11_2006.jpg

""முதலில் நான் ஒரு பிராமணன்; ஒரு இந்து. பிறகுதான் கம்யூனிஸ்ட்'' இப்படி பகிரங்கமாகப் பிரகடனம் செய்திருக்கிறார், மே.வங்க "இடது முன்னணி' அரசின் போக்குவரத்து விளையாட்டுத்துறை அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி. இவர் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். நீண்ட காலமாகக் கட்சிப் பணியாற்றிவரும் அனுபவமிக்க தோழர் என்று சி.பி.எம். கட்சியினரால் குறிப்பிடப்படும் முக்கிய புள்ளி.

அவர் முதலில் பிராமணராம்; இந்துவாம்! பிறகுதான் கம்யூனிஸ்டாம்! ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் இப்படி வில்லங்கமாகப் பேசுகிறாரே என்று நீங்கள் முகத்தைச் சுழிக்கலாம். ஆனால், விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. இந்த பிராமண "கம்யூனிஸ்டு' பிர்புமிலுள்ள தாரா பீடக் கோயிலுக்குச் சென்று பக்தியோடு வழிபட்டுள்ளார். பூசைத்தட்டில் பூசாரிக்குக் காணிக்கையாக ரூ. 501 போட்டுள்ளார். பல்வேறு பூசைகளுக்கு தலா ரூ.301 வீதம் ""மொய்'' வைத்துள்ளார். பூசை முடிந்து வெளியே வரும்போது பக்திப் பழமாகி ""ஜெய்தாரா, ஜெய்தாரா'' என்று மெய்யுருகிப் பாடியுள்ளார்.

 

சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜோதிபாசு, ""சுபாஷ் சக்ரவர்த்திக்கு வயதாகி விட்டது. அதனால் மரண பயம் வந்து தாராமாதாவைப் பார்க்கச் சென்றுள்ளார்'' என்று கேலியாக இந்நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டாரே தவிர, அவர் கோயிலுக்குச் சென்று வழிபட்டதைப் பற்றியோ, நான் ஒரு பார்ப்பான் என்று பகிரங்கமாக அறிவித்ததைப் பற்றியோ வாய் திறக்கவில்லை. சி.பி.எம். கட்சியின் மே.வங்க மாநிலச் செயலரான பிமன்போஸ், ""மார்க்சிஸ்டுகளும் இரத்தத்தாலும் சதையாலுமான மனிதப் பிறவிகள்தானே!'' என்று மகத்தானதொரு அறிவியல் கண்டுபிடிப்பை முன் வைத்து, சுபாஷின் செயலுக்கு நியாயம் கற்பிக்கக் கிளம்பினார். பின்னர், ""கட்சி ஊழியர்களின் சித்தாந்த விலகலானது, கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் எதிரிகளுக்கே சாதகமாகிப் போகும்'' என்று சுபாஷின் பெயரைக் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக உபதேசித்தார். சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பினாய்க் கோனார், சுபாஷ் விவகாரத்தை மாநிலக் கமிட்டியில் விவாதித்து, ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தேவையா என்று பரிசீலிப்போம் என்று கூறி, ஆளாளுக்கு இதுபற்றி பேசக்கூடாது என வாயடைத்தார்.

இப்படி இந்த விவகாரம் சூடேறிக் கொண்டிருந்த போதிலும், தான் தவறிழைத்துவிட்டதாகக் கூட திருவாளர் சுபாஷ் கருதவில்லை. ""நான் இந்து கோயிலுக்கு மட்டுமின்றி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்கிறேன். மார்க்சிய தத்துவத்தை பலரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; இதனால்தான் சி.பி.எம். கட்சி மூன்று மாநிலங்களுக்கு வெளியே வளரவில்லை'' என்று ஒரே போடாகப் போட்டார். அதாவது, கட்சி ஊழியர்கள் பக்தியோடு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்யாததால்தான் சி.பி.எம். கட்சி வளரவில்லை என்றார். இதுவும் போதாதென்று ஜோதிபாசுவை ""கலியுகக் கண்ணன்'' என்று புகழ்ந்து தள்ளினார்.

 

சுபாஷின் உளறல்களால் நிலைமை விபரீதமாவதைக் கண்ட ஜோதிபாசு, ""சுபாஷûக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது (பைத்தியம் பிடித்துவிட்டது)'' என்று சாடினார். ஆனாலும் பூணூலிஸ்டு சுபாஷ் அசரவில்லை. ""மனநிலை பிறழ்ந்துவிட்ட ஒருவரை கம்யூனிஸ்ட் கட்சியில் எப்படி வைத்துக் கொள்ள முடியும்?'' என்று எதிர்வாதம் செய்தார். அதாவது, ""முடிந்தால் என்னை கட்சியிலிருந்து நீக்கிப் பார்!'' என்று பகிரங்கமாகச் சவால் விட்டார்.

