jan_07.jpg

கை நிறைய சம்பளம்; வேலை செய்து கொண்டே மேலும் படித்து முன்னேறலாம்; அதிருஷ்டமிருந்தால் அமெரிக்காவுக்கே போய்விடலாம் என்று பத்திரிகைகளால் பிரமையூட்டப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், கொத்தடிமைகளை விடக் கேவலமான நிலையில்

 வைக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 10 12 மணிநேர வேலை, விடுமுறை நாட்களை ரத்து செய்வது, திடீர் வேலை நீக்கம், உத்தரவாதமற்ற வேலை, இது தவிர பாலியல் தொந்தரவுகள் என்பவையெல்லாம் "கால்சென்டர்கள்' எனப்படும் நவீன கொத்தடிமைக் கூடாரங்களின் பொது விதிகள்.

 

இருப்பினும், இத்தகவல் தொழில்நுட்பத் துறையில் இக்கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகத் தொழிற்சங்கம் அமைப்பதென்பதைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கை போலச் சித்தரித்து வருகிறது, அரசு. இராணுவம், போலீசுக்கு அடுத்தபடியாக சங்கம் அமைக்கக்கூடாத துறை, தகவல் தொழில்நுட்பத் துறை என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. பெங்களூர் கால் சென்டரில் பணியாற்றிய பிரதீபா என்ற இளம்பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்; சென்னையில் ஐ.கியூ.நெட் என்ற பி.பி.ஓ. நிறுவனத்தில் 2 மாதங்களாக செய்த வேலைக்குச் சம்பளம் கேட்ட ஊழியர்களை ஆபாசமாகத் திட்டி மிரட்டிய சம்பவம் என அடுத்தடுத்து கால்சென்டர் சொர்க்கங்களின் இருண்ட பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தபோதிலும் இதுவரை சங்கமோ, ஊழியர் நலச் சட்டங்களோ உருவாக்கப்படவில்லை.

 

இத்தொழிலில் நாடெங்கும் ஏறத்தாழ பத்து லட்சம் பேர் பணியாற்றிய போதிலும், வேலை பளு தாறுமாறான வேலைநேரம் முதலானவற்றால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், இந்த ஊழியர்கள் இன்னமும் கனவுகளிலேயே மிதக்கின்றனர். இவர்கள் தங்களை நவீன கூலித் தொழிலாளிகளாகக் கருதுவதுமில்லை. தங்களை மேட்டுக்குடியினராகக் கருதிக் கொள்ளும் ஆளும் வர்க்கச் சிந்தனை தான் இவர்களிடம் நிலவுகிறதேயொழிய, தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை.

 

இத்தகையோரிடம் அரசியல் உணர்வூட்டி அமைப்பாக்குவதென்பது இடர்ப்பாடுகள் நிறைந்த பணி. பல்வேறு இடதுசாரி ஜனநாயக சக்திகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சி.பி.எம். கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. அண்மையில் கொல்கத்தா நகரில், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கான சங்கம் ஒன்றைக் கட்டியமைத்துள்ளது. இத்துறையில் சங்கமே இல்லாமல் கொத்தடிமைத்தனம் நிலவும் சூழலில், முதன்முறையாக ஒரு சங்கம் உருவாகியிருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இனி விடிவுகாலம் பிறந்து விடும் என்று நம்பினார்கள்.

 

ஆனால், நீண்ட நாட்களாக வாய் பேசாமல் இருந்த கைக்குழந்தை, திடீரென ஒருநாள் வாய் திறந்து ""எப்போ அம்மா தாலியறுப்பே?'' என்று தாயைப் பார்த்து கேட்ட கதையாகி விட்டது, போலி கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ள சங்கம். இல்லையில்லை; இது சங்கமில்லை; இதற்குப் பெயர் ""மன்றம்'' (அசோசியேஷன்) என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள். மே.வங்க மாநில சட்டப்படி, பொறியாளர்கள் சங்கம் கட்ட முடியாது என்பதால், ""மன்றம்'' தொடங்கியுள்ளோம் என்கிறார், மே.வங்க சி.ஐ.டி.யு. தலைவரான சியாமல் சக்ரவர்த்தி.

