Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

mars_2007.jpg

பட்டியலின பழங்குடி மக்கள் என்றாலே அவர்களைப் பற்றி நாட்டின் பெரும்பாலானவர்கள், படித்த நகர்ப்புற அறிவாளிகள் கூட ஒரு தவறான கண்ணோட்டம் வைத்திருக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பம், கல்வி பண்பாடு, சமூகப் பொருளாதாரம், நாகரிகம் ஆகியவற்றால் தாங்கள்

 முன்னேறியவர்கள் என்றும், ஆனால் பழங்குடியினர் என்பவர்கள், மனித நாகரிகமே அறியாத பூர்வகுடியினர்; ஆதி முதற்கொண்டு காடுகளிலேயே பிறந்து, வளர்ந்தவர்கள்; வெளியுலக வளர்ச்சியையே காணாது பின்தங்கிப் போயுள்ளவர்கள் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.

 

ஆனால், பட்டியலின பழங்குடி மக்களின் உண்மையான வரலாறோ வேறுவிதமானது. இன்று அவர்கள் பழங்குடி விவசாயிகளாகவும், காடுகளில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து விற்பவர்களாகவும், வேட்டையாடிகளாகவும் வாழ்ந்தாலும், அநாகரிகமானவர்களாகத் தோன்றினாலும், இந்தப் பழங்குடி மக்களின் மூதாதையர்களும் மற்றபிற மக்களைப் போலவே ஒரு காலத்தில் ஒப்பீட்டு ரீதியில் முன்னேறிய விவசாயமும் பொருளாதாரமும், நாகரிகமும் கொண்டிருந்தவர்கள்தாம். சமவெளிகளில் அவர்களிடமிருந்த பண்படுத்தப்பட்ட விவசாய நிலங்களைப் பறித்துக் கொண்டு காடுகளுக்கும் மலைகளுக்கும் விரட்டப்பட்டவர்கள் தாம்.

 

காடுகள் மீது அரசு ஏகபோக உரிமையை நிறுவிய பிரித்தானிய காலனியவாதிகளுக்கு முன்பிருந்தே, மத்தியகால மன்னர்கள் காலத்திலேயே செழுமையான விவசாயச் சமவெளிகளை நிலப்பிரபுக்கள் கைப்பற்றிக் கொள்வதை அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் ஊக்குவித்தார்கள்; துணை நின்றார்கள். இதனால் நிரந்தரமான வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும் இழந்த மக்கள் மலைச் சரிவுகளிலும், காடுகளிலும் பருவமழைக்கேற்ப பயிர் செய்தும், காடுகளில் கிடைக்கும் தேன், விறகு, சில விதைகள்பழங்களைச் சேகரித்தும், சிறிய விலங்குகளை வேட்டையாடியும் விற்றுப் பிழைத்தனர். கல்வி வசதியின்றியும், நாகரிக வளர்ச்சி குன்றியும் பின்தங்கியவர்கள் ஆனார்கள்.

 

வளமான மண்வளமும், மழை வளமுமிக்க மலைச் சரிவுகள் அந்நிய மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு காபி, தேயிலை, ஏலம், இலவங்கம் போன்ற விலை உயர்ந்த பணப்பயிர்களின் பண்ணைகளாக மாற்றப்பட்டன. கட்டுமானப் பொருட்களுக்காகவும், காகித ஆலைகளுக்காகவும் காடுகள் சூறையாடப்பட்டன. நவீன ஆலை உற்பத்திக்கான தாதுப் பொருட்களையும், நிலக்கரிகளையும் வெட்டி எடுப்பதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தத் தொழில்களுக்கான கூலி அடிமைகளாகப் பழங்குடி மக்கள் மாற்றப்பட்டனர்.

