Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழினத்துகாக உணர்வுபூர்வமாக குரல்கொடுப்போர் கிடையாது. புலிக்காக தமிழினத்ததை உச்சரிக்கின்றவர்கள், தமிழினத்தின் மேல் அழிவுகளை ஏற்படுத்தி அதைக் காட்டியே அரசியல் செய்கின்றனர். இந்த புலியின் ஈனச் செயலைக்காட்டியே, பேரினவாதம் தமிழ் மக்களை மீட்கப்போவதாக கூறி குண்டுகளை தமிழ் மக்கள் மேல் சரமாரியாக பொழிகின்றது.

 

எப்படி தமிழினத்தை அழிப்பது என்பதில் மட்டும் தான், தமிழினத்ததை ஓடுக்கிவாழும் சிங்கள தமிழ் வலதுசாரி பாசிசக் கும்பல்களுக்குள் முரண்பாடு. அப்பாவி மக்கள் இவர்களுக்கு இடையில் சிக்கிகிடப்பதையும், அவர்கள் பலியாடுகளாக பலியிடப்படுவதையும் மூடிமறைக்கும் உணாச்சியூட்டல்கள். பாதிக்கப்படும் மக்களின் உண்மை நிலையை எதிர்கொண்டு போராட மறுப்பதன் மூலம், பலியிடல் என்பது அரசியல் நிகழ்ச்சியாகின்றது. உண்மையில் மக்களை பலியிடல் என்பது, போராட்டத்தின் உள்ளடகத்தில் ஊக்கம் பெறுகின்றது. அதுவோ அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெறுகின்றது. இதற்கு எதிராக, யுத்த முனையில் இருந்து மக்களை விடுவிக்க கோரி போராடுவது துரோகமாக முத்திரை குத்தப்படுகின்றது. மக்கள் கொல்லப்படுவதும், கொல்ல வைப்பதும் அரசியலாகிவிட்டது. இதைப்பற்றி இதற்குள் பேசுவதும் மனிதாபிமான விடையமாகிவிட்டது. இதை அலை அலையாக கட்டமைக்கும் பிரச்சாரங்கள், உணர்ச்சியூட்டல்கள் மூலம் பலியிடலைத் தொடரக் கோருகின்றனர். மனித அவலத்தை ஊக்குவித்தல் தான், இன்று புலிகளின் அரசியல் தாகமாகிவிட்டது.       

 

தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதிடமிருந்தும், புலிகளிடமிருந்தும், மக்கள் வெளியேற்றப்பட வேண்டும். இது மட்டும் தான், தமிழ் மக்களின் அவலத்துக்கு முடிவு கட்டும். இந்த யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் மக்களின் விரோதிகள். இதில் இருந்து ஓதுங்கி வாழும் மக்கள், இந்த யுத்தப் பிரதேசத்தில் இருந்தும் ஒதுங்கி வாழ்வது அவசியமானது. அதை நோக்கி போராடுவது அவசியமானது. மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர். மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தும் இருதரப்பும், மக்களை விடுவிக்க வேண்டும். இதை அவர்கள் செய்ய மாட்டார்கள்.

 

பேரினவாதம் புலியை அழிக்க தமிழ்மக்களை யுத்தமுனையில் இருந்து வெளியேற்றுவது அவர்களுக்கு அவசியமான ஒரு நிபந்தனையாக இருப்பதால், அதை உண்மையாகவே கோருகின்றனர். புலிகள் இதை மறுப்பதன் மூலம், மக்களை தம்முன் கேடயமாகவே முன்நிறுத்துகின்றனர். புலிகள் தம் சொந்த அழிவிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவே, மக்களை பலியாடுகளாக பயன்படுத்துகின்றனர். அதையே தம் சொந்தப் பிரச்சாரத்துக்காக முன்னிநிறுத்தி உணர்ச்சியூட்டுகின்றனர்.    

