mars_2007.jpg

மறுகாலனிய, பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் முழக்கமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தி வரும் தமிழ் மக்கள் இசைவிழாவுக்கு இது 14வது ஆண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுனாமி மற்றும் வெள்ளப் பேரழிவையொட்டி மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் காரணமாக தமிழ் மக்கள் இசைவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இவ்வாண்டு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இசைவிழா பிப்ரவரி 24ஆம் தேதி மிகச் சிறப்பாக நடந்தேறியது.

 

ஒரு மக்கள் விழாவாகவும், மாற்று அரசியல் கருத்துக் கொண்டோரும் விருப்பத்தோடு கலந்து கொள்ளும் நிகழ்வாகவும் பரிணாமம் பெற்றிருக்கும் தமிழ் மக்கள் இசை விழாவின் இவ்வாண்டு நிகழ்வு, "காலனியாதிக்க எதிர்ப்பு மரபு! மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு!' என்ற முழக்கத்தின்கீழ் நடைபெற்றது.

 

1806 வேலூர் சிப்பாய் புரட்சியின் 200வது ஆண்டு, 1857 வட இந்திய சுதந்திரப் போரின் 150வது ஆண்டு, 1906 வ.உ.சிதம்பரனார் சுதேசிக் கப்பல் கம்பெனி துவக்கியதன் நூற்றாண்டு மற்றும் 1906இல் பிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்தநாள் நூற்றாண்டு.

 

பெயரளவு சுதந்திரத்தையும் இழந்து நாடே மீண்டும் அடிமைப்பட்டு வரும் சூழலில், காலனியாதிக்க எதிர்ப்பு மரபின் வரலாற்று உணர்வை மக்களிடையே கொண்டு செல்வதன் மூலம் இன்றைய மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்திற்கு செயலூக்கம் வழங்கும் வகையில் இவ்வாண்டு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

 

விழாவின் முதல் நிகழ்வாக பறையொலி அதிர ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. தோழர்கள் கீழவாசல் காமராசர் சிலையிலிருந்து பேரணியாய்ப் புறப்பட்டனர். செம்பதாகைகள் காற்றில் அசைய, அவற்றின் நடுவே உயர்ந்த காலனியாதிக்க எதிர்ப்புப் போராளிகளின் உருவச் சித்திரங்கள், அந்தப் போராளிகளின் உண்மையான வாரிசுகள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களே என்பதைப் பறைசாற்றின.

 

""வேலூர் சிப்பாய் தியாகிகளே, விடுதலை மரபின் விடியல்களே, காளையார் கோயில் காடுகளே, காலனி எதிர்ப்பு ஓடைகளே, வீரவணக்கம் வீரவணக்கம்'' என்ற முழக்கம் நமது வீரமரபின் பெருமிதத்தையும் நெகிழ்ச்சியையும் ஒருங்கே தோற்றுவித்தது. ""பகத்சிங்கின் மண்ணிலே மன்மோகன் சிங் அவமானம்'', ""வ.உ.சிதம்பரம் வாழ்ந்த மண்ணில் ப.சிதம்பரம் வெட்கக்கேடு!'' என்ற முழக்கங்கள் நிகழ்காலத் துரோகிகளை அம்பலப்படுத்தின. ""திப்பு, மருது, கட்டபொம்மன் வாழ்ந்த வாழ்வைப் பாரடா; துப்பு கெட்ட நடிகனுக்கு ரசிகனா, நீ கூறடா'' என்ற முழக்கம் இளைய தலைமுறையின் வருந்தத்தக்க நிலையை உரிமையுடன் இடித்துரைத்தது. இரு மருங்கும் திரண்டு நின்ற மக்களை இசைவிழாவை நோக்கி ஈர்த்தவாறே பேரணி திருவள்ளுவர் திடலை வந்தடைந்தது.

 

விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் உணர்ச்சிபூர்வமான பாடலுடன் காலை அமர்வு தொடங்கியது.

 

இசைவிழாவின் வழக்கமான எளிமைக்கும் கம்பீரத்துக்கும் பதிலாக பகட்டைப் பறைசாற்றும் விதத்தில் அரங்கம்அமைய நேர்ந்ததற்கான விளக்கத்தைத் தன் வரவேற்புரையில் கூறினார் தோழர் காளியப்பன். பிப்ரவரி 22ஆம் தேதியன்று முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்ற அரசு விழாவுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கத்தைப் பிரித்து முடித்த பின்னர், புதிதாக பந்தல் போட்டு நாம் நிகழ்ச்சி நடத்துவது என்றால், அதற்காகவே இசைவிழாவைத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்ற சூழலில், வேறு வழியின்றி இந்த அரங்கிலேயே நடத்திக் கொள்வது என்று முடிவெடுக்க நேர்ந்ததை விளக்கினார்.

