Language Selection

புதிய ஜனநாயகம் 2006

11_2006.jpg

தீவிரவாதம், தேசப் பாதுகாப்பு என்ற தேசபக்தி பஜனை, இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை மூடி மறைக்கும் திரையாகப் பயன்படுகிறது.

 

""கார்கில் போரையொட்டி இஸ்ரேல் நாட்டிடமிருந்து பாரக் ஏவுகணை வாங்கியதில் முறைகேடுகளும், ஊழலும் நடந்திருப்பதாக''க் குற்றஞ் சுமத்தியுள்ள மையப் புலனாய்வுத்

 துறை, இந்த ஏவுகணை ஊழல் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்; (முன்னாள்) சமதா கட்சியின் தலைவர் ஜெயா ஜெட்லி; அக்கட்சியின் பொருளாளர் ஆர்.கே.ஜெயின்; மற்றும் முன்னாள் கப்பற்படை தளபதி சுசில்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

 

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டு புதியதல்ல. தெகல்கா.காம் என்ற இணையதளப் பத்திரிக்கை, (இப்பொழுது தெகல்கா வாராந்திர பத்திரிகையாக வெளிவருகிறது) பா.ஜ.கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது இராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதில் முறைகேடுகளும், இலஞ்சஊழலும் புழுத்து நாறுவதை ஒளிப்பேழை படமாகவே எடுத்து அம்பலப்படுத்தியது.

 

ஜெயா ஜெட்லி, இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் அதிகாரப்பூர்வ பங்களாவிலேயே பேரம் பேசி, தெகல்கா நிருபர்களிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு, ஜார்ஜ் பெர்னாண்டசிடம் தான் சொல்வதாகக் கூறி, நிருபர்களை வழி அனுப்பி வைத்து, பொறியில் மாட்டிக் கொண்டார். தெகல்கா ஊழல் என அறியப்பட்ட இந்த இராணுவ பேர ஊழல் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை மட்டுமல்ல, பா.ஜ. கட்சியையும் சந்தி சிரிக்க வைத்தது.

 

ஊழல் அம்பலமான பிறகு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் வேறு வழியின்றிப் பதவி விலகினார். எனினும், வழக்கம் போலவே விசாரணைக் கமிசன் நாடகம் நடத்தப்பட்டு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிரபராதி என அறிவிக்கப்பட்டபின், அவர் மீண்டும் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டார்.

 

தெகல்கா.காம் அம்பலப்படுத்தியிருந்த 14 பேரங்களில், தற்பொழுது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று பேரங்கள் தொடர்பாக மையப் புலனாய்வுத் துறையின் விசாரணை நடத்தப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலொன்றுதான், பாரக் ஏவுகணை வாங்கியதில் நடந்துள்ள ஊழல்.


தெகல்கா.காம் அம்பலப்படுத்தியிருந்த இராணுவ பேர ஊழல்களை விசாரிக்க, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், வெங்கடசாமி கமிசன் நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த நீதிபதி மைய அரசு தனக்குச் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறி பதவி விலகினார். அதன் பின்னர் புக்கன் என்ற நீதிபதி விசாரணையைத் தொடர்ந்து நடத்தினார். இவர் அளித்த அறிக்கையை காங்கிரசு கூட்டணி ஆட்சி வெளியிடவில்லை.

 

எனினும், புக்கன் கமிசன் தன்னை நிரபராதியாக அறிவித்துவிட்டதென்றும்; எனவே இந்த வழக்கே மோசடியானது என்றும் பெர்னாண்டஸ் கூறி வருகிறார். மேலும், ""இந்திரா ராஜீவ் குடும்பத்து ஊழலை அம்பலப்படுத்துவதில் தான் முன்னணியில் நின்றதால், தன்னைப் பழிவாங்குவதற்காகப் போடப்பட்டுள்ள வழக்கு இது; இராணுவத் தளபதிகளின் நிர்பந்தத்தினால்தான் பாரக் ஏவுகணையை வாங்கச் சம்மதித்தேன்; பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல் கலாம் கூட, இந்த ஏவுகணையை வாங்கலாம் என சிபாரிசு செய்திருந்தார்'' எனத் தன்னை நியாயவானாகக் காட்டிக் கொள்ள பல சாட்சியங்களைச் சந்திக்கு இழுத்து வந்துவிட்டார்.

