11_2006.jpg

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதில் ஊழலும், மோசடிகளும் புழுத்து நாறுவதை தலைமைக் கணக்கு அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்திக் காட்டி விட்டது.

பொதுத்துறையைச் சூறையாடுவதற்கென்றே உருவாக்கப்பட்டிருப்பதுதான் தனியார்மயமாக்கம்; தரகுப் பெருமுதலாளிகள் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கொள்ளைக்காக நாட்டின் பொதுச் சொத்தைக் கூறுபோட்டு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்ப்பதுதான் தனியார்மயமாக்கம். இந்த உண்மையை நாட்டுப் பற்றாளர்களும் புரட்சிகரஜனநாயக சக்திகளும் சொன்னால், அவர்கள் நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பழமைவாதிகள் மக்கள் விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்; தனியார்மயத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால், இப்போது இந்திய அரசின் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியே, தனியார்மயம் என்றால் பொதுச் சொத்தைச் சூறையாடுவதுதான் என்று தனது அறிக்கையில் நிரூபித்துள்ளார்.

 

கடந்த ஆகஸ்ட் இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி (இஅஎ)யின் அறிக்கையானது, 1999 முதல் 2003ஆம் ஆண்டு வரை 9 அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்ட விவகாரத்தைத் தணிக்கை செய்து, அதில் நடந்துள்ள மோசடிகள், சதிகள், ஊழல், தில்லுமுல்லுகளை வெளிக் கொணர்ந்துள்ளது. இந்தக் காலத்தில் பதவியிலிருந்த பா.ஜ.க. கூட்டணி ஆட்சியாளர்கள் விதிமுறைகளையும் எச்சரிக்கைகளையும் மீறி அவசர அவசரமாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ற முறைகேடுகளையும், தர குப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கோடிகோடியாய் ஆதாயமடைந்துள்ளதையும், நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதையும் இந்த அறிக்கை புட்டுப் புட்டு வைத்துள்ளது. இந்த அறிக்கையை முழுமையாக வெளியிடப் பக்கங்கள் போதாது என்பதால், சுருக்கமாக வகைமாதிரிக்கு ஒரு சில மோசடிகளை மட்டும் பார்ப்போம்.

 

அரசுத்துறை நிறுவனமான மாடர்ன் ஃபுட்ஸ், நல்ல இலாபத்தில் இயங்கி வந்த மிகப் பெரிய ரொட்டி தயாரிப்பு நிறுவனமாகும். 2000ஆவது ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியில் இந்த நிறுவனம், பன்னாட்டு ஏகபோக கம்பெனியான யுனி லீவருக்கு விற்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மையமான சொத்துக்களை மதிப்பீடு செய்வதில் பல தில்லுமுல்லு மோசடிகள் நடந்துள்ளன. குறிப்பாக, இந்நிறுவனத்துக்குச் சொந்தமான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தாவிலுள்ள நகர்ப்புற நிலங்கள் குறைமதிப்பீடு செய்யப்பட்டு, அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இவற்றை வீட்டுமனைகளாக்கி விற்று யுனிலீவர் நிறுவனம் கோடி கோடியாய் ஆதாயமடைந்துள்ளது. ஊழியர்களை வேலை நீக்கமோ, ஆட்குறைப்போ செய்யக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி மாடர்ன் ஃபுட்ஸ்ஐக் கைப்பற்றிய யுனிலீவர் நிறுவனம், பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. மாடர்ன் ஃபுட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றிய பிறகு, விற்பனைக்குப் பிந்திய இழப்புகளை ஈடுசெய்ய 17.48 கோடி ரூபாய் தரவேண்டும் என்று யுனிலீவர் நிறுவனம் கோரியதை எவ்விதப் பரிசீலனையும் இன்றி பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டது. இதில், ரூ.12.64 கோடியை அந்நிறுவனத்துக்கு பா.ஜ.க. அரசு செலுத்தி விட்டது. எஞ்சிய தொகையை எப்போது செலுத்துவது என்பது பற்றி பரிசீலனையில் உள்ளது.

 

அலுமினிய உற்பத்தியில் ஈடுபட்டு வந்த அரசுத்துறை நிறுவனமான ""பால்கோ''வின் பங்குகள் ஸ்டெர்லைட் என்ற தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனத்துக்கு 2001ஆம் ஆண்டில் விற்கப்பட்டன. பால்கோவின் மையமான சொத்துக்களை குறைமதிப்பீடு செய்து அவசர அவசரமாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சி விற்பனை செய்துள்ளது. பால்கோவுக்குச் சொந்தமான நிலங்களும் வீட்டுமனைகளும் மதிப்பீடு செய்வதிலிருந்தே நீக்கப்பட்டு, குத்துமதிப்பாக விற்கப்பட்டுள்ளன. விற்பனைக்குப் பிந்திய இழப்பீடுகளை ஈடுசெய்ய ரூ. 16.72 கோடி தரவேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் கோரியதை பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக அறிவித்தது.

