put_oct-2007.jpg

நான்காவது ஈழப்போர் நாளும் கடுமையாகி வருகிறது. மோதிக் கொள்ளும் இரு தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகளாகட்டும், சிங்களப் பாசிச பேரினவாத அரசாகட்டும் இரண்டு தரப்புமே உரிமை பாராட்டிக் கொள்வதைப் போல எத்தரப்புக்கும் முழு சாதகமாகப் போரின் போக்கு இல்லை என்பதுதான் உண்மை.

 

யாழ்குடா நாட்டை இலங்கைத் தீவின் பிற பகுதியுடன் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையை மூடியதன் மூலம், ஈழத் தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரடி கொடுத்துவிட்டதாக சிங்கள பாசிச அரசு எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் என்றால், இலங்கை விமானப் படைத் தளத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதன் மூலம், அந்நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையமான பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தின் இரவுச் சேவைகளை மூடிவிடும்படி செய்ததில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளனர்.

 

சிங்கள பாசிச இராணுவம் தொடர்ந்து நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்கள் குண்டு வீச்சுக்கள்; தமிழீழ விடுதலைப் புலிகளின் கொரில்லாத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் அழித்தொழிப்புகள்; இரண்டாவது ஜெனிவா பேச்சுவார்த்தைகள் கடந்த அக்டோபரில் முறிந்து போனது; ""யுத்தம் மற்றும் சமாதானம் என்ற சிங்களவரின் இரட்டை நாடகம் காரணமாக அரசியல் விடுதலைக்காகப் போரிடுவதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லாமல் செய்துவிட்டது'' என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த அக்டோபர் தியாகிகள் தினத்தில் பிரகடனம் செய்தது; ஏற்கெனவே போருக்கான முடிவிலும் தயாரிப்பிலும் இருந்த சிங்கள பாசிச இனவெறி அதிபர் ராஜபக்சே, பிரபாகரனின் பேச்சைச் சாக்குவைத்து, புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் நிலைகுலையச் செய்யாமல் இலங்கையில் சமாதானமோ முன்னேற்றமோ ஏற்படாது என்று அறிவித்தது — இவையெல்லாம் தற்போதைய நான்காவது ஈழப்போருக்கு பின்னணியாக அமைந்தவை.

 

ஈழப்போர் தாழ்ந்த நிலையில் நடந்து வந்தபோதே, அது ஏற்படுத்தியிருந்த பாதிப்புகள் ஈழத்தமிழர்களின் துயரங்கள் எண்ணிலடங்காதவையாகிவிட்டன. இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவின் மதிப்பீட்டின்படி கடந்த பிப்ரவரி 2007 வரையிலான 15 மாதங்களில் மட்டும் 4000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2004 சுனாமி பாதிப்பும் சேர்ந்து ஒரு பத்து இலட்சம்பேர் அகதிகளாக்கப்பட்டிருக்கின்றனர் என்று ஐ.நா சபை மற்றும் பிற சர்வதேச முகமை அமைப்புகள் கூறுகின்றன. சிங்கள இனவெறி பாசிச அரசு விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் காரணமாக உணவு, மருந்து மற்றும் பிற இன்றியமையாத் தேவைகள் கிடைக்காமல் ஈழமக்கள் பட்டினியாலும் நோயாலும் மடிவது அதிகரித்துக் கொண்டே போகிறது.

 

கடந்த ஜூலை 19ந் தேதி ஈழத்தின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொப்பிக்கலை குன்றில் இலங்கையின் சிறப்பு அதிரடிப்படையினர், சிங்கள அரசின் கொடியை ஏற்றி வைத்தனர். அதன்மூலம் கிழக்கு மாகாணம் முழுமையையும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி விட்டதாகப் பிரகடனம் செய்தனர்.