 

ஆனால், மையப் புலனாய்வுத் துறை தனது விசாரணை அறிக்கையில், ""அப்பொழுது இந்திய அரசுக்கு அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல்கலாம், கடற்படைத் தளபதியாக இருந்த சுசில்குமாருக்கு எழுதிய கடிதத்தில் (23.6.99) இசுரேலிடமிருந்து இரண்டு பாரக் ஏவுகணைகளை இறக்குமதி செய்யும் கடற்படையின் திட்டத்தை எதிர்த்திருக்கிறார். ஆனால், இந்த எதிர்ப்பை மீறித்தான் பெர்னாண்டஸ், தளபதி சுசில்குமாரின் திட்டத்துக்கு 28.6.99 அன்று ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.''

 

""அப்பொழுது இராணுவ அமைச்சகத்தின் செயலாளராக இருந்த டி.ஆர். பிரசாத் என்ற அதிகாரியும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவை கமிட்டியின் முடிவை மறுத்துள்ளதோடு, அடுத்துவரும் அரசாங்கம் இம்முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என 30.8.99 அன்று அறிவுறுத்தியிருக்கிறார். அப்பொழுது காபந்து அரசாங்கத்தின் இராணுவ அமைச்சராக இருந்த பெர்னாண்டஸ் இதையும் மீறித்தான் பாரக் ஏவுகணைகளை இறக்குமதி செய்வதற்கு 2.3.2000 அன்று ஒப்புதல் கொடுத்துள்ளார்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும், சமதா கட்சியின் பொருளாளர் ஆர்.கே. ஜெயின் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ""பாரக் இராணுவ பேரத்தை முடிப்பதில் ஜெயா ஜெட்லியும், ஜார்ஜ் பெர்ணாண்டசும் 3% கமிசன் பெற்றதாகவும்; தனக்கு அரை சதவீதமே கமிசன் கிடைத்ததாகவும்'' கூறியுள்ளதை சி.பி.ஐ., பெர்னாண்டசுக்கு எதிரான சாட்சியமாகக் குறிப்பிடுகிறது.

 

சி.பி.ஐ, ஆர்.கே.ஜெயினை மிரட்டி ஒப்புதல் வாங்கியிருப்பதாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாதிடலாம். ஆனால், தெகல்கா.காம் விரித்த இரகசியப் பொறியில் மாட்டிக் கொண்ட ஆர்.கே.ஜெயின், சிரித்தபடியே, பாரக் ஏவுகணை பேரத்தில் ஆயுதத் தரகன் சுரேஷ் நந்தாவிடமிருந்து எத்தனை கோடி ரூபாய் கமிசனாகப் பெற்றுக் கொண்டு, அப்துல் கலாமை மீறி, எப்படி காரியத்தைச் சாதித்துக் கொடுத்தோம் என்பதை விலாவாரியாக விவரிப்பதைத் திரைப்படமாகவே பார்க்கலாம்.

