11_2006.jpg

நடந்து முடிந்த சென்னை மாநகராட்சிக்கான தேர்தல்க ளில் தி.மு.க.வும் அதன் முக்கியக் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும் பா.ம.க.வும் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் நடத்தியதாக, ஜனநாயகப் பாதுகாவலர்களாக வேடம் போடும் பார்ப்பனபாசிச ஜெயலலிதா ஆதரவு சக்திகள் ஓலமிடுகின்றன

. இத்தகைய வன்முறை தி.மு.க. அணிக்கு ஒரு கருப்புப் புள்ளிதான்; இந்த வன்முறை அதற்குத் தேவையற்றது; அது இல்லாமலேயே தி.மு.க. அணி உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று சில பத்தாம்பசலிகள் வாதிடுகின்றனர்.

 

ஆனால், ஜெயலலிதா சசிகலா கும்பலின் முழுக்கவும் பிழைப்புவாத, பாசிச, கிரிமினல் குற்றக்கும்பல் அரசியலுக்கு இது தகுந்த, அவசியமான பதிலடிதான் என்பதே உண்மை. 2001 சென்னை மாநகராட்சி உட்பட உள்ளாட்சித் தேர்தல்களிலும், சாத்தான்குளம் சைதை சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் ஜெயாசசி கும்பல் நடத்திய கிரிமினல்வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து, இனி ஜெயலலிதா ஆட்சியின் கீழ் நடக்கும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்று கருணாநிதி முடிவு செய்தார். அதாவது தேர்தல்களைப் புறக்கணிப்பது என்று முடிவெடுக்காவிட்டாலும், ஜெயலலிதா கட்சிக்கெதிராக இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதைத் தவிர்த்தார்.

 

அதேசமயம், தமிழ்நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் எதிராக ஜெயாசசி கும்பல் அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வெறியாட்டம் போட்டபோது, கருணாநிதியின் தி.மு.க. உட்பட அனைத்து ஓட்டுக் கட்சிகளும் தமது கையறு நிலையைத்தான் வெளிப்படுத்தின. மேலும் ஜெயாசசி கும்பலின் இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகளுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் அது சட்டத்தின் ஓட்டைகளையும் குறுக்கு வழிகளையும் பயன்படுத்தித் தப்பித்து வந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு, ஜெயாசசி கும்பலின் அடாவடி, அராஜக, கிரிமினல் அரசியலை சட்டபூர்வஜனநாயக வழிமுறைகளில் முறியடிக்க முடியாது; அவற்றுக்கு வெளியிலான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ""புதிய ஜனநாயகம்'' ஏடு எழுதியது. இப்போது கருணாநிதி மக்களைச் சார்ந்த போராட்ட வழிமுறைகளினால் ஜெயாசசி கும்பலின் அரசியல் ஆதிக்கத்தை வீழ்த்தவில்லை. ஆளும் வர்க்க அரசியலுக்கே உரிய முறையில், ஜெயாசசி கும்பலுக்குப் புரியும் மொழியில் தானும் அடாவடி, அராஜக, வன்முறை அரசியலால் பதிலடி கொடுத்திருக்கிறார்.

 

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி அரசியலைக் கொண்டு அமைதியான முறையில் வீழ்த்தப்பட்டதை ஒரு உண்மையான தோல்வியாக ஜெயாசசி கும்பல் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதேசமயம் அதிகாரத்தில் இல்லாத ஒரு கணத்தைக் கூட அக்கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை. முன்பாவது, ஆட்சியில் இருந்துகொண்டு, அதிகார பலத்தை வைத்துக் கொண்டு தேர்தல்களில் அராஜக வெறியாட்டம் போட்டது. இப்போது ""மிக விரைவிலேயே கருணாநிதியின் மைனாரிட்டி அரசு கவிழ்ந்து விடும், மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவோம்'' என்ற மாயையை உருவாக்கி தனது ஆதரவுக் கும்பலையும் வாக்கு வங்கியையும் தக்க வைத்துக் கொள்வதற்கு கணிசமான தேர்தல் வெற்றியைக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் ஆட்சியில் இல்லாதபோதும் பணபலத்தையும் சாதிஅடியாள் பலத்தையும் வைத்து இந்தத் தேர்தல்களில் அராஜகம் நடத்தி தான் இன்னும் மக்கள் செல்வாக்கை இழந்து விடவில்லை என்று நிரூபிப்பதற்குத் திட்டமிட்டது.