 

ம.க.இ.க.வின் மா.செ.கு. உறுப்பினர் தோழர் கதிரவன் தலைமையில் கருத்தரங்கம் துவங்கியது. தமது எழுச்சிகரமான தலைமையுரையில் 1800-01 காலகட்டத்தின் தென்னக சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்த தோழர் கதிரவன், அத்தியாகிகளின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதையும், இன்றைய மறுகாலனியச் சூழலில் அவர்களை நினைவு கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக 1800-01 போராட்டம், முதல் இந்திய சுதந்திரப் போராக அங்கீகரிக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக் காட்டி, அவ்வாறு அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்; பாடநூல்களில் பாடமாக சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

 

"தென்னிந்தியக் கிளர்ச்சி 1800-01, முதல் சுதந்திரப் போர்' என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும், தென்னிந்திய வரலாற்றுப் பேராயத்தின் முன்னாள் தலைவருமான பேரா.ராஜய்யன், போதிய ஆய்வாதரங்களுடன் தனது நூல் 1971இலேயே வெளியிடப்பட்டிருந்த போதிலும், இந்நூலை அரசு அலட்சியப்படுத்தியது குறித்து எடுத்துரைத்தார். 1800-01 கிளர்ச்சி, முதல் இந்திய சுதந்திரப் போராக அரசு அறிவிக்க வேண்டும் என 1980இல் தான் வழக்கு தொடுத்ததையும், உயர்நீதி மன்றம் இவ்விசயத்தில் தலையிட மறுத்து விட்டதையும் தெரிவித்தார். இந்த வரலாற்று உண்மையை நிலைநாட்ட உங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் முயலவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

 

அவரைத் தொடர்ந்து பேசிய பெங்களூர் திப்பு சுல்தான் பிரச்சார சமிதியின் தலைவரான தலகாடு சிக்கே ரங்க கவுடா அம்மாபெரும் வரலாற்று நாயகனின் பன்முகப்பட்ட ஆளுமையை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதையே தமது வாழ்க்கை இலட்சியமாக திப்பு கொண்டிருந்ததையும், அதனால் மராத்திய பேஷ்வா மன்னர்கள், ஹைதராபாத் நிஜாம், திருவிதாங்கூர் சமஸ்தானம் முதலிய மன்னர்களோடு ஒரு ஐக்கிய முன்னணியை கட்ட முயன்றதையும் குறிப்பிட்டார். ஆனால், அவர்கள் "மதவேறுபாடின்றி' கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விசுவாசமாக இருந்ததையும் திப்புவுக்கு எதிராக இருந்ததையும் குறிப்பிட்டார். மேலும், மூன்று உக்கிரமான போர்களுக்கு இடையிலும் அவர் அயராது சமூகத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்களை எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கினார். குறிப்பாக, பல்லாயிரக்கணக்கில் நிலங்களை வளைத்துக் கொண்ட பார்ப்பனர்களின் கொட்டத்தை ஒடுக்கிய திப்பு சுல்தான் அந்நிலங்களை அவர்களிடமிருந்து பறித்தெடுத்து நிலமற்ற கூலிஏழை விவசாயிகளிடம் அவற்றை விநியோகித்ததை விளக்கினார். மேலும், ராக்கெட் ஏவுகணைகளை உலகிலேயே முதன்முறையாக உருவாக்கிய திப்பு சுல்தான், அவற்றை தமது போர்க்களங்களில் பயன்படுத்தி கிழக்கிந்தியக் கம்பெனியைத் திகிலுறச் செய்ததையும், உலகளாவிய ராக்கெட் ஏவுகணை தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்றளவும் திப்பு சுல்தானது முன்முயற்சியையும், பங்களிப்பையும் வியந்து போற்றுவதையும் குறிப்பிட்டார். சிறீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டவுடன், முதற்கணமாக வெள்ளையர்கள் திப்புவின் நூலகத்தைக் கைப்பற்றி அவரது நூல்கள், ஆவணங்கள், குறிப்புகள் முதலானவற்றை கவர்ந்து சென்றதைக் குறிப்பிட்டார். மதத்தின் சாயல் இம்மியளவும் இன்றி ஆட்சி புரிந்த திப்புவை இன்று இசுலாமிய மதவெறியராக சித்தரிக்க முயன்று வரும் பார்ப்பனர்களின் பொய்ப் பிரச்சாரங்களை புள்ளி விவரங்களோடு அம்பலப்படுத்தினார்.

