jan_07.jpg

மார்க்சியம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்; ""டாடா மார்க்சியம்'' பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 

அதென்ன டாடா மார்க்சியம்? மார்க்சியத்துக்கு ""டாடா'' காட்டிவிட்டு, செங்கொடி பிடித்துக் கொண்டே தரகுப் பெருமுதலாளி டாடாவுக்கு விசுவாசமாகச் சேவை செய்வதற்குப் பெயர்தான் ""டாடா

 மார்க்சியம்''. இதைப் பற்றி நீங்கள் விளக்கமாக அறிய வேண்டுமானால், "டாடா மார்க்சிஸ்டுகள்' ஆளும் மே.வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள சிங்கூர் கிராமத்தில் நடக்கும் போராட்டத்தைப் பார்த்தாலே போதும்.

 

""டாடாபிர்லா கூட்டாளி; பாட்டாளிக்குப் பகையாளி'' என்று முன்னொருக் காலத்தில் முழங்கிவந்த "மார்க்சிஸ்டுகள்', இப்போது மே.வங்க மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு சிவப்புக் கம்பளம் விரித்து மறுகாலனியாக்கச் சேவையில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

இதன்படி, சிங்கூர் கிராமத்தில் இருபோகம் சாகுபடியாகும் 997.1 ஏக்கர் நிலத்தை மே.வங்க "இடதுசாரி' அரசே ஆக்கிரமித்து, தரகுப் பெருமுதலாளித்துவ டாடா நிறுவனத்துக்குத் தாரை வார்த்துள்ளது. இங்கு கார் தொழிற்சாலையை நிறுவி நடுத்தர மக்களும் எளிதில் வாங்கும் வகையில் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் உற்பத்தி செய்யப் போவதாக டாடா நிறுவனம் கூறுகிறது. இதை எதிர்த்து, ""விளைநிலங்களை ஆக்கிரமிக்காதே! வாழ்வுரிமையைப் பறிக்காதே!'' என்று சிங்கூர் மக்களும் பல்வேறு இடதுசாரிஜனநாயக இயக்கங்களும் கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றன.

 

போராடும் சிங்கூர் விவசாயிகளையும் பிற இயக்கத்தினரையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை சீர்குலைக்கும் அராஜகவாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்திச் சாடும் "மார்க்சிஸ்டு' ஆட்சியாளர்கள், சிங்கூர் விவசாயிகள் சுய விருப்பத்துடன் நிலங்களை அரசிடம் கையளித்து, உரிய நிவாரணத்தையும் பெற்று விட்டார்கள் என்றும், அரசியல் ஆதாயத்துக்காக எதிர்த்தரப்பினர் வெளியிலிருந்து ஆட்களைத் திரட்டி வந்து போராட்டம் என்ற பெயரில் அராஜகம் செய்வதாகவும் கூறுகிறது. கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று டாடா ஆலை அமையவுள்ள நிலத்தில் முள்கம்பி வேலி போட்டும், போராடிய மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் தடியடி தாக்குதல் நடத்தியும், 144 தடையுத்தரவு பிறப்பித்தும், சிங்கூரில் டாடா ஆலையை நிறுவியே தீருவோம் என்றும் "இடதுசாரி' அரசு கொக்கரிக்கிறது.

 

போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியதும், பிழைப்புவாத திரிணாமுல் காங்கிரசு தலைவியான மம்தா பானர்ஜி, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள, தாமும் டாடா ஆலைத் திட்டத்தை எதிர்ப்பதாக மறியல் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தினார். சிங்கூரில் அவர் நுழையத் தடை விதிக்கப்பட்டதும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவரது போராட்டத்துக்கு நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் மேதாபட்கர் முதல் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் வரை பல்வேறு தரப்பினரும் ஆதரவு தருவதைக் கண்டு பீதியடைந்துள்ள டாடா மார்க்சிஸ்டுகள், தமது துரோகத்தனத்திற்கு நியாயவாதங்களை அடுக்கி மேலும் அம்பலப்பட்டு வருகின்றனர்.

 

""சிங்கூரில் இதுவரை 9020 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கி விட்டோம்; இன்னும் ஏறத்தாழ 3000 பேர் மட்டுமே உள்ளனர். டிசம்பர் மாத இறுதிக்குள் அவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விடும். சிங்கூரில் ஒரு ஏக்கர் நிலத்தின் உத்தேச மதிப்பு ரூ. 6.02 லட்ச ரூபாயாக உள்ள போதிலும், ஒரு ஏக்கருக்கு ரூ. 8.6 லட்சம் கொடுத்து நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளோம். இதற்காக அரசு ரூ. 76.64 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது'' என்று புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர் மே.வங்க ஆட்சியாளர்கள்.