 

காலனிய காலத்திற்கு முன்பிருந்தே நடந்து வரும் இத்தகைய அநீதிகளுக்கு ""ஈடாக''ப் பழங்குடி மக்கள் பட்டியலினமாக அறிவிக்கப்பட்டு இடஒதுக்கீடு என்ற சலுகை மட்டும் தரப்பட்டது. ஆனால், அதன் பிறகு ""தேசியப் பொருளாதார வளர்ச்சி'' என்ற பெயரில் காடுகளையும் மலைகளையும் பழங்குடியின மக்களிடமிருந்து பறிப்பது பன்மடங்கு அதிகரித்து விட்டது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.7 சதவீதமானவர்களாகப் பழங்குடி மக்கள் உள்ளனர். இந்த மக்கள் பலநூறு ஆண்டுகளாக வாழும் மலைகளும் காடுகளும் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கானஇராட்சத அணைகள் கட்டுவதற்கான ஆறுகள், மிகப் பெரும் அளவிலான தாதுப் பொருட்கள் மற்றும் பிற மூலாதாரங்கள் நிரம்பியிருப்பவை. இம்மக்களை அங்கிருந்து வெளியேற்றினால்தான் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்ட முடியும் என்ற விதமாக ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர்.

 

ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் போலாவரம் இந்திரா சாகர் பல்நோக்கு நீர்ப்பாசன மின் திட்டம்; விசாகபட்டினம் மாவட்டத்தின் பாக்சைட் சுரங்கத் திட்டம்; நாகார்ஜுனா அணை அருகே அமையவுள்ள உரேனியம் தாதுப்பொருள் ஆலை; ஒரிசாவின் நியாம்கிரி மலைப் பகுதியில் அமையும் வேதாந்தா அலுமினியம் ஆலைக்காக வெட்டப்படும் உலகிலேயே மிகப் பெரிய பாக்சைட் சுரங்கம் மற்றும் பாஸ்கோ இரும்புத் தாது சுரங்கம் ஆகியவற்றால் ஆந்திரா, சட்டிஸ்கார், மற்றும் ஒரிசா மாநிலங்களில் வாழும் பல இலட்சக்கணக்கான பட்டியலின பழங்குடி மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவர்.

 

ஏற்கெனவே மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பாயும் நர்மதா மற்றும் அதன் துணை ஆறுகள் மீது சர்தார் சரோவர் அணைத் திட்டத்தின் கீழ் பல சிறியபெரிய அணைகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன. இதனால் பல இலட்சம் பழங்குடியின மக்கள் வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். இந்த வெளியேற்றத்துக்கும், அணைத்திட்டங்களுக்கும் எதிராகவும், மறுவாழ்வு கோரியும் பல ஆண்டுகளாக அவர்கள் போராடுகின்றனர். பழங்குடியின மக்களின் வெளியேற்றம் மற்றும் அணைத் திட்டங்களை நியாயப்படுத்தித் தீர்ப்புகள் வழங்கியுள்ள உச்சநீதி மன்றம் பிறப்பித்துள்ள மறுவாழ்வு ஏற்பாடுகள் எதையுமே செய்யாது மத்தியமாநில அரசுகள் ஏய்த்து வருகின்றன.

 

ஆந்திராவில் ""சமா'' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், பழங்குடியின மக்கள் அனுபவித்து வரும் பட்டியலிடப்பட்ட பகுதிகளை, தாதுப் பொருட்கள் வெட்டியெடுப்பதற்காக தனியார்களுக்குக் குத்தகைக்கு விடுவதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 12 ஆண்டுகளாக வழக்கு நடத்தித் தடுத்திருக்கிறது. அதன் அமைப்பாளர் ரெட்டுபிரகடா என்பவர் சொல்கிறார், ""ஒரு பத்து சதவீத வளர்ச்சியைச் சாதிப்பது என்ற பொருளாதாரத் திட்டத்தின் அங்கமாக அணைக்கட்டுகளும் அலுமினிய ஆலைகளும் நிறுவப்பட உள்ளன. பழங்குடியின மக்களின் மொத்த வெளியேற்று விளைவின் வளர்ச்சியை (எணூணிண்ண் ஞீடிண்ணீடூச்ஞிஞுட்ஞுணt ணீணூணிஞீதஞிt ணிஞூ tடஞு tணூடிஞச்டூ ணீஞுணிணீடூஞு எஈக) உயர்த்துவதன் மூலம் இதைச் சாதிக்கப் போகிறார்கள்.''

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பத்து சதவீதமாக உயர்த்துவது என்ற மன்மோகன் சிங் மாண்டேக் சிங் அலுவாலியா சிதம்பரம் ஆகிய உலகவங்கி, ஐ.எம்.எஃப், மற்றும் உலக வர்த்தகக் கழக எடுபிடிகளின் இலக்கை அடைய முயல்வது இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது.

