Language Selection

அசுரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்த்தபடியே முடிவடைந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் அனேகமாக தெளிவாக தெரிந்துவிட்டது. காங்கிரசு கூட்டணி பல இடங்களில் முன்னணி பெற்று உள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரசு ஓபன் கூட்டணி, தேமுதிக-காங்கிரசு பினாமி கூட்டணி வெற்றி பெற்றுள்ளன.

 எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே அடிதடி-அதிரடி-சரவெடி அழகிரி அண்ணே, லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். வீரத் தளபதி கந்துவட்டி மைனர் ஜே. கே. ரித்தீஷ் 60,000 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி. செலவழித்த தொகைக்கு ஏற்ப வோட்டு வித்தியாசம். ஈழப் பெருச்சாளி வைகோ மண்ணை கவ்வி விட்டார். பாமகவுக்கு கோமணத்துணி கூட மிஞ்சவில்லை.

 

தமிழகத்தில் நவரசங்களும் கலந்தோடுகிறது. குறிப்பாக, ஈழத்திற்கு பலி வாங்கும் வகையில் பாடம் கற்பிக்க தேர்தல் களத்தில் இறங்கி குருதி சிந்திய தோழர்களும், உணர்வாளர்களும் பேரதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ஈழத்து குருதியில் கை நனைத்து வோட்டுப் பொறுக்க களம் இறங்கிய சூத்திரதாரி தா.பாண்டியன் கட்சியும், இரட்டை இலையும், பிற போலித் தமிழ்த் தேசிய வியாதிகளும் வாயடைத்துப் போயுள்ளனர். மக்களுக்கு உணர்வு மங்கிவிட்டது, மக்கள் காசு வாங்கிக் கொண்டு வோட்டு போட்டு விட்டனர் என்று பல்வேறு புலம்பல்கள்.

 

ஆனால், இவையெல்லாவற்றையும் விட பேருண்மை ஒன்று உள்ளது. அது இந்த தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுத்துள்ள பாடம். யாருக்கு? தேர்தலின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்ய முடியும் என்று ஊரை ஏமாற்றி வந்தவர்கள், தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற்ற முயன்றவர்கள் இவர்களுக்குத்தான் பாடம் கற்பித்துள்ளனர் மக்கள். ஈழம், தொழில் மந்தம், பொருளாதார கொள்கையின் தோல்வி, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்வெட்டு இவற்றை மீறி காங்கிரசு போன தடவையை விட அதிக இடங்களில் வெற்றி பெறுள்ளது. எனில், இவை குறித்து மக்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தமா? இவையெல்லாம் மக்களின் ஜீவாதார பிரச்சினைகள் இல்லை என்று அர்த்தமா? இல்லை, மாறாக, தேர்தல் முடிவுகள் இந்த பிரச்சினைகளின் மீது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதுதான் அர்த்தம்.

 

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். ஈழத்து ரத்தத்திற்கு பதில் சொல்லும் தேர்தல் இது என்று தேர்தலில் போராடிய பெதிக தோழர்களே, உணர்வாளர்களே இதோ இதுதான் உங்களுக்கான பாடம். மக்களுக்கு இந்த தேர்தலின் மீது அப்படி எந்தவொரு மயக்கமும் இல்லை. இந்த தேர்தல் ஜனநாயகத்தின் மோசடி முகத்தை மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது பிரச்சினை எல்லாம் மாற்று அரசியல் ஒன்று வலுவாக, நம்பிக்கையூட்டும் வகையில் இல்லாததுதான்.

 

 தோழர்களே, உண்மையான தீர்வை நோக்கித்தான் நமது பயணம் எனில் மக்கள் மத்தியில் மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை விதைப்போம். இல்லையேல் அதுவரை மக்கள் நமது சந்தர்ப்பவாத தேர்தல் நம்பிக்கைகளில் பகடை உருட்டவே செய்வார்கள். உணர்வு மங்கி போயுள்ளது மக்களுக்கல்ல தோழர்களே, நமக்குத்தான். விலை போனது மக்கள் அல்ல தோழர்களே, நாம்தான் சரியான அரசியல் மீது நம்பிக்கையின்றி விலை போய் விட்டோம். தமிழகத்தின் தலைவிதியை இப்படியெல்லாம் மாற்றிவிட முடியாது தோழர்களே. இதோ மக்கள் இந்த தேர்தலில் செவிட்டில் அறைந்தது போல நமக்கு இந்த உண்மையையே உணர்த்தியுள்ளனர்.

  

அசுரன்

 

 

தமிழ்சசி எழுதிய ஒரு கட்டுரையில் ப்ரோக்னோஸ்டிக்சேஜ் என்ற தோழர் இட்டுள்ள ஒரு பின்னூட்டத்தின்அடிப்படையிலேயே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தோழர் ப்ரோக்னோஸ்டிக்சேஜ்க்கு நன்றிகள்.

 

http://poar-parai.blogspot.com/2009/05/blog-post_16.html