jan_07.jpg

"தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதும் முன் வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெள்ளத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு

 என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை'' என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது பிறந்தநாளான மாவீரர் எழுச்சி நாள் உரையில் அறிவித்திருக்கிறார்.

 

இதன் மூலம், ஒரு பக்கம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் பேரழிவுப் போரை நடத்திக் கொண்டே மறுபக்கம் அமைதி வழித்தீர்வு காணப் போவதாக இரட்டை நாடகமாடும் சிங்களப் பேரினவாதக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவைப் போலன்றி பிரபாகரன் வெளிப்படையாகவே போர்ப் பிரகடனம் செய்துள்ளார். இலங்கையில் மீண்டும் மூண்டிருக்கும் இந்தப்போர் இதுவரை கண்டிராத அளவு மூர்க்கமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஈழதேசத்தை மேலும் நாசப்படுத்தும் அவ்வாறான யுத்தமானது இலங்கையின் வடக்குகிழக்கோடு நின்று விடாது. தென்னிலங்கையின் முக்கியக் குறியிடங்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி, முழுநாடும் பேரழிவுக்குள் சிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

 

""சர்வதேச சமூகம்'' என்று சிங்களப் பேரினவாத அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் மதிக்கும் ஏகாதிபத்தியத்தின் நெருக்குதல், சமாதானத்தையும் இயல்பு வாழ்வையும் விரும்பிய ஈழத் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்களின் யுத்த எதிர்ப்பு நிலை மற்றும் சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகளிடையே நிலவிய கூர்மையான பிளவு ஆகியவை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையிலான போர்நிறுத்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் சமாதான முயற்சிகள் முன்னெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன.

 

ஆனால் இந்த முயற்சிகள் ""நாட்டைப் பிளவுபட வைப்பதாகவும், தமிழ் பயங்கரவாதிகளிடம் சரணடைய வைப்பதாகவும், அந்நிய சக்திகளிடம் இலங்கையின் இறையாண்மையை அடகு வைப்பதாகவும் இருக்கின்றன'' என்று அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பீதியையும், சிங்கள பேரினவெறியையும் கிளப்பினார். இதில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிகா ஹெல உறுமய என்ற பௌத்த குருமார்களின் கட்சி ஆகிய சிங்கள பேரின வெறி கடுங்கோட்பாட்டு இயக்கங்களோடு கைகோர்த்துக் கொண்டு, தாம் சிறுபான்மையாக இருந்த நாடாளுமன்றத்துக்கு ஒரு திடீர்த் தேர்தலைக் கொண்டு வந்தார்.

 

சமாதான முன்னெடுப்புகளில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயின் தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டும், விடுதலைப் புலிகளின் தனிநபர் அழித்தொழிப்பு மற்றும் தற்கொலைப் படைத் தாக்குதல்களை மிகைப்படுத்தியும் பீதியூட்டி சிங்கள பேரின வெறியைக் கிளப்பி 2004 நாடாளுமன்றத் தேர்தல்களிலும 2005 அதிபர் தேர்தலிலும் சந்திரிகா ராஜபக்சே கும்பல் வெற்றி பெற்றது. விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அரசியல் நிலைப்பாடும் இதற்கு ஒருவகையில் மறைமுகமாக உதவியிருக்கிறது. போர்நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஈழத்தில் தாம் தலைமை வகிக்கும் ஒரு இடைக்கால நிர்வாகத்துக்கு வழிவகுக்கும், மேலைநாடுகளின் உதவியாக வரவிருந்த வளர்ச்சிப் பணிகளில் தமக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்த விடுதலைப் புலிகள் இயக்கம் அவ்வாறான வாய்ப்புகள் மறுக்கப்படுவதை 2002, 2003ஆம் ஆண்டே உணர்ந்தது.

