puja_apri_07.jpg

மறுகாலனியாதிக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் வாழ்விழந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதும், தொழிலாளர்கள் வேலையிழந்து கொத்தடிமைகளாக உழல்வதும், வறுமையும் பட்டினியும் பெருகுவதும் தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம், இந்தியாவில் பணக்காரர்களும் பெருகிக் கொண்டே போகிறார்கள். உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியப் பெருமுதலாளிகளும் இடம் பெற்றுள்ளதாகப் பூரித்துப் போகின்றனர் ஆட்சியாளர்கள்.

 கோடீசுவரர்கள் பெருகப் பெருக அவர்களின் பணக் கொழுப்பு வக்கிரமாக வழிந்தோடுகிறது. நாடே அதிர்ச்சியடையும் அளவுக்கு அந்த வக்கிரம் கேள்விமுறையின்றி பகிரங்கக் கூத்தாக நடக்கத் தொடங்கி விட்டது.

 

எலிசபத் ஹர்லீ. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் "மாடல் அழகி'. 41 வயதைக் கடந்துவிட்ட ஹர்லீ, பெருந்தொழில் அதிபரும் இந்திய வம்சாவளியினருமான அருண் நய்யார் என்ற 42 வயதுக்காரரை கடந்த மார்ச் மாதத்தில் பிரிட்டனிலுள்ள சட்லே கோட்டையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கெனவே மணவிலக்கு பெற்று மறுமணம் புரிந்து கொண்டுள்ள இத்தம்பதிகளின் திருமணத்துக்கு எடுத்த பட்டுச்சேலையின் மதிப்பு ரூ. 3.5 லட்சத்துக்கும் மேலானது. இந்தி சினிமாப் பாடல்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்த இத்திருமணத்தையும் விருந்துகளியாட்டங்களையும் இத்தம்பதிகள், தனியொரு சினிமாப் படமாகவும் எடுத்துள்ளனர்.

 

ஆடம்பரமாக நடந்த இத்திருமணக் கூத்து இத்துடன் முடியவில்லை. மணமகளது நாட்டில் நடந்தது போல், மணமகனது பூர்வீக நாடான இந்தியாவிலும் இத்தம்பதிகள் பார்ப்பன இந்து முறைப்படி இன்னுமொரு திருமணச் சடங்கை நடத்தினர். தமது 4 வயது மகனுடன் வந்த ஹர்லீநய்யார் தம்பதியினர் மும்பையிலிருந்து தனிவிமானத்தில் ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் கோட்டைக்குப் பறந்தனர். யானைகள், ஒட்டகங்களுடன் அலங்கார அணிவகுப்பு ஊர்வலம், விருந்தினர்களை அழைத்துவர ஏழு தனிவிமானங்கள், ஜோத்பூர் அரண்மனையில் விடிய விடிய சீமை சாராயத்துடன் களிவெறியாட்டம், அறுசுவை விருந்து என அமர்க்களப்படுத்தினர் இத்தம்பதிகள். இந்திய நாட்டில் இப்படியொரு ஆடம்பரத் திருமணம் இதுவரை நடந்ததேயில்லை என்று அதிசயித்து பரபரப்புடன் செய்திகளை வெளியிட்டன பத்திரிகைகள்.

 

பல கோடிகளை விழுங்கிய இந்த ஆடம்பர வக்கிரக் கூத்து நடந்த ஜோத்பூர் அரண்மனையருகே உள்ள நகர்ப்புறச் சேரிப்பகுதியில் வசிக்கும் உழைக்கும் மக்களின் மாத வருவாயோ ரூ. 2000க்கும் குறைவு. இதர மாநிலங்களைவிட ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கியுள்ள ராஜஸ்தான் மாநில கூலிஏழை விவசாயிகளின் வருமானமோ அதைவிடக் குறைவு. வறுமையும், பட்டினியும் கவ்வியுள்ள அம்மாநிலத்தில்தான் இந்த வக்கிரமான திருமண விழா நடந்துள்ளது. பணக்கொழுப்பை விகாரமாகக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியைத் தடுக்கவோ கட்டுப்பாடு விதிக்கவோ கூட அம்மாநில அரசு முன்வரவில்லை. மாறாக, மாநிலத்தின் பெருமையை உலகறியச் செய்ததாகக் கூறி, இந்த வக்கிர விழாவுக்கு எல்லா உதவிகளையும் அம்மாநில அரசு செய்துள்ளது.

 

இந்த வக்கிர திருமண விழாவையே விஞ்சும் வகையில் கடந்த 2004ஆம் ஆண்டில் நடந்த பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீசுவர வைர வியாபாரி மிட்டல் குடும்பத்தின் திருமண விழாவும், கடந்த டிசம்பரில் நடந்த பெருந்தொழிலதிபர் லோகியா குடும்பத்தின் திருமண விழாவும் பல்லாயிரம் கோடிகளை விழுங்கியது. ராஜஸ்தான் உதய்பூர் கோட்டையில் விழா, ஐந்து நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு, ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை, வெளிநாட்டிலிருந்து வந்த சிறப்பு உணவுகள் என பணத்திமிரில் கொட்டமடித்தன, கொழுப்பேறிய பன்றிகள்.

