puja_apri_07.jpg

கோவை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரிக்கால் நிறுவனம், கார், இரு சக்கர வாகனங்களுக்குத் தேவையான மீட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் 6 தொழிற்கிளைகள், இந்தோனேஷியாவிலும், ஈரானிலும் தலா ஒரு தொழிற்கிளை என வளர்ந்துள்ள பிரிக்கால்

 நிறுவனம், ஆட்டோ மீட்டர் சந்தையில் 46 சதவீதத்தைக் கைப்பற்றி ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ""பிரிக்காலை ஒரு பன்னாட்டு நிறுவனமாக வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என்கிறார் பிரிக்காலின் செயல் இயக்குநர் வனிதா மோகன். எனவே, இந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ளும் வகையில் பிரிக்காலின் தொழிலாளர்கள், அதீத உற்பத்தி இலக்கு வைத்துக் கசக்கிப் பிழியப்படுவதோடு, எவ்விதத் தொழிற்சங்க உரிமைகளும் அற்றக் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டு வருகின்றனர்.

 

சிறு பொறி பெருங்காட்டுத் தீயை மூட்டும் என்பதற்கு ஏற்ப, குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், கடந்த மார்ச் மாதம் ஆறு முன்னணித் தொழிலாளர் கோவையில் இருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிரடி இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, மார்ச் 9 அன்று நடத்திய 18 மணி நேர சாலை மறியல் போராட்டம், பிரிக்கால் நிறுவனத்தை மட்டுமல்ல, கோவையைச் சேர்ந்த பெரும் முதலாளிகள் அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டது. இச்சாலை மறியல் போரில் கலந்து கொண்ட 1,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலளர்கள் உள்ளிட்டு, 2,166 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

""உற்பத்திச் செலவு குறைவதற்குத் தகுந்தபடிதான் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படும்'' என்ற கொடூரமான நிபந்தனையின் அடிப்படையில், பிரிக்கால் பிளாண்ட்1இல், 2004ஆம் ஆண்டு ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதே நிபந்தனையுடன் கூடிய ஊதிய ஒப்பந்தம், 2003இல் பிளாண்ட்3 இல் போடப்பட்டது. மூலப்பொருட்களின் விலை உயர்வை ஈடுகட்டவும், இலாபம் சரிந்து விடாமல் இருக்கவும் தொழிலாளர்களின் கூலியில் கை வைக்கும் நரித்தனம்தான் இந்த ஒப்பந்தம். தொழிலாளர்களின் அடிமடியிலேயே கை வைக்கும் இந்த ஒப்பந்தத்தில், ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்டு ஐந்து தொழிற்சங்கங்கள் கையெழுத்துப் போட்டு, பிரிக்கால் தொழிலாளர்களுக்குத் துரோகமிழைத்தன.

 

இதுவொருபுறமிருக்க, 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் 1,500 தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் தினக்கூலிகளாக வைத்திருப்பது; பெண் தொழிலாளர்களை மிரட்டி ""ஓவர்டைம்'' வேலை செய்ய வைப்பது; தொழிற்சாலைக்குள் நடக்கும் விபத்துக்களுக்கு, அவ்விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளிகளையே பொறுப்பாக்குவது என்பது தொடங்கி, உணவகத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்கக் கூடாது; சாப்பிட்ட பிறகு, தொழிலாளர்கள் டிஃபன் பாக்சைத் தண்ணீர் ஊற்றிக் கழுவக் கூடாது; ஒதுக்குப்புறமாகப் போய்க்கூட சிகரெட் பிடிக்கக் கூடாது என்பது வரை பல்வேறுவிதமான அடக்குமுறைகளும், கெடுபிடிகளும், ""கட்டுப்பாடு'', ""நாகரீகம்'' என்ற பெயரில் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டன. நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுள் (சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி.) ஒன்று கூட, இந்த அடக்குமுறையைத் தட்டிக் கேட்காமல், நிர்வாகத்திற்கு ஒத்து ஊதி வந்தன.

