Language Selection

புதிய ஜனநாயகம் 2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புதுவை மாநிலம் வடமங்கலத்தில் இயங்கிவரும் பன்னாட்டு ஏகபோக நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு. தலைமையின் கீழ் கடந்த 2008 முதல் இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் இயங்கிவருகிறது. இச்சங்கத்தை அங்கீகரிக்காமல் இருந்த நிர்வாகம், தொடர் போராட்டங்களாலும் பெருமளவில் தொழிலாளர்கள் இச்சங்கத்தில் இணைந்துள்ளதாலும் வேறுவழியின்றி இச்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. மற்றொரு சங்கமான இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனுடன் இணைத்து, கடந்த 30.7.2011இல் 2011ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நிர்வாகம் தொடங்கியது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தொழிலாளர்களில் 4 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்ததோடு, ஒர்க்கர்ஸ் யூனியனின் முன்னணியாளர்கள் 5 பேரையும், இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் சங்கத்தின் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்தது. தொழிலாளர் சட்டம் 12(3)இன் படி, ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சங்க முன்னணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஆனால் இந்நிறுவனமோ சட்டத்தை மயிரளவுக்கும் மதிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தால், அதைச் சாக்கிட்டு பழிவாங்கலை நியாயப்படுத்தி துரோக ஒப்பந்தத்தைத் திணிக்கலாம் என்று நிர்வாகம் எத்தணித்தது.

இச்சதியை முன்னரே உணர்ந்திருந்த பு.ஜ.தொ.மு; இப்பழிவாங்கலை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி நியாயம் கேட்கும் வகையில், செஞ்சட்டையுடன் செங்கொடிகள் எங்கும் மிளிர 23.12.2011 அன்று தொழிலாளர்துறை ஆணையரிடம் மனு கொடுத்து, விண்ணதிரும் முழக்கங்களுடன் தோழர் அய்யனார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கங்கள் உள்ள கோத்ரெஜ்,மெடிமிக்ஸ், பவர்சோப், லியோ முதலான நிறுவனங்களின் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, யுகால், எல்அண்டுடி, எம்.ஆர்.எப், சுஸ்லான் ஆகியவற்றின் தொழிலாளர்களுமாக ஏறத்தாழ 600 பேருக்கு மேல் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்றிய இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனின் முன்னணியாளர்களும் பு.ஜ.தொ.மு. முன்னணியாளர்களும் சிறப்புரையாற்றினர். ஒரு நிறுவனத்தின் பழிவாங்கலை எதிர்த்து பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அணிதிரண்டு போராடியிருப்பது புதுவையில் இதுவரை கண்டிராததாகும். மாருதி சுசுகி தொழிலாளர் போராட்ட அனுபவத்தைக் கற்றுணர்ந்துள்ள புதுவை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையுடன் அடுத்த கட்டப்போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

பு.ஜ. செய்தியாளர், புதுவை