 

"அடிமை மோகம் அழியும் வரையில் விடிவு இல்லை, விடுதலையும் இல்லை!' என்ற தலைப்பில் உரையாற்றிய ம.க.இ.க. தோழர் துரை.சண்முகம், விடுதலைப் போராட்ட வீரர்களின் வீர மரபுக்கு நேர் எதிராக இன்று சமூகத்தில், குறிப்பாக இளைஞர்களிடத்தில் குடிகொண்டிருக்கும் பிழைப்புவாதத்தையும், கோழைத்தனத்தையும் வேதனையோடு குறிப்பிட்டார். மறுகாலனியத்தின் விளைவாக உணவு, உடை, கலை ரசனை, வாழ்க்கைக் கண்ணோட்டம் என ஒவ்வொரு அம்சத்திலும் அடிமைத்தனம் கோலோச்சுவதை எள்ளலும், சினமும் பொங்க குறிப்பிட்ட அவர், கல்வி அமைப்பும், அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புகளும் கட்சிகளும், ஏன் போலி கம்யூனிஸ்டுகளும் கூட இச்சூழலை மாற்றுவதற்கான அடிப்படைக் கண்ணோட்டமின்றி இருப்பதையும், இதற்கான மாற்று மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை கொண்ட புரட்சிகர அமைப்புகள்தாம் என்பதை அறைந்து கூறினார். நாட்டுப்பற்றும், மான உணர்வும் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் இத்தகைய புரட்சிகர அமைப்புகளின் அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

 

மதிய அமர்வின் முதல் உரையாக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியரும், "பகத்சிங் ஆவணங்களின் முழுமையான தொகுப்பு' நூலாசிரியருமான பேரா.சமன்லால், பகத்சிங்கின் அரசியல் ஆளுமை உருவான வரலாற்றுச் சூழல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சேகுவேராவுக்கு இணையான ஆளுமையாக பகத்சிங் விளங்கிய போதும், அவரது கருத்துக்கள் மக்களிடம் விரிவாக கொண்டு செல்லப்படாததை குறிப்பிட்டார். அவ்வகையில் இசை விழா குறித்த தமது மகிழ்ச்சியை வெளியிட்ட அவர், தமது குறுகிய வாழ்விற்குள்ளாக காதல், சாதி, மதம், ஏகாதிபத்தியம், மார்க்சியம் என பல தலைப்புகளில் தீர்க்கமான கருத்துக்களை பகத்சிங் வழங்கியிருப்பதையும், அவற்றை மேலும் விரிவாக மக்களிடம் கொண்டு செல்வதன் அவசியத்தையும் விளக்கினார். சாதி, மத எல்லைகளைத் தாண்டி நின்ற பகத்சிங்கிற்கு மட்டுமே நமது நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நாயகனாக கொண்டாடப்படுவதற்கான தகுதி உண்டு என்பதையும், ஏகாதிபத்தியம் கோரத் தாண்டவமாடும் இன்றைய சூழலில், இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ள உண்மையான பகத்சிங்கை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே விடுதலைக்கு வழிகோல இயலும் என்பதையும் வலியுறுத்தினார்.

 

"மறுகாலனியாக்கம் விடுதலைப் போர் இன்னும் முடியவில்லை' என்ற தலைப்பில் உரையாற்றிய ம.க.இ.க. பொதுச்செயலர் தோழர் மருதையன், இரண்டு நூற்றாண்டு முந்தையதும், மிகச் சமீபத்தியதுமான விடுதலை வீரர்களின் இந்த வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவதும், துரோகிகளின் வாரிசுகள் கொண்டாடப்படுவதும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல என்பதையும், துரோகிகளின் வாரிசுகளே இன்றைய ஆளும் வர்க்கத்தினர் என்பதையும் அம்பலப்படுத்தினார். வரலாற்று உணர்வு என்பது ஏன் அவசியம் என்பது விளக்கியதுடன் தியாகிகளின் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிந்து கொள்வதென்பது அவர்களைத் துதி பாடுவதற்காக அல்ல, அவர்கள் வழியில் இன்றைய நமது வரலாற்று கடமையை ஆற்றுவதற்குத்தான் என்பதை வலியுறுத்தினார். பகத்சிங் என்ற 23 வயது இளைஞனின் சிறப்பு, இந்திய விடுதலையை, தான் ஏற்றுக்கொண்ட தனிப்பட்ட பொறுப்பாகவே கருதி அவன் செயல்பட்டதுதான் என்று குறிப்பிட்ட அவர், அத்தகையதொரு பண்பைத்தான் இன்றைய சூழல் இளைஞர்களிடம் கோருகிறது என்று கூறி முடித்தார்.