 

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் பொழுது, கார்கில் போரைக் காட்டி அவரே அவசரமாக 35 இராணுவத் தளவாடப் பேரங்களுக்கு அனுமதி கொடுத்ததாகவும், அவற்றுள் தற்பொழுது 20 பேரங்கள் சி.பி.ஐ.யின் விசாரணையின் கீழ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் தலைமைக் கணக்கு அதிகாரியும் இப்பேரங்கள் சிலவற்றில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

ஆக.99 டிச.99க்கு இடைபட்ட காலத்தில் 402.76 கோடி ரூபாய் பெறுமான வெடிமருந்துப் பொருட்கள் ரசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ""சரக்கைப் பெறுவதற்கு முன்பே சோதித்துப் பார்க்க வேண்டும்'' என்ற விதி இந்த இறக்குமதிக்காகவே தளர்த்தப்பட்டு, பரிசோதனையின்றி வெடி பொருட்கள் இறக்குமதியாகியுள்ளன. ""கார்கில் போர் மற்றும் விஜய் நடவடிக்கையையொட்டி இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த வெடிகுண்டுகளுள் பெரும்பாலானவை இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே காலாவதியாகிப் போனவை'' எனக் குறிப்பிட்டுள்ள தலைமை கணக்கு அதிகாரி, இந்த முறைகேட்டை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார்.

 

""டி72'' இரக பீரங்கிகளுக்குத் தேவைப்படும் குண்டுகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஜூன்'99 அன்று இராணுவ அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 116.83 கோடி ரூபாய் பெறுமான இந்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த தலைமை கணக்கு அதிகாரி, ""இந்த வெடிகுண்டுகள் உள்நாட்டில் உள்ள இராணுவத் தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்படும் பொழுது, இக்குண்டுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? டி72 இரக பீரங்கிகளை மலைப்பகுதிகளில் பயன்படுத்த முடியாது. உண்மை இவ்வாறிருக்க, மலைப் பகுதியில் நடந்த கார்கில் போரைக் காட்டி டி72 இரக பீரங்கிகளுக்குக் குண்டுகள் வாங்க வேண்டியதன் மர்மம் என்ன?'' என்ற இரு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

 

41.95 கோடி ரூபாய் பெறுமான 208 தொலைநோக்கிகள் வாங்கிய பேரத்திலும், ""இத்தொலைநோக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கக் கூடிய தொழில்நுட்பம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் இருக்கும் பொழுது, தொலைநோக்கிகளை இசுரேலிடமிருந்து இறக்குமதி செய்திருப்பதைப் பற்றியும், கார்கில் போர் முடிவடைந்த பிறகு, தொலை நோக்கிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசரம் பற்றியும்'' தலைமை கணக்கு அதிகாரி ஆட்சேபணைகளை எழுப்பியிருக்கிறார்.

 

ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாடறிந்த ஓட்டுக்கட்சி தலைவர் என்பதால், அவர் சம்மந்தப்பட்டுள்ள பாரக் ஏவுகணை ஊழல் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்திருக்கிறது. ஆனால், தலைமை கணக்கு அதிகாரியால் சுட்டிக் காட்டப்படும் ஆயிரக்கணக்கான முறைகேடுகள் ஊழல்கள் கோப்புகளுக்குள்ளேயே சமாதியாகி விடுகின்றன.

 

---

 

1,125 கோடி ரூபாய் பெறுமான பாரக் ஏவுகணை ஊழல் வழக்காகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே, இதைவிடப் பெரிய இரண்டு மோசடிகள், முறைகேடுகள் இராணுவத்தில் நடந்திருப்பதும் தற்பொழுது கசியத் தொடங்கியிருக்கிறது.

 

""அடுத்த 20 ஆண்டுகளில் கப்பற்படைக்கு என்னென்ன ஆயுதத் தளவாடங்கள் தேவைப்படும்? இராணுவ ரீதியாகப் பலவீனமான இருக்கும் பகுதிகள் எவை? அப்பகுதிகளை எப்படி பலப்படுத்துவது?'' என்பது போன்ற அதிஉயர் இராணுவ இரகசியங்களாகக் கருதப்படும் தகவல்கள், இராணுவ உயர் அதிகாரிகளாலேயே கடத்தப்பட்டு, ஆயுதத் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும்; ஆயுத விற்பனை தரகர்களுக்கும் விற்கப்பட்டு வரும் ஒற்று வேலை, இராணுவத்தின் மேல்மட்டத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. ""போர் அறை கசிவு வழக்கு'' எனக் கூறப்படும் இந்த உளவுவேலை பற்றிய விசாரணை மிகவும் கமுக்கமாக நடத்தப்பட்டு, கப்பற்படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தில் கூட விசாரிக்கப்படாமல் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