 

பிரிக்கால் நிறுவனத்தின் இந்த அடக்குமுறைகளைத் தட்டிக் கேட்கவும்; தங்களின் தொழிற்சங்க உரிமைகளை மீட்டெடுக்கவும், இத்துரோகத் தொழிற்சங்கங்களை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ""கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் தொழிற்சங்கம்'' என்ற புதிய சங்கத்தைக் கட்டியமைத்ததோடு, பெருவாரியான தொழிலாளர்கள் அதில் தங்களை இணைத்தும் கொண்டனர். இப்புதிய தொழிற்சங்கத்துக்கு, இ.பொ.க. (மாலெ) விடுதலை குழுவின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் வழிகாட்டி வருகிறது.

 

இப்புதிய தொழிற்சங்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற தீய நோக்கத்தோடுதான், ஆறு முன்னணித் தொழிலாளர்களைத் தடாலடியாக வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்தது நிர்வாகம். இதன் மூலம், மற்ற தொழிலாளர்கள் பயந்து போய் ஒதுங்கி விடுவார்கள் என எதிர்பார்த்தது. ஆனால், பிரிக்கால் தொழிலாளர்களோ, ஆறு தொழிலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட மறுநாளே உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்து, நிர்வாகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அடாவடித்தனமான இடமாற்றலை ரத்து செய்யக் கோரி, மார்ச் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர்.

 

புதிய தொழிற்சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்த மாட்டோம் என்ற நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை, தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டம் உடைத்தெறிந்துவிட்டது. புதிய தொழிற்சங்கத்தோடு மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டபோதும், தங்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காதவரை வேலைக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு பிரிக்கால் தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 

தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது பிரிக்கால் நிறுவனத்தில் மட்டுமே நடக்கும் ""அதிசயம்'' கிடையாது. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடே இருக்கக் கூடாது என்பது தொடங்கி தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என்பது வரை தொழிற்சங்க உரிமைகள் அனைத்தையும் பறிக்கக் கோருகிறது, உலகமயம். இதற்கு ஏற்றாற்போலத்தான், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுகின்றன; தொழிற்சங்கமே அமைக்க முடியாதபடி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

 

தொழிலாளி வர்க்கமே ஒன்று திரண்டு போராடினால்தான், தொழிற்சங்க உரிமைகள் சட்ட பூர்வமாகவே பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும். போராடும் பிரிக்கால் தொழிலாளர்கள் இதை உணர்ந்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, புனே, குர்கான், உத்தராஞ்சல் ஆகிய இடங்களில் உள்ள பிரிக்கால் தொழிற்சாலைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

 

""கட்டுப்பாடு'' என்ற பெயரில் பிரிக்கால் நிர்வாகம் ஏவிவிடும் அடாவடித்தனங்களையும்; சுனாமி நிவாரண நிதி என்ற பெயரில் அந்நிர்வாகம் தொழிலாளர்களிடம் நடத்திய கொள்ளையையும்; வசூலித்த பணத்தைக் கொடுக்காமல் அரசை ஏமாற்றியதையும்; ""சிறு துளி'' என்ற அமைப்பு மூலம் பிரிக்காலின் செயல் இயக்குநர் வனிதா மோகன் அரசு பணத்தைச் சுருட்டுவதையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, பிரிக்காலுக்கு எதிரான பொதுக் கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

 

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என மற்ற முதலாளிகள் விரும்புவதால், துணியாலை, பஞ்சாலை, இன்ஜினியரிங் தொழிலாளர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் களத்தில் நிற்கும் வண்ணம் கோவை மாவட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

 

வேலை நிறுத்தப் போராட்டத்தை உறுதியோடு தொடர்வதோடு, உலகமயச் சூழலில் இப்படிப்பட்ட ஒற்றுமையையும், புதிய போராட்ட முறைகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த முடியும்.


· பு.ஜ.தொ.மு., கோவை.