Language Selection

sep_2007.jpg

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிமக்களுக்கு எதிரான சமீபகால வன்கொடுமைகளைப் பார்க்கும்போது, அவை தன்மையிலும் செய்யும் முறையிலும் பெருமளவு மாற்றமடைந்து வருகின்றன என்று தெரிகிறது. பொருளாதாரதொழில் முன்னேற்றத்துக்கு ஏற்ப சாதிய உணர்வும் வெறியும் மங்கி வருவதற்குப் பதிலாக, சமூகத்தில் சாதிய முரண்பாடுகள் முன்பைவிட மிக வேகமாக வளர்ந்து வருவதையே காண முடிகிறது. இப்போது சாதிய அட்டூழியங்கள் சாதியுணர்வின் ஒன்றுதிரண்ட, கொடூர வெளிப்பாடாகியிருக்கின்றன. சாதியுணர்வு சாதிவெறியாகி மேலும் கொடூரமான வடிவங்கள் எடுத்திருக்கின்றன. அதாவது, தன்மையிலும் செய்யும் முறையிலும் பெருமளவு மாற்றங்கண்டு வருகின்றன.
 

கடந்த காலத்தில் பெருமளவு தனிமனிதர்களாகவே தாழ்த்தப்பட்ட மக்கள்மீது ஆதிக்க சாதியினர் வன்கொடுமைகளைச் செய்து வந்தார்கள். ஆனால், இப்போது பலர் குழுக்களாகச் சேர்ந்து ஒரு வீரவிளையாட்டு நடத்துவது போலவோ, ஒரு விழாவில் பலியிடுவது போலவோ வன்கொடுமைகள் செய்கிறார்கள்.

 

தாழ்த்தப்பட்டபழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக எந்த அரசு அதிகார அமைப்புகளிடம் கூடுதலான பொறுப்புகள், அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதே அரசு அதிகார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அம்மக்கள்மீது தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. பல சம்பவங்கள் போலீசின் கண்முன்னே நடந்தும் கூட ஆதிக்க சாதிகளுக்கு உடந்தையாகத்தான் போலீசு அமைப்பு செயல்பட்டிருக்கிறது; வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு, வன்கொடுமைகள் புரிந்தவர்களுக்குச் சாதகமாக வழக்குகளைப் பதிவு செய்கிறது; அவ்வாறே வழக்குகளையும் விசாரணைகளையும் நடத்துகிறது.

 

தமிழ்நாட்டில் நடந்த மேலவளவு படுகொலைக் குற்றவாளிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கவோ, அச்சட்டத்திற்குரிய சிறப்பு விசாரணை அமைப்புகள் நிறுவப்படவோ, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவோ இல்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விரைவிலேயே பிணையில் வந்து குற்றம் நிகழ்ந்த இடத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து, சாட்சிகள் உட்பட கிராமத் தலித்துகளை நேரடியாக மிரட்டினர். குற்றவாளிகள் பலர் தண்டனைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு, மரண தண்டனை மற்றும் நீண்டகால கடும் சிறைத்தண்டனைகள் யாருக்கும் விதிக்கப்படவில்லை. தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கூட மேல்முறையீடு செய்துவிட்டு பிணையில் வந்து சாதி ஆதிக்கத் திமிரோடு அலைய அனுமதிக்கப்பட்டனர். வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கும், குறைவான தண்டனை பெற்றவர்களுக்கும் எதிராக அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யவுமில்லை.

 

அரியானா ஜஜ்ஜாரில் சாதி இந்து வெறியர்கள் ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களை வெட்டிக் கொன்ற சம்பவம் போலீசு நிலையத்தின் முன்பாக, மாவட்ட போலீசு அதிகாரிகள் மற்றும் நிர்வாக நீதிபதி முன்னிலையில், பொது இடத்தில், பட்டப்பகலில் நடந்துள்ளது. இவர்கள் எல்லாம் அந்தக் கொடூர நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த சிறு முயற்சியும் மேற்கொள்ளாது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தி, கும்பலைக் கலைத்து, கொலையாளிகளைக் கைது செய்யுமளவு அதிகாரமும், ஆயுதங்களும் இருந்தும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பின்னர் சாக்கு சொன்னார்கள். இதற்காக அந்த அதிகாரிகள் மீது எவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

மகாராட்டிரம், மரத்வாடாவில் 2003, மே மாதம் பூட்டேகோவன் கிராமத்தில் திரண்ட ஆதிக்கசாதி இந்துக்கள் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனைத் தீயிட்டுக் கொளுத்தினர். ஏறக்குறைய அதேகாலகட்டத்தில், பீட் மாவட்டத்தின் சொன்னகோட்டா என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட ஒரு ஏழை இளைஞனை ஆதிக்கசாதி இந்துக்கள் துரத்திச் சென்று அடித்தே கொன்றனர். இந்த நிகழ்ச்சிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான வன்கொடுமைத் தாக்குதலில் வெறித்தனமும் வக்கிரமும் அதிகரித்து வருவதையே காட்டுகின்றன.