மே 2005இல் நடந்து முடிந்த இந்த விசாரணை வேலைநீக்கம் பற்றிய தகவல், அடுத்த இரண்டு மாதங்கள் கழித்துதான் முதலாளித்துவ பத்திரிகைகளில் வெளிவந்தது. ""இந்த உளவு வேலை யாருக்காக நடந்து வந்தது? கடத்தப்பட்ட அதிஉயர் இராணுவ இரகசியங்கள் யார் யாருக்கு விற்கப்பட்டன? போன்ற கேள்விகள் எழுப்பப்படாமலேயே, இராணுவ விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாகப் பத்திரிகைகள் குற்றம் சுமத்தின.


ரவி சங்கரன், குல்புஷன் பாராஷர், அபிஷேக் வர்மா என்ற மூன்று ஆயுதத் தரகர்கள் இந்த உளவு வேலையில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என ""அவுட் லுக்'' ஆங்கில வார இதழ் கடந்த ஆண்டே அம்பலப்படுத்தி எழுதியது.

 

ரவி சங்கரனும், குல்புஷன் பாராஷரும் தங்களின் கப்பற்படை பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆயுதத் தரகர்களாக மாறியவர்கள். இதைவிட ஆர்வமூட்டும் அம்சம் என்னவென்றால், ஆயுதத் தரகன் ரவிசங்கரன், தற்பொழுது கப்பற்படைத் தளபதியாக இருக்கும் அருண் பிரகாஷின் மனைவியின் சகோதரி மகன். காங்கிரசு கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினரான வீணா வர்மாவின் மகன்தான் அபிஷேக் வர்மா. அருண் பிரகாஷ் கப்பற்படைத் தளபதியாகப் பதவியேற்றவுடன், அவரின் வீட்டில் நடத்தப்பட்ட விருந்துக்கு, குல்புஷன் பாராஷருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ரவிசங்கரனும், குல்புஷன் பாராஷரும் இணைந்து பல நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர். இதுபோல, அபிஷேக் வர்மா வேலை செய்துவரும் ""அட்லஸ்'' குழுமத்தில், குல்பூஷன் பாராஷர் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறான்.

 

முதலாளித்துவப் பத்திரிகைகள் அம்பலப்படுத்திய இந்தத் தொடர்புகள் பற்றி இராணுவம் வாய் திறக்க மறுத்து ஒதுக்கித் தள்ளியது. அதேசமயம், வேலை நீக்கம் செய்யப்பட்ட காஷ்யாப் குமார் என்ற கப்பற்படை அதிகாரி, தனது வேலை நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ""இந்த உளவுவேலையில் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டினருக்கும் தொடர்புண்டு'' என இராணுவம் ஒத்துக் கொண்டது. ஆனாலும், இராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ""கடத்தப்பட்ட தகவல்கள் வெறும் வர்த்தக ரீதியானவைதான்; இந்தக் கடத்தலை அரசுக்கு எதிரான சதியாகப் பார்க்க முடியாது'' எனக் கூறிப் பூசி மெழுகினார்.

