும் காகிதங்கள் கூட பறிமுதல் செய்யப்பட்டன. கைக்குட்டைகள் கூட அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை; ""டோக்கன்''கள் வழங்கி அரங்கிற்கு வெளியிலேயே கைக்குட்டைகள் வைக்கப்பட்டன. கைக்குட்டையோ, முகம் துடைக்கும் தாளோ முழக்கங்கள் எழுதி ஆர்ப்பாட்டம் நடத்தி விடுவார்கள் என்று ஆட்சியாளர்கள் அஞ்சியிருக்கிறார்கள். முதல்நாள் அப்துல் கலாமின் உரைக்குப் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டம் நீர்த்துப் போகும்படி சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாகத்தான் இந்தப் ""பாதுகாப்புக் கெடுபிடி.'' காற்றில் இலை அசைந்தால் கூட ஆளும் வர்க்கங்கள் ஆட்சியாளர்கள் நடுநடுங்குவார்கள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது!


(தொடரும்)