 

இந்த உண்மையை மூடிமறைக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் இந்திய அரசு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அதற்குத் தோதாக ""பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம் 2006'' என்று அதற்கு நயவஞ்சகமான பெயரும் சூட்டியிருக்கிறது. அதற்கு முன்பாக, இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனங்களுக்கான அமைச்சகம் சுற்றுச் சூழல் தாக்கம் பற்றிய ஒரு புதிய மதிப்பீட்டு அறிவிக்கையையும் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டிருக்கிறது.

 

அந்தச் சட்டத்தின் பெயரும், அறிவிக்கையின் தோரணையும் தோற்றத்தில் பழங்குடியின மக்களுக்குச் சாதகமானதாகவும் சுற்றுச்சூழலையும் வளங்களையும் பாதுகாப்பதற்கானதாகவும் தெரிகின்றன. ஆனால், உண்மையில் இவை உள்ளடக்கத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகுத் தொழில்களின் நலன்களுக்காக சுற்றுச் சூழலை நாசப்படுத்துவதாகவும் வனங்களை அழித்துச் சூறையாடுவதாகவும் உள்ளன. மிகப் பிற்போக்கான, நாட்டை மறுகாலனியாக்கும் ஆளும் அரசியல் கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்றும், அதோடு மதவெறி பாசிச அரசியல் கூட்டணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றும் பெயர் வைத்திருப்பதைப் போல பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை அகதிகளாக விரட்டியடிக்கும் சட்டத்திற்குப் ""பழங்குடி மற்றும் பாரம்பரிய வனவாசிகள் வனஉரிமைகள் அங்கீகாரச் சட்டம்'' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

 

நாடு முழுவதும் மொத்தம் 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவுவதற்கு மத்தியமாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன; அவற்றில் 19 மாநிலங்களில் 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒப்புதல் பெற்றுவிட்டன. 23 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்கெனவே இயங்கத் தொடங்கி விட்டன. 166 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான கொள்கை அறிவிக்கை செய்வதற்காக கொள்கை ரீதியிலான முடிவெடுக்கப்பட்டு விட்டது; 63க்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக 34,861 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இவற்றில் மிகமிகப் பெரும்பாலானவை நடுத்தர, சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றப்படும் விவசாய நிலங்கள். இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் நிலவெளியேற்றத்துக்குப் பலியாகிறார்கள்.

 

தற்போது மத்தியிலோ, மாநிலங்களிலோ ஏதாவது ஒரு வகையில் (தனித்தோ, கூட்டணிகளின் மூலமாகவோ) அரசில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை முன்னிட்டு விவசாயிகளின் நில வெளியேற்றத்துக்குத் துணை போகும் சக்திகளாகவே உள்ளனர். அதேசமயம் தாங்கள் ஆட்சியில் பங்கேற்காத மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகள்; மகேந்திரா சிட்டி போன்றவற்றுக்கு துணைநின்ற ஜெயலலிதா; மத்திய அரசில் பங்கேற்று அன்புமணி மூலம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படுவதற்குத் துணை நிற்கும் பா.ம.க இராமதாசு; இப்போதைக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் மமதா பானர்ஜி போன்றவர்கள் விவசாயிகளின் நில வெளியேற்றத்தை எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்கள்.

 

ஆனால், இத்தகைய மோசடி, பித்தலாட்டங்கள் எல்லாவற்றிலும் முன்னோடிகளாகத் திகழ்பவர்கள் போலி இடதுசாரிக் கட்சிகள்தாம், அதிலும் குறிப்பாக, போலி மார்க்சிஸ்டு கட்சிதான்! ஏகாதிபத்திய உலகமயமாக்கம் என்பதே "தேச' விரோத, மக்கள் விரோத, ஏகாதிபத்திய மறுகாலனியாக்க நோக்கம் கொண்டதுதான். ஆனால், ஏகாதிபத்திய உலகமயமாக்கம் மனித முகம் கொண்டதாகவும், ""தேசிய'' சுயசார்பு அடிப்படையிலானதாகவும், தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கானதாகவும் இருக்க வேண்டும் என்றும் எவ்வித அடிப்படையும் இல்லாத வெற்று நிபந்தனையோடு உலகமயமாக்கத்தை போலி கம்யூனிஸ்டுகள் ஏற்கின்றனர். அதேபோல விவசாயிகளைப் பாதிக்காத வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சவடாலடிக்கின்றனர்.

