Language Selection

புதிய ஜனநாயகம் 2006

11_2006.jpg

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து மணிப்பூர் மாநில மக்கள் நடத்தி வரும் போராட்டம், இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டி வருகிறது.

நம் நாட்டு இளைஞர்களுக்கு ஐஸ்வர்யாராயைத் தெரிந்த அளவிற்கு ஐரோம் சானு ஷர்மிளாவைத் தெரியாது. ஷர்மிளா, வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண். அம்மாநிலத்தில் இராணுவம் நடத்திவரும் அட்டூழியங்களுக்குச் சட்டபூர்வ அந்தஸ்தைக் கொடுக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் எனக் கோரி ஆறு ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார், அவர்.


ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு அருகில் உள்ள மாலோம் என்ற இடத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற 10 அப்பாவிகளை இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றது. இப்படுகொலையை விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை, இந்திய இராணுவம் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் காட்டி முடக்கிப் போட்டது. இச்சட்டத்தின்படி, மைய அரசின் அமைதியின்றி, மணிப்பூரில் பணிபுரியும் சாதாரண சிப்பாயைக் கூட, எந்தவொரு நீதிமன்றமும் விசாரணைக்குக்கூட அழைக்க முடியாது. அந்தப் படுகொலைக்கு நீதி கோரி மணிப்பூர் மாநிலமெங்கும் போராட்டங்கள் வெடித்த பொழுது ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரில் இருந்து முற்றிலுமாக நீக்கக் கோரி, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

 

ஷர்மிளாவின் கோரிக்கையைப் பரிசீலிக்க மறுத்த அரசு, ""தற்கொலைக்கு முயற்சி செய்ததாக''க் குற்றஞ்சுமத்தி, அவரைக் கைது செய்தது. சிறையில் வலுக்கட்டாயமாக உணவு கொடுக்க முயன்று தோற்றுப் போன அதிகார வர்க்கம், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தது. அங்கு அவருக்கு மூக்கின் வழியே குழாய்கள் திணிக்கப்பட்டு, திரவ உணவு வழங்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக, அவர் மருத்துவமனைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் ஐந்து முறை அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவு செலுத்தப்படுகிறது.

 

கடந்த ஆறு ஆண்டுகளில் ஆறுமுறை மருத்துவமனைக் காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், விடுவிக்கப்பட்ட மறுநாளே, ""தற்கொலைக்கு முயன்றதாக''க் கூறி, மீண்டும் மருத்துவமனைக் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, திரவ உணவு கொடுக்கும் அரசின் இரக்க நாடகம் தொடங்கிவிடும். இப்படித்தான் அவரின் போராட்டமும், அவரை உயிரோடு வைத்திருக்கும் அரசின் "அக்கறையும்' தொடர்ந்து நடந்து வருகின்றன. ""என் கோரிக்கையைப் பற்றி முடிவு எடுக்காமல், என்னைச் சிறை வைப்பதில்தான் அரசு குறியாக இருக்கிறது'' என்கிறார், ஷர்மிளா.

 

மணிப்பூர் மாநிலத்தில் 1980ஆம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின்படி, ஒரு இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே பயங்கரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். இராணுவம் துணை இராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கூட, தனது மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக் கொல்ல முடியும்; நீதிமன்றத்தின் ""வாரண்ட்'' இல்லாமலேயே, எந்த இடத்திலும்/வீட்டிலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்த முடியும்; சந்தேகப்படும் நபர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற முடியும்; அழிக்க முடியும்; இராணுவத்தால் கைது செய்யப்படுபவர்களை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மணிப்பூரில் கடந்த 26 ஆண்டுகளில், ஏறத்தாழ 26,000 பேர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சட்டம் கொடுத்திருக்கும் பாதுகாப்பால், இப்படுகொலைகளுக்காக ஒரு இராணுவ சிப்பாய்கூடத் தண்டிக்கப்படவில்லை.

 

மணிப்பூரில் இப்பாசிசச் சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்தே அதை நீக்கக் கோரும் போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இம்பாலைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா தேவி என்ற இளம் பெண்ணைத் தீவிரவாதி என முத்திரை குத்தி, ""ராஷ்டிரிய ரைபிள்ஸ்'' என்ற துணை இராணுவப் படை, அவரது வீட்டில் இருந்து தூக்கிக் கொண்டு போனது. விசாரணை என்ற பெயரில் அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்திய இராணுவக் கும்பல், அதன்பின் அவரைச் சுட்டுக் கொன்றது. இராணுவம் நடத்திய பாலியல் வன்புணர்ச்சி தெரியக் கூடாது என்பதற்காகவே, அவரது பெண் உறுப்பைச் சுட்டுச் சிதைத்திருந்தனர். இப்படுகொலையை அடுத்து, இப்பாசிச சட்டத்தை நீக்கக் கோரும் போராட்டம் என்றுமில்லாத உச்சத்தை அடைந்தது.

 

45 வயதிற்கு மேற்பட்ட தாய்மார்களும், மூதாட்டிகளும், ஜூலை 15, 2004 அன்று தங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு, நிர்வாணமாக, ""இந்திய இராணுவமே, எங்களையும் பாலியல் பலாத்காரப்படுத்து'' என்ற பதாகையைப் பிடித்துக் கொண்டு, ராஷ்டிரிய ரைபிள்ஸின் தலைமையகம் முன் நடத்திய போராட்டம், இந்திய அரசின் கோர முகத்தை உலகெங்கும் அம்பலப்படுத்தியது; ஆகஸ்டு 15, 2004 சுதந்திர தினத்தன்று, இச்சட்டத்தை நீக்கக் கோரி பேபம் சித்தரஞ்ஜன் என்ற இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இப்போராட்டத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல ""அபுன்பா லுப்'' என்ற முன்னணி கட்டியமைக்கப்பட்டது.