 

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதலாக தொகை கொடுத்துள்ளதாக போலி கம்யூனிஸ்டுகள் வாதிடுவதே மோசடித்தனமானது. நிவாரணத் தொகை என்பது பத்திரப் பதிவுப்படி, நடப்பிலுள்ள மூன்றாண்டுகளில் அந்த நிலத்தின் சராசரி மதிப்பேயாகும். பத்திரப் பதிவு செலவுகளைக் குறைக்க, நிலத்தின் மதிப்பை ஏறத்தாழ 5060 சதவீதத்துக்குக் குறைத்துக் காட்டி பதிவு செய்வதென்பது நாடெங்கும் எழுதப்படாத விதியாகவே உள்ளது. இந்நிலையில் நிலத்தின் சராசரி மதிப்பைக் கணக்கிட்டு அதனுடன் கொஞ்சம் கருணைத் தொகையை இடதுசாரி ஆட்சியாளர்கள் சேர்த்துக் கொடுத்தாலும், நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு நிலத்தின் உண்மை மதிப்பின்படி நிவாரணத்தொகை கிடைக்காது.

 

ஏற்கெனவே கொல்கத்தாவின் புறவழிச்சாலை மற்றும் ராஜர்ஹட் நகரியத்துக்காக நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சராசரியாக ரூ.3 லட்சம் தரப்பட்டது. ஆனால் அந்த இடத்தின் சந்தை விலையோ ரூ.10 லட்சத்துக்கும் மேலாகும். எனவே, சிங்கூரில் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் அளித்துவிட்டதாக போலி கம்யூனிஸ்டுகள் பசப்புவது கடைந்தெடுத்த மோசடித்தனமேயாகும்.

 

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்வுக்கான உத்தரவாதம் ஏதுமின்றி, நிவாரணத் தொகை தருவதையே மறுவாழ்வு என்று ஏய்ப்பது போலி கம்யூனிஸ்டுகள் செய்யும் இன்னுமொரு மோசடி. 1947இலிருந்து 2000 வரை "வளர்ச்சி'த் திட்டங்களுக்காக மே.வங்கத்தில் 47 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அரசால் பறிக்கப்பட்டு, 70 லட்சம் மக்கள் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்து தரப்படாமல் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களில் 9% பேருக்கு மட்டுமே மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்களே காட்டுகின்றன.

 

"இடதுசாரி' ஆட்சி நடக்கும் மே.வங்கத்தைவிட ஒப்பீட்டு ரீதியில் மேலானதாக இதர மாநில அரசுகள் மறுவாழ்வுநிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன. ஆந்திராவில் 28 சதவீத அளவுக்கும், ஒரிசாவில் 34 சதவீத அளவுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மைய அரசின் புள்ளியியல் துறையின் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இதுவும்கூட, உலக வங்கியின் நிர்பந்தம், மேற்கத்திய நாடுகளது மனித உரிமை அமைப்புகளின் கண்டனம் முதலானவற்றுக்குப் பிறகு கண்துடைப்பாகவே செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அதைக்கூட செய்யாமல் ஒப்பீட்டு ரீதியில் "இடதுசாரி' அரசு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

 

மே.வங்கத்தில் பல லட்சகணக்கான மக்கள் "வளர்ச்சி'த் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த மறுவாழ்வுக் கொள்கை எதையும் இதுவரை "இடதுசாரி' அரசு வகுக்கவோ செயல்படுத்தவோ இல்லை. சிங்கூரில் போராட்டம் தொடர்வதாலேயே, இப்போது மறுவாழ்வுக்கான நிவாரணமளிப்பதாக "இடதுசாரி' அரசு கூறுகிறது. ஆனால், ஏற்கெனவே இதேபோல பல்வேறு தனியார்அந்நிய ஏகபோக நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களால் வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக எந்தக் கொள்கையோ, திட்டமோ இதுவரை இல்லை.

 

மே.வங்கத்தில் குத்தகை விவசாயிகள்தான் பெருமளவில் விவசாயம் செய்கின்றனர். சிங்கூரிலும் குத்தகை விவசாயிகள் கணிசமாக உள்ளனர். நிலவுடைமையாளர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணத் தொகையில் 25% தொகை, பதிவு பெற்ற குத்தகை விவசாயிகளுக்குத் தரப்படும் என்கிறது "இடதுசாரி' அரசு. ஆனால், பெரும்பாலோர் வாய்வழி ஒப்பந்தம் மூலம் குத்தகை விவசாயம் செய்யும் பதிவு செய்யப்படாத குத்தகை விவசாயிகளாக உள்ளதால், இவர்களுக்கு நிவாரணமோ மறுவாழ்வோ கிடைக்காது.