 

அப்புறம் என்னதான் நடந்தது? சி.பி.எம். கட்சியின் மாநிலக் கமிட்டி கூட்டத்தில் சுபாஷை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டதா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அவர் கோயிலுக்குப் போயிருக்கக் கூடாது; பூசை செய்திருக்கக் கூடாது என்று சொல்லி இந்த விவகாரத்தை கமுக்கமாக முடித்துவிட்டார்கள். பூணூலிஸ்டு சுபாஷûம் கோயிலுக்குப் போனது தவறுதான் என்று "சுயவிமர்சனம்' செய்து கொண்டு விட்டாராம்! அதுசரி; நான் முதலில் பார்ப்பான்; அப்புறம்தான் கம்யூனிஸ்டு என்று அறிவித்தாரே, அதுபற்றி என்ன விமர்சனம்? என்ன நடவடிக்கை? ஒன்றும் இல்லை. முடிந்தால் என்னை கட்சியை விட்டு நீக்கிப்பார் என்று கட்சியையே மிரட்டி சவால் விட்டாரே, அதற்கு என்ன நடவடிக்கை? அதற்கும் எந்த நடவடிக்கையுமில்லை. ஏன்?
தனது பேரனுக்கு பார்ப்பன சனாதன முறைப்படி பூணூல் கல்யாணம் நடத்தினார், சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சோமநாத் சட்டர்ஜி. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சி.பி.எம். கட்சி. இப்போது அவரை நாடாளுமன்ற அவைத் தலைவராக்கி கௌரவித்துள்ளது. எனவே, பார்ப்பனியத்தோடு சங்கமித்தால்தான் உயர்பதவி கிடைக்கும்; அதுதான் கட்சியில் முன்னேறுவதற்கான வழிமுறை என்பதைப் புரிந்து கொண்ட சுபாஷ் ஐயர், தைரியமாக ""முதலில் நான் ஒரு பார்ப்பான்'' என்று அறிவிக்கிறார்.

 

கேரளத்தில் 1988ஆம் ஆண்டில் நடந்த சி.பி.எம். கட்சியின் அகில இந்திய மாநாட்டில், அப்போதைய கட்சிப் பொதுச்செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடை கலியுகக் கண்ணனாக்கி ""கட்அவுட்'' வைத்து அசத்தியது அக்கட்சி. பார்ப்பன அடிப்படையிலான இத்தகைய தனிநபர் வழிபாட்டை நம்பூதிரிபாடு கூட எதிர்க்கவில்லை. யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான் சுபாஷ் ஐயர், அதேவழியில் ஜோதிபாசுவை கலியுகக் கண்ணனாகச் சித்தரித்து துதிபாடுகிறார்.

 

மே.வங்க சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ""கணசக்தி''யும் தமிழகத்தின் தீக்கதிரும் ஜோதிடம், ராசிபலன் முதலானவற்றோடு நவராத்திரி தீபாவளி கார்த்திகை பொங்கல் சிறப்பிதழ்களை வெளியிட்டு பார்ப்பனியத்தோடு கை கோர்த்து நிற்கிறது. சுபாஷ் ஐயரோ, ஒருபடி முன்னே சென்று கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி ""முதலில் நான் ஒரு பார்ப்பான்'' என்கிறார்.

 

இந்நிலையில் சுபாஷ் மீது நடவடிக்கை எடுத்தால், கட்சியிலுள்ள "பூணூலிஸ்டு மார்க்சிஸ்டு'கள் கலகம் செய்வார்கள்; நீ மட்டும் யோக்கியமா என்று அம்பலப்படுத்தி விடுவார்கள் என்று கட்சித் தலைமைக்குத் தெரியும். சுபாஷ் ஐயருக்கும் தெரியும். எனவேதான் கட்சித் தலைமை இந்த விவகாரத்தைப் பூசி மெழுகுகிறது.

 

இந்தியாவில் மறுகாலனியாக்கமும் பார்ப்பனியமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். பார்ப்பன எதிர்ப்பையும் மறுகாலனிய எதிர்ப்பையும் தனித்தனியாகப் பிரித்துப் போராட முடியாது. பார்ப்பன எதிர்ப்பின்றி ஏகாதிபத்திய எதிர்ப்போ, ஜனநாயகப் புரட்சியோ சாத்தியமில்லை. ஏற்கெனவே மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் மறுகாலனியாக்கத்துடன் சமரசம் செய்து கொண்டு "புரட்சி' செய்து வருகிறார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டார்ச்சார்யா. மத நல்லிணக்கம் என்ற பெயரில் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ள சி.பி.எம். கட்சியின் மே.வங்க அமைச்சரான சுபாஷ் ஐயர், ""முதலில் நான் ஒரு பார்ப்பான்'' என்று அறிவித்து "புரட்சி' செய்கிறார். அடடா! மறுகாலனியாக்கமும் பார்ப்பனியமும் கை கோர்த்துக் கொண்டு நடத்தும் "புரட்சி' எப்படி முன்னேறுகிறது பாருங்கள்!

 

குமார்