 

மாலை 7.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. துவக்க உரையாற்றிய திரைப்பட இயக்குனர் இராம்ஜி எஸ்.பாலன், மிகவும் இயல்பாகவும் மனம் திறந்தும் பேசினார். ம.க.இ.க.வின் பாடல் ஒலிப்பேழைகள் தனது அரசியல் பார்வையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் மாற்றியதை விளக்கினார். விழாவுக்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ம.க.இ.க.வின் பேழைகளைப் பரவலாகக் கொண்டு செல்வதை ஒரு பணியாகச் செய்வதன் மூலமே பல்லாயிரக்கணக்கானோரை அணிதிரட்டி விடமுடியும் என்று தான் ஆணித்தரமாக நம்புவதாகக் கூறினார். பிற அரசியல் கலாச்சார அமைப்புகளின் சீரழிந்த நிலையை குறிப்பிட்டு, இச்சூழலில ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புத் தோழர்களின் குன்றாத உணர்வையும், உறுதியையும் கண்டு தான் வியந்து போனதாகவும், இத்தகைய அமைப்பு இன்று நம் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கும் மறுகாலனியத்தை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும் எனத் தான் உறுதிபட நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

 

முதல் நிகழ்ச்சியாக ரெட்டிப்பாளையம் வீரசோழத் தப்பாட்டக் குழுவினரின் தப்பாட்டம், அரங்கம் அதிர்ந்த போர் முழக்கமாக துவங்கியது. பிறகு புதுக்கோட்டை இ.எம்.பாஷா குழுவினர் கிழக்கிந்தியக் கம்பெனியை குலை நடுங்க வைத்த மாமன்னர்கள் ஹைதர் அலி, திப்பு குறித்த உணர்ச்சிபூர்வமான பாடல்களை இசைத்தனர். ஆதிக்கச் சாதிப் பிழைப்புவாதிகள் மருதிருவருக்குச் சாதிச்சாயம் பூசி சிறுமைப்படுத்தி வரும் இன்றைய சூழலில், சின்னமருதம்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிகழ்த்திய மருதிருவர் கும்மி, அந்தப் போராளிகளின் உண்மையான ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

 

"மருதுவின் போர்க்களம்' எனும் மேடை நாடகம் ஊமைத்துரையின் பாளையங்கோட்டை சிறை உடைப்பு சாகசம் முதல் மருது தூக்கிலிடப்பவது வரையிலான கொந்தளிப்பான நிகழ்வுகளை இன்றைய சூழலுக்குப் பொருத்தப்பாடுடைய எள்ளலான வசனங்களோடு காட்சிப்படுத்தியது. ""உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!'' என்ற சின்ன மருதுவின் பிரகடனம் இன்றைய சூழலில் மக்களைச் செயலில் இறங்கக் கோரும் அறைகூவலாக ஒலித்தது. 1806 வேலூர் புரட்சியை மக்கள் மத்தியில் பரப்புவதில் பெரும்பங்கு ஆற்றிய இசுலாமிய நாடோடிப் பாடகர்களைக் கண்முன் கொண்டு வந்தது, வேலூர் ஃபக்கீர்களின் குழு. அரங்கத்தை அதிரச்செய்த அந்தப் பறையொலியின் வலிமை, அன்று வேலூர் சுற்று வட்டாரம் முழுவதும் ஒலித்து கிளர்ச்சியை மூண்டெழச் செய்த காட்சி மனக்கண் முன் விரிந்தது.

 

கட்டபொம்மனையும், சுந்தரலிங்கத்தையும், பூலித்தேவனையும், ஒண்டி வீரனையும் எதிர்எதிராக நிறுத்தி அவர்களை சாதி அடையாளங்களாக சிறுமைப்படுத்திவரும் இன்றைய சூழலில், அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அமைந்தது தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினர் நிகழ்த்திய "வீரத்திற்கு ஏது சாதி' என்ற ஒயிலாட்டம். அந்தச் சிறுவர்களின் ஒயிலும் கம்பீரமும் மக்களின் பலத்த கரவொலியைப் பெற்றது.