 

1947 போலி சுதந்திரத்துக்கு முன்னர், ஆங்கிலேயனின் காலை நக்கி வாழ்ந்த திவான் பகதூர், ஜமீன்தார், சமஸ்தான மகாராஜா போன்ற சரிகைக் குல்லாப் பேர்வழிகள்தான் இத்தகைய ஆடம்பர வக்கிர திருமண விழாக்களை நடத்தி வந்தனர். வெள்ளைக்காரன் ஆட்சியில் பஞ்சம் தலைவிரித்தாடி மக்கள் கொத்துக் கொத்தாக பட்டினியால் மாண்டபோது, ஜுனாகத் சமஸ்தானத்தின் நவாபு, தான் வளர்த்த செல்லமான நாய்க்கு ஆடம்பரமாகத் திருமணம் நடத்தினான். இத்திருமண விழாவையொட்டி மாபெரும் விருந்தும் கச்சேரியும் நடத்தியதோடு, நாய்த்தம்பதியினர் முதலிரவைக் கொண்டாட தனிமாளிகை அமைத்து, அதற்கென ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தான்.

 

இத்தகைய வக்கிமான குரூரமான விழாக்கள் காலனிய காலத்தோடு முடிந்துவிடவில்லை. போலி சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. மத்திய அமைச்சரான சரத்பவார், முன்பு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தபோது, கோடிகளை வாரியிறைத்து கோவில் திருவிழா போன்றதொரு ஆடம்பரமான திருமணத்தைத் தனது மகளுக்கு நடத்தினர். ஊரை அடித்து உலையில் போட்ட பாசிச ஜெயா நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் ரூ. 80 கோடிகளைத் தாண்டி நாடெங்கும் நாறியது. இத்திருமண விழாவில் நகைக்கடையாய் நடந்து வந்த உடன்பிறவா சகோதரிகளின் படத்தைப் போட்டு ஓட்டுப் பொறுக்கியது, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தி.மு.க. அக்கட்சித் தலைமையின் மூத்த வாரிசான மு.க.அழகிரி, தன்னுடைய 56வது பிறந்த நாளுக்கு தனது முகத்தையே மதுரை தமுக்கம் மைதானம் முழுக்க பிரம்மாண்டமான வண்ணக் கோலமாகப் போட்டு வக்கிரமாக ரசித்தார். அந்த வண்ணக் கோலத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க தனி ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. இளைய வாரிசு மு.க.ஸ்டானினோ தன்னுடைய பிறந்தநாளுக்கு, தனக்கு யானைகள் வந்து மாலைபோடச் சொல்லி ரசித்தார்.

 

இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பண்ணை வீட்டில் உல்லாசமாகச் சுற்றி வருவதற்காகவே, ரயில் பெட்டியொன்றை விலைக்கு வாங்கி, தனது வக்கிர கொண்டாட்டத்தைத் தொடங்கவுள்ளார். பொழுதுபோக்கிற்காக பல கோடிகளை வாரியிறைக்கும் மனநோயாளிகளின் கீழ்த்தரமான இச்செயலைக் கூட சிலாகித்து எழுதுகின்றன, கிசுகிசு பத்திரிகைகள்.

 

500 ரூபாய் நோட்டைச் சுருட்டிப் பற்ற வைத்து ஹெராயின் எனும் போதை மருந்தைப் புகைத்த பா.ஜ.க.வைச் சேர்ந்த மறைந்த பிரமோத் மகஜனின் மகன் ராகுல் மகஜன் பற்றிய செய்தி வெளியானபோது நாட்டு மக்கள் அதிர்ச்சியில் விக்கித்து நின்றார்கள். ஆனால் பணக்கொழுப்பெடுத்த இத்தகைய வக்கிரங்களே இப்போது அன்றாடச் செய்தியாகிவிட்டது. உலகமயத்தின் விளைவாக நுகர்வுவெறி ஆடம்பர மோகம் பணத்திமிரைப் பறைசாற்றும் பிரம்மாண்ட விழாக்கள் என பணக்கொழுப்பேறிய பன்றிகள் நடத்தும் வக்கிரங்கள் சகிக்க முடியாதபடி பெருகிவிட்டன.


"நாகரிக' உலகைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடான பிரான்சில், வேலையிழந்து வாழ்விழந்த உழைக்கும் மக்கள் ஆடம்பர உணவு விடுதிகளைச் சூறையாடி, ஆடம்பரக் கார்களை அடித்து நொறுக்கி இப்பணக் கொழுப்பெடுத்த பன்றிகளுக்கு எதிராகத் தமது வெறுப்பை வெளிப்படுத்திப் போராடுகிறார்கள். ஏழை நாடான இந்தியாவின் உழைக்கும் மக்கள் மறுகாலனியத் தாக்குதலால் மரணப் படுகுழியில் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், கோடீசுவரக் கும்பலின் கொழுப்பேறிய வக்கிரங்களை இனியும் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது பிரான்சு நாட்டு உழைக்கும் மக்களின் வழியில் போராடப் போகிறோமா?


· கவி