 

இதற்காக ஆளும் தரப்பினர் ஆத்திரத்தைத் தூண்டும் வகையிலான அறிக்கைகளை ஜெயாசசி கும்பல் வெளியிட்டு வந்தது. ""கருணாநிதியின் வாரிசுகள் துரியோதனர் கூட்டத்தைவிட மோசமானவர்களாக இருக்கிறார்கள். கடைசி நேர தேர்தல் அராஜகங்களைப் பார்த்துக் கொதித்தெழுந்து, அவர்களை மக்கள் காலால் மிதித்து நசுக்கி மண்ணோடு மண்ணாக துவம்சம் செய்யக் காத்திருக்கிறார்கள். அந்த நரகாசுர வதம் நிச்சயம் நடக்கத்தான் போகிறது'' என்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த முயற்சிக்கு வழக்கமான கோழைத்தனத்தைக் கருணாநிதி வெளிப்படுத்தவில்லை. மாறாக ""ஜெயலலிதாவின் சவாலுக்குப் பின்னால் சதி ஒளிந்திருக்கிறது. தேன் அடை போலிருக்கும் கூட்டத்தைக் கலைக்க யாராவது முயற்சி செய்தால் என்ன ஆகும் என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் கலைக்கப்பட்டால், கலவரத்துக்கு ஆளானால் அந்த நேரத்தில் எப்படி இருப்பீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆட்சி பொறுப்புக்கு வந்துவிட்டோம் என்பதற்காகக் கோழைகளாக வாழ முடியாது. துறவிகளாக இருக்க முடியாது'' என்று தனது உடன்பிறப்புகளைப் பார்த்து உசுப்பேற்றி பதிலடிக் கொடுத்தார் கருணாநிதி. இந்த பதிலடி, தி.மு.க. அரசியல் இனிமேலும் கருணாநிதியின் அறிக்கை அரசியலாக மட்டும் இருக்காது. ஸ்டாலின் தயாநிதிமாறன் இணையின் புதிய பாணியிலானதாக இருக்கும் என்பதையே சென்னை மாநகராட்சித் தேர்தல்கள் காட்டின.

 

ஜெயாசசி கும்பல் தனது மக்கள் விரோதஜனநாயக விரோத பாசிசப் போக்குகளால்தான் பிற ஓட்டுக் கட்சிகளிடமிருந்தும், மக்களிடமிருந்து முற்றாகத் தனிமைப்பட்டுப் போயிருக்கிறது. ஆனால், அது தனது கோயாபல்சுத்தனமான பிரச்சாரத்தாலும், அரசியலற்ற மக்கள்பிழைப்புவாத, கிரிமினல் அணிகளின் ஆதரவோடும் பார்ப்பனஅதிகார வர்க்கம், மற்றும் போலீசு உளவாளிகள் ஆதரவாலும், ஓட்டுக்கட்சிகள் கருணாநிதி மீதான அதிருப்தியினால் அணி மாறுவதாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்று நம்புகிறது. 2001 தேர்தல்களில் இப்படித்தான் நடந்து ஜெயாசசி கும்பல் ஆட்சிக்கு வந்தது.

 

கட்சித் தலைமையினாலும் கட்டுப்படுத்த முடியாதவாறு கிரிமினல் கும்பல்கள் ஓட்டுக்கட்சி அரசியலில் செல்வாக்குப் பெற்றுள்ளனர் என்பதை உள்ளாட்சித் தேர்தல்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன. இதனால் ""கூட்டணி தர்மத்தை'' எந்தக் கட்சியும் கடைப்பிடிக்க முடியாமல் போய், கூட்டணி சிதைவதும் தவிர்க்க முடியவில்லை. இதன் விளைவாக, 2001 தேர்தல்களுக்கு அமைந்ததைப் போன்ற அணி மாற்றங்களை (இதில் இரு போலி கம்யூனிஸ்டுகளும், பா.ம.க.வும் முன்னணியில் நிற்கின்றன). இந்த உள்ளாட்சித் தேர்தல்களும், அவற்றின் தலைமைக்கான போட்டிகளும் விரைவுபடுத்தியிருக்கின்றன.