 

மே 2005இல் அம்பலமான இந்த உளவு வேலை பற்றிய விசாரணை, ஒன்பது மாதங்கள் கழித்து, பிப்.2006இல் தான் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ்விசாரணையை மந்தமாகவே நடத்தி வரும் சி.பி.ஐ., ஆயுதத் தரகர்கள் ரவிசங்கரன், குல்புஷன் பாராஷர், அபிஷேக் வர்மா மற்றும் விமானப் படையைச் சேர்ந்த கமாண்டர் எஸ்.எல். சுர்வே, கமாண்டர் விஜிந்தர் ரானா, வி.கே.ஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் லெப்டிணென்ட் கர்னல் எஸ்.எஸ்.சௌத்ரி; மேஜர் தேவேந்தர் வர்மா, மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளான ஆர்.எஸ்.துதானி, பி.எஸ்.மெஹ்ரா, ஹெச்.எல்.பாட்டியா ஆகியோர் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

 

குற்றவாளிகளைத் தப்பவிடவும், ஆதாரங்களை அழித்துவிடும் நோக்கத்திற்காகவும்தான் வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்பட்டதாக முதலாளித்துவப் பத்திரிகைகளே இராணுவத்தின் மீது குற்றஞ் சுமத்தியுள்ளன. குறிப்பாக, கப்பற்படையின் தளபதி அருண் பிரகாஷின் உறவினரான ரவிசங்கரன், சி.பி.ஐ. கைக்கு வழக்கு போகும் முன்பே ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டான். ""இண்டர்போல்'' போலீசுக்குத் தெரிவித்தப் பிறகும் ரவிசங்கரனைப் பிடிக்க முடியவில்லையாம்! குல்புஷன் பாராஷர் மீது சந்தேகப்படுவது இராணுவ அமைச்சரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, பாராஷர் இலண்டனுக்குச் சென்று வர அனுமதிக்கப்பட்டான். பாராஷரின் வெளிநாட்டுப் பயணம் சுமுகமாக முடிந்த பிறகுதான், சி.பி.ஐ. அவனைக் கைது செய்தது. பாராஷரின் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாததுதான் இத்தாமதத்திற்குக் காரணம் என மழுப்புகிறது சி.பி.ஐ. வழக்கு பதிவாகி ஒன்பது மாதம் கழித்த பிறகுதான் அபிஷேக் வர்மா கைது செய்யப்பட்டான்.

 

மது, மாது, விலை உயர்ந்த, நவீனமான பரிசுப் பொருட்கள் இந்த இலஞ்சத்தின் மூலம்தான் பல இராணுவ உயர் அதிகாரிகளை ஆயுதத் தரகர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர்; கிட்டதட்ட 7,000 கோப்புகள் இரகசியமாகக் கடத்தப்பட்டுள்ளன. எனினும், இராணுவ உயர் அதிகாரிகள் தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, தங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும்; தங்களின் விசாரணை பற்றிய தகவல் ஆயுதத் தரகர்களுக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாகவும் சி.பி.ஐ. பகிரங்கமாகவே குற்றஞ் சுமத்துகிறது.

 

இராணுவத்தின் உயர் மட்டத்தில் நடந்துவரும் இந்த உளவு வேலை, தேசத்தின் இறையாண்மைக்கும், தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என சி.பி.ஐ கூறுகிறது. ""தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதிகள்'' மீது தடா, பொடா போன்ற பாசிசச் சட்டங்கள் பாய்கின்றன. ஆனால், அதே குற்றத்தைச் செய்துள்ள இராணுவ அதிகாரிகள், ஆயுதத் தரகர்கள் மீதோ அரசு நிர்வாக இரகசியச் சட்டம்  என்ற உளுத்துப் போன சட்டம்தான் பாய்ந்திருக்கிறது.