 

மகாராட்டிர மாநிலம் கயர்லாஞ்சி அருகே போட்மாங்கே தாழ்த்தப்பட்ட குடும்பத்தினருக்கு எதிராக நடந்த கொடூரம் நம்ப முடியாத அளவு வெறித்தனமும் வக்கிரமும் உச்சபட்சமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட தாயும் மகளும் நிர்வாணப்படுத்தி ஊரின் நடுப்பகுதிக்கு இழுத்து வரப்பட்டனர். இரு இளைஞர்கள் அவர்களுடைய தாயோடும், சகோதரிகளோடும் வன்புணர்ச்சி செய்யுமாறு கொடுமைப்படுத்தப்பட்டனர்; அதற்கு அவர்கள் மறுத்ததால் அவர்களின் ஆண்குறிகள் கல்லால் அடித்து நசுக்கப்பட்டன. அந்தத் தாழ்த்தப்பட்ட தாயும் மகளும் ஆதிக்க சாதி கும்பலால் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்டனர். அவர்கள் நால்வரின் உடல்களும் கால்வாய்களில் வீசி எறியப்பட்டன.

 

இப்படி, எவ்வளவு கொடூரமாகவும், அப்பட்டமாகவும் ஆதிக்க சாதி இந்துக்களின் தாக்குதல்கள் இருந்தபோதும் போலீசின் நடவடிக்கைகள் பெரும்பாலும் குற்றவாளிகளைக் காக்கும் வகையிலேயே இருக்கின்றன.

 

போலீசு மட்டும் உரிய எச்சரிக்கைகளையும் நடவடிக்கைகளையும் மேற் கொண்டிருந்தால் கயர்லாஞ்சியில் நடந்த கொடூரங்கள் தடுக்கப்பட்டிருக்கும். அதன்பிறகும் உண்மையான குற்றவாளிகளைத் தப்புவிக்கும் வகையில் போலீசு நயவஞ்சக சூழ்ச்சிகளை மேற்கொண்டு, வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டது. போலீசின் உதவியும் தலையீடும் கோரிப் பலமுறை புகார் கூறியும் போலீசு பாராமுகமாக இருந்துவிட்டது.

 

சாதி இந்துக்கள் திரண்டு வந்து தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்று இறுதி நேரத்தில் செல்பேசி தகவல் கொடுத்தும் 20 நிமிடத்தில் சம்பவ இடத்துக்கு வந்துவிடும் எட்டு கி.மீ. தூரத்தில் இருந்தும் போலீசு வரவில்லை. இரண்டு மணி நேரம் கொடூரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. போலீசு நிலையத்துக்கு நேரில் போய் தகவல் கூறியும் வரவில்லை. புகாரையும் பதிவு செய்யவில்லை. கயர்லாஞ்சியில் எல்லாம் நடந்து முடிந்தபிறகு சாவகாசமாக ஒரே ஒரு போலீசுக்காரன் அனுப்பப்பட்டான். அவனும் சாதி இந்து கிராமத் தலைவரிடம் விசாரித்துவிட்டு கிராமத்தில் இயல்பு நிலை நிலவுவதாகக் கூறிவிட்டான்.

 

பலியானவர்களின் உறவினர் நேரில் புகார் கொடுத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. உறவினர்கள் அடையாளங்காட்டியும், அடையாளம் தெரியாத, கேட்பாரற்ற சடலம் என்று பதிவு செய்ததோடு, சாட்சியங்கள், சான்றாதாரங்களை எல்லாம் கிரிமினலுக்குரிய திறமையோடு போலீசே அழித்துவிட்டது. இந்த விவகாரம் முழுக்கவும் முறையற்ற பாலுறவால் நடந்தது என்று பத்திரிக்கைகளுக்குச் செய்தி கொடுத்தது, போலீசு. பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்க ளும், வழக்கை கையாண்ட அரசு வழக்குரைஞரும் பொய்யான ஆதாரங்கள் தகவல்கள் கொடுத்து குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டனர்.