 

இதைக் கொண்டாடும் விதமாக, இலங்கையின் சுதந்திர தின விழாவுக்கு இணையாக ஜூலை 19ந் தேதி குதூகலமான இராணுவ அணிவகுப்புடன் கூடிய அரசு விழாவொன்றை கொழும்பு நகரில் சிங்கள பாசிச பேரினவாத அரசு நடத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியதைக் குறிக்கும் பட்டயம் ஒன்றை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் முப்படைத் தளபதிகள் அளித்தனர். இந்தியா உட்பட இலங்கையின் நட்பு நாடுகளுடைய சிறப்பு அரசுப் பிரதிநிதிகள் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

 

உண்மையில் இந்த விழாவானது சிங்கள பாசிச பேரினவாத அரசின் பலமுனைத் தோல்விகளையும் நெருக்கடிகளையும் மூடி மறைப்பதற்கும், சிங்கள மக்களுடைய கவனத்தையும் கூடத் திசை திருப்புவதற்கான ஒரு ஏற்பாடுதான். இலங்கை அரசின் நிதி ஆதாரங்கள் அனைத்தும் ஆயுதக் குவிப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கும் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில் பணவீக்கமும், விலைவாசியேற்றமும் இலங்கைப் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் வீழ்த்திவிட்டது.

 

30 சதவீதமான இலங்கையின் அன்னியச் செலாவணி வருவாயை சுற்றுலாத் தொழில் மூலமே பெற்று வந்தனர். ஆனால், போர் மூண்ட பிறகு, குறிப்பாக கொழும்பு மீதான புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் இரவுச் சேவைகள் நிறுத்தப்பட்ட பிறகு, இலங்கையின் சுற்றுலாத் தொழில் ஏறக்குறைய முற்றிலும் முடங்கிப் போய்விட்டது. பிரபலமான பிரமுகர்கள், தொழில் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துப் பணம் பறிப்பது சிங்கள பாசிசத் துணை இராணுவப் படைகள் மற்றும் இரகசிய உலகக் குற்றக் கும்பல்களின் முக்கியத் தொழிலானது. ஆரம்பத்தில் தென்னிலங்கையில் வாழும் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும், பிறகு இசுலாமியக் குடும்பத்தினரையும் பணயக் கைதிகளாகக் கடத்துவதும், தொடர்ந்து சிங்களக் குடும்பங்கள் பலியாவதும் என்றும் விரிவடைந்தது. இதனால் முக்கியத் தொழில் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டைவிட்டு ஓடுவது அதிகரித்துள்ளது.

 

இப்படி பணயப் பணத்துக்காக ஆட்களைக் கடத்துவதும், இளைஞர்கள் காணாமல் (!) போவதும் கடத்திப் படுகொலை செய்யப்படுவதும் பல ஆயிரங்களாகிவிட்டது என்று அரசு சாரா சேவை அமைப்புகளே புகார்கள் கூறுகின்றன. செய்தி ஊடக சுதந்திர அளவுக் குறியீட்டில் 2002ஆம் ஆண்டு 55வது இடத்தில் இருந்த இலங்கை, கடந்த ஐந்தாண்டுகளில் அதாவது 2007ஆம் ஆண்டில் 145வது இடத்துக்குச் சரிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ ரீதியிலான ""வெற்றி'' இலங்கையில் அமைதியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்து விடும் என்ற ராஜபக்சே அரசின் ""கனவு'' பொய்த்து வருவதையே மேற்கண்ட விவரங்கள் காட்டுகின்றன.

 

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், உலகின் பல நாட்டு மனித உரிமை அமைப்புகளின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. உலக அரங்கில் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக ராஜபக்சே அரசு, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் இலங்கையில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஒரு சர்வதேச ஆணையம் நியமித்தது. அதன் விசாரணை ராஜபக்சே அரசுக்கு எதிராகப் போனபோது, அரசு பொது வழக்கறிஞரை விட்டு அந்த ஆணையத்துக்கு கடும் எதிர்ப்பு காட்டி அதையும் செயலிழக்கச் செய்துவிட்டது.

 

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி இருப்பதுகூட, சிங்கள பாசிச அரசு பீற்றிக் கொள்வதைப்போல இராணுவ ரீதியிலான பெரும் வெற்றி என்று கூறிவிட முடியாது. கிழக்கைப் பொருத்தவரை, மட்டக்களப்பை அடுத்துள்ள எழுவன்கரை பகுதி பெரும்பாலும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்திருக்கிறது. இந்தப் பகுதி பெரும்பாலும் தமிழ் மற்றும் இசுலாமிய மக்கள் வாழும் கிராமங்களைப் பரவலாகக் கொண்டிருக்கிறது. மட்டக்களப்பு நீர்ப்பரப்புக்கு மேற்கில் பெரும்பாலும் தமிழர்கள் வாழும் கிராமங்களைக் கொண்ட படுவன்கரைப் பகுதிகள் பெரும்பாலும புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்திருக்கிறது.