 

ஆனால், தாங்கள் ஆளும் மாநிலங்களில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கு செங்கொடியை நடைபாவாடையாக விரித்து வரவேற்கின்றனர். மத்திய அரசின் தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கல் நடவடிக்கைகளை வெறும் அறிக்கை தீர்மானம் போட்டு எதிர்ப்பதாக நடித்துக் கொண்டே ""தொழில்வளர்ச்சி வேலை வாய்ப்புப் பெருக்கம் பொருளாதார முன் மேற்கு வங்கம் சிங்கூர்நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக போலீசை ஏவி பாசிச வெறியாட்டம் போட்டு விவசாயிகளிடமிருந்து விவசாய விளைநிலங்களைப் பறித்துக் கொண்டு வெளியேற்றுகிறார்கள், இந்தப் போலி கம்யூனிஸ்டுகள். குறிப்பாக போலி மார்க்சிஸ்டுகள்தாம் மத்திய அரசு இப்போது கொண்டு வந்திருக்கும் பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் சட்டமானது (வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம்), பழங்குடியின மக்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதைத் தடுக்கும்; அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டும் என்று பம்மாத்துச் செய்கிறார்கள்.

 

""காட்டிலாகா அதிகாரிகளின் ஆணைகள் மூலம் கோலேச்சும் ஆட்சிக்கு இந்தச் சட்டம் சாவுமணியாக இருக்கும்'' என்றும் ""சமூக நீதி உணர்வின் மிகப் பெரிய முன்னெடுப்பாகும்'' என்றும் பிரகாசுகாரத் சீதாராம் யெச்சூரி கும்பலின் முக்கிய உறுப்பினரான பிருந்தா காரத் கூறுகிறார். 1980க்குப் பிந்தைய எல்லா வன ஆக்கிரமிப்பாளர்களையும் வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதை ஏற்று எல்லா ""ஆக்கிரமிப்பாளர்களையும்'' வெளியேற்றுவதாக முடிவு செய்து ஓராண்டுக்குள் 1,68,000 குடும்பங்களை வாஜ்பாய் அரசாங்கம் வெளியேற்றி விட்ட நிலையில், 2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு அரசாங்கம், இடதுசாரி கூட்டணியின் நிர்பந்தம் காரணமாக எல்லா பழங்குடியின மக்கள் வெளியேற்றத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டது; அதன் விளைவாக வந்ததுதான் இந்த வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் என்று பீற்றிக் கொள்கிறார் பிருந்தா காரத்.

 

""பழங்குடியின மக்களை வெளியேற்றுவதை முடிவுக்குக் கொண்டு வருவது'' என்பதைத் தமது குறைந்தபட்ச பொதுதிட்டத்தில் ஒப்புக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு நகல் மசோதாவைத் தயாரித்தது. ""உண்மையில் அந்த நகல் மசோதா பழங்குடியின மக்களைச் சட்டப்பூர்வமாக வெளியேற்றுவதற்கானதாக இருந்தது. அப்படி ஒரு சட்ட மசோதாவை கொண்டு வராமல் இருந்திருக்கலாம் என்று இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்னர், நாடாளுமன்ற கூட் டுக்கமிட்டி அமைக்கப்பட்டது. அது பழங்குடி மக்களின் நலன்களுக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்ததாக''க் கூறும் பிருந்தா காரத், நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டி அறிக்கையைப் பரிசீலிப்பதற்கான அமைச்சர்கள் குழுவை அரசாங்கம் அமைத்ததாகக் கூறுகிறார். அந்தப் பரிசீலனையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதற்கில்லை என்று நிராகரித்து விட்டதாகச் சொன்ன அரசாங்கம், வேறொரு மசோதா தயாரித்தளிப்பதாகக் கூறியது; அப்படிச் செய்வது இன்னும் மோசமாகிவிடும் என்று இடதுசாரிகள் கருதியதால் அமைச்சர்கள் குழுவின் முடிவுகள் அடிப்படையிலேயே ""வன உரிமைகள் அங்கீகாரம்'' என்ற பழங்குடி மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகளுக்குச் சாதகமான சட்டம் நிறைவேறியது, என்கிறார்.