 

இதை மூடிமறைக்க மக்கள் தம்முடன் நிற்பதாக சொல்லுகின்ற அனைத்து வார்த்தை ஜலங்களும், அவர்களை பலியிட வைக்கும் பாசிச பிரச்சாரம் தான். பேரினவாதப் பகுதிக்கு தமிழ்மக்கள் சென்றால் அவர்களை முற்றாக அழித்துவிடுவர் என்பது, எதிரி பற்றிய பீதியை பயத்தை புலிகளின் சுயநலத்துடன் திணிப்பது தான். காயம்பட்டவர்களை பேரினவாத பகுதிக்கு அனுப்பும் புலிகள், ஏன் மக்களை அப்படி அனுப்ப முடிவதில்லை. இப்படி பெரும்பான்மையான தமிழ்மக்கள் பேரினவாத பகுதியில் வாழ்கின்ற உதாரணங்கள், சம்பவங்களைக் காட்டமுடியும். புலிகள் கூட அங்கு வாழ்ந்தபடி தான், தாக்குதலை நடத்துகின்றனர். சுய அறிவுள்ள, மக்களை நேசிக்கின்ற எந்த மனிதனுக்கும் இந்த உதாரணங்கள் அவசியமற்றது.

 

இங்கு மக்களை பலியாட்களாக புலிகள் பயன்படுத்துவது தான் உண்மை, அதுதான் அவர்களின் அரசியலும் கூட. அதற்கு, எதற்கு கோவணம்.   

 

நிலைமை இதுதான். கட்டாயப்படுத்தி யுத்தத்தில் சிக்கவைத்துள்ள வன்னி மக்களின் துயரத்தில் இருந்தும், துன்பத்தில் இருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று, புலிகள் அல்லது அரசு என இரண்டுக்கும் எந்த மனித அக்கறையும் கிடையாது. அதை நோக்கி அவர்கள் எந்த காலடியையும் தூக்கிவைத்தது கிடையாது. அழிவும், அழித்தலும் இன்றைய நிகழ்ச்சி நிரலாக இருப்பதால், மக்களை இதற்குள் சிக்கவைத்து அழிக்கின்றனர்.  

 

இதை வைத்து முட்டைக் கண்ணீர் வடிப்போர், உணர்ச்சி வசப்படுபவர்கள், பொய் உரைப்போர், புனைவுகளை கட்டவிழ்த்து விடுவோர், இதை வைத்து பிழைப்பவர்கள் எல்லாம் மனித அவலத்தை விரும்பியே, அதை விதைக்கின்றனர். ஆம் மனித அவலம் விதைக்கப்படுகின்றது. இதுவே தமிழினத்தின்; விடுதலையைத் தரும் என்கின்றனர்.
 


இப்படி மனித அவலம் பற்றி பேசுபவர்கள் யாரும், மனிதத்தை பாதுகாத்தல் என்ற அடிப்படையில் இருந்து சிந்திப்பதில்லை. வன்னி மக்களின் அவலத்தைக் காட்டி, புலியை பாதுகாத்தல் என்பதால் அது பிரச்சாரமாகின்றது. இதை அரசு தனக்கு சாதகமாகக் கொண்டு, வெறும் புலிப் பிரச்சாரமாக காட்டியே, தமிழ் இனத்தை அழிக்கின்றது. மக்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை.

 

வன்னிமக்கள் பற்றி உண்மையான அக்கறையுள்ள ஒவ்வொருவரும் எப்படி சிந்திக்கமுடியும்? மக்கள் வேறாக புலிகள் வேறாக இருப்பதனால், அவர்கள் பாதுகாப்பாக இருக்கக் கூடிய ஒரு சூனிய பிரதேசத்தைக் கோரியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சர்வதேச கண்காணிப்பின் கீழ், ஒரு பிரதேசத்துக்குள் மக்களை நகர்த்தும்படி கோரியிருக்க வேண்டும். அரசு மற்றும் புலி, இரண்டுமற்ற ஒரு சூனிய பிரதேசத்தில், மக்கள் செல்லும் வகையில் இரண்டு தரப்பையும் அனுமதிக்க கோரியிருக்க வேண்டும். இதை கோரி நிர்பந்திக்கும் போராட்டம் மட்டும்தான், மக்களை பாதுகாக்கும் குறைந்தபட்ச வழியாக எம்முன் இருக்கின்றது.

 

இதுவல்லாது யுத்தவாதிகளின் குறுகிய உள்நோக்கம் கொண்ட வக்கிரத்துக்குள், மக்களின் உணர்வுகள் காயடிக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றது என்பதே உண்மை. இந்த எல்லையில் தான் போராட்டங்களும், மனிதம் பற்றி அக்கறைகளும். இவை எல்லாம் குறுகிய நோக்கம் கொண்டவை. இப்படி மனித அவலத்தைக் காட்டி செய்யும் பிரச்சாரம், உண்மையில் மக்கள் பற்றிய அக்கறையின்பாலானதல்ல.

 

பி.இரயாகரன்
31.01.2009