sep_2007.jpg

தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 கோடி ரூபாயில் டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் டாடா நிறுவனம் 2007, ஜூன் 28ஆம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே 2002ஆம் ஆண்டிலேயே அன்றைய அ.தி.மு.க. அரசாங்கத்திற்கும் டாடா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகியிருந்தது. சாத்தான் குளம், திசையன் விளைப் பகுதிகளில் உள்ள செம்மண் மிகுந்த தேரிக்காடுகளில் என்னென்ன அரிய உலோகங்கள் உள்ளன என சோதனைகளைச் செய்து முடித்த டாடா நிறுவனம், ஆலைக்கான அனுமதிக்கு விண்ணப்பித்து காத்து நின்றது.

அதற்குள் தேர்தல் நடந்து, ஆட்சி மாறிவிடவே இன்றைய அரசுடன் மீண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக சுமார் பத்தாயிரத்து ஜநூறு ஏக்கர் நிலங்களை அரசே கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கு வழங்கும்; நிலம் வழங்கியவர்களுக்கு டாடா நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்; வீடு இழந்தவர்களுக்கு டாடா நிறுவனமே மாற்று வீடுகள் கட்டித் தரும் என்பது ஒப்பந்தத்தின் சாரம்சம்.

 

அன்று டாடாவுடன் ஒப்பந்தம் போட்ட "ஜெ' உட்பட ஏறக்குறைய எல்லாக் கட்சிகளும், இன்றைய டாடாவுடனான ஒப்பந்தத்தை எதிர்த்து அறிக்கைகள் விடத் தொடங்கினர். பா.ம.க., போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அனைவருமே மக்களிடம் கருத்தறிவது எனக் குதிக்கவே, கருணாநிதியும் மக்களின் கருத்தறிந்த பின்பே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் எனக் கூறி இப்போதைக்கு சிக்கலை ஆறப்போட்டுவிட்டார்.

 

அருகாமை நெல்லை மாவட்டத்தில் அமெரிக்க கோக்கிற்கு தாமிரவருணியையே விற்றபோது, அதை எதிர்த்து யாரும் போராடவில்லை. போலி கம்யூனிஸ்டுகள் பெயரளவுக்கு எதிர்ப்பு வேசம் கட்டி, சூட்கேசு வந்ததும் ஒதுங்கிக் கொண்டனர். ஏற்கெனவே மே.வங்க மாநிலம் சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலையை எதிர்த்த விவசாயிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டு நாடெங்கும் போலி கம்யூனிஸ்டுகளின் யோக்கியதை நாறுகிறது. கருணாநிதியோ, எதிர்க்கட்சிகளின் இந்த அரசியல் பித்தலாட்டத்தை முறியடிக்க, கருத்துக் கணிப்பு என்று இன்னோரு மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

 

தேரிக்காட்டில் கிடைக்கும் இல்மனைட் மணலை எடுத்து, அதை சுத்திகரித்து டைட்டேனியம் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து டைட்டேனியம் என்ற ஆற்றல்மிக்க உலோகம் தயாரிக்கப்படுகிறது. இது இரும்பை விட எடை குறைவும், பன்மடங்கு ஆற்றலும் கொண்டது என்பதால் விண்ணூர்திகள், விண்கலங்கள், ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகைகளில் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

 

இதே தேரிக்காட்டுப் பகுதிகளில் வைகுண்டராஜன் என்பவர் அடாவடியாகவும், சட்டபூர்வசட்டவிரோத வழிகளிலும் இல்மனைட் மணலை சுத்திகரித்து மூலப்பொருளாகவே ஏற்றமதி செய்து வருகிறார். டாடா ஆலை வந்தால், தனது தொழில் பாதிப்படையும் என்பதால் இது வரை சில கோடிகள் செலவு செய்து சுவரொட்டிகள், டிஜிட்டல் பேனர்கள், நாளிதழ்களில் விளம்பரம் என பலவழிகளிலும் மக்களிடையே பயத்தையும் எதிர்ப்புணர்வையும் உருவாக்கி, அரசுக்கு எதிராகவே செயல்பட்டார்.