 

ஆகவே, கிழக்கு மாகாணம் யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பது என்பது புலிகளின் நோக்கத்தைவிட, சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் இராணுவப் போர்த் தந்திர மாற்றங்களுக்கு ஏற்பவே அமைந்திருக்கிறது. ஜெயவர்த்தனே மற்றும் பிரேமதாசா ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர்கள் அதிகாரத்திலிருந்தவரை, கலவையான மக்களைக் கொண்டுள்ள கிழக்கைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தமிழீழத்துக்கான புலிகளின் உரிமையை மறுக்கும் முகமாக அவர்கள் இலங்கையின் 42 சதவீத இராணுவ வலிமையை கிழக்கு மாகாணத்தில் குவித்து வைத்திருந்தனர். இதனால் வடக்கு மாகாணத்தைப் பெரும்பாலும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் கிழக்கின் வனப் பகுதிகளையும் அவற்றை ஒட்டியுள்ள தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளையும் மட்டுமே புலிகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

 

சந்திரிகா குமாரதுங்கா அதிபரான பிறகு, முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் முறிந்ததைத் தொடர்ந்து, 1995இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மூண்டபோது சிங்கள இராணுவப் போர் உத்தி மாறியது. கிழக்கிலிருந்து இராணுவம் பின்வாங்கப்பட்டு, வடக்கு மாகாணத்தில் புலிகள் மீது கடும் தாக்குதல் ஒருமுகப்படுத்தப்பட்டது. புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி ஈழத்தமிழர்களுக்குப் பாதகமான அதிகாரப் பகிர்வுத் தீர்வைத் திணிக்கும் நோக்கில் அந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. யாழ் தீபகற்பப் பகுதியையும் வடக்கு வன்னியின் சில பகுதிகளையும் கைப்பற்றுவதில் சந்திரிகா அரசாங்கம் ஓரளவு வெற்றி பெற்றது.

 

என்றாலும், கிழக்கில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள், சிங்கள இராணுவத்தின் பாரிய எதிர்ப்பு எதுவுமின்றி கிழக்கின் பெரும்பகுதியை எளிதில் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு இந்த வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு, ஆயுதங்களையும் படைகளையும் குவித்து யானையிறவு உட்பட பல போர்களில் போர்த்தந்திர முக்கியத்துவமுடைய வெற்றிகளைப் புலிகள் ஈட்டினர். போரில் சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் தோல்விகளை சந்திக்க நேர்ந்ததோடு தென்னிலங்கையில் அது பின்னடைவுகளைக் கண்டது; நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி பெரும்பான்மை பெற்று, ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார். அவருடன் சமாதான முன்னெடுப்புகள் மீண்டும் துவங்கியபோது, அதிபர் சந்திரிகா தலையிட்டு அம்முயற்சிகளைச் சிதைத்து, மீண்டும் சிங்களபேரின வெறி தலைவிரித்தாடியபோது, ராஜபக்சே தலைமையிலான கூட்டணி அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றது.

 

கடந்த ஆண்டு ஜூலையில் ராஜபக்சே அரசாங்கம், கிழக்கைக் கைப்பற்றுவது என்ற பழைய இராணுவ போர்த்தந்திரத்தை முன்வைத்து அறிவிக்கப்படாத போரைத் தொடுத்தது. சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான புலிகளின் தற்கொலை கொரில்லாத் தாக்குதலைச் சாக்கு வைத்து சம்பூர், முத்தூர் பகுதிகள் மீது விமானக் குண்டு வீச்சுகள் நடத்தி, அங்கு வாழ்ந்த மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டனர். பிறகு மாவிலாறு அணையை மீட்பது என்கிற முகாந்திரத்தை முன்வைத்து அமைதிக் குழு மீதே சிங்கள இராணுவம் குண்டுமாறிப் பொழிந்தது. ஆரம்பத்தில் கடும் எதிர்ப்புக் காட்டிய விடுதலைப் புலிகள் செயல் தந்திர ரீதியிலான பின்வாங்குதல் செய்தபிறகு சாம்பூர், வாகரை, படுவன்கரை மற்றும் இறுதியாக தொப்பிக்கலையை சிங்கள இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. இந்தப் போரில், புலிகளிடமிருந்து பிரிந்துபோன கருணா தலைமையிலான ""துரோக''ப் படை சிங்கள இராணுவத்துக்குப் பெருந்துணையாக இருந்தது முக்கியமானதாகும்.

