12_2006.jpg

விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்து, நாட்டை மீண்டும் காலனியாக்க வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடிக்க ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

ஓசூரில், நான்கு ஊராட்சிகளை உள்ளடக்கி 3600 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளõதார மண்டலத்தை நிறுவ வேகமாக ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து சி.பொ. மண்டலத்தின் காலனியாதிக்கக் கோர முகத்தை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு, கடந்த அக்டோபர் மாதத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன. போலி கம்யூனிஸ்டுகள் இப்பகுதியில் சிப்காட் வரப்போவதாகப் புளுகி, உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் பொறுக்கி ஆதாயமடைந்த நிலையில், சி.பொ. மண்டலத்தால் ஏற்படும் கோரமான விளைவுகளை விளக்கித் தோழர்கள் மேற்கொண்ட பிரச்சார இயக்கம், இப்பகுதிவாழ் மக்களின் பார்வையை விசாலமாக்கியது. சிப்காட் போல சி.பொ. மண்டலமும் ஒரு புதிய தொழிற்பேட்டை என்றும், புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணியிருந்த விவசாயிகள், உண்மை நிலை அறிந்து தமது குமுறலை வெளிப்படுத்தினர்.

 

இப்பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று ஓசூரை அடுத்துள்ள அக்கொண்டபள்ளி கிராமத்தில், அங்கு வரவிருக்கும் சி.பொ. மண்டலத்தை எதிர்த்து இவ்வமைப்புகள் கருத்தரங்கை நடத்தின. நக்சல்பாரி தீவிரவாதிகள் நடத்தும் கூட்டத்திற்குப் போகாதீர்கள்; விபரீத விளைவுகள் ஏற்படும் என்று போலீசும் ரியல் எஸ்டேட் அதிபர்களும் நிலத்தரகர்களும் பீதியூட்டும் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்ட போதிலும், அதையும் மீறி நூற்றுக்கணக்கான மக்கள் இக்கருத்தரங்கிற்குத் திரண்டு வந்தனர்.

 

""நாட்டை மீண்டும் அடிமையாக்க வரும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை விரட்டியடிப்போம்!'' என்ற தலைப்பில், அக்கொண்டபள்ளி கிராமக் கோயில் வளாகத்தில் நடந்த இக்கருத்தரங்கில், பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப. தங்கராசு, சி.பொ. மண்டலத் திட்டத்தை எதிர்த்து கடந்த ஈராண்டுகளாக விவசாயிகளைத் திரட்டிப் போராடிவரும் முன்னாள் ஊராட்சித் தலைவர் திரு. சத்திய நாராயணன் ஆகியோரும் முன்னணித் தோழர்களும் சிறப்புரையாற்றினர்.


திருச்சியில், 19.11.06 அன்று உறையூரில் சி.பொ. மண்டலத்தின் பின்னே பொதிந்துள்ள காலனியாதிக்கச் சதியைத் தோலுரித்துக் காட்டும் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், தட்டிகள் மூலம் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கில் பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சிக்குத் திரண்டு வந்தனர். பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப. தங்கராசு, இலால்குடி வட்ட வி.வி.மு. தோழர் இரவி ஆகியோர் தமது சிறப்புரையில் சி.பொ. மண்டலத்தால் விளையும் பேரழிவுகளையும் துரோகிகளின் பித்தலாட்டத்தையும் விரிவாக விளக்கினர்.


பு.ஜ. செய்தியாளர்கள்