 

கிழக்கில் தளபதி கருணாவின் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு கணிசமான அளவு நிதியையும் ஆயுதங்களையும் படையணியையும் இழந்தது, அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் புலிகளுக்குப் பின்னடைவைக் கொடுத்தது. சுனாமி பேரழிவைத் தொடர்ந்து வந்த நிவாரணப் பணிகள் மற்றும் மறுகட்டுமான வேலைகளில் விடுதலைப் புலிகளைப் பங்கேற்க விடாமல் விலக்கி வைப்பதில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிகா ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் நெருக்குதல்களை இலங்கை அரசு அப்படியே ஏற்றுக் கொண்டபோதே, இனி சமாதான முயற்சிகள் எவ்வித பலனுமளிக்காது, ""விடுதலைப் போர் ஒன்றே வழி'' என்ற முடிவுக்கு புலிகள் வருவதற்கு இது ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது. இவ்வாறான காரணங்களினால் சிங்களப் பேரின அரசியல் சக்திகள் அனைத்தையும் ஒருசேர எதிர்ப்பது என்ற நிலையிலிருந்து இலங்கை நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்களில் புலிகள் எடுத்த நிலைப்பாடு சந்திரிகாராஜபக்சே கும்பலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

 

ரணில் மற்றும் புலிகளுக்கிடையிலான புரிந்துணர்வு யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான முன்னெடுப்புகளை முறியடிக்கும் முயற்சியினூடாக சிங்கள பேரினவாதம் சந்திரிகா குமாரதுங்கா மற்றும் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஒரு வலுவான சிங்களப் பேரினவாத சக்தியாக உருவெடுத்திருக்கிறது. அதன் சித்தாந்த தலைமையாக ஜே.வி.பி. மற்றும் ஜாதிகா ஹெல உருமய ஆகிய சிங்களப் பேரினவெறி அமைந்திருக்கிறது. இறுதியில் ரணிலும் கூட இந்த கூட்டணியுடன் சமரசம் செய்து கொண்டு ஐக்கியப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு என்ற பழைய முயற்சியே மேற்கொள்ளப்பட்டாலும் தற்போதைய போரை தெளிவான, திட்டமிட்ட யுத்த தந்திர அடிப்படையிலேயே சிங்களப் பேரினவாதம் வழிநடத்துகிறது. இதன்படி போரை வழிநடத்துவதற்கான அதிகாரம் முழுக்கவும் இராணுவத் தளபதிகளிடமும், இராணுவ அமைச்சகத்திடமும் கையளிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கில் கருணாவின் கைக்கூலிப்படையைக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தாக்கி பலவீனப்படுத்துவது; கடந்த நான்காண்டுகளில் புதிதாகத் திரட்டப்பட்டிருக்கும் படைபலத்தையும், ஆயுத பலத்தையும் வைத்துக் கொண்டு புலிகளின் வலுவான இலக்குகளைத் தாக்கி பலவீனப்படுத்துவது; ஈழத் தமிழ் மக்கள் மீது விமானக் குண்டுவீச்சுகளை நடத்தி படுகொலைகள் செய்வது; பொருளாதார முற்றுகையிட்டு ஈழ மக்களை பட்டினிச் சாவில் தள்ளுவது; இதன் மூலம் புலிகளின் மக்கள் செல்வாக்கை வடியச் செய்வது; இலங்கை அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற அந்நிய நாடுகளுடன் இராணுவக் கூட்டை ஏற்படுத்திக் கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு உலகப் போரோடு புலிகளுக்கு எதிரானப் போரையும் இணைப்பது என்பதுதான் சிங்களப் பேரினவாதத்தின் தற்போதைய யுத்தத் தந்திரமாக இருக்கிறது.