 

கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. இனி வடக்கில் இராணுவத்தைக் குவித்து தாக்குதலை ஒருமுகப்படுத்திப் புலிகளைப் பலவீனப்படுத்தி விடலாம் என்று சிங்கள பாசிச அரசு மனப்பால் குடிக்கிறது. அதோடு இந்தியாவிலுள்ள மாவட்ட கவுன்சில் அளவுக்கான பஞ்சாயத்து அமைப்புகளை உருவாக்கி பெயரளவுக்கான அதிகாரப் பகிர்வு என்ற தீர்வை ராஜபக்சே அரசு முன் தள்ளுகிறது. இந்த இரு திட்டங்களுமே ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. நூற்றுக்கணக்கான கொரில்லாப் படையினரை கிழக்கில் பிரித்து ஒதுக்கி இருக்கும் விடுதலைப் புலிகள், வடக்கில் சிங்களப் படைகளை முன்னேற விடாமல் தாக்கி வருகின்றனர். தரையிலும் கடலிலும் கடும்போர் நடத்தும் புலிகள், இப்போது வான்வழித் தாக்குதலுக்குமான பலத்தைப் பெற்றுள்ளனர் என்பது முக்கியமானது.

 

ஆனாலும், சிங்கள பாசிச பேரினவாத அரசு அமெரிக்கா, இந்தியா உட்பட ஏகாதிபத்திய, துணை வல்லரசு ஆதரவைப் பெற்றுள்ளது. அந்நாடுகள் நவீன ஆயுதங்களைக் öகாடுத்து சிங்கள பாசிச இராணுவத்துக்கு முட்டுக் கொடுத்து வருகின்றன. இந்திய அரசிடம் நயந்து பேசி, சமரசம் செய்து கொள்ளும் புலிகளின் உத்தி சிறிதும் வெற்றி பெறாத நிலையில், புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதுதான் இந்தியாவின் ஈழத்தமிழர் விரோதச் செயல்களை ஓரளவு வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

சிங்கள பாசிச பேரினவாத அரசு புலிகளை இராணுவ ரீதியில் வெல்வது சாத்தியமில்லாமலிருக்கும் அதேசமயம், புலிகளும் ஈழ விடுதலையை போர் மூலம் சாதிப்பது என்ற தங்கள் உத்திக்கு சர்வதேச ஆதரவைப் பெறமுடியாமலேயே இருக்கின்றனர். ஒன்றுபட்ட இலங்கையைத் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதையே அமெரிக்கா, இந்தியா உட்பட பிற நாடுகள் விரும்புகின்றன. தமது தலைமையிலான தமிழீழம் இந்த நாடுகளுக்குக் கீழ்ப்படிந்தே இருக்கும் என்ற புலிகளின் வாக்குறுதியை அவை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய பாதகமான நிலையை எதிர்கொள்வதற்கான சரியான அரசியல், இராணுவ உத்திகள் புலிகளிடமில்லை என்பதுதான் உண்மையாகும். விடுதலைப் புலிகள் தமது பாசிச நடவடிக்கைகளால் ஈழத் தமிழர்களின் ஒருமித்த ஆதரவைப் பெற முடியாமல் போனதோடு, புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் இழந்துள்ளனர். ஆயுதங்களையும், உலகின் பிற்போக்கு அரசுகளின் ஆதரவைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையையும் வைத்து எந்த விடுதலைப் போரும் வெல்ல முடியாது என்பதற்குப் புலிகள் இயக்கம் தக்க சான்றாக விளங்குகிறது.


· ஆர்.கே.