Language Selection

புதிய கலாச்சாரம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 1924 ஒப்பந்தத்தைப் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீளாய்வு செய்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதிலிருந்து, மேற்கூறிய ஒப்பந்தத்தையே மறுத்து வந்த கர்நாடக அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. "காவிரி நீர் என்பது தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கும் தருமம் அல்ல' என்பதுடன் காவிரி நீரில் தமிழகத்துக்குள்ள பாரம்பரிய உரிமையும் இத்தீர்ப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியாறு அணை தொடர்பான பிரச்சினையில் கேரளாவின் மார்க்சிஸ்டு அரசு முன்வைத்து வரும் இதே விதமான வாதத்திற்கும் இத்தீர்ப்பு பதிலாக அமைந்திருக்கிறது.

 

தண்ணீர் ஆண்டென்பது ஜூன் 1ஆம் தேதி தொடங்கி, மே 31இல் முடிவடைகிறதென்றும், இந்தக் காலகட்டத்தில் மாதந்தோறும் கர்நாடகம் எவ்வளவு தண்ணீரைத் திறந்து விட வேண்டுமென்பதையும் நடுவர் மன்றம் வரையறுத்துக் கூறியுள்ளது. இரண்டு சாகுபடிகளுக்கான ஒப்பீட்டளவிலான உத்திரவாதம் இதன்மூலம் கிடைத்துள்ளதுடன், தமக்கு வசதிப்பட்ட நேரத்தில் தண்ணீரை வழங்குவது, பிறகு ஆண்டுக்கு இத்தனை டி.எம்.சி. தண்ணீர் வழங்கிவிட்டதாகக் கணக்குக் காட்டுவது என்ற கர்நாடகத்தின் மோசடி இதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களில், அப்போதுள்ள நீர் கையிருப்பு அளவுக்கு ஏற்ப, இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளதன் வாயிலாக, "எங்களுடைய தேவைக்குப் போக உபரி இருந்தால்தான் தமிழகத்துக்குக் கொடுக்க முடியும்' என்ற கர்நாடக அரசினுடைய அடாவடித்தனமான வாதத்தின் அடிப்படையையும் நடுவர் மன்றத் தீர்ப்பு தகர்த்துள்ளது.

 

ஏற்கெனவே நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில், மேட்டூர் அணைக்கு வந்து சேரும் நீரே, தமிழகத்துக்கு வழங்கப்படும் நீராக அளவிடப்பட்டிருந்தது. தவறான புள்ளிவிவரங்களை அளிப்பதற்கும், முரண்பாடுகள் தோன்றுவதற்கும் அடிப்படையாக இருந்த இந்த நீர் அளவிடும் முறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. மைய அரசின் நீர்வளத் துறையால் பராமரிக்கப்படும் கர்நாடக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு நீர் அளவை மையத்திலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவே கணக்கில் கொள்ளப்பட வேண்டுமென தற்போதைய தீர்ப்பு கூறியுள்ளது.

 

பிலிகுண்டுலு அளவை மையத்திலிருந்து ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகம் தரவேண்டுமென தற்போதைய இறுதித் தீர்ப்பு கூறுகிறது. பிலிகுண்டுலுவுக்கும் மேட்டூருக்கும் இடையிலுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் காவிரிக்கு வந்து சேரும் நீர் 25 டி.எம்.சி. என்பதால் ஆண்டுதோறும் மேட்டூருக்குக் கிடைக்கும் நீரின் அளவு 217 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது. இதிலிருந்து தமிழகம் புதுவைக்கு வழங்கவேண்டிய 7 டி.எம்.சி. தண்ணீர் போக மீதம் கிடைக்கும் நீரின் அளவு ஏற்கெனவே இடைக்கால உத்தரவில் குறிப்பிடப்பட்ட நீரின் அளவைக் காட்டிலும் அதிகமே என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளத்துக்குரிய 30 டி.எம்.சி. தண்ணீரை அவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பு தற்போது இல்லையென்பதால், அந்த நீரையும் தமிழகமே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்படுவதைக் கண்காணிக்க ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீரை கால அட்டவணைப்படி வழங்க வேண்டுமென்றும், அதனைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் கர்நாடகம் ஈடுபடக்கூடாது என்றும், ஒரு மாதத்தில் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைந்தால் அடுத்த மாதமே அது பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய நீர்மின் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பாசனத்துக்கான தண்ணீரின் அளவில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதையும் தீர்ப்பு குறிப்பிடுகிறது.