 

இதே நிலைமைதான் சிங்கூரிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி விவசாயிகளுக்கும் நேரும். ஏனெனில், கையகப்படுத்தப்படும் நிலத்தின் உடைமையாளர்களுக்குத்தான் அரசு நிவாரணம் தருமேயொழிய, மற்றவர்களுக்கு எதுவும் கிடைக்காது. இக்கிராமத்தைச் சார்ந்து வாழும் நாவிதர்கள், துப்புரவுத் தொழிலாளிகள், சிறுவியாபாரிகள் முதலானோர் எவ்வித நிவாரணமோ, மறுவாழ்வோயின்றி கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, நகரங்களில் கூலி வேலை தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

இவை ஒருபுறமிருக்கட்டும். நிலம் தேவையெனில் டாடா நிறுவனமே சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள விவசாயிகளிடம் பேசி வாங்கிக் கொள்ளலாமே! ஏன், அரசு அதைக் கையகப்படுத்தி டாடாவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் மையமான கேள்வி. 1894ஆம் ஆண்டின் நிலக் கையகப்படுத்தல் சட்டப்படி, பொதுநலனுக்காக பொதுப் பயன்பாட்டுக்காக மட்டுமே நிலத்தைக் கையகப்படுத்தலாம். அதாவது, அரசின் சார்பில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்துரயில் நிலையம், குடியிருப்புகளை நிறுவ இச்சட்டத்தின்படி விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தலாம். ஆனால், ஒரு தனியார் தரகுப் பெருமுதலாளியின் ஆதாயத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதென்பது சட்டவிரோதமானது. சட்டத்தைப் பார்த்தால் மாநிலத்தைத் தொழில்மயமாக்க முடியாது என்று நியாயவாதம் பேசும் "மார்க்சிஸ்டுகள்', டாடாவுக்காக சட்டத்தையே வளைத்து முறுக்குகிறார்கள்.

 

ஏற்கெனவே பல தனியார் ஆலைகளுக்கு மே.வங்க அரசு நீண்ட கால குத்தகைக்குத்தான் நிலங்களைக் கொடுத்து வந்துள்ளது. இப்போது டாடாவுக்கு குத்தகை அடிப்படையில் நிலத்தைத் தராமல், மொத்தமாகக் கையகப்படுத்தி தாரைவார்க்கக் காரணம் என்ன என்பதைப் பற்றி மே.வங்க இடதுசாரி அரசு இன்றுவரை வாய் திறக்க மறுக்கிறது. மேலும், மே.வங்க அரசிடம் குத்தகை அடிப்படையில் நிலத்தைப் பெற்று தொழில் தொடங்கிய பல தனியார் நிறுவனங்கள் நசிவடைந்து மூடப்பட்டு, அந்நிலங்கள் மீண்டும் அரசின் பொறுப்பில் உள்ள நிலையில், அவற்றை டாடாவுக்குக் கொடுப்பதை விடுத்து புதிதாக சிங்கூரில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்குக் காரணம் என்ன என்பதையும் தெரிவிக்க மறுக்கிறது.

 

கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் கார் தொழிற்சாலையை மட்டும் டாடா நிறுவப் போவதில்லை. உபரியாக உள்ள நிலத்தில் உற்பத்தி அல்லாத பிற நடவடிக்கைகளுக்கு அதாவது அடுக்குமாடி குடியிருப்புகள், அங்காடிகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. இப்படித்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் நிறுவப்படுகின்றன. ஆனால், சிங்கூரில் டாடா நிறுவுவது கார் தொழிற்சாலைதான்; அது சிறப்புப் பொருளாதார மண்டலம் அல்ல என்கிறது "இடதுசாரி' அரசு. அத்தகைய மண்டலம் அல்ல என்றால், உபரியாக ஏராளமான நிலத்தை டாடாவுக்குத் தாரை வார்ப்பது ஏன் என்பதற்குப் போலி கம்யூனிஸ்டுகள் விளக்கம் தர மறுக்கிறார்கள்.

 

ஒரு தனியார் நிறுவனத்துக்காக விளைநிலங்களை அரசு கையகப்படுத்த தனிச்சட்டமும் விதிமுறைகளும் உள்ளன. இச்சட்டப்படி, அத்தனியார் நிறுவனம், மாவட்ட ஆட்சியரிடம் நிலத்திற்கான தொகையையும் மறுவாழ்வு நிவாரணத் தொகையையும் முன்பணமாகச் செலுத்தி ஒப்பந்தம் போட வேண்டும். ஆனால் டாடா நிறுவனம் மே.வங்கத்தின் ஹூக்ளி மாவட்ட ஆட்சியரிடம் அப்படியொரு ஒப்பந்தம் போடவில்லை; மறுவாழ்வு நிவாரணத் தொகையையும் முன்பணமாகச் செலுத்தவில்லை.

