puja_apri_07.jpg

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றிலேயே கற்றுக்குட்டி நாடுகளாக மதிப்பிடப்பட்ட வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளிடம் படுதோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டதும், கூடவே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின்

 கொலையும் கிரிக்கெட் விளையாட்டைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த பல மாயத் தோற்றங்களைக் கலைத்திருக்கின்றன. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் தெருக்களில் பட்டாசுகள் கொளுத்தி இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதையும், தோல்வியடைந்தால் போதையேற்றிக் கொண்டு கவிழ்ந்து படுத்துவிடுவதையும் வழக்கமாகக் கொண்ட இந்திய ரசிகர்கள், வங்கதேசத்திடமும், இலங்கையிடமும் தோல்வி அடைந்தவுடன் தன்னெழுச்சியாக ஆத்திரங்கொண்டு கிரிக்கெட் வீரர்களின் உருவபொம்மைகளைக் கொளுத்தினார்கள்; உருவப்படங்களைச் செருப்பால் அடித்து, கிழித்துப் போட்டு அவமானப்படுத்தினார்கள்; கழுதைகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைச் சூட்டி மாலை போட்டுத் தெருத்தெருவாக இழுத்து வந்தார்கள்; பாடைகள் கட்டியும், மொட்டையடித்தும் கருமாதிச் சடங்குகள் செய்தார்கள்; அவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள்.

 

இதே கிரிக்கெட் ரசிகர்கள்தாம் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குமுன்பு இந்திய அணியின் வெற்றிக்காக யாகங்கள், சிறப்புப் பூசைகள், பிரார்த்தனைக் கூட்டங்கள், கூட்டு வழிபாடுகள் நடத்தினார்கள். ""கிரிக்கெட் விநாயகர்'' கோவில் கட்டி பஜனைப் பாடல்களும், சுலோகங்களும் இயற்றிக் குறுந்தகடுகளும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கேலிக் கூத்துக்களில் பார்ப்பன அர்ச்சகர்களும் இந்து மதவெறி அமைப்புகளின் பிரமுகர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். ""பாப் உல்மரின் கொலைச் சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டின் இருண்ட, அசிங்கமான பகுதியையும், நவீன கிரிக்கெட்டில் புழங்கும் மிகையான பணத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து கிரிக்கெட் ஊழலில் ஈடுபட்டிருப்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளன. இந்த நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவும் மனநோய் வெறித்தனம் காரணமாக மற்ற பிற விளையாட்டுகள் போன்ற ஒரு விளையாட்டாக கிரிக்கெட் மதிக்கப்படுவதற்குப் பதில் மிகையான கவர்ச்சியூட்டப்பட்டு விட்டது'' என்று செய்தி ஊடகங்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றன.

 

கிரிக்கெட் மீது பெரும்பாலான ரசிகர்களிடையே மனநோய் வெறித்தனம் கொள்ளுமளவு மிகையான கவர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம், யார் பொறுப்பு என்பதைப் பற்றி இந்தச் செய்தி ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன. ""விøயாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்; விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் வெற்றிதோல்விகளைத் தனிப்பட்ட பகையாக மாற்றி விடக்கூடாது; விளையாட்டுக்களில் வெற்றி முக்கியமில்லை, பங்கேற்பதுதான் முதன்மையானதாக இருக்கவேண்டும்'' என்று ஒருபுறம் உபதேசிக்கப்பட்டாலும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கிரிக்கெட் தேசியச் சின்னமாக மாற்றப்பட்டு, தேசிய வெறியூட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இந்து தேசியவெறியின் அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதினால் மட்டுமல்ல, வேறெந்த நாட்டோடு பாகிஸ்தான் மோதினாலும் பாகிஸ்தானின் தோல்வியைக் கொண்டாடும் அளவுக்கு இந்தியாவில் ""தேசிய'' வெறியேற்றப்பட்டு இருக்கிறது; இதே நிலைதான் பாகிஸ்தானிலும் உள்ளது. அதாவது, இந்தியாவின் தோல்வியை அவர்கள் கொண்டாடுவதாக உள்ளது.

 

சினிமாவுக்கு அடுத்து கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவைவிட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் ஊழல்கள் நிறைந்த வெவ்வேறு நாடுகளின் வாரியங்கள் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள், கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை போதாதென்று கிரிக்கெட் சூதாடிகளுடனும், தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிப்பதோடு, உல்லாச சொகுசு வாழ்க்கை, வசதிகளையும் பெறுகிறார்கள். கிரிக்கெட் போட்டி முடிவுகள் மீது பந்தயம் கட்டும் சூதாட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளுகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை ஒலிஒளி பரப்புவதும், அவற்றுக்கிடையே விளம்பரங்கள் செய்வதுமாக பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளுகிறது. இவைதவிர, போட்டிகளை நடத்தப் பொறுப்பேற்கும் பெப்சி, கோக், எல்.ஜி., சாம்சங், ஹோண்டா போன்ற பல பன்னாட்டு உள்நாட்டு தொழில் கழகங்கள், அவற்றின் உற்பத்திப் பொருள் விளம்பரங்களுக்காக வாரி இறைக்கும் தொகை பலப்பலகோடி ரூபாய்கள். அதனால்தான் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் தோல்வியடைந்ததால் பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டமடைந்த பன்னாட்டு தொழிற்கழகங்களும், செய்தி ஊடகங்களும் கிரிக்கெட் ரசிகர்களைவிடப் பன்மடங்கு ஆத்திரமடைந்துள்ளன.

 

ஆங்கிலேயப் பிரபுக் குலத்தின், மேட்டுக்குடி சீமான்களின் சோம்பேறித்தனமான பொழுது போக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், பன்னாட்டுத் தொழில்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், கருப்புப்பண சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ச்சியுற்றிருக்கிறது. மேலும், ஆங்கிலேயக் காலனி நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அந்த அவமான அடிமைச் சின்னமாக இது விளையாடப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு மேலைநாகரிக, ஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போல கிரிக்கெட் மோகம் வளர்க்கப்படுகிறது.

 

விளையாட்டு என்பது வெறுமனே உடற்பயிற்சிக்கானதாகவும், கேளிக்கை பொழுதுபோக்கிற்கானதாகவும், வியாபார சூதாட்டக்களமாகவும் இருக்கக் கூடாது. சமூக நலனை முன்னிறுத்தி சமூக மறுஉற்பத்திக்கான மறு ஆக்கம் தருவதாக இருக்கவேண்டும். விளையாட்டையே தனித் தொழிலாகக் கொண்ட வீரர்களும், அதையே பந்தயம், சூதாட்டமாகவும், வியாபாரம் விளம்பரமாகவும் நடத்தும் தொழில்முறை சோம்பேறிக் கும்பலும் சமூகத்திற்கு ஒட்டுண்ணிகளாகவே இருக்க முடியும். அத்தகைய கேடு விளைவிப்பதாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டை, குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகள், இலாட்டரி, ஆபாசக் களிவெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப்போல கருதி ஒழிப்பதற்கு உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.