 

இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு 2001ஆம் ஆண்டில் தாரை வார்க்கப்பட்டது. தொலைதொடர்புத் துறைக்கு அவசியமான சி.டாட் ஸ்விட்சுகளைத் தயாரித்துவரும் முக்கிய நிறுவனமான இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ், விற்கப்படும்வரை நல்ல இலாபத்தை ஈட்டி வந்த அரசுத்துறை நிறுவனமாகும். இமாச்சல் ஃப்யூச்சர்ஸ் நிறுவனம் மட்டுமே அதன் பங்குகளை வாங்க முன்வந்தது. வேறு போட்டியாளர்களே இல்லாதபோதிலும், விதிமுறைகளை மீறி அந்த நிறுவனத்திடமே அற்ப விலைக்கு பங்குகள் விற்கப்பட்டன. ரூ. 55 கோடிக்கு பங்குகள் விற்கப்பட்ட பிறகு, விற்பனைக்குப் பிந்திய இழப்பீடாக அந்நிறுவனம் ரூ. 56.49 கோடி தரக் கோரியது. இதை பரிசீலிப்பதாக பா.ஜ.க. கூட்டணி அரசு ஏற்றுக் கொண்டது. அதாவது, பங்கு விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் ரூ. 55 கோடி. விற்பனைக்குப் பிந்திய இழப்பீட்டுக்காக இமாச்சல் ப்யூச்சர்ஸ் நிறுவனத்துக்கு அரசு தரப்போவது ரூ. 56.49 கோடி. தனியார்மயத்தால் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அனைத்தும் இப்படி மீண்டும் தனியார் முதலாளிகளால் பறித்துக் கொள்ளப்படுவதோடு, கூடுதலாக ரூ. 1.5 கோடியை இழந்து அரசு நட்டப்படவுள்ளது என்று அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இதுதவிர சென்னையிலுள்ள இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவன நிலத்தின் மதிப்பு மிகமிகக் குறைவாக மதிப்பிடப்பட்டுத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. சென்னை சார் பதிவாளர் அலுவலக விதிகளுக்கு எதிராக, வேண்டுமென்றே நிலத்தின் மதிப்பு மிக அற்பமாகக் குறிப்பிடப்பட்டு அவசரமாக விற்கப்பட்டுள்ளது.

 

அனைத்துலகத் தொலைதொடர்புக்கும், இணையதள சேவைக்கும் ஒரே ஏகபோக அரசுத்துறை நிறுவனமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (வி.எஸ்.என்.எல்)டின் பங்குகள் தரகுப் பெருமுதலாளியான டாடா நிறுவனத்துக்கு 2002ஆம் ஆண்டில் விற்கப்பட்டன. வெளிநாடுகளுக்கான தொலைபேசி சேவை மூலம் இலாபகரமாக இயங்கி வந்த இந்த நிறுவனம், டாடாவின் ஆதாயத்துக்காகவே தனியார்மயமாக்கப்பட்டது. பங்குகளை விற்பதற்கு முதல் நாளன்று வி.எஸ்.என்.எல். நிறுவனம், வருவாய்த் துறைக்கு எதிரான வரிவருவாய் வழக்கின் மூலம் ரூ.1400 கோடி ஆதாயமடைந்திருந்தது. இந்தத் தகவலை பங்கு விற்பனை அமைச்சகம் பங்குகளை வாங்குவோருக்குத் தெரிவித்து, சற்று தாமதித்து விற்பனை செய்திருந்தால் இன்னும் அதிக விலைக்கு பங்குகளை விற்றிருக்க முடியும். வரிவருவாய் வழக்கின் மூலம் கிடைத்த இந்த ஆதாயத் தொகை வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சொத்து மதிப்பில் சேர்க்கப்படாமல் அவசர அவசரமாக பங்குகள் விற்கப்பட்டுள்ளன.

 

அதாவது, வி.எஸ்.என்.எல். பங்கு விற்பனை மூலம் அரசுக்குக் கிடைத்த தொகை ரூ. 1439.25 கோடி. பங்கு விற்பனையின்போது, வி.எஸ்.என்.எல். இன் சொத்து மதிப்பில் சேர்க்கப்படாத, வரி வருவாய் வழக்கில் கிடைத்த ஆதாயத் தொகை ரூ.1400 கோடி. ஆக, வி.எஸ்.என்.எல். பங்கு விற்பனை மூலம் அரசுக்குக் கிடைத்த நிகர வருவாய் வெறும் 39.25 கோடி மட்டுமே. இந்த மோசடியை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

 