கயர்லாஞ்சி படுகொலைகளைக் கண்டித்து மகாராட்டிராவின் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட அமைப்புகள் பேரணிகள் நடத்தினர். அமராவதி நகரில் நடந்த பேரணிக்குப் பிறகு போலீசு நடத்திய தாக்குதல், துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார்; பலர் காயமடைந்தனர். அங்கிருந்த மக்களை சுற்றிவளைத்த போலீசு சூறையாடுதல், கலவரம் செய்தல் போன்ற பல பொய் வழக்குகள் போட்டது. கயர்லாஞ்சி கொடூரம் பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை வைத்திருந்த பள்ளி ஆசிரியர் மீது சுவரொட்டிகள் வைத்திருந்ததாகவும், கலவரத்தைத் தூண்டியதாகவும் பொய் வழக்குப் போட்டது.

 

யாவட்மால் எனுமிடத்தில் நடந்த ஒரு சிறு பேரணியைத் தொடர்ந்து ஆதிக்க சாதியின் திடீர் அரசியல்வாதி ஒருவன் தனது கூலிப் படையை ஏவி, அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தான். அவனது அடியாட்கள் சிலை இருந்த பட்டிபுர கிராமத்தை சூறையாடினர். அக்குண்டர்களைக் கைது செய்வதற்குப் பதில் கயர்லாஞ்சி சம்பவத்தைக் கண்டித்து பேரணி நடத்திய பெண் தலைவரைக் கைது செய்து பாலியல் வன்செயலும் நடத்தியது போலீசு.


இதுபோன்று மகாராட்டிராவின் பல இடங்களில் சிவசேனா, பா.ஜ.க. குண்டர்கள் வெறியாட்டம் போட்டதற்கு, போலீசு துணைநின்றது. கயர்லாஞ்சி கொடூரத்தை தடுக்கவோ, குற்றவாளிகளைத் தண்டிக்கவோ செய்யாத போலீசு, அதைக் கண்டித்து இயக்கங்கள் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு மாநிலம் முழுவதும் 2000 இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு, கைது செய்து சிறையிலடைத்தது.

 

உள்ளூர் போலீசுதான் ஆதிக்க சாதி இந்துக்களின் செல்வாக்கின் கீழ் உள்ளதால் இப்படி நடந்து கொள்கின்றன என்றில்லை. கடலூர் மாவட்டம், புதுக்கூரைப்பட்டு கிராமத்தில் வன்னியப் பெண்ணும் தாழ்த்தப்பட்ட ஆணும் காதலித்த குற்றத்துக்காக மரத்தில் கட்டி வைத்து நஞ்சு ஊற்றிக் கொன்ற வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) மேற்கொண்டது. அந்தத் தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கு அவனது சிறிய தந்தைதான் நஞ்சு ஊற்றிக் கொன்றார் என்று ஆதிக்க சாதிக்கு சாதகமாக வழக்கைப் புனைந்துவிட்டது சி.பி.ஐ. இந்த வழக்கில் ஆதிக்க சாதி இந்துக்கள் தண்டிக்கப்பட்டால் சாதிமோதல் ஏற்படும் என்று காரணங்காட்டிக் குற்றவாளிகளைத் தப்புவிப்பதற்குப் பலவழிகளிலும் சி.பி.ஐ. முயன்று வருகிறது.

 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அமலாக்கக்கூடிய முதன்மையான பொறுப்பு இந்த அரசு அமைப்பின் முக்கிய அங்கமாகிய போலீசிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதை மேற்பார்வையிடவும், ஆலோசனைகள் வழங்கவும் தாழ்த்தப்பட்ட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுகின்றனர் என்று சட்டம் கூறுகிறது. ஆனால், பல மாநிலங்களில் இத்தகைய மேற்பார்வை, ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படவே இல்லை. சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு சிறப்பு விசாரணை அதிகாரிகளோ, சிறப்பு நீதிமன்றங்களோ நியமிக்கப்படவும், அமைக்கப்படவுமில்லை.

 

ஆளும் வர்க்கத்தின் ஒரு அங்கமாகிய ஆதிக்கசாதியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கும் தமது உரிமையை நிலைநாட்டுவதற்கும் முயலும்போது சாதியத்தைக் கட்டிக் காப்பதில் மேலும் மேலும் மூர்க்கமாக இருக்கின்றனர். அரசமைப்பு முழுக்கவும் இதற்காகதான் பாடுபடுகிறது. போலீசு அமைப்போ பெரும்பாலும் ஆதிக்கசாதி அதிகாரிகளைக் கொண்டதாகவே இருக்கிறது.