 

டாடாவின் எடுபிடியாகச் செயல்படும் தமிழக அரசோ, நேற்று வரை வைகுண்டராஜனின் அடாவடிகளையும் சட்டவிரோத வழிகளையும் அனுமதித்துதான் வந்தது. இன்றோ, பல்வேறு வழக்குகள் போட்டது மட்டுமின்றி "தாதா' தொழிலதிபர் என பட்டமும் சூட்டி தேடுதல் வேட்டை நடத்துகிறது. பத்திரிக்கைகளோ வழக்கம் போல இவற்றையே லைகுண்டராஜனின் சாதனைகளாக்கி பரபரப்பூட்டுகின்றன. தலைமறைவாயுள்ள வைகுண்டராஜன், தற்போது ஒரு சரணாகதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

வைகுண்டராஜன் செய்து வந்த வேலையை அரசாங்கமே இப்போது, டாடா செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஏற்கெனவே வறண்டு பாலைவனம் போலுள்ள அந்த தேரிக்காட்டுப் பகுதி முற்றிலும் பாலைவனமாகி, மக்கள் வசிப்பதற்கும் கூட பயனற்றதாக மாறுகின்ற அபாயமே உள்ளது. டாடா நிறுவனம் கூறுவது போல வெறும் 7 மீட்டருடன் மண்ணள்ளுவது நிற்காது. அதற்கும் மேலாக 20, 25 மீட்டர் ஆழம் கூட மணல் அள்ளும் அபாயமுள்ளது. இதனால் சுற்று வட்டாரப் பகுதிகளில் மொத்த நிலத்தடி நீருமே காணாமற் போய், கிராமங்களையே மக்கள் காலி செய்ய வேண்டிய மிகப்பெரும் அபாயம் உள்ளது.

 

இதுதவிர, டாடாவின் டைட்டேனியம் ஆலைக் கழிவால் சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன், கடலும் மாசுபடுகின்ற அபாயமுள்ளது. மேலும், டைட்டேனியம்டைஆக்சைடு தயாரிப்புக்கு நாளொன்றுக்கு 4.5 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. இதற்காக கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தப் போவதாகவும், அந்த சுத்திகரிப்பு ஆலைக்கும் டாடா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. சுத்திகரிப்பு ஆலை எப்போது முடியும் என்பது பற்றிய காலம் தீர்மானிக்கப்படவில்லை. அதற்கு முன் உற்பத்தி தொடங்கப்பட்டால், நிச்சயம் தாமிரவருணி ஆற்றுநீரே உறிஞ்சப்படும் அபாயமும் இணைந்துள்ளது.

 

சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் டாடாவின் ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு கூறுகிறது. இவை மண்ணின் மைந்தர்க்கே கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாமுமில்லை. ஏனெனில், ஆலையிலுள்ள வேலைகளுக்கு தொழில்நுட்ப தேர்ச்சி தேவை என்பது ஒரு முன் நிபந்தனை.

 

40 ஆயிரம் குடும்பங்களை அகதிகளாக்கி, டைட்டேனியம் ஆலை தொடங்கப்பட்டால், டைட்டேனியம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடு என்ற பெருமை கிடைக்கலாம். ஆனால் மண்ணையும், வாழ்வுரிமையையும் இழந்து தேரிக்காடுகளையும் விட்டோடுகின்ற மக்களின் அவலம் டாடா எனும் தனியொரு முதலாளியை மட்டும் வாழவைப்பதற்குத்தான் என்பதை சொரணையுள்ள யாரும் ஏற்க முடியாது.

 

ஏற்கெனவே சுற்றுச்சூழலை நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக ஓட்டுக் கட்சிகள் சூரத்தனம் காட்டின. சூட்கேசும் அன்பளிப்பும் வந்தபின் முடங்கிப் போயின. மக்களுக்கு பாதிப்பு வராது, வந்தால் டாடா நிறுவனம் மாற்றீடு செய்யும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது. ஏற்கெனவே நெய்வேலி சுரங்கத்திற்கு நிலமளித்தவர்களும் கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்திற்கு நிலமளித்தவர்களும் இந்த அரசாலேயே புறக்கணிக்கப்படுள்ளனர். மக்களுக்கு பதில் கூற பொறுப்புள்ள அரசாங்கமே மக்களை நிர்கதியாக வீதிக்கு விரட்டும் போது, லாப வெறி பிடித்த டாடா நிறுவனம் உரிய மாற்றீடு செய்யும் என்பதற்கும் எவ்வித உத்திரவாதமுமில்லை.

 

டாடாவா, வைகுண்டராஜனா என்ற போட்டியில் அப்பகுதி மக்கள் மண்ணிலிருந்தே விரட்டப்படும் அபாயம் முதன்மையாக உள்ளது. மக்கள் தமது மண்ணையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க ஓட்டுக் கட்சிகளை நம்பினால் அது மண்குதிரையை நம்பி ஆற்றிலிறங்கிய கதையாகவே முடியும். மூலவளங்களையே சூறையாடும் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் தலைமையிலான போராட்டத்திற்கு அணிதிரள்வதே மண்ணையும் வாழ்வுரிமையையும் மீட்கும் பாதை! டாடாவை விரட்டும் பாதை!


· முத்து