 

இதன் ஓர் அங்கமாகவே சம்பூரிலும் பிற இடங்களிலும் குண்டு வீச்சை நடத்தியது. அடுத்து, புலிகளின் கெப்பித்தி கொல்லாவ கிளேமோர் தாக்குதலை சாக்காக வைத்து இராணுவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதேபோல மாவிலாறு அணை நெருக்கடியை சாக்கு வைத்து தொண்டு நிறுவனங்கள் உட்பட சிவிலியன்கள் மீதும் குண்டு வீசித் தாக்கியது. செஞ்சோலை சிறுவர்கள் முகாம் மற்றும் வாகரை அகதிகள் மருத்துவமனை மீதும் குண்டுவீசி படுகொலைகள் புரிந்தது. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்தத் தாயகத்திலேயே அகதிகளாக்கப் பட்டிருக்கின்றனர்.

 

இத்தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளது மனித உரிமை அமைப்புகளின் கடும் கண்டனத்துக்குள்ளான போதும், இலங்கை இராணுவம் வெற்றிக் குதூகலத்தில் வடக்கிலும், விடுதலைப் புலிகளைத் தாக்கி பலவீனப்படுத்துவதற்காக யானையிறவைக் கைப்பற்றும் சாகச முயற்சியில் கடந்த அக்டோபரிலும் இறங்கியது. ஆனால், தாக்குதல் தொடுத்த ஒரு சில மணிநேரங்களிலேயே அது பேரிழப்பை சந்தித்தது. 130 போர் வீரர்களைப் பலி கொடுத்ததோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. முகாமலை பெருந்தோல்வி எனப்படும் இதையடுத்து ஹப்அரானா எனுமிடத்தில் வெடிமருந்து ஏற்றிய லாரியைக் கொண்டு புலிகளின் தற்கொலைப் படை நடத்தியத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர் கொல்லப்பட்டது, மேலும் ஒரு பின்னடைவாக அமைந்தது. சிங்களப் பேரினவாதிகள் கனவு கண்டதைப் போல இராணுவ ரீதியிலான வெற்றி என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதையே களநிலைமைகள் தெளிவுபடுத்துகின்றன.

 

விடுதலைப் புலிகளின் யுத்தத் தந்திரமும் கூட ஒரு மாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது. இராணுவ ரீதியிலான வெற்றியின் மூலமாகவே ஈழ விடுதலையை சாதித்துவிட முடியும் என்று இதுவரை நம்பி வந்த புலிகள், சிங்கள பேரினவாதத்திற்கெதிராக இராணுவ ரீதியிலான மேலாண்மை பெற்று விட்டாலே ""சர்வதேச சமூக நெருக்குதல் காரணமாக, கிழக்கு திமோரில் நடந்ததைப் போன்ற சுயநிர்ணய உரிமைக்கான ஒரு வாக்கெடுப்புக்கான வாய்ப்பு தோன்றும்'' என்று இப்போது கருதுகிறார்கள். இதற்காக ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் அரசியல் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த ரீதியிலேயே, ஈழப் பிரச்சினையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று இங்குள்ள தமிழினவாதக் குழுக்களும் புலி ஆதரவு அமைப்புகளும் திரும்பத் திரும்ப கோருகின்றன. ஆனால், ராஜீவ் காலத்தில் நடந்ததைப் போல இந்தியத் தலையீடு என்பது ஈழத் தமிழர்களுக்கெதிரானதாகவே இருக்கும் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். ஏற்கெனவே மன்மோகன் சிங் சோனியா கும்பல் இராணுவ ரீதியில் இலங்கை அரசுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து வருகிறது. இதுவும் கூட மன்மோகன் சிங் சோனியாவுக்கு தெரியாமல் அதிகாரிகளாகவே மேற்கொள்ளும் நடவடிக்கைதான் என்று அவர்கள் பூசி மெழுகுகிறார்கள்.

 

சிங்களப் பேரினவாதிகள் கருதுவதைப் போல இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு, விடுதலைப் புலிகள் கருதுவதைப் போல சர்வதேச சமூக ஆதரவு ஆகிய இரண்டுமே எதார்த்தத்துக்குப் புறம்பான நிலை என்பதையே நடப்பு அரசியல் இராணுவ நிலைமைகள் தெளிவாக்குகின்றன.
·