 

தீர்ப்பில் குறைகள் இல்லாமலும் இல்லை. தஞ்சையின் குறுவைப் பாசனப்பரப்பு குறைக்கப்பட்டுள்ளது, அமராவதி பாசனப்பகுதியின் கரும்புப் பாசனம் கணக்கில் கொள்ளப்படாதது, பற்றாக்குறைப் பகிர்வு குறித்த வழிகாட்டுதல்களில் குறைபாடு, உபரிநீர் பகிர்வு குறித்து எதுவும் குறிப்பிடப்படாமை போன்ற குறைபாடுகள் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. தீர்ப்பின் பாதகமான அம்சங்கள் குறித்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மாறாக, கர்நாடக அரசோ, தீர்ப்பையே நிராகரிப்பதாகவும் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் கூறியிருக்கிறது. பாசனப்பரப்பு அதிகமாகவும், தண்ணீர் பற்றாக்குறையாகவும் உள்ள சூழலில், எல்லாத் தரப்பினரும் முழுமையாகத் திருப்தியடையத்தக்க தீர்ப்பொன்றை வழங்குவது கடினம்.


ஆயினும், தீர்ப்பின் விவரங்களுக்குள் செல்லாமலேயே தீர்ப்புக்கு எதிரான வெறித்தனமான போராட்டங்கள் கன்னட இனவெறியர்களாலும், பா.ஜ.க., காங்கிரசு உள்ளிட்ட தேசியக் கட்சியினராலும் கர்நாடக விவசாயிகள் மத்தியில் தூண்டிவிடப்படுகின்றன. கர்நாடகத் தமிழர்களுக்கெதிராக வன்முறையைத் தூண்டுவதற்கான சூழல்கள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன. அதேநேரத்தில், தீர்ப்புக்கு எதிராக கர்நாடக ஓட்டுக் கட்சிகள் நடத்தவிருந்த கடையடைப்பு, "பன்னாட்டு நிறுவனங்களின் போர்விமான வர்த்தகக் கண்காட்சி' பெங்களூரில் நடந்ததையொட்டி அம்மாநில முதல்வரின் கோரிக்கையை ஏற்று தள்ளி வைத்து நடத்தப்பட்டது. கர்நாடக ஓட்டுப் பொறுக்கிகளின் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கும், இந்தப் போராட்டங்களின் போலித்தனத்திற்கும் இதுவே சான்று.

 

கர்நாடக விவசாயிகளின் தற்கொலையும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயிகள் அங்கே துரத்தப்படுவதம், காவிரிச் சிக்கல் தோற்றுவித்த பிரச்சினைகள் அல்ல. அவை மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவுகள். பாசனப்பராமரிப்பு திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவது, ஆறுகள் மாசுபடுத்தப்படுவது, அரசு கொள்முதல் ரத்து, பன்னாட்டு நிறுவனங்களின் தானியக் கொள்முதல், தானிய விற்பனையில் ஊகவணிகம் போன்ற விவசாயிகளைக் கொல்லும் பல்வேறு பிரச்சினைகளுக்காக இவர்கள் போராடுவதில்லை. இரு மாநிலங்களுக்கு இடையில் முரண்பாடாக உருவெடுக்கும் பிரச்சினைகளை மட்டுமே விவசாயிகள் மற்றும் மக்கள் பிரச்சினையாகச் சித்தரிக்கும் இத்தகைய இனவாதம் அம்பலப்படுத்தி முறியடிக்கப்பட வேண்டும். அதேபோல, கர்நாடகத்தில் ஒன்றும் தமிழகத்தில் ஒன்றும் பேசும் சந்தர்ப்பவாதத்தையே தமது அரசியல் நடைமுறையாகக் கொண்டிருக்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை வேடமும் தோலுரிக்கப்பட வேண்டும். காவிரி தொடர்ந்து பிரச்சினையாகவே நீடிப்பதற்கு இந்த அயோக்கியர்களின் இரட்டைவேடமே முதன்மையான காரணம்.

 

ந்தத் தீர்ப்பை முடக்குவதற்குத் தன்னாலான அனைத்தையும் கர்நாடக அரசு செய்யும் என்பது தெளிவு. எனவே, தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது, தீர்ப்பின் பாதக அம்சங்களுக்கு எதிரான மேல்முறையீடு போன்ற சட்டபூர்வ முறைகளைத் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அரசியல் சட்டத்துக்கோ, நியாயத்திற்கோ, கர்நாடக அரசு கட்டுப்பட மறுத்தால், "நிபந்தனையற்ற தேசிய ஒருமைப்பாடு ஏதும் இல்லை' என்பதை நிலைநாட்டும் வகையில் அரசியல் ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
·