 

இதனையடுத்து மணிப்பூருக்குப் பறந்துவந்த பிரதமர் மன்மோகன் சிங், இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற தாய்மார்களைச் சந்தித்தார். இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கமிட்டியொன்றை அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அவர் திரும்பிச் சென்ற மறுநிமிடமே, நிர்வாணப் போராட்டத்தில் கலந்து கொண்ட தாய்மார்கள் அனைவரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். எனினும் அவர்களுள் ஒருவர் கூட 73 வயதான மூதாட்டிகள்கூடப் பிணை கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்த அடக்குமுறைக்குப் பிறகும் போராட்டம் தொய்ந்து போகாமல் வீச்சாக நடந்து வந்ததால், மூன்று மாதங்கள் கழித்து, அத்தாய்மார்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஜீவன் ரெட்டி கமிசன் அமைக்கப்பட்டது.

 

வடகிழக்கிந்திய மாநிலங்கள் முழுவதிலும் பல பொது விசாரணைகளை நடத்திய இவ்விசாரணைக் கமிசன் மைய அரசிற்கு அளித்துள்ள அறிக்கையில், ""அடக்குமுறையின் சின்னமாக, வெறுக்கப்படும் பொருளாக, பாரபட்சமாக நடந்து கொள்வதற்கும், அடக்குமுறைக்கும் பயன்படும் கருவியாக இச்சட்டம் மாறிவிட்டது... வடகிழக்கிந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இராணுவம் வெளியேறத் தேவையில்லை என விரும்பினாலும், இச்சட்டத்தை முற்றிலுமாக நீக்கத்தான் வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

 

""இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திலேயே, சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து இராணுவத்தினரைப் பாதுகாக்கக் கூடிய பிரிவுகள் இருக்கும் பொழுது, இன்னொரு சட்டம் தேவையற்ற ஒன்று. அதேசமயம், தெரிந்தே இராணுவத்தினர் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்'' என்றும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

 

இந்த கமிட்டியின் அறிக்கை இராணுவத்தினரை ""அம்போ'' என்று கைவிட்டு விடவில்லை. ஒரே உறையில் இரண்டு கத்திகள் தேவையற்ற ஒன்று என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. மேலும், இக்கமிட்டியின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் அரசுக்குக் கிடையாது. எனினும், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட ஜீவன்ரெட்டி கமிசன் அறிக்கையை, பொது மக்கள் அறியும்படி வெளியிடக் கூட மறுத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு.

 

இப்பொழுது, மணிப்பூர் மாநில மக்கள் இந்த அறிக்கையை வெளியிடக் கோரியும் போராடத் தொடங்கி விட்டனர். குறிப்பாக, ஐரோம் ஷர்மிளா, தன்னை மாநில அரசு சம்பிரதாயமாக விடுவித்த உடனேயே, அதிகார வர்க்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, டெல்லிக்கு வந்து, அங்கு தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஆளுங்கும்பலை அதிர்ச்சியடையச் செய்தார். அறிக்கையை வெளியிடாமல் வைத்திருக்கும் மன்மோகன் சிங், தனது அரசின் துரோகத்தனம் அம்பலமாவதைத் தடுக்க, ஷர்மிளாவைக் கைது செய்து, அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் காவலில் வைத்து விட்டார்.

 

ஆயுதம் ஏந்திப் போராடினால், அப்போராட்டத்தை வன்முறை தீவிரவாதம் என முத்திரை குத்துவதோடு, போராளிகளைக் கொல்ல இராணுவத்தை ஏவி விடுகிறார்கள். அமைதியாக, சட்டபூர்வ வழியில் போராடினால், கைது செய்து சிறைக்குள் தள்ளி விடுகிறார்கள். உரிமைகளுக்காகப் போராடக் கூடாது; அடிமையாக அடங்கிக் கிடக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் விருப்பம்.

 

பாகிஸ்தானில் நேரடியான இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்றால், வடகிழக்கிந்தியாவின் அசாமிலும், மணிப்பூரிலும், நாகலாந்திலும் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் மறைமுகமான வழியில் சட்டபூர்வ இராணுவ சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது. ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பது போல, இத்தேசிய இன மக்களை இந்தியா இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது.

 

போலி கம்யூனிஸ்டுகள் கூட இந்த ஆயுத படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கோருவதில்லை. சி.பி.எம். ஆளும் திரிபுரா மாநிலத்தில், ""தீவிரவாதிகளை'' ஒழிக்க இராணுவ பயங்கரவாதத்தைத் தான் ஏவிவிட்டுள்ளனர். போலி கம்யூனிஸ்டுகளின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும்தான் வடகிழக்கிந்தியாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க., காங்கிரசு போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போலவே, போலி கம்யூனிஸ்டுகளும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடுகிறவர்களைப் பிரிவினவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள். பாகிஸ்தான் சதி என அவதூறு செய்கிறார்கள்.

 

""எங்களின் போராட்டம், வெறும் ஒரு சட்டத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. கௌரவமாக வாழ்வதற்காக நாங்கள் போராடுகிறோம்'' என்கிறார்கள் மணிப்பூர் மாநில மக்கள். அமைதி வழியிலும் ஆயுதம் தாங்கியும் நடந்துவரும் சுயநிர்ணய உரிமைக்கான அப்போராட்டத்தை கைது, சித்திரவதை இராணுவ ஒடுக்குமுறைகளால் ஒழித்துக் கட்டிவிட முடியாது. ஷர்மிளா கூறுவது போல, ""இன்று இல்லாவிட்டால் நாளை, உண்மை வென்றே தீரும்!''

 

மு செல்வம்