Language Selection

சமர் - 11 : 06/06 -1994
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலியபிட்டிய பிரதேசத்தில் உள்ள சூரியகந்த எனும் இடத்தில் புதைகுழி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதைகுழி பற்றி வரைபடத்துடன் பத்திரிகைக்கும், சுதந்திரகட்சிக்கும் கிடைத்ததை தொடர்ந்து அவ்விடம் தோண்டப்பட்டது. இவ் எலும்புக்கூடுகள் 1988,1989,1990 களில் ஜே.வி.பியின் தீவிர வளர்ச்சிக் காலத்தில் கொல்லப்பட்டவர்களினதாகும்.

இக் காலத்தில் தனிப்பட்ட பகைகளையும், மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களையும் ஜ.தே.கட்சி திட்டமிட்டு கொன்று புதைகுழிகளையும் நிரப்பினர். இப் புதைகுழியில் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட சடலங்கள் எம்பிலிப்பிட்டிய மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் என பெற்றோர் இனம் கண்டுள்ளனர். இம் மாணவர்களுக்கும் அதிபரின் மகனுக்கும் இடையிலான கோஷ்டி மோதலில் இறுதியில் அதிபரால் இராணுவத்தின் உதவியுடன் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இம் மகாவித்தியாலயத்தில் இது தொடர்பாக கொல்லப்பட்ட மாணவர்கள் 3 பேர் என்று சொல்லப்பட்ட போதிலும் உண்மையில் அவ்வெண்ணிக்கை மிக அதிகமானது. அவ் அதிபரின் மகன் தற்போது இராணுவத்தில் உள்ளார். மாணவர்களின் எலும்புக்கூடு வெளிவரவே அதிபர் மிரட்டல்களையும் விட்டுள்ளார். அதிபர் தன்னை மாட்டிவிடின் சகலரையும் காட்டிக்கொடுப்பேன் என எச்சரித்துமுள்ளார். சில எம்.பிகளுக்கும் இக்கொலையில்  தொடர்ப்பு உண்டு என்பது வெளிவரத் தொடங்கி உள்ளது. அதிபர் கொலை வெறியும் ஜ.தே.கட்சியின் ஆதிக்கவெறியும் சேர்த்து இப்படிக் கூறுகின்றனர் "பிள்ளைகள் போகும் போது சவப்பெட்டி இல்லாமல் போனார்கள் ஆனால் சூரியகந்தையை தோண்டுபவர்கள் இப்போதிருந்தே 30 அல்லது 40 சவப்பெட்டிகளை ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்". 

 

ஜே.வி.பிக்கு எதிரான ஜ.தே.கட்சி மனிதப்படுகொலைகள் அறுபதாயிரத்துக்கும் அதிகமானது. அத்துடன் 23 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் எந்த விசாரணையுமின்றி சிறைகளில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் ஜே.வி.பி உடன் எந்த தொடர்பும் அற்றவர்கள். சொந்த பகை தீர்;த்துக் கொள்ளப்பட்டவர்களே. தோண்டப்பட்ட புதைகுழிக்கு அருகில் முன்பு ஒரு இராணுவமுகாம் இருந்தது. அக்காலத்திலேயே இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட பல குழிகளில் எலும்புகள் கிடைக்கத் தொடங்கின. முதல் நாள் 12 எலும்புக் கூடுகள் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழ் பத்திரிகை தவிர்ந்த மற்றைய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. பி.பி.சியும் இது தொடர்பாக செய்தி ஒலிபரப்பு செய்தது.

 

அடுத்தநாள் மீண்டும் குழியை தோண்டச் சென்றபோது வழிநெடுக பல எலும்புக்கூடுகள் இரவோடு இரவாக போடப்பட்டிருந்தது. அத்துடன் புதைகுழிகளிலும் புதிய எலும்புக்கூடுகள் போடப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து புதைகுழி தோண்டுவதை அரசாங்கம் சட்டத்தின் மூலம் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அத்துடன் எலும்புக்கூடுகள் அடையாளம் காண வைக்கப்படும் என அறிவித்த நீதிமன்றம் அதை கடைசியில் தடுத்து நிறுத்தினர். சில மனித உடல் பாதி சிதைந்து இருந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஜந்து பேரை இழந்த தாய் உட்பட பல குடும்பங்கள் தமது பிள்ளைகளைத் தேடி அலைகின்றனர். அரசுக்கும் கோரிக்கைகளை விடுக்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ இதை தனது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்துகின்றனர். 1971இல் 30 ஆயிரம் இளைஞர்களை ஜ.தே.கட்சிக்கு இணையாக கொன்று குவித்தது இவர்களே. இன்று தமிழ்மண்ணில் காணாமல் போகின்ற படுகொலை செய்யப்படுகின்ற நிகழ்வுகளுக்கு எந்த வேறுபாடும் இன்றி ஜ.தே.கட்சியுடன் இணைந்து செயற்படுபவர்கள். இலங்கையில் ஜ.தே.க, ஸ்ரீ.சு.க, புலிகள், அனைவரும் துரோகிகள் என மக்களை கொல்வதிலும், காணாமல் போகப் பண்ணுவதிலும்,  யாரும் யாரையும் விட்டுக்கொடுத்தவர்கள் அல்ல என்பதை நிறுவி வருகின்றனர்.

 

எலும்புகள் மேலெழும்பும் போது ஜ.தே.க அலறி அடித்து அதைத் தடுக்க இயன்ற அளவில் அனைத்தும் முயல்கின்றனர். மிரட்டல,; துப்பாக்கிப் பிரயோகம,; கொல்லுதல் என அனைத்தையும் "ரியகந்த புதைகுழியில் கையாண்டனர். எம் மண்ணில் புளாட் இனால் படுகொலை செய்யப்பட்ட சுழிபுரம் 6 இளைஞர்கள் புதைக்கப்பட்டது தொடக்கம் மணியம் தோட்டப் புதைகுழிகள் நிகழ்ந்தன.

 

இந்தியாவில் பொட்டம்மான் தலைமையில் பச்சைப்படகு படுகொலை முதல் ரெலோ போராளிகளை உயிருடன் எரித்தது வரை நீண்ட கொடிய வரலாற்றை எம் மண் கண்டு வருகிறது. தமது கொள்ளைகளையும், சுரண்டல்களையும் நடத்த அதற்கு எதிராக உள்ளோரை புதைகுழிகளில் மூடி விட முயல்கின்றனர். இது இலங்கைப் போராட்டத்தில் முடிவில்லாது தொடர்கிறது. இதற்கு  எதிராக குரல் கொடுப்பதும், போராடுவதும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

 

மனிதத்தை துப்பாக்கி முனையில் நடத்திச் சென்று புதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டு புறங்காலால் மண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து தெருவோரச் சுவரில் குருதியறைந்து நியாயம் சொல்கிறார்களாம் நியாயம்....?

 

(யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்)

 

1986இல் புலிகள் விஜிதரனைப் புதைகுழிக்கு அனுப்பியபோது போராடிய மாணவர்கள் எழுதியது.;