இதுதவிர, வி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குச் சொந்தமான 1230 ஏக்கர் நிலத்தில் 773 ஏக்கர் உபரி நிலம் என்றும் அதற்குத் தனியாக விலை நிர்ணயம் செய்து சொத்து மதிப்பில் சேர்த்து, அதன்பிறகு பங்குகளை விற்க வேண்டும் என்றும் தொலைதொடர்பு அமைச்சகம் வி.எஸ்.என்.எல். பங்குகளை விற்பதற்கு 10 நாட்கள் முன்னதாகவே பங்கு விற்பனை அமைச்சகத்திடம் பரிந்துரைத்தது. ஆனால், பா.ஜ.க. அரசின் பங்கு விற்பனை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, இந்த உபரி நிலத்துக்கு சல்லிக்காசு கூடப் பெறாமல் டாடாவுக்குத் தாரை வார்த்துள்ளார். இந்த உபரி நிலத்தின் மீது டாடா உரிமை கொண்டாட அனுமதிப்பது முறைகேடானது என்றும் பங்கு விற்பனை முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த உபரி நிலத்தின் மூலம் எவ்வித வருவாயும் அரசுக்குக் கிடைக்காமல் போயுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி சமர்ப்பித்துள்ள அறிக்கை.

 

அரசுத்துறை நிறுவனமான பாரதீப் பாஸ்பேட்ஸ்இன் பங்குகள் 2002ஆம் ஆண்டில் ரூ. 151.70 கோடிக்கு ஜுவாரி மாரோக் பாஸ்பேட் என்ற தரகு முதலாளித்துவ நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. விற்பனைக்குப் பிந்திய இழப்பீடாக அந்த நிறுவனம் ரூ. 151.55 கோடி கோரியுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட பா.ஜ.க. அரசு, பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது தனியார்மயமாக்கலால் அரசுக்குக் கிடைத்த வருவாய் அனைத்தும் இப்படி மீண்டும் பங்குகளை வாங்கிய முதலாளிகளுக்கே திருப்பிக் கொடுப்பது பேரிழப்பாகும் என்று சாடுகிறது தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை.

 

இவை எல்லாவற்றையும் விட அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் துத்தநாக தொழிற்சாலையின் பங்குகளை விற்றதில், வெளிப்படையாகவே மோசடிகளும் சூறையாடல்களும் நடந்துள்ளன. துத்தநாக தொழிற்சாலை 2002ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. தொடக்கத்திலேயே பேரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்ததும், தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணையில் இறங்கி அடுக்கடுக்காக பல மோசடிகள் நடந்துள்ளதை அம்பலப்படுத்தினர். துத்தநாக நிறுவனத்தின் சொத்துக்களைப் பற்றி மிகக் குறைவாக மதிப்பீடு செய்த அரசின் ஆலோசக நிறுவனமான ""பரிபாஸ் ஈக்விடீஸ் லிமிடெட்'', விற்பனை முடிந்த மறுநிமிடமே மூடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் முதலாளிகளும் பா.ஜ.க. ஆட்சியாளர்களும் பேர ஏற்பாட்டுக்காக உருவாக்கிய பினாமி நிறுவனம்தான் இது என்று நிரூபணமானது. மேலும், இந்தப் பேரம் பற்றியோ, துத்தநாக நிறுவனத்தின் சொத்து மதிப்பீடு பற்றிய அறிக்கைகளோ, ஆவணங்களோ நிதியமைச்சகத்திடம் இல்லை. அத்தனையும் திட்டமிட்டே பா.ஜ.க. ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு விட்டன.

 

இவைதவிர, கம்ப்யூட்டர் மெயின்டனன்ஸ் கார்ப்பரேஷன், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 19 பெரும் ஓட்டல்களை விற்ற விவகாரம் என அடுக்கடுக்காக அரசுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதையும், அதில் நடந்துள்ள மோசடிகளையும் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளது தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை.

 

மோசடிகளையும் சூறையாடல்களையும் பற்றிப் பட்டியலிட்டுள்ள போதிலும், இதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ, கொள்ளையடித்த சொத்துக்களைப் பறிமுதல் செய்யவோ தணிக்கை கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டி பரிந்துரைகளைக் கூறுவதுதான் இந்த அமைப்பின் பணி. முதலாளித்துவ அரசியலமைப்பு முறைக்கே உரித்தான, பரஸ்பர சோதித்தலும் அதிகார சமநிலையும் என்ற ஏற்பாட்டின்படி, அதிகாரவர்க்கம் அரசாங்கத்தினிடையே ஜனநாயகம், சிறந்த நிர்வாகம் என்ற கொள்கையை செயல்படுத்துவதன் பேரில் உருவாக்கப்பட்டுள்ளது தணிக்கை கட்டுப்பாடு அதிகாரிகள் என்ற அமைப்பு.