 

அதுமட்டுமல்ல; வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கான மற்ற பிற சட்டங்கள், அமைப்புகளை அமலாக்கும் பொறுப்பில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அதிகாரிகளும், போலீசும் இருந்தால்கூட அவர்களும் பெரும்பாலும் ஆதிக்கசாதி நலன்களுக்காகத்தான் செயல்படுகிறார்கள் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவர்கள் முதலாவதாக பிழைப்புவாதத்தில் ஊறி போனவர்களாக இருக்கின்றனர். ஆதிக்க சாதியினரைப் பகைத்துக் கொள்வது தமது பதவிக்கு ஆபத்தாக முடியுமென்று அஞ்சுகின்றனர்.

 

கயர்லாஞ்சியில் கொடுமை நடந்த பகுதியின் போலீசு சூப்பிரண்டெண்ட் பண்டாரா என்பவரும், துணை போலீசு சூப்பிரண்டெண்ட், அப்பகுதியின் போலீசு நிலைய அதிகாரி, அவருக்குக் கீழ் பணியாற்றிய போலீசுக்காரன், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், மாவட்ட அறுவைச் சிகிச்சை மருத்துவர் (இவரே பெண் மருத்துவர் இல்லாமல் பிரேத அறுவை சோதனை செய்ய அனுமதித்தவர்), அரசு வழக்குரைஞர் (இவரே குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டாம் என்று பரிந்துரைத்தவர்) போன்ற அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவருமே கயர்லாஞ்சி கொடூரத்திற்கு இலக்கான தாழ்த்தப்பட்ட போட்மாங்கே சாதியின் உட்பிரிவினராக இருந்தபோதும் யாருமே ஆதிக்க சாதியினரின் சாதிவெறியைக் கண்டுகொள்ளவேயில்லை.


இக்கொடூர நிகழ்வு மற்றும் வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அதிகாரிகளின் கூட்டம் குற்றவாளிகளுக்குச் சாதகமாகவே நடந்து கொண்டது. இந்த அதிகாரக் கூட்டத்துக்கு எதிராக நின்ற தலித் தனிநபர்களின் குரல் எடுபடவேயில்லை.

 

இதுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை நிகழ்ந்த பிற பகுதிகளின் அனுபவமும் ஆகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் தொடர்ந்து ""தலித் அரசியல்வாதிகள்'' காணாமல் போய்விடுகிறார்கள். அல்லது கண்டன அறிக்கைகள், அடையாளப் பேரணிகளோடு முடித்துக் கொள்கிறார்கள். தலத் அரசியலும், தலித் அரசியல்வாதிகளும் திவாலாகிப் போனதையே திரும்பத் திரும்ப இச்சம்பவங்கள் வெட்டவெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமே தலித் அரசியல்வாதிகள் மூழ்கிப் போயுள்ளனர். பார்ப்பனியத்தை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர்தாம் அதிகம் வெளிபடுத்துகிறார்கள்; இவர்கள்தாம் எங்கும் சாதி ஆதிக்கவெறி தாக்குதலில் முன்னிற்கின்றனர்.

 

ஆனால், தவறான ""சமூக நீதி''க் கண்ணோட்டம் மற்றும் ஓட்டுக் கட்சி அரசியல் காரணமாக பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதிலேயே ""தலித் அரசியல் தலைவர்கள்'' ஆர்வமாக இருக்கின்றனர். இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்குக் காரணமான குற்றவாளிகளை தண்டிப்பதில் இருந்து தப்புவிப்பதற்குத் துணைபோகிறார்கள்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட தாழ்த்தப்பட்டவர்கள் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கானவையென்று எவ்வளவுதான் சட்டங்களும் திட்டங்களும் வந்தாலும் அவற்றுக்கு எதிராகவே செயல்படும் அதிகார வர்க்கம், சட்டம், நீதி, போலீசு மற்றும் ஓட்டுக்கட்சி அரசியல் அமைப்புக்குள்ளிருந்து சீர்திருத்தங்கள் மூலம் ""விடுதலை'' பெறுவது என்று வரம்புக்குட்பட்டுத்தான் ""தலித் அரசியலும் தலித் அரசியல் தலைவர்களும்'' செயல்படுகின்றனர்.

 

அந்த அமைப்புக்கு வெளியிலிருந்து, அதைத் தகர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் பிற புரட்சிகர மக்களுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் வன்கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழியாகும்.


முற்றும்
· ஆர்.கே.