 

இருப்பினும், டாடா நிறுவனம் ஆண்டுக்கு 0.01 சதவீத வட்டியோடு ரூ. 20 கோடியை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிவாரணத் தொகையாகத் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக "இடதுசாரி' ஆட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு உள்ள ரூபாயின் மதிப்போடு ஒப்பிட்டால், இன்று அதன் மதிப்பு ரூ. 1112 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், இன்றைய ரூபாயின் மதிப்புப்படி ஏறத்தாழ ரூ.12 கோடி கொடுத்துவிட்டு, ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை டாடா நிறுவனம் சுருட்டிக் கொண்டு விட்டது. இந்தப் பகற்கொள்ளைக்கான சிவப்புத் தரகர்களாக போலி கம்யூனிஸ்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13வது விதியின்படி, அரசாங்க அதிகாரத்தைக் கொண்டு விதிமுறைகளை மீறி ஒரு தனிநபருக்கோ, நிறுவனத்துக்கோ சலுகை காட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதன்படி பார்த்தால், டாடாவுக்கு விதிமுறைகளை மீறி விளைநிலங்களைத் தாரை வார்த்துள்ள மே.வங்க "இடதுசாரி' அரசாங்கமே ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள குற்றவாளியாகும்.

 

இவையெல்லாம் மாநிலத்தைத் தொழில்மயமாக்குவதைத் தடுக்கும் அபத்தமான வாதங்கள் என்று தமது துரோகத்தனத்தை நியாயப்படுத்தும் டாடா மார்க்சிஸ்டுகள், இதர மாநில அரசுகளையெல்லாம் விஞ்சும் வகையில் மறுகாலனியக் கொள்கைகளை போட்டி போட்டுக் கொண்டு செயல்படுத்தி வருகின்றனர். அதற்கு சிங்கூர் விவகாரமே எடுப்பான சாட்சியமாக உள்ளது.

 

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டாலும், அவை அன்னிய பிரதேசங்கள் தனி சமஸ்தானங்கள் என்றும், இந்தியக் குடிமகனாக இருந்தாலும் இந்த சமஸ்தானத்துக்குள் நுழைய அனுமதி அதாவது ""விசா'' வாங்க வேண்டும் என்கிறது மைய அரசு. சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்ப்பதாகக் கூறும் டாடா மார்க்சிஸ்டுகள், இதே விதியைத்தான் சிங்கூரிலும் செயல்படுத்துகின்றனர். சிங்கூரில் நிறுவப்படும் டாடா ஆலைக்கெதிராக விவசாயிகளும் பிற இயக்கத்தினரும் போராடத் தொடங்கியதும், டாடா சமஸ்தானத்திற்குள் நுழையக்கூடாதென 144வது பிரிவின்படி தடையுத்தரவு, ஊரடங்கு உத்தரவு போட்டு, மீறுவோரைக் கைது செய்துள்ளனர். மேதாபட்கர், அருந்ததிராய் உள்ளிட்டு எவருமே டாடா சமஸ்தானத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று கெடுபிடி செய்து விரட்டியுள்ளனர். மறுகாலனியாக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஆளும் வர்க்கத் தரகர்களாக மாறி துரோகமிழைப்பார்கள் என்பதை இவையனைத்தும் தெளிவாகவே நிரூபித்துக் காட்டிவிட்டன.

 

சிங்கூரில் தொடரும் போராட்டம், வெறுமனே நிவாரணம் மறுவாழ்வுக்கான போராட்டமல்ல; சாராம்சத்தில், இது நாட்டை மீண்டும் காலனியாக்கிவரும் ஆட்சியாளர்களுக்கும், தனியார் அன்னிய ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்கும், போலி கம்யூனிச துரோகிகளான டாடா மார்க்சிஸ்டுகளுக்கும் எதிரான போராட்டம்!

 

""போஸ்கோ'' ஒப்பந்தத்தால் தமது மண்ணிலிருந்து பிய்த்தெறியப்பட்ட ஒரிசா பழங்குடியின மக்களின் போராட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் வாழ்விழக்கும் விவசாயிகளின் போராட்டம், நகரை அழகுபடுத்தும் திட்டங்களால் வீடு வாசல் இழந்து நிற்கும் நகர்ப்புற சேரி மக்களின் போராட்டம், தமது பிழைப்புக்கான இடத்திலிருந்து விரட்டப்படும் சிறுகடைதரைக்கடை வியாபாரிகளின் போராட்டம், தனியார்மயதாராளமயத் தாக்குதல்களால் மூண்டெழும் விவசாயிகள்தொழிலாளர்களின் போராட்டம் — என நாடெங்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் பரவிவரும் போராட்டத்தின் ஒரு அங்கம்தான், சிங்கூரில் தொடரும் போராட்டம். சொல்லிலே சோசலிசம் பேசிக் கொண்டு செயலிலே உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்குச் சேவை செய்யும் சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், மறுகாலனியத் தாக்குதலுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதே சிங்கூர் உணர்த்தும் பாடம்.


· பாலன்