 

""இந்த அமைப்பை வைத்துக் கொண்டு வேலை நிறுத்தம், போராட்டமெல்லாம் செய்வீர்களா?'' என்று கேட்டால், ஊழியர்களுக்கான அமைப்பு என்ற உடனேயே ஏன் வேலை நிறுத்தத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? என்று எதிர்க்கேள்வி கேட்டு பூசி மெழுகுகிறார், சக்ரவர்த்தி. அப்படியானால், இந்த மன்றத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்களாம்?

 

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகளை அமைப்பாக்கி, அவர்களுக்குப் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவது குறித்துப் பயிற்சி தருவார்களாம். கணவன், மனைவி இருவருமே இத்துறையில் வேலை செய்தால், அவர்களின் குழந்தைகளைப் பராமரிக்கக் குழந்தைகள் காப்பகம் பால்வாடி முதலானவற்றை நடத்தப் போகிறார்களாம். தங்கள் மன்றத்தில் சேரத் தயங்கும் பொறியாளர்களுக்கு இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதில் பெயர் குறிப்பிட விரும்பாதவர்களையும் ஆதரவாளர்களாக இணைத்துக் கொள்ளப் போகிறார்களாம். சில தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய மன்றத்தில் இணைவோரைப் பழிவாங்காமல் இருக்க, இது முன்னேற்பாடான நடவடிக்கையாம். இனி இந்த மன்றம், இன்னும் திருமணமாகாத ஊழியர்களின் ஜாதகங்களைத் திரட்டி, திருமண தகவல் மையம் நடத்த வேண்டியதுதான் பாக்கி.

 

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான அமைப்பை உருவாக்கியுள்ள பெருமிதத்துடன் பேட்டி தந்துள்ள சியாமல் சக்ரவர்த்தி, இம்மன்றம் அன்னிய முதலீடுகளுக்கு எதிரானது அல்ல என்றும், அன்னியக் கம்பெனிகள் மே.வங்கத்தில் தொழில் தொடங்கி நடத்துவதற்கு எதிரான திசையில் செல்லாது என்றும் உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே சி.ஐ.டி.யு. சங்கம் இயங்கும் சணல் ஆலைகளிலும், ஜப்பானிய மிட்சுபிஷி நிறுவனத்திலும் போராட்டமோ, வேலை நிறுத்தமோ செய்யவே இல்லை என்று தமது சங்கத்தின் மகிமையை விளக்கி, பன்னாட்டு முதலாளிகளை தாஜா செய்கிறார்.

 

டி.வி.எஸ்., பொள்ளாச்சி மகாலிங்கம் முதலான தரகுப் பெருமுதலாளிகளின் நிறுவனங்களில், தொழிலாளர்கள் வர்க்க உணர்வோடு சங்கமாகத் திரளுவதற்கு முன்னரே, இம்முதலாளிகள் ஐ.என்.டி.யு.சி. போன்ற கைக்கூலி சங்கத்தைக் கட்டி, அதற்கு அவர்களே புரவலர்களாக இருப்பர். அச்சங்கங்கள் தீபாவளி பண்டு பிடிப்பது, கலை நிகழ்ச்சி நடத்துவது, ஆயுதபூசை கொண்டாடுவது என்பனவற்றையே தமது தலையாயக் கடமையாகக் கொண்டிருக்கும். மற்ற சங்கங்களைப் போலல்லாமல், நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று சவடால் அடிக்கும் சி.ஐ.டி.யு., தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐ.என்.டி.யு.சி. பாணியிலான ஒரு மனமகிழ் மன்றத்தைக் கட்டி, இதுவும் தொழிற்சங்கம்தான் என்று நம்பச் சொல்கிறது.

 

ஒருபறம், தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழிற்சங்கம் கட்டி விட்டோம் என்று பெருமையுடன் சவடால் அடிக்கலாம்; மறுபுறம், இச்சங்கத்தில் சேருவோரிடம் சந்தாநன்கொடை திரட்டி ஆதாயமடையலாம்; இப்படியொரு பிழைப்புவாத உத்தியோடு ஒரு மனமகிழ்மன்றத்தைக் கட்டி நாடகமாடுகிறார்கள், போலி கம்யூனிஸ்டுகள்.

 

· கவி