 

---

 

பிரான்சு நாட்டைச் சேர்ந்த தாலெஸ் என்ற ஆயுத விற்பனை நிறுவனத்திடமிருந்து ஏழு ""ஸ்கார்பீன்'' இரக நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் ஒப்பந்தமொன்று சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலை வங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கிய பொழுதே மைய அரசின் கண்காணிப்பு கமிசனின் தலைவராக இருந்த என்.விட்டல், 7.5.2002 அன்று பாதுகாப்புத்துறைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில், இந்த பேரத்தில் இடைத் தரகர்கள் இருப்பதாகக் குற்றஞ்சுமத்தியதோடு, வெளிப்படையான டெண்டர் விடப்படவேண்டும் எனக் கோரியிருக்கிறார். நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த நீர்மூழ்கிக் கப்பலின் விலை அதிகம் என 5.1.05 அன்று இராணுவ அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த பேரம், காங்கிரசு கூட்டணி ஆட்சியில் பல்வேறு தடங்கல்களையும் தாண்டி கையெழுத்தாகியுள்ளது.

 

""18,000 கோடி ரூபாய் பெறுமான இந்த பேரத்தில் 4 சதவீத கமிசன் கைமாறியிருக்கிறது; கப்பற்படை இரகசியங்களைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அபிஷேக் வர்மாவிற்கும், தாலெஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ழான்பால் பெர்ரியருக்கும் தொடர்பிருக்கிறது'' என அவுட் லுக் வார இதழ் பல கட்டுரைகளின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதற்கு ஆதாரமாக, கப்பற்படையைச் சேர்ந்த எட்டு உயர் அதிகாரிகளுக்கும் அபிஷேக் வர்மாவிற்கும் இடையேயான இரகசிய தொடர்பையும்; அபிஷேக் வர்மாவிற்கும், தாலெஸ் தலைமை நிர்வாக அதிகாரிக்கும் இடையே இப்பேரம் தொடர்பாக நடந்துள்ள மின்னணு கடிதப் போக்குவரத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது.

 

இந்த பேரத்தின் பின்னுள்ள ஊழலை அம்பலப்படுத்தி வரும் ""அவுட்லுக்'' இதழுக்கு எதிராக, அபிஷேக் வர்மாவும், தாலெஸின் தலைமை நிர்வாக அதிகாரி ழான் பால் பெர்ரியரும் இணைந்து வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதி மன்றம், ""இந்தக் கட்டுரைகள் நம்பத் தகுந்ததாக உள்ளன'' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், கப்பற்படையோ, அவுட்லுக் வெளியிட்டுள்ள ஆதாரக் கடிதங்கள் அனைத்தும் மோசடியாக ஜோடிக்கப்பட்டவை எனக் கூறி வருகிறது.

 

அதேசமயம், வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்ட ஆயுதத் தரகன் ரவிசங்கரன், ""இக்கடிதங்கள் உண்மையானவைதான்; ஆனால், இக்கடிதத்தில் குறிப்பிடப்படும் மற்றொரு ஆயுதத் தரகன் சுரேஷ் நந்தாவின் பெயரை மட்டும் அவுட்லுக் இதழ் மறைத்து விட்டிருப்பதாக''க் கூறியிருக்கிறான். மேலும், ""தாலெஸின் புதிய ஆயுதத் தரகன் அபிஷேக் வர்மாவிற்கும்; பழைய ஆயுதத் தரகன் சுரேஷ் நந்தாவிற்கும் இடையே நடக்கும் வர்த்தகப் போட்டியினாலும்; ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் நிறுவனமான ஹெச்.டி.டபிள்யூவிற்கும், தாலெஸிக்கும் இடையே நடக்கும் போட்டியினாலும் தான் ""ஸ்கார்பீன்'' நீர்மூழ்கி கப்பல் பேரம் அம்பலப்பட்டு விட்டதாக'', இதன் பின்னுள்ள இரகசியத்தையும் போட்டு உடைத்துள்ளான். கப்பற்படையின் போஃபர்ஸ் என அழைக்கப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பேரம் தொடர்பான உண்மைகள் ஆட்சி மாறினால்தான் முழுதாகத் தெரியவரும் போலும்!