 

ஜிம்ப்ளா மேளம் என அழைக்கப்படும் எருது கட்டும் மேளத்தின் போர்க் குணமும், சிதம்பரம் அன்பரசன் குழுவினரின் தமுரு மேளமும், தீரன் சின்னமலையின் வீரத்தைப் போற்றிய உடுக்கடிப் பாடலும், வ.உ.சி.யின் தியாக வரலாற்றைச் சொல்லும் வில்லுப்பாட்டும் கூடியிருந்த மக்களின் வரவேற்பைப் பெற்றன. தமிழ் நாடக வரலாற்றில் நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் கூடிய நாடகக் கலைஞராக விளங்கிய விஸ்வநாததாசின் நினைவோடு விடுதலைப் போரின் வீரநினைவுகளை வழங்கிய பாவலர் ஓம்.முத்துமாரி குழுவினரின் நிகழ்ச்சி, பின்னிரவின் கண் அயர்ச்சியையும் கலைத்து, அரங்கத்துக்கே புத்துணர்வு ஊட்டியது.

 

மெத்த படித்த மேதாவிகள் தமது வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகளில் சரணடைந்து கிடக்கையில், "வெட்டரிவாள் எடடா' என சிறுவர்கள் தமது கலைநிகழ்ச்சியில் உரத்துக் குரலெழுப்பியது உணர்ச்சியைத் தூண்டுவதாக இருந்தது.

 

உழைக்கும் மக்களைக் கருவறுக்கும் மறுகாலனியாக்கத்தின் கொடூரத்தையும், அமெரிக்க பயங்கரவாதத்தையும், பார்ப்பனியக் கோர முகத்தையும், ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையும், எள்ளலோடும் ஆவேசத்தோடும் தீயில் கிழித்த வரிகளாக வழங்கியது ம.க.இ.க. மையக்கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி.


ம.க.இ.க. வழங்கிய "தூக்குமேடை' இசைச்சித்திரத்தில், தூக்குமேடை ஒரு இரத்த சாட்சியமாக, திப்புசுல்தான் முதல் பகத்சிங் வரை நீடிக்கும் வீர மரபை, செயல் வடிவம் பெறாத கனவின் மீட்டப்படாத இசையை வழங்கி பார்வையாளர்களை உறையச் செய்தது. இந்நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னும் அரங்கில் நிரம்பி நின்ற மௌனம் தமிழ் மக்கள் இசை விழாவின் நோக்கம் வெற்றி பெற்றதை பறைசாற்றியது.

 

இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த 1857 வட இந்திய சுதந்திரப் போர் குறித்த மையக் கலைக்குழுவினரால் இசைக்கப்பட்ட பாடல், இன்று ஆட்சிபுரியும் பல நூறு கிழக்கிந்தியக் கம்பெனிகளை முழுமையாக விரட்டியடிப்பதற்கான இறுதிச் சுதந்திரப் போர் துவங்கி விட்டது என்பதை அறிவிக்கும் போர் முரசாக அரங்கில் நிறைந்தது.

 

பச்சை மூங்கில்களால் அமைக்கப்பட்ட எளிமையும் கம்பீரமும் கொண்ட நுழைவாயில், உள்ளே நுழைந்தவுடன் பார்வையாளர்களை வரவேற்கும் சின்ன மருதுவின் போர்ப் பிரகடனம், விடுதலை வீரர்களையும் அவர்களுடைய போர்க்களங்களையும் சித்தரித்து அரங்கின் உட்புறமெங்கும் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள், மறுகாலனியாக்கத்தின் வக்கிரமான வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்தையும், அதன் கோரமுகங்களில் ஒன்றான கோக்கோகோலாவையும் அம்பலப்படுத்தும் ஓவியக் காட்சி, இன்னொரு புத்தகக் கண்காட்சியோ என்று வியக்கும் வண்ணம் அரங்கில் விரவியிருந்த புத்தகக் கடைகள், தரமான மலிவான உணவு, தொலைவில் அமர்ந்திருப்போருக்கும் மேடை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கும் வண்ணம் அரங்கில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி திரைகள், பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தும் எத்தகைய சலசலப்பும் இல்லாமல் பொறுப்புணர்ச்சியுடன் தொடர்ச்சியாக 16 மணி நேரம் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த மக்கள் கூட்டம்..

 

விழாவிற்குரிய மகிழ்ச்சியையும் போர்க்களத்தின் கட்டுப்பாட்டையும் ஒருங்கே வெளிப்படுத்திய தமிழ் மக்கள் இசைவிழா, விடுதலைப் போரில் முதல் குரலெழுப்பிய தமிழகம் மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டத்திலும் முன் நிற்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது.


— பு.ஜ.பு.க. செய்தியாளர்கள்