 

இருந்தபோதும், ""நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிந்துரைகள் முற்றாக நிராகரிக்கப்படவில்லை; இறுதியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும், ஐ.மு. கூட்டணி அரசு முதலில் முன்வைத்த வரைவு மசோதாவையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, மாற்றங்கள் புரியும்; இந்த வகையில் இது ஒரு முக்கிய முன்னெடுப்புத்தான்'' என்று பூரித்துப் போகிறார் பிருந்தா காரத். ஆனால், ""பாரம்பரிய வனவாசிகள்'' யார் என்று வரையறுப்பதற்கான இவர்களின் பரிந்துரையை நிராகரித்ததோடு, நாடாளுமன்றத்தில் அவசர கோலத்தில் மசோதா சட்டமாக்கப்பட்டதையும் அவரே ஒப்புக் கொள்கிறார்.

 

""நாடாளுமன்றக் கூட்டத் தொடர் டிசம்பர் 19ந் தேதி, செவ்வாய்கிழமை நிறைவுற இருந்தது. ஆனால், டிசம்பர் 15ந் தேதி மதியம்தான் நாடாளுமன்றம் முன்பு மசோதா கொண்டு வரப்பட்டது. விவாதம் துவங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்புதான் மசோதாவில் புகுத்தப்படும் முக்கிய மாற்றங்களை உள்ளடக்கிய அதிகாரபூர்வத் திருத்தங்கள் மக்களவை உறுப்பினர்களுக்குத் தரப்பட்டன. இது ஜனநாயக விரோதமானதென்று தெளிவாகத் தெரிந்தது; மாற்றங்களைப் படித்தறிவதற்கான போதிய கால அவகாசம் மக்களவை உறுப்பினர்களுக்குத் தரப்படவில்லை'' என்கிறார் போலி மார்க்சியக் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் பங்கேற்ற பிருந்தா காரத்.

 

எல்லா ஓட்டுக் கட்சி ஆட்சியாளர்களும் இதே தந்திரத்தைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பது இந்த போலி மார்க்சிஸ்ட் தலைவி பிருந்தா காரத்துக்குத் தெரியாதா? உலக வர்த்தகக் கழக ஒப்பந்தம், அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்ப்தங்கள் போன்ற நாட்டை அடகு வைக்கும் பலவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே கையொப்பமிட்டு முடிக்கப்பட்டன. இவற்றை எதிர்ப்பதாக போலி கம்யூனிஸ்டுகள் சவடாலடித்துவிட்டு, எல்லாம் முடிந்தபிறகு நாடாளுமன்றத்தில் பிரதமரின் விளக்கத்தை மட்டுமே கேட்டு விட்டு வாய்மூடிக் கொண்டதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

 

இப்போது, நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்ற பெயரில் கூடி விருந்து தரப்பட்டதும் தங்கள் முயற்சியால் முற்போக்கான வனஉரிமைகள் அங்கீகாரச் சட்டம் வந்துவிட்டதாக பசப்புகிறார்கள். இதே பிருந்தா காரத் கூறுகிறார், ""சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தால் உச்சநீதி மன்றத்துக்கு அளிக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, கடந்த மூன்றாண்டுகளில் அடர்ந்த காடுகள் நிரம்பிய 5.75 இலட்சம் ஹெக்டேர் காட்டு நிலங்கள் ஆலைத்திட்டங்கள் மற்றும் தாதுப் பொருள் சுரங்கங்கள் போன்ற காடுகள் அல்லாத தேவைகளுக்காக தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன. மேலும் கம்பெனிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.''

 

இவ்வாறு பழங்குடியின மக்களின் வாழ்விடங்களையும் வளங்களையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் அரசாங்கம், பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் நலன்களுக்காக வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் போட்டிருப்பதாகக் கூறுவது எவ்வளவு பெரிய மோசடி!


தொடரும்