 

----

 

இராணுவத்தில் நடக்கும் இலஞ்ச ஊழல்கள், அதிகார முறைகேடுகள்; அதன் மூலம் இராணுவ அதிகாரிகள் அடிக்கும் பல கோடி ரூபாய் கமிசனோடு ஒப்பிடும் பொழுது, அரசியல்வாதிகள் பெறும் கமிசன் சுண்டைக்காய்தான். போஃபர்ஸ் ஊழல், கார்கில் ஊழல் போன்ற மறைக்கவே முடியாத ஒன்றிரண்டு ஊழல்கள்தான் அம்பலமாகிறதே தவிர, மற்றவை ஊசி முனை அளவு கூட வெளியே தெரிவதில்லை. 1989க்குப் பிறகு இராணுவத்தில் நடந்த ஆயுத பேரங்களைப் பற்றிய தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை வெளியிடப்படாமல் அரசாங்கம் முடக்கி வைத்திருப்பதில் இருந்தே இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
அம்பலமாகும் பெரிய ஊழல்கள்கூட இராணுவத்தில் ஏற்பட்டுள்ள கறை, அரசியல்வாதிகளின் குறுக்கீடு எனப் பூசி மெழுகப்படுகிறதே தவிர, மற்ற துறைகளைவிட, ஊழல் புழுத்து நாறும்துறை இராணுவம்தான் என அம்பலப்படுத்தப்படுவதில்லை.

 

இராணுவத்தில் நடக்கும் ஒவ்வொரு ஆயுத பேரத்திலும் இடைத் தரகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் கமிசன் கிடைக்கிறது. அதனால்தான், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுள் பலரும் ஆயுதத் தரகு நிறுவனங்களுக்கு முதலாளி ஆகிவிடுகிறார்கள். பாரக் ஏவுகணை பேரத்தில் ஆர்.கே.ஜெயினுக்கு கமிசன் கொடுத்த ஆயுதத் தரகன் சுரேஷ் நந்தா, ஓய்வுபெற்ற கப்பற் படைத் தளபதி நந்தாவின் மகன்.

 

பல ஏழை நாடுகளில், இலஞ்ச ஊழலில் திளைத்துப் போன இராணுவத் தளபதிகளைத்தான், ஏகாதிபத்தியங்கள் சர்வாதிகாரிகளாகத் திணிக்கின்றன. இந்தோனேஷியாவின் சுகர்டோ, சிலியின் பினோசெட், பெருவின் பிஜுமோரி, பனாமாவின் நோரிகோ, பாக்.இன் முஷாரப் எனப் பல நாடுகளை இதற்கு உதாரணம் காட்டலாம். இந்தியாவிலோ இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின் காங்கிரசு, பா.ஜ.க. மூலம் அரசியலில் ஒட்டிக் கொள்கிறார்கள். மாநில கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

 

தீவிரவாதம், பாகிஸ்தான் என்ற பூச்சாண்டிகளைக் காட்டி, இராணுவத்தில் நடக்கும் எதையும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்ற கருத்து திட்டமிட்டே பரப்பப்படுகிறது. மன்மோகன் சிங்கை சமீபத்தில் சந்தித்த முப்படைத் தளபதிகள், ஊழல் குற்றச்சாட்டுக்களால் இராணுவத்தை நவீனப்படுத்துவது தடைபட்டுப் போவதாகப் புலம்பியுள்ளனர்.

 

இராணுவம் நடத்தும் படுகொலைகளில் இருந்து சிப்பாய்களைப் பாதுகாக்க ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் இருப்பது போல, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முற்றிலுமாக இராணுவ அதிகாரிகளைப் பாதுகாக்க ஒரு சிறப்புச் சட்டத்தைக் கேட்பார்கள் போலும். தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டையே உறிஞ்சித் தின்னும் மிகப் பெரிய ஒட்டுண்ணியாக இராணுவம் வளர்ந்திருப்பதுதான், நாட்டையும் மக்களையும் அச்சுறுத்தும் மிகப் பெரிய அபாயம்!


செல்வம்