 

எனவேதான், தணிக்கை கட்டுப்பாடு அதிகாரியின் அறிக்கை எனும் பல் பிடுங்கப்பட்ட பாம்பு சீறுவதைப் பார்த்து, முந்தைய பா.ஜ.க. ஆட்சியாளர்களும் தரகுப் பெருமுதலாளிகளும் கைகொட்டிச் சிரித்து ஏளனம் செய்கின்றனர். முதலாளிகள் பொதுச் சொத்தைச் சூறையாடுவதற்கென்றே உருவாக்கப்பட்ட பங்கு விற்பனைத் துறையின் முன்னாள் பா.ஜ.க. அமைச்சரான அருண்ஷோரி, ""இந்த அறிக்கையானது குறுகிய பார்வை கொண்டது; நடைமுறைக்கு ஒவ்வாத பரிந்துரைகளைக் கூறுகிறது; இப்படி முட்டுக்கட்டைகள் போட்டால் பங்கு விற்பனை எனும் அரசின் கொள்கையைச் செயல்படுத்தவே முடியாமல் போய்விடும்'' என்று மிரட்டுகிறார். அதாவது, தனியார்மயமாக்கம் என்பது அரசின் கொள்கை; தனியார்மயம் என்றால் பொதுச் சொத்தைச் சூறையாடுவது; சூறையாடுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் விதிமுறைகளும் ஒழுங்குகட்டுப்பாடுகளும் போட முடியுமா? அப்படிப் போட்டால் அரசின் கொள்கையை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பதுதான் "தேசபக்த' பா.ஜ.க.வின் "அறிவுஜீவி' அருண்ஷோரி எழுப்பும் கேள்வி.

 

அரசாங்கத்தின் பொதுச்சொத்தை சுருட்டிக் கொண்டால், முன்பெல்லாம் அதற்குப் பெயர் ஊழல். இப்போது அதற்குப் பெயர் தனியார்மயம். இதுதான் அரசின் கொள்கை. முதலாளிகள் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்வதுதான் அரசின் கொள்கையா என்று நீங்கள் சந்தேகப்படலாம். சந்தேகமே வேண்டாம்; இதுதான் அரசின் கொள்கை என்கிறது உச்சநீதி மன்றம். அரபிக் கடலில் உள்ள 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பன்னா, முக்தா எனும் இரு எண்ணெய் வயல்களை வெறும் 12 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் என்ரான் கூட்டணிக் கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததற்கு எதிராக நடந்த வழக்கில், இது அரசின் கொள்கை என்று தீர்ப்பளித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது, உச்சநீதி மன்றம்.

 

தனியார்மயமாக்கம் என்பது இலஞ்சமயமாக்கம்தான் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார ஆய்வாளரான ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தனது ""உலகமயமாக்கமும் அதன் அதிருப்திகளும்'' நூலில் குறிப்பிடுகிறார். நரசிம்மராவ் மன்மோகன் சிங் ஆட்சியில் தனியார்மயத்தைத் தொடங்கி வைத்து முதலாளிகளின் கொள்ளைக்கு சேவை செய்து இலஞ்சமயமாகிய காங்கிரசுக் கட்சி, கோடீசுவர கட்சியாகியது. இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தி, இலஞ்ச ஊழலில் பா.ஜ.க. ஊதிப் பெருத்தது. தனியார்மயமாக்கலால் பல்லாயிரம் கோடிகள் ஏப்பம் விடப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்திலோ அதற்கு வெளியிலோ இவ்விரு கட்சிகளும் வாய் திறக்கவில்லை.

 

இப்போது பா.ஜ.க.வுக்குப் போட்டியாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம், தேசிய அலுமினிய நிறுவனம் ஆகிய அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சித்து வரும் காங்கிரசு கூட்டணி அரசு, இவையெல்லாவற்றையும் விஞ்சும் வகையில் முதலாளிகள் சூறையாடுவதற்காகவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை வேகமாக நிறுவி வருகிறது. இந்நிலையில் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதாலோ அல்லது போலி கம்யூனிஸ்டுகள் கோருவது போல மையப் புலனாய்வுத் துறை மூலம் உயர்மட்ட விசாரணை நடத்துவதாலோ தனியார்மயம் என்னும் பகற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திடமுடியாது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாக்கம்தான் அரசின் கொள்கையாக உள்ள நிலையில், பொதுச் சொத்தைச் சூறையாடி, தொழிலாளர்களின் வேலையைப் பறித்து, விவசாயிகளைத் தற்கொலைச் சாவுக்குத் தள்ளியுள்ள மறுகாலனியாக்கத்துக்கும், அதைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் கைக்கூலி ஆட்சியாளர்களுக்கும் எதிராக நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டுப் போராடி, உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவுவதைத் தவிர இனி வேறென்ன வழி